Eripatha Nayanar

vanperuN^   kaLiRu   pAkar madiyavum  udaivALaith  than^dhu<br /><br />
	 enperum  pizaiyi  nAlEennaiyuN^ kollum ennum<br /><br />
	 anpanAr thamakkuth thIN^ku n^inain^dhanan enRu koNdu<br /><br />
	 munpena dhuyirche kuththu mudippadhE mudiven ReNNi

இமயத்தில் புலிக்கொடி ஏற்றிய கரிகாற் சோழன் முதல் அநபாயச் சோழன்வரை முடிசூட்டிக் கொள்ளும் சிறப்புக் கொண்டது கரூர்! அவ்வூரில் மணி மண்டபங்களும், மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும் நிறைந்து விளங்கின. அமராவதி என்னும் வற்றாத நதி ஒன்றும் வளம் கொழிக்க ஓடிக்கொண்டிருந்து. அந்நதியின் இருமருங்கிலும் பெருந்தவசிகள் ஆசிரமம் அமைத்து அருந்தவம் செய்து வந்தனர். இந்நகரத்தில் ஆனிலை என்னும் ஓர் ஆலயம் அமைந்திருந்தது. எம்பெருமானுக்கு பசுபதீசுரர் என்றும், ஆனிலையயுடைய மகாதேவர் என்றும் நாமங்கள் உண்டு. இத்தலத்தில் எம்பெருமானைக் காமதேனு வழி பட்டமையால் இப்பெயர் ஏற்பட்டது என்பது வரலாறு. ஆனிலைப் பெருமானை வழிபடும் அடியவர்கள் பலருள், எறிபத்தர் என்பவரும் ஒருவர். இவர் சிறந்த சிவ பக்தர். இவரது நெற்றியிலும், திருமேனியிலும், திருவெண்ணீரு எந்நேரமும் ஒளி வீசிக்கொண்டேயிருக்கும். ஜடா முடியிலும், கழுத்திலும், கைகளிலும், மார்பிலும், உருத்திராட்ச மாலைகள் எந்நேரமும் அணிந்திருப்பார். சிவனடியார்களுக்கு எவ்வித துயரமும் நேராவண்ணம் அவர்களைப் பாதுகாத்து வருவதைக் தமது குறிக்கோளாகக் கொண்டிருந்தார். அடியார் அதற்காக எந்நேரமும் ஒரு மழுவை ஆயுதமாக வைத்துக் கொண்டிருப்பார். தம்மிடமுள்ள மழுவாயுதத்தினால் அடியார்களுக்கு இடர் செய்யும் பகைவர் மீது எறிந்து, அடியார்கள் துயரத்தைப் போக்குவார். இது காரணம் பற்றியே அவருக்கு எறி பக்தர் என்னும் திருநாமம் ஏற்பட்டது.

