சிக்கல் -ஸ்ரீ நவநாதேஸ்வரர் கோவில், ஸ்ரீ சிங்காரவேலர் கோவில்

கோயில் பெயர்

ஸ்ரீ சிங்காரவேலர் கோவில்

தோற்றம் காலம்

1500 ஆண்டுகளுக்கு முன்பு

தெய்வத்தின் பெயர்

மூலவர் : நவநீதேஸ்வரர் (வெண்ணெய் பெருமான்)

உற்சவர் : சிங்கார வேலவர்

ம்மன்/தாயார் : சக்தியாயதாட்சி (வேல்நெடுங்கண்ணி)

தல விருட்சம் : மல்லிகை

தீர்த்தம் : க்ஷீர புஷ்கரிணி (பாற்குளம்)

ஆகமம்/பூஜை : காரண ஆகமம்

புராண பெயர் : மல்லிகாரண்யம், திருச்சிக்கல்

பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் , அருணகிரிநாதர்

ஸ்தல வரலாறு

சிக்கல் சிங்காரவேலர் திருக்கோயில். தொடக்கத்தில் இஃது அருவுருவத் திருவுருவமைந்த சிவன் கோயில், பின்னர் முருகன் இடம் பெற்றுச் சிங்காரவேலர்  கோயிலாயிற்று. வடக்கில் வாரணாசியைப் போல், தெற்கில் இங்கு தெய்வங்கள் அனைவரும் கூடுகின்றனர்; வாரணாசியில் இறந்தால் முக்தி; இங்கேயோ, சிவலிங்கத்தைக் கண்டாலே முக்தி என சிக்கல் தலம் போற்றப்படுகிறது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அம்மனின் 64 சக்தி பீடங்களில் ஒன்று.

விசுவாமித்திரர், அகத்தியர், காத்தியாயனர், நாரதர், முசுகுந்த சக்கரவர்த்தி ஆகியோர் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர்.  சிவன், பெருமாள், முருகன், அனுமன் என நால்வரும் இத்தலத்தில் அருள்பாலிப்பது கோயில் தனி சிறப்பாகும்.  அருணகிரிநாதர் இத்தல முருகனை குறித்து திருப்புகழ் பாடியுள்ளார்.

கோச்செங்கட் சோழன் கட்டிய 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 146 வது தேவாரத்தலம் ஆகும்.  இங்கு 80 அடி உயரத்தில் அமைந்துள்ள கோயிலில் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார் சிங்காரவேலர். வலப்புறம் சிவனாகிய ‘நவநீதேஸ்வரர்’, இடப்புறம் பார்வதிதேவியான ‘வேல் நெடுங்கண்ணி’.. இப்படி அம்மை – அப்பனுக்கு இடையில் அமர்ந்து அருள் பாலிக்கும் சிங்காரவேலரின் பார்வை பட்டாலே மலையளவு சிக்கல்களும் பனி போல மாயமாகி விடுமாம். கடல் நாகைக் காரோணத்தின் பஞ்சகுரோசப் பெரும்பதிகளில் ஒன்றான தலம். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 83வது தலம். இத்ததல விநாயகர், சுந்தர கணபதி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். எட்டுக்குடி, எண்கண், சிக்கல் ஆகிய மூன்று தலங்களில் விளங்கும் முருகப்பெருமான் ஒரே அமைப்புடைய மூர்த்திகளாக இருப்பதால் இவைகள் ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டது என்பர்.

கோவிலின் அமைப்பு:

கோவிலின் ராஜகோபுரம் சுமார் 80 அடி உயரமும் 7 நிலைகளையும் உடையது. அதன் வழியாக் உள்ளே நுழைந்தவுடன் கார்த்திக மண்டபம் இருக்கிறது. அடுத்த வாசலில் தெற்கே விநாயகரும், வடக்கே தண்டபானியும் காட்சி தருகின்றனர். இரண்டவது சுற்றில் சனீஸ்வரர், தட்சினாமூர்த்தி, திருமகள், துர்க்கை, சண்டீசர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. கோவிலின் மையத்தில் 12 படிகள் கொண்ட ஒரு கட்டுமலை மேல் மூலவர் நவநீத நாதர் லிங்க வடிவில் அருள் புரியும் சந்நிதியும், சிக்கல் சிங்காரவேலர் என்று பிரசித்தி பெற்ற முருகப்பெருமான் சந்நிதியும் உள்ளன. சிக்கல் சிங்காரவேலர் வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். ஐப்பசி மாத விழாவில் வியர்வை சிந்தும் வேலவர் இவர்தான். கட்டுமலயின் கீழ்பக்கம் இறைவி வேல் நெடுங்கண்ணியின் சந்நிதி அமைந்துள்ளது. இறைவி முருகனுக்கு வேல் தருவது போன்ற சிற்பம் சந்நிதியின் மேல்பாகத்தில் இருக்கிறது. பிரகார சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் கோலவாமனப் பெருமாள் கோவில் தனியாக அமைந்திருக்கிறது. ஸ்ரீதேவி, பூமாதேவி சகிதம் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். வடமேற்கு மூலையில் ஆஞ்சனேயர் சந்நிதி அமைந்திருக்கிறது.  நவநீத நாதர் லிங்க வடிவில் அருள் புரியும் சந்நிதியும், சிக்கல் சிங்காரவேலர் என்று பிரசித்தி பெற்ற முருகப்பெருமான் சந்நிதியும் உள்ளன.  கீழ்ப்படிக்குப் பக்கத்திலுள்ள சுந்தர கணபதியை தரிசித்த பிறகே கட்டுமலை மேலே செல்ல வேண்டும் என்பது வழக்கம்.  இங்குள்ள மரகதலிங்கம் மிகவும் சிறப்புள்ளது.

காமதேனுவும் வசிஷ்டரும்.

ஒருமுறை, மழை பொய்த்து, பஞ்சம் தலைவிரித்தாடிய காலத்தில் பசியின் கொடுமையால், பஞ்சத்தில் பிடியில் சிக்கிய தேவலோகப் பசு காமதேனு , நாயின் ஊனைத் தின்றதால் ஏற்பட்ட சாபம் தீர்த்த தலம் சிக்கல்.  பாவம் பற்றியதால், புலியின் முகத்தைப் பெற்றது. பிறகு, தவற்றை உணர்ந்து சிவனாரை வழிபட்டு, தனது புலிமுகம் நீங்குவதற்காக வழி கோரியது. ‘பூலோகத்தில், மல்லிகாவனத்துக்குச் சென்று தங்கி வழிபட்டால், புலி முகம் நீங்கும்’ என்று அருளினார் சிவபெருமான். அதன்படி, மல்லிகை வனமாக விளங்கிய இந்தத் தலத்தை அடைந்து, சிவனாரை வேண்டி, வணங்கியது. ஈசனின் கருணையால் புலிமுகம் நீங்கியது. மனதில் பொங்கிய மகிழ்ச்சியால், காமதேனு பாலைப் பொழிய, அந்த இடத்தில் பால் குளம் உருவானது.  இதனால், காமதேனு தீர்த்தம் என்றும், தேனு தீர்த்தம் என்றும், பால் குளமானதால் க்ஷீர புஷ்கரிணி என்றும் இங்கேயுள்ள தீர்த்தக்குளம் பெயர் பெற்றது.  பின்னர், வசிஷ்டர் சிவத்தை வழிபட ஆசை கொண்டார். கயிலைநாதரின் திருவுள்ளக் குறிப்பையும் உணர்ந்தார்.  காமதேனு குளித்தபோது பெருகிய பால் குளத்தைப் பார்த்து வசிஷ்ட முனிவர்அதில் இருந்து வெண்ணையை எடுத்து சிவலிங்கமாக்கி அதற்கு பூஜை செய்தார். பூஜையை முடித்தபின் அந்த சிவலிங்கத்தை வேறு இடத்தில் வைக்க எண்ணி அதை எடுக்க முயன்றார். அது இயலாமல் அந்த வெண்ணை லிங்கம் அவர் கையில் சிக்கிக் கொண்டது. இறைவன் “வெண்ணெய் நாதர்’ வழிபாடு முடிந்தவுடன் இந்த லிங்கத்தை பெயர்த்து எடுக்கும் போது அது வராமல் சிக்கலை ஏற்படுத்தியதால் இத்தலம் “சிக்கல்’ என்றழைக்கப்பட்டது.