காலப்போக்கில் அவரது காரணப் பெயர் வழக்கிலே வேரூன்றி அவருடைய இயற்பெயர் மறைந்து போனது. எறிபத்தர் பக்தியோடு நல்ல வீரத்தையும் பெற்றிருந்தார். அஞ்சா நெஞ்சம் கொண்டவர். கள்வர்க்கும் அஞ்சமாட்டார். நாட்டு மன்னனுக்கும் நடுங்க மாட்டார். அவர் பரமனுக்கும், பரமனது அன்பர்களுக்கும் மட்டும்தான் பயந்து வணங்கித் தலை குனிந்து நிற்பார். அவ்வூரில் இவரைப் போலவே ஆனிலை பெருமானிடம் பேரன்பு பூண்டிருந்த சிவகாமியாண்டார் என்றொரு பக்தர் இருந்தார். இவர் அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர். வயது முதிர்ந்தவர். முக்கண்ணணுக்கு, முத்துப்பனி தூங்கும் பூக்களால் மாலைகள் தொடுத்துச் சாத்தும் சிறந்த தொண்டினை தமக்கு விவரம் தெரிந்த நாள் முதற்கொண்டு தவறாது செய்து கொண்டிருந்தார். இச் சிவத்தொண்டர் வைகைறயில் எழுவார்; தூய நீராடுவார்; நெற்றியிலும், மேனியிலும் திருவெண்ணீற்றை சிவாகம முறைப்படிப் பூசிக் கொள்வார். வாசனை மிகுந்த மலர்களைக் கொய்து வர நந்தனம் செல்வார். மலர் கொய்யும் பொழுது, பூக்களின் மீது மூச்சுக் காற்று படாமல் இருப்பதற்காக தமது வாயைத் துணியால் கட்டிக் கொள்வார். இவர் பஞ்சாட்சர மந்திரத்தை இடையறாது ஓதிய வண்ணம் மலரும் நிலையிலுள்ள வண்டுகள் தீண்டாத பூக்களை நிறையப் பறித்துக் கூடையில் நிரப்பிக் கொள்வார். எவ்வளவுதான் கூடை நிறையப் பூக்களைப் பறித்து நிரப்பிக் கொண்டபோதும், இவரது ஆசை மட்டும் ஒருபோதும் தணியவே தணியாது. இன்னும் நிரம்பப் பூக்கள் பறிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் தான் இவரது மனதிலே நிறைந்திருக்கும். இவ்வந்தணர் கையிலே ஒரு கழி வைத்திருப்பார். அக்கழியிலே பூக்கூடையை மாட்டிக் கொண்டு, திருக்கேயிலுக்குப் புறப்படுவார். மலர்களை மாலையாக்கி, மகாதேவனது அரவமணிந்த மேனியில் அழகுறச் சாத்தச் செய்வார். அன்றைய தினம் புரட்டாசித் திங்கள் ! அஷ்டமி திதி பசுபதீசுரருக்குத் திருவிழாவும் கூட ! தனால் நகரமெங்கும் வாழை மரங்களும், கமுகுகளும், தென்னங்குருத்துத் தோரணங்களும் விதவிதமான அலங்காரத்துடன் காட்சியளித்தன. கடைகளும், வேடிக்கைப் பொருட் கூடங்களும் ஏராளமாக இருந்தன. மக்கள் கூட்டம் கடல் போல் வெளியூர்களில் எல்லாமிருந்து வந்து நிறைந்த வண்ணமாகவே இருந்தன. கைலாசமே கருவூருக்கு வந்தது போன்ற எழிற்காட்சி ! அந்த அஷ்டமி திதியன்று – வைகறைப்பபொழுது வழக்கம் போல் சிவகாமியாண்டார் பூக்களைக் கூடையில் நிரப்பிக் கொண்டு மன நிறைவோடு ஆலயத்திற்குப் போய்க் கொண்டிருந்தார். அப்பொழுது அரண்மனைச் சேவகர்கள் அவ்வழியே பட்டத்து யானையை அமராவதி ஆற்றில் நீராட்டி அழைத்து வந்து கொண்டிருந்தனர். திடீரென்று பட்டத்து யானைக்கு எதனாலோ மதம் பிடித்துக் கொண்டது. யானை கட்டுக்கடங்காமல் ஓடத் தொடங்கியது.

திருவிழா பார்க்க வந்த மக்கள் அடித்துப் புடைத்துக் கொண்டு ஆளுக்கொரு பக்கமாக ஓட்டம் பிடித்தனர். யானை மீது இருந்த பாகன் அதனை அடக்க முயன்றான்; முடியவில்லை. யானையுடன் வந்த குத்துக்கோற் காவலர்கள் கூட, யானையை அடக்க முயற்சி செய்து தோல்வியைத்தான் அடைந்தனர். அவர்கள் தப்பித்ததே பெரும் பாடாகிவிட்டது. அப்பொழுது அவ்வழியாக மலர்க் கூடையுடன் சிவகாமியாண்டார் ஆலயத்திற்குப் போய்க் கொண்டிருந்தார். மக்கள் அடித்துப் புடைத்துக் கொண்டு ஓடுவதையும், யானை மதம் பிடித்து ஓடிவருவதையும் கண்டு சிவகாமியாண்டார் பயந்து நடுங்கி, பூக்கூடையுடன் ஓட முயன்றார். அவரால் முடியவில்லை. கூட்டம் கூட்டமாக மக்கள் பலர் ஓடிக்கொண்டேயிருந்தனர். அக்கூட்டத்தாரிடையே இவ்வந்தணர் சிக்கிக் கொண்டார். அவரால் முடிந்தமட்டும் வேகமாக ஓடிப் பார்த்தார். அதற்குள் மதக்களிறு அவரை நெருங்கி விட்டது. அது தனது துதிக்கையால் சிவகாமியாண்டார் தோளில் பிடித்திருந்த பூக்கூடையைக் கழியோடு பற்றி இழுத்து வீதியில் சிதறிவிட்டு அவரை மட்டும் ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டு ஓடியது. சிவதா! சிவதா! என்று பசுபதிநாதரைத் துதித்தார் அடியார். அவருக்கு கோபம் மேலிட்டது. நிலத்தில் கிடந்த கழியை எடுத்துக்கொண்டு யானையை அடிக்க அதன் பின்னால் ஓடினார். யானை அதற்குள் வெகு தூரம் ஓடிவிட்டது. எம்பெருமானே ஓலம் ! புலித் தோல்தனைப் பொன்னாற் மேனிதனில் போர்த்தவனே ஓலம் !! உமது பொற் பாதங்களில் சாத்திக் களிக்கக் கொண்டு வந்த புத்தம் புது மலர்களை இக்களிறு அநியாயமாக நிலத்தில் கூடையோடு கொட்டிக் கெடுத்து விட்டதே ! இறைவா ! நான் என்செய்வேன் ! மகாதேவா ! சாம்பசிவா ! தயாபரா ! பசுபதீசுரா ! ஆனிலைப் பெருமானே ! ஓலம் !! ஓலம் !! ஐயனே ! இனியும் என் உயிர் தங்குவது முறையல்லவே ! சிவதா ! சிவதா ! ஓலம் ! ஓலம் ! சிவகாமியாண்டார் ஓலமிட்டவாறு சின்னக் குழந்தை போல் அழுது கொண்டேயிருந்தார். இந்த சமயத்தில், அவ்வழியே வந்து கொண்டிருந்தார் எறிபத்தர். அவரது காதுகளில் அந்தணரின் ஓலக்குரல் வீழ்ந்தது. அவர் வேகமாக ஓடிவந்து சிவகாமியாண்டாரை அணுகி, நடந்த விவரத்தைப் பற்றிக் கேட்டார். அந்தணர் நடந்தவற்றை எல்லாம் ஒன்று விடாமல் விளக்கமாக கூறினார். அந்தணர் மொழிந்ததைக் கேட்டு, சினங்கொண்டு கொதிப்புற்ற எறிபத்தரின் கண்கள் கனலாக மாறின. தோள்மீது இருந்த கோடாரியைக் கையிலே தூக்கிப் பிடித்தார். சிவனடியார்களுக்கு வழி வழியாகப் பகையாக இருப்பது யானை ஒன்றுதான் ! அதனை இப்பொழுதே கொன்று வீழ்த்துகிறேன் என்று சூளுரைத்தார். பட்டத்து யானை சென்ற திசை நோக்கி ஓடினார் ! இவர் சீறி எழுந்த காட்சி பெருங்காற்றும், வெந்தணலும் கலந்து பொங்கி எழுந்தது போல் இருந்தது ! மத யானை ஓடிக்கொண்டிருந்தது. எறிபத்தர் வேகமாக ஓடிச்சென்று யானையின் முன்னால் நின்றார். யானையைக் கொல்ல, சிங்கம் போல் பாய்ந்தார். அவ்வளவுதான் ! யானை, எறிபத்தரை நோக்கி, துதிக்கையைத் தூக்கிய வண்ணம் பாய்ந்தது. எறிபத்தர் கோபாவேசத்துடன், கோடாரியை எடுத்து பலமாக வீசி பூக்கூடையைப் பற்றி இழுத்து துதிக்கையைத் துண்டு பட்டுக் கீழே விழுமாறு செய்தார்.