தாயிடம் வேல்

ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில் நடக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு முன், ஐப்பசி மாதம் கந்தர் சஷ்டியன்று சக்தியிடம் முருகன் வேல் வாங்கும் காட்சி, ‘சக்தி – வேலன் புறப்பாடு’களுடன் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படும். இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் ஐம்பொன்னால் செய்யப்பட்ட முருகனின் திருமேனியில் வியர்வை துளிர்க்கும். அப்படி வழியும் வியர்வையை அர்ச்சகர்கள்  பட்டுத்துணியால் துடைக்கத் துடைக்க முத்து முத்தாக வியர்வை துளிர்த்துக் கொண்டே இருக்கும் அற்புதம் இன்றளவும் நடைபெறும் தலம் சிக்கல்.  சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்பது ஒரு பழமொழி. இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள அம்பாள் வேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். தேவர்கள், சூரபத்மனிடமிருந்து தங்களை காக்க முருகப்பெருமானுக்கு

“திரி சதை’ செய்து வேண்டிக்கொண்டனர். இதனால் முருகப்பெருமான் சூரனை அழித்து தேவர்களை காத்தார். சிங்கார வேலனுக்கு, அம்மன் தன் சக்தியை வேலாக வழங்கிய இத்தல முருகனுக்கு  “சத்ரு சம்ஹார திரி சதை’ அர்ச்சனை செய்தால் எதிரிகள் தொந்தரவு விலகி நலம் விளையும் என்பது நம்பிக்கை.

கோலவாமனப்பெருமாள்

ஒரு முறை தேவர்கள், அசுரகுலத்தை சேர்ந்த மகாபலி சக்கரவர்த்தியால் ஏற்படும் கஷ்டங்கள் குறித்து பெருமாளிடம் முறையிட்டனர். இதற்காக திருமால் வாமன அவதாரம் எடுத்த போது இத்தலம் வந்து சிவனை வழிபட்டு மகாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றதாக கூறப்படுகிறது. எனவே இத்தல பெருமாள் “கோலவாமனப்பெருமாள்’ என்ற திருநாமத்துடன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

மயில் மேல் முருகன்

இவ்வெண்ணெய்ப் பெருமான் கோயிலின் கிழக்கே முருகன் கோயில் கட்டுமலைக் கோயிலாகப் பெரிய அளவில் அமைந்துள்ளது. வள்ளி, தேவானையுடன் முருகன் மயில்மேல் அமர்ந்த தோற்றம் மிக அழகானது சிற்பக் கலையில் மிகப் பாங்குடையது.  ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஒர் காலில்  நிற்கும் மயிலின் மேல் வள்ளி தெவ்வயானை முருகன் ஆகியோர் உள்ளனர்.இந்த சிலை ஏழு அடி உயரமுடையது. முருகனின் விரல் நகங்கள் நரம்புகள் ஆகியவை தெரிவது மிகச்சிறந்த நேர்த்தியான சிற்பக்கலைக்கு சான்று. முருகனை பார்த்தது முதல் அவரை பிரிய மனம் வரவே வராது.

விசுவாமித்திரர்

திலோத்தமையால் தன் தவவலிமையை இழந்த விசுவாமித்திர முனிவர் இழந்த தவவலிமையை திரும்பப் பெற்ற தலம் சிக்கல் முசுகுந்தச் சக்கரவர்த்தி முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு ஒரு அந்தணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷமும் சாபமும் நீங்கிய தலம் சிக்கல்

திருவிழாக்கள்

கந்தசஷ்டி திருவிழா –ஐப்பசி மாதம் (சக்திவேல் வாங்குதல் வியர்க்கும் மகிமை) சித்திரை பெருந்திருவிழா –(சித்திரை மாதம் ) தெப்பத்திருவிழா –தைப்பூசத்தன்று நடைபெறும் மாதாந்திர கார்த்திகை பிரதோசம்-சுவாமி புறப்பாடு மாதாந்திர சங்கடகர சதுர்த்தி –விநாயகர் அபிஷேகம் திருவாதிரை –நடராஜர் அபிஷேகம் –ஊடல்,வீதி புறப்பாடு  தமிழ் வருடப்பிறப்பு –சிங்காரவேலவர் அபிஷேகம்  மாசி மாதம் –மகா சிவராத்திரி (நான்கு காலமும் பூஜை நடைபெறும் )  வைகாசி விசாகம்-சிங்காரவேலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆடிப்பூரம் –அம்பாள் அபிஷேகம்  ஆடிக்கார்த்திகை-சிங்காரவேலவர் அபிஷேகம், இரவு -தங்க மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா புறப்பாடு விநாயகர் சதுர்த்தி-சுந்தரகணபதிக்கு சிறப்பு அபிஷேகம்  நவராத்திரி உற்சவம்-பள்ளியறை அம்மன் சிறப்பு அலங்காரம் சரஸ்வதி பூஜை –எல்லா சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்  விஜயதசமி –சிங்காரவேலவர் தங்கக்குதிரை வாகனத்தில் அம்பு போடுதல்  ஐப்பசி பெளர்ணமி –சிவனுக்கு அன்னாபிஷேகம்  தீபக்கார்த்திகை-சிங்காரவேலவர் அபிஷேகம், இரவு –சொக்கப்பானை ஏற்றுதல்,சுவாமி வீதியுலா  பங்குனி கார்த்திகை-சிங்காரவேலவர் அபிஷேகம், இரவு –பவள ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி வீதியுலா  பங்குனி உத்திரம் –சிங்காரவேலவருக்கு சிறப்பு அபிஷேகம்

பாதை

திருவாரூர் நாகபட்டினம் சாலையில் அடியக்கமங்கலம் கீழ்வேளூர் சிக்கல்.சென்றடையலாம்.

கோயில் நேரம்

காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

கோயில் தொலைபேசி எண்

+91- 4365 – 245 452, 245 350.

கோயில் முகவரி

ஸ்ரீ  நவநீதேஸ்வரர் கோயில் ,

சிக்கல்

நாகபட்டணம்

 

 

 

 

 

 

 

 

 

 

திருநெல்லிக்கா – ஸ்ரீ நெல்லி வனநாதர் கோயில்

கோயில் பெயர்:

ஸ்ரீ நெல்லி வனநாதர் கோயில்

தோற்றம் காலம்:

2000 ஆண்டுகளுக்கு முன்பு

தெய்வத்தின் பெயர்

இறைவன்: ஆம்லகவனேஸ்வரர், ஆம்லகேஸ்வரர், நெல்லி வனநாதர், நெல்லி நாதேஸ்வரர்

இறைவி: ஆம்லகேஸ்வரி, மங்களநாயகி

தல மரம்:    நெல்லி மரம்

புராண பெயர்கள்:

அமிர்த வித்யாபுரம். குஷ்ட ரோகஹரம், சர்வ உத்தமபுரம், பட்சாட்சர புரம், பஞ்சதீர்த்த புரம், அருண புரம் .

2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோவில் இது.

தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 181 வது ஸ்தலம் .

அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மி வணங்கிய திருத்தலம். ஆகவே ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம், பஞ்சகூடபுரம் ஐந்து பஞ்சகூடபுரத்தில்  ஐந்தில் ஒன்று.ஐந்து  பஞ்சகூடபுரம் திருவானைக்கா, திருக்கோடிக்கா, திருக்கோலக்கா, திருநெல்லிக்கா மற்றும் திருக்குரங்குக்கா ஆகியவை

ஸ்தல தீர்த்தம்:

பிரம தீர்த்தம், சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், ரோக நிவாரண தீர்த்தம், சந்திர தீர்த்தம் என ஐந்து தீர்த்தங்கள் இத் தலத்தில் உள்ளன. இந்த ஐந்து தீர்த்தங்களும் அமுதம் இறைவனிடம் இருந்து கிடைக்கப்பக்டவை.

தல விருட்சம்: நெல்லி மரம்

தேவராம்: திருஞானசம்பந்தர்

ஸ்தல வரலாறு:

தேவ லோகத்தில் உள்ள கற்பகம், பாரிஜாதம், சந்தானம், அரிசந்தனம், மந்தாரம் ஆகிய ஐந்து மரங்களும் வேண் டியதை தரக்கூடிய ஆற்றல் பெற்றவை. இதனால் இந்த மரங்களுக்கு மிகுந்த கர்வம் உண்டாகி விட்டது. அதன் காரணமாக ஒருமுறை தேவலோகம் வந்த துர்வாசரை மதிக்காததால் அவர் கோபம் கொண்டு ” நீங்கள் பூமியில் புளிக்கும் கனிகளைக் கொண்ட நெல்லி மரங்களாக மாறுங்கள்” என்று சாபமிட்டார். அவை சாப விமோசனமடைந்து மீண்டும் தேவலோகம் செல்லவும், நெல்லி மரத்தின் அருமையை பூலோகத்தினர் அறிந்து கொள்ளவும், ஈசன் அந்த நெல்லி மரத்தின் அடியிலேயே சுயம்புலிங்கமாகத் தோன்றினார். ஐந்து தேவ மரங்களும் இறைவனுக்கு தொண்டு செய்த பின் தேவலோகத்திற்கு திரும்பிச் சென்றன. நெல்லி மரத்தின் அடியில் தோன்றியதால் இறைவன் நெல்லிவனநாதர் என அழைக்கப்படுகிறார்.