மதக்களிறு இடி இடிப்பது போல் பயங்கரமாக பிளிறிக்கொண்டு நிலத்தில் வீழ்ந்து மடிந்தது. யானைக்கு ஏற்பட்ட நிலை கண்டு யானைப் பாகன் கதிகலங்கிப் போனான். யானையைக் காண அருகே சென்றான். யானை முன்னால் கோடரியும் கையுமாக நிற்கும் எறிபத்தரைக் கண்டான். எறிபத்தருக்குக் கோபம் தணியவில்லை. ருத்ரமூர்த்தி போல் காட்சி அளித்தார். யானையருகே விரைந்து வந்து கொண்டிருந்த யானைப் பாகனையும் குத்துக்கோற்காரனையும் கண்டார். அவர்களைப் பார்த்து, ஆத்திரத்துடன், மதக்களிற்றை அடக்க முடியாமல் தொண்டருக்கு ஏற்பட்ட துன்பத்தைப் பார்த்துக் கொண்டு இருந்த உங்களை சும்மா விடுவதா ? ஆணவக்காரர்களே ! யானையைவிடக் கேவலமானவர்களே ! உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள் ! என்று கனல் தெறிக்கப் பேசினார். கோடாரியால் ஐவரையும் வெட்டிக் வீழ்த்தினார். இந்த இடத்தில் நடந்த நிகழ்ச்சி அனைத்தையும் மன்னர்க்கு அறிவிக்கப் பலர் ஓடினர் ! பட்டத்து யானை வெட்டுண்டதையும், அதைத் தொடர்ந்து ஐவர் கொல்லப்பட்டதையும் மன்னர்க்கு அறிவித்தனர். இச்செய்தியைக் கேட்டு மன்னர் புகழ்ச்சோழர் மனம் பதறிப் போனார். அவரது கோபம் எல்லை மீறியது. அக்கணமே மன்னர் எறிபத்தரைப் பழிவாங்கப் புறப்பட்டார். அவர் பின்னால் படையும் மடை திறந்த வெள்ளம் போல் திரண்டது. அணி, தேர், புரவி, ஆட்பெரும் படைகள் சங்கு, காளம், பேரிகை முதலான் போர் சின்னங்கள் ஒலி எழுப்ப, அணிவகுத்து புறப்பட்டன. வீரர்கள் வேல், வாள், சக்கரம், மழு, சூலம் முதலிய ஆயுதங்களுடன் ஆர்ப்பரித்து எழுந்தனர். மன்னர் புரவியில் வேகமாக கொலைக்களத்திற்கு வந்தார் ! படையைச் சற்று தொலைவில் நிறுத்தி வைத்துவிட்டுப் பட்டத்து யானை இறந்து கிடக்கும் இடத்திற்கு புரவியில் அமர்ந்து சென்றார். பட்டத்து யானையும் குத்துகோற்காரனும், யானைப்பாகனும் கொலையுண்டு கிடப்பது கண்டு மனம் கலங்கிய மன்னர், அவர்கள் பக்கத்தில் கோடாரியும் கையுமாக கோபத்தோடு நின்று கொண்டிருக்கும் எறிபத்தரையும் பார்த்தார். நெற்றியிலே திருநீறு ! மேனியிலே திருநீறு! தலையிலே, கையிலே, கழுத்திலே உருத்திராட்ச மாலைகள். இப்படியாக சிவக்கோலத்துடன் நின்று கொண்டிருக்கும் எறிபத்தரைப் பார்த்தும் மன்னருக்கு எதுவுமே சரியாக விளங்கவில்லை. மன்னர் அவரைத் திருத்தொண்டராக எண்ணினாரே தவிர, கொலைகாரராக மட்டும் எண்ணவே இல்லை ! அரசர் அங்கு கூடியிருந்த மக்களிடம் இக்கொலை களைச் செய்தது யார் ? என்று கேட்டார். அனைவரும் எறிபத்தரைச் சுட்டிக்காட்டி வேந்தே ! இவர்தான் இக்கொலைகளைச் செய்தவர் என்றனர். வீரக்கனல் அணிந்து வெண்புரவி மீது அமர்ந்திருந்த புகழ்ச்சோழர் வியப்பு மேலிட, எறிபத்தரைப் பார்த்தார். வீரமும் கோபமும் நிறைந்திருக்கும் அவ்வடியாரது கருணை முகத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்த மன்னருக்கு, இத்தகைய கொலைகளைச் செய்யும் அளவிற்கு இத்தொண்டருக்குக் கோபம் வரவேண்டுமாயின் பட்டத்து யானை எவ்வளவு பெரும் தவறு செய்ததோ! இல்லாவிடில் இத்திருத்தொண்டர் எதற்காக இச்செய்களைச் செய்யப் போகிறார் ? என்பதனை ஊகித்துணர்ந்தார்.

அரசர் குதிரையை விட்டுக் கீழே இறங்கினார். எறிபத்தர் முன்னால் சென்று அவரை வணங்கினார். சுவாமி ! இங்கு நடந்தவற்றைப் பற்றி அடியேன் எதுவும் சரியாக அறிந்திலேன். உங்கள் முகத்தைப் பார்த்ததும்தான் உண்மை புரிகிறது : தங்கள் திருவுள்ளம் வருந்தும்படியான செயல் ஒன்று இங்கு நடந்துள்ளது என்று, ஐயனே ! நடந்த தவற்றுக்குப் பாகனையும், யானையையும் தண்டித்தது போதுமா? அருள்கூர்ந்து உத்தரவிடுங்கள் என்று பணிவுடன் கேட்டார். மன்ன! மதக்களிற்றையும், பாகனையும், குத்துக்கோற்காரனையும் கொன்றேன். அதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா ? பட்டத்து யானை இறைவனுக்குப் பூச்சுமந்து சென்ற சிவகாமியாண்டார் என்னும் அந்தணரின் கையிலிருந்த மலர்க்கூடையைப் பிடித்து இழுத்து நிலத்தில் கொட்டி நாசப்படுத்தியது. இத்தகைய தகாத செயலைப் பட்டத்து யானை செய்வதற்குக் காரணமாக இருந்த மற்றவர்களையும் கொன்றேன் ! எறிபத்தர் சொன்னதைக் கேட்டு மன்னர் மேலும் வருந்தினார். பக்தியோடும், பயத்தோடும் மீண்டும் அந்த அடியாரை வணங்கினார். மன்னர் மனதில் தம் மீது ஏதோ ஒரு பெரும் பழி வீழ்ந்துவிட்டது போன்ற பெரும் சுமை ஏற்பட்டது. அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பட்டத்து யானை என்னுடையது. அது செய்த தவற்றிற்கு நான்தான் காரணம். தங்களைப் போன்ற சிவனருட் தொண்டர்களுக்குத் தாங்க முடியாத அளவிற்குக் கோபத்தையும், வேதனையையும் ஏற்படுத்துமாறு நடந்து கொண்ட நான் இனியும், இந்நில உலகில் இருந்து என்ன பயன் ? நானும் தங்களால் தண்டிக்கப்பட வேண்டியவன்தான். ஐயன் தயவு செய்து என்னையும் இவ்வாளால் தண்டியுங்கள் என்று கூறிய அரசர் தம்மிடமுள்ள உடைவாளைக் கழற்றி அடியாரிடம் நீட்டினார். மன்னரின் ஈடு இணையற்ற உத்தமமான அன்பிற்கு முன்னால் தம் பக்தி எம்மாத்திரம் என்று எண்ணி, நிலை தடுமாறிய எறிபத்தர். சட்டென்று உடைவாளை மன்னரிடம் இருந்து எடுத்துக் கொண்டார். எறிபத்தர், தன்னையும் கொலை செய்வதற்காக வேண்டிதான் உடைவாளைப் பெற்றுக் கொண்டார் ! என்று தமக்குள் ஒரு முடிவிற்கு வந்த மன்னர், எறிபத்தரைப் பார்த்து, ஐயனே! நான் செய்த பிழை என்னை விட்டு நீங்கியது என்று கூறித் தலைவணங்கி நின்றார். மன்னரின் ஒவ்வொரு செயலையும் பார்த்து மனம் பதறிப்போனார் எறிபத்தர். அவரை தசை எல்லாம் ஒடுங்க, செய்வது யாது ? என்று கலங்கி நின்றார். அவரது உள்ளத்தில் இனம் தெரியாத ஒருவித உணர்ச்சி வெள்ளப் பிரவாகம் போல் ஓடியது ! ஐயையோ! எவ்வளவு தவறான செய்களைச் செய்துவிட்டோம். சமன் செய்து சீர் தூக்குவது போல், நேர்மை குன்றாது ஆட்சி புரியும் மன்னனின் மாண்பினை உணராது போனேனே! உயர்ந்த பண்பும், பக்தியும் கொண்டுள்ள தொண்டருக்குத் துரோகம் செய்து விட்டேனே!