சூரியன், பிரமன், திருமால், சந்திரன், சனி, கந்தர்வர், துர்வாசர் வழிபட்ட கோவில்.ஐந்தெழுத்தும் இறைவனை வழிபட்ட தலம். வழிபாடு பயன்கள் எளிதில் பெறத் தக்க தலம்.  சனீஸ்வர பகவானே இறைவனை வழிபட்ட பெருமை மிக்க திருத்தலம் இத்திருத்தலம். இங்குள்ள இறைவனை வழிபட்டால் சனிதோஷம் நீங்கி, சனி பகவானின் அருள் கிட்டும். ஆண்டுதோறும் ஐப்பசி கிருஷ்ணபட்ச சதுர்த்தசி முதல் ஏழுநாளும்,மாசி மாதம் 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை, ஏழு நாட்கள், மாலை 5 மணி அளவில் சிவலிங்கத்தை, சூரியக் கதிர் தழுவிச் செல்லும் காட்சியைக் காணலாம்.  இது பக்தர்களை பரவசம் கொள்ளச் செய்யும் நிகழ்வு மட்டுமின்றி, சோழர்களின் கட்டிடக்கலை மற்றும் வானவியல் அறிவுக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ் கிறது.

சுயம்பு மூர்த்தியான மூலவர் நெல்லிவனநாதர்  மேற்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார்.இறைவன் தங்கிய இத்தலமும் திருநெல்லிக்கா என அழைக்கப்பட்டது.

ஸ்ரீ மங்களேஸ்வரி:

தெற்கு நோக்கிய சன்னிதியில் அம்பிகை மங்களேஸ்வரி என்ற பெயரில் அருள்புரிகிறாள். இந்த அம்மனுக்கு ஒரு வரலாறு உண்டு. திருவாரூரை ஆண்டு வந்த உத்தம சோழனும், அவனுடைய மனைவியும் சிறந்த சிவ பக்தர்களாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு நெடுங்காலமாக குழந்தைப் பாக்கியம் இல்லை. இதனால் அவர்கள் இருவரும் திருவாரூர் சிவபெருமானை உருகி வேண்டினர். அப்போது மன்னன் மடியில் மூன்று வயதுச் சிறுமி வந்து அமர்ந்தாள்.  ‘உமக்கு மங்களம் வழங்க, பராசக்தியே மகளாக வந்துள்ளாள். அவளுக்கு ‘மங்கள நாயகி’ என்று பெயரிட்டு அழைத்து வா’ என்று ஒரு அசரீரி ஒலித்தது.

மன்னன் மகளாக மாறிய மங்கள நாயகி வளர்ந்து பெரியவள் ஆனாள். அப்போது ஆரூர் ஆலயத்தில் மங்கள நாயகி வழிபட்டுக் கொண்டிருந்தபோது, ‘ஆவணி முதல் வெள்ளிக்கிழமையன்று திருநெல்லிக்காவில் உம்மை மணமுடிப்போம்’ என்ற வாக்கு, ஈசனின் கருவறையில் இருந்து ஒலித்தது. அதன்படியே திருநெல்லிக்காவில் தெய்வத் திருமணம் நடைபெற்றது. எனவே இந்தத் திருத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டால், திருமணத் தடை உள்ளவர்களுக்கு தடை நீக்கும், குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. கந்தர்வன் ஒருவனின் குஷ்ட நோய் இத்தலத்தில் நீங்கியது. அவன் நீராடிய ரோகநிவாரண தீர்த்தம் உள்ளது.

கோபம் குறைந்த துர்வாசர் :

முனிவர்கள் மனதை ஒருநிலைப்படுத்தும் யுக்திகளை அறிந்தவர்கள். பிறருக்கும் உபதேசித்தவர்கள். அவர்களில் ஒருவரான துர்வாச முனிவருக்கு, எதற்கெடுத்தாலும் கோபம் பொங்கி வந்து விடும். உடனடியாக சாபம் கொடுத்து விடுவார் என்பது புராணக் கதைகளில் ஆங்காங்கே சொல்லப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட துர்வாச முனிவர், இந்த தலத்தில் கோபம் குறைந்து சாந்தமானார் என்று தல வரலாறு கூறுகிறது.

கோபம் குறைய:

இந்த ஆலயத்தில் உள்ள திருக்குளத்தில் நீராடி, நெல்லிவனநாதரின் பாதத்தில் எல்லா பாரங்களையும் இறக்கி வைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும். பின்னர் தல விருட்சமான நெல்லி மரத்தை சுற்றி வந்து அதன் அடியில் அமர்ந்து சற்று நேரம் கண்களை மூடி தியானிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கோபம் குறைந்து உள்ளம் சாந்தமாகும் என்று கூறுகிறார்கள்.

கோவில் அமைப்பு:

மேற்கு நோக்கிய திருக்கோயில் ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரத்துடன் சுற்றிலும் மதில்கள் சூழ காட்சி அளிக்கிறது.  5 நிலை கோபுர வாயிலுக்கு வெளியே உள்ள கவசமிட்ட கொடிமரத்தையும், கொடிமர விநாயகரையும் பணிந்து, நந்தி மண்டபத்தைக் கடந்து உள்ளே செல்லலாம். பிராகாரத்தில் நால்வர், கஜலட்சுமி, விநாயகர், வள்ளி தெய்வயானை சுப்பிரமணியர், சனிபகவான், தலமரம், நெல்லி, மரத்தினடியில் நெல்லிவன நாதர், பைரவர், நவக்கிரகங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன.  பிரகார வலம் முடித்துப் படிகளேறி முன் மண்டபத்தை அடைந்தால் இடதுபறம் சோமாஸ்கந்தர் தரிசனம்.  நேரே நடராஜ சபை உள்ளது. இருபுறத்திலும் உற்சவத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில் மேற்புறத்தில் நவக்கிரகங்கள், பன்னிரு ராசிகள், தசாவதாரங்கள் முதலிய சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன.  மூலவர் சுயம்பு லிங்கமாக மேற்கு பார்த்தபடி அருள்பாலிக்கிறார்.

கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை சந்நிதிகளும் உள்ளன. சண்டேசுவரர் உள்ளார். நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. தெற்கிலுள்ள கோபுர வாயில் வழியே அம்பாள் சந்நிதியை சென்று அடையலாம்.  தெற்கு வாயிலுக்கு வேளியே எதிரில் ஆலயத்தின் தீர்த்தக்குளம் உள்ளது.

சிறப்புக்கள் :

சோழர் காலக் கல்வெட்டுகள் எட்டு படி எடுக்கப்பட்டுள்ளன

பாதை:

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் 15 கிலோமீட்டர் தூரத்திலும், மன்னார்குடியில் இருந்து கிழக்கே 23 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருநெல்லிக்கா திருத்தலம்

கோயில் நேரம்:

காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

கோயில் தொலைபேசி எண்:

04369-237 507, 237 438

கோயில் முகவரி:

ஸ்ரீ நெல்லிவனநாதர் கோயில்,

திருநெல்லகா- 610 205,

திருவாரூர்

கச்சனம் – அருள்மிகு கைச்சினநாதர் ஆலயம்

மூலவர்:  கைச்சினநாதர், கைச்சினேஸ்வரர், கரச்சினேஸ்வரர்

தாயார்:   பல்வளை நாயகி, சுவேதவளை நாயகி, வெள்வளை நாயகி

தல விருட்சம்:கொங்கு, இலவம்

தீர்த்தம்:இந்திரதீர்த்தம்,வச்சிர தீர்த்தம், அகத்திய தீர்த்தம்

புராண பெயர்(கள்):

கைச்சினம், கோங்குவனம், கர்ணிகாரண்யம்

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும். கச்சனம் கைச்சின்னேசுவரர் கோயில் தேவார பாடல்  பெற்ற தலங்களில் ஒன்றாகும்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 122ஆவது  சிவத்தலமாகும். சம்பந்தரால் பாடல் பெற்றது இத்தலம்.இத்தலத்தில் இந்திரன் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டு அதனை எடுத்து வைக்கும் போது அவர்  கை அடையாளம் சுவாமி மீது படிந்தது. எனவே கைச்சின்னம் என்ற பெயர் பெற்றது. இது தற்போது வழக்கில் கச்சனம் என்றாயிற்று. சுவாமி மீது விரல்கள் பட்ட அடையாளம் உள்ளது.

இந்திரன் ஐராவதத்தின் தந்தம் கொண்டு வளையல்கள் செய்து அம்பிகைக்கும் அணிவித்ததால்  அம்மன் வெள்வளைநாயகி ஆனார். முற்காலத்தில் இப்பகுதியில் கோங்கு மரங்கள் அடர்ந்திருந்தமையால் கோங்குவனம், கர்ணிகாரவனமென்றும் பெயர்கள் உண்டு.