திருவெண்ணீற்றுக்குத் தம் உயிரையே இழக்கத் துணிந்த இந்த பக்தனுக்கா எனது பாதகம் ! இஃது அடுக்கவே அடுக்காது. இவர் அரசர் அல்ல, அடியார்களின் அன்பர். இவரது பட்டத்து யானையையும் மற்றவர்களையும் கொலை செய்தேனே ! கொற்றவனாக இருந்தும் எனது கொலை பாதகத்திற்குச் சற்றும் தண்டனை கொடுக்க எண்ணாது தம்மையும் அல்லவா மாய்த்துக் கொள்ளப் பார்க்கிறார். இவர் அருள் வடிவமானவர் ! அன்பின் திருவுருவமானவர் ! அகிலமே பேற்றுதற்குரிய திரு அவதாரச் செம்மல் ! அரனாருக்கும், அவரது அடியார்களுக்கும் உண்மையிலேயே துரோகம் செய்தவன் நானேதான் ! நான் உலகில் வாழவே கூடாது. மடியவேண்டியவன். இவ்வாறெல்லாம் தமக்குள் எண்ணிப் புண்பட்ட எறிபத்தர், கையிலிருந்த உடைவாளால் தம் கழுத்திலே வைத்து அறுத்துக் கொள்ளப் போனார். எறிபத்தரின் செயல் கண்டு திடுக்கிட்டுப் போன மன்னவர் கற்றறிந்த அறிவுச் செம்மலே ! என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள் ? இது கொடுமை, கொடுமை என்று கூறியவாறே, அவரது கையிலிருந்த உடைவாளை பற்றிக் கொண்டார். அவ்வமயம் அனைவரும் வியக்குமாறு விண்ணிலே பொன்னொளி பிறந்தது. எம்பெருமானின் திருவருளினால் அசரீரி வாக்கு மண்ணில் இருந்தோர் கேட்கும் வண்ணம் எழுந்தது. அன்பிற் சிறந்தவர்களே ! உங்களுடைய தொண்டின் பெருமையை உலகெல்லாம் அறிந்துகொள்ளும் பொருட்டே இன்றைக்கு இவை அனைத்தும் நடந்தன. இறைவனின் தெய்வ வாக்கைக் கேட்டு எறிபத்த நாயனாரும், மன்னரும் இறைவனைத் தியானித்தபடியே நிலத்தில் வீழ்ந்து வணங்கினர். இறைவனின் திருவருளால் இறந்த உயிர்கள் அனைத்தும் உயிர் பெற்றன. அதுபோலவே சிவகாமியாண்டார், பூக்கூடையிலும் பூக்கள் தானாகவே நிறைந்திருந்தன. சிவகாமியாண்டார் எம்பெருமானின் திருவருளை நினைத்து மகிழ்ந்தவாறே, ஆனிலை அப்பரை வழிபடப் புறப்பட்டார். இந்நிகழ்ச்சி மன்னரையும், எறிபத்த நாயனாரையும் நண்பர்களாக்கியது. எறிபத்தர் வாள் களைந்து, சோழமன்னரின் தாள் பணிந்தார். சோழரும் அவரது அடி வீழ்ந்து வணங்கினார். சோழமன்னர், பட்டத்து யானை மீதேறி அரண்மனைக்குப் புறப்பட்டார். எறிபத்த நாயனார், நிலவுலகில் நெடுங்காலம் வாழ்ந்து திருத்தொண்டுகள் பல புரிந்தார். இறுதியில் எம்பெருமானுடைய சிவகணத் தலைவராகிப் பேரின்ப வீட்டில் வாழ்ந்தார். அதுபோலவே புகழ்ச் சோழனும் சிறப்புடன் ஆட்சி புரிந்து பேரின்ப வீடு கண்டான். சிவகாமியாண்டாரும் பரமனுக்குத் திருத்துழாய்க் கைங்கரியம் செய்து பூவுலகில் பல்லாண்டு காலம் வாழ்ந்து பிறவாப் பெருவாழ்வு பெற்றார்.

IN ENGLISH