சிறப்புகள்

இக்கோயில் மதுரை ஆதினத்திற்கு சொந்தமானது.  இந்திரன், அகத்தியர், திருணபிந்து முனிவர், அஷ்டவசுக்களில் விதூமன், மித்ரசகன் ஆகியோர் இக்கோவிலை வழிபட்டு பேறுபெற்றுள்ளனர். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட முருகப்பெருமான் இத்தலத்தில் அருள்கிறார். அகத்திய மகரிஷிக்கு உண்டான பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதோடு, அவருக்கு இங்கே தியாகராஜராக காட்சி தந்தருளியுள்ளார் ஈசன்.

தல வரலாறு

கவுதம முனிவர் தன் மனைவி அகலிகையுடன் ஆசிரமத்தில் வசித்த போது, அங்கு வந்த இந்திரன் அகலிகை மீது மோகம் கொண்டான். அவளை அடைய விரும்பிய அவன் சதி செய்தான். கவுதமர் அதிகாலையில், ஆற்றுக்கு குளிக்கச் செல்லும் வழக்கமுடையவர்.எனவே சேவலாக உருவெடுத்து ஆசிரமத்தின் உச்சியில் இருந்து கூவினான். விடிந்து விட்டதாக கருதிய கவுதமர் ஆற்றுக்கு கிளம்பி விட்டார்.அகலிகை வழியனுப்பினாள். பின்னர் இந்திரன் கவுதமரைப் போலவே உருமாறி, சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்தான். “விடியவே இல்லை, ஏதோ ஒரு சேவல் நேரம் கெட்ட நேரத்தில் கூவியுள்ளது” என்று சொல்லி விட்டு,அகலிகையுடன் சேர்ந்து இருந்தான். இதனிடையே ஆற்றுக்கு சென்ற கவுதமர் விடியாததைக் கண்டு, ஏதோ விபரீதம் நடந்துள்ளதை ஞான திருஷ்டியால் உணர்ந்து, ஆசிரமத்துக்குத் திரும்பினார் அகலிகை கற்பில் சிறந்தவளாக இருந்தாலும் அவள் இராமரால் மோட்சம் பெற வேண்டும் என்பதற்காகக் கல்லாக மாற்றினார்.  இந்திரனின் செயலைக்கண்ட அவர் அவனுக்கு சாபமிட்டார்.

இந்திரனின் உடல் முழுவதும் 1000 யோனிகள் ஆகக் கடவதென சாபமிட்டார். இதனால் வானுலகில் வாழ வெட்கித்து, பூவுலகம் வந்தான் தேவேந்திரன். பிருத்வி தலமாகவும், கமல தலமாகவும் விளங்கும் திருவாரூரில், சர்வேஸ்வரனை நோக்கித் தவமிருந்தான். அப்போது ஈசனின் அசரீரி வாக்கு ஒலித்தது. அதன்படி கோங்கு வனமான கச்சனம் திருத்தலத்தை வந்தடைந்தான். தனது வஜ்ராயுதத்தால் ஒரு தீர்த்தம் உண்டாக்கினான். அந்த தீர்த்த நீரால் மணல் லிங்கம் பிடித்து, தொடர்ந்து பூஜை செய்து வந்தான்.

வைகாசி மாத விசாக நட்சத்திர நன்னாளில், தான் பூஜித்து வந்த மணல் லிங்கத்தை தீர்த்தக் குளத்தில் கரைத்து பூஜையை முடித்திட எண்ணி, லிங்கத்தைக் கலைக்க முற்பட்டான். ஆனால் அந்த லிங்கம் பூமியை நிலையாகப் பற்றிக் கொண்டது. அதனை அசைக்க முற்பட்டதன் காரணமாக தேவேந்திரனின் கை விரல்கள் அந்த மணல் லிங்கத்தின் நெற்றியில் பதிந்தது.

உடன் பரமன் அங்கே தோன்றி, இந்திரனின் உடலில் இருந்த 1000 யோனிகள், 1000 கண்களாக மாற அருள் புரிந்தார். இதனால் இந்திரனுக்கு சகஸ்ராக்ஷன் எனும் பெயர் ஏற்பட்டது. சகஸ்ரம் எனில் ஆயிரம் என்றும் அக்ஷம் எனில் கண் என்றும் பொருள். சிவனாரை வணங்கி மகிழ்ந்த இந்திரன், ‘இத்தலத்தில் நீராடி, உம்மை வந்து வணங்கும் யாவருக்கும்  சகல வரங்களையும் அருள வேண்டும்,’ என கேட்க, அப்படியே அருளினார் அரனார். இந்திரனின் கை அடையாளம் (சின்னம்) லிங்கத்தின் மீது பாதித்துள்ளது இப்போதும் காணலாம்.

கோவில் அமைப்பு

கோயிலுக்குள் ஒரு பிராகாரமும் மதிலை அடுத்து ஒரு பிராகாரமும்,வெளிவீதியில் உள்ளன.  உள் பிராகாரத்தில் மேற்கில் விநாயகர்அஷ்டவசுக்களில் ஒருவனான விதூமன் வழிபட்ட விதூமலிங்கம், சுப்பிரமணியர், அம்பாள் சந்நிதிகளும் உள்ளன. கிழக்கில் நடராஜமண்டபம் உள்ளது.  மதிலுக்கு வடப்புறம் இந்திரதீர்த்தமும் தென்புறம் வச்சிரத் தீர்த்தமும் உள்ளது. இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான நஞ்சையில் வெட்டும் பொழுது கிடைத்த சங்கு சக்கரபாணியாகத் திகழும் பெருமாள்சிலை, உள்பிராகாரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இக்கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி – ரிஷபாரூட தட்சிணாமூர்த்தியாகக் காட்சி தருவது சிறப்பாக உள்ளது. (பின்புறத்தில் நந்தி உள்ளதுதெரிகிறது) நடனச் சிற்பங்களும், அர்த்தநாரீஸ்வர வடிவமும் அழகாக உள்ளன. எல்லோருக்கும் வீரம் மட்டும் போதாது. ஆற்றலையும், கல்வியையும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே கல்விக்குரிய சரசுவதியை முதலிலும்,அடுத்து ஆற்றலுக்குரிய துர்க்கையையும், இதையடுத்து சோம்பேறித்தனத்தின் சின்னமான ஜேஷ்டாதேவியையும் (மூதேவி) இங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர். கல்வியும் ஆற்றலும் இருந்தாலும் சோம்பலை விட்டவரே செல்வத்தை அடைய முடியும் என்பதற்கேற்ப இவர்களை அடுத்து தனி சன்னதியில் மகாலட்சுமி அருள்பாலிக்கிறாள்.இத்திருக்கோயிலில் பதினொரு கல்வெட்டுகள் காணப்பெற்றுள்ளன.அவைகளில் இக்கோயிலுக்கும் பிறவுக்கும் அளிக்கப்பட்ட நிபந்தங்கள் -நிலபுலன்கள் குறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுக்களில் இறைவனுக்கு, ‘கோங்குஇலவுவனேஸ்வரசுவாமி, திருக்கைச்சின்னம் உடைய நாயனார்,கரச்சின்னேஸ்வரர்’ முதலிய பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. பூஜைகள், வழிபாடுகள் முதலியவை செம்மையாக நடைபெறுகின்றன. விசேஷ நாள்களில் சுவாமிக்கு வெள்ளி நாகாபரணமும், அம்பாளுக்கு வெள்ளி அங்கியும் சார்த்தப் பெறுகின்றன. பேய் பிடித்தல் போன்ற தோஷங்கள் இத்தலத்தில் நீங்குவதாக  சொல்லப்படுகிறது.

பிரார்த்தனை:

தவறு செய்தவர்கள் மனம் வருந்தி சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் அவர்களது பாவத்தை சிவன் மன்னித்து அருள்கிறார் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் கோயில் திருப்பணிக்கு தங்களால் இயன்ற உதவி செய்து நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

திருவிழா:

வைகாசி விசாகத்தில் கோயிற் பெருவிழா பத்துநாள்களுக்கு

நடைபெறுகிறது. ஆனித் திருமஞ்சனம், கார்த்திகை ஞாயிறு நாள்கள்,

மார்கழித் திருவாதிரை, மாசிமகம், பங்குனி உத்திரம் முதலிய விசேஷ

காலங்களிலும், பிரதோஷ காலங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகின்றது.

கந்தசஷ்டிவிழா சிறப்பாக நடத்தப்பெறுகிறது.

பாதை

கும்பகோணத்தில் இருந்து 61km. கும்பகோணத்தில் இருந்து  குடவாசல் வழியாக திருவாரூர் வந்து திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் திருக்காவாசல் அருனளயம் அடுத்து  கச்சனம். திருவாரூரிலிருந்து  15 கி.மீ., தொலைவில் கச்சனம் கிராமம் உள்ளது.

கோயில் நேரம்

காலை 6 மணி முதல் 12 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

கோயில் தொலைபேசி எண்

+91 94865 33293

கோயில் முகவரி

அருள்மிகு கைச்சினநாதர் ஆலயம்

கச்சனம்

திருவாரூர்