Karur which is a ancient city in Tamil Nadu. To add to the fame of the city there lived the devotee Eripaththar. He appeared with his axe to cut down the troubles put to the devotees, whenever such an atrocity appears. On an auspicious Navami day, and aged devotee, Sivakamiandar, was carrying a basket of flowers for the worship Lord Shiva. The royal elephant got amuck and came running in the street. The mahouts were shouting warning messages. But before the old devotee could run the mad wild elephant coming behind him pulled the basket and tossed it on the ground. The flowers were strewn on the street. The old devotee began to weep piteously unable to stand his grief. Eripaththar who came that way, saluted shivakamiandar and became a burning fire as he came to know about the misdeed of the elephant, to slaughter the elephant. He sprang and cut off its trunk with the dreadful axe in his hand and killed the guards who failed in their duty. The other guards who escaped ran to the kingdom to tell, “Somebody killed the royal elephant and the guards”.

The king Pugazhchola, who was a nightmare for enemies, reached the spot as a roaring lion in anger, with his armed forces. When he found that the killer was a devotee of Shiva, the king descended forms his horse and bowed before the Shiva devotee and thought that there must have been sufficient provocation for such a dreadful deed form a Shiva devotee. And asked humbly, “What was the crime the elephant and the guards did to get this piteous condition? Eripaththar told him the brutal act of the beast. The superior king Pugazhchola felt the mistake was in his part too, as it was his royal elephant that committed misdeed against the service of the Lord. He fell on Eripaththar’s feet and appealed to him, “Killing just the elephant and the guards is not sufficient punishment for the sin done. Kill me too, killing with the holy axe is not the custom. Kill me with this sword”, and submitted his sword to Eripaththar.

Eripathar was taken aback by the king’s nobility and humility. He was now deeply mortified to have been the cause of the noble king’s sorrow. The way out was to kill himself. As he proceeded to act out his thought, Shiva’s voice proclaimed that this was a test to hold up to the world the intense devotion of the two. Now they could go their way. The elephant was restored to life and the mahouts too. The king ascended the elephant along with Eripathar and both rode back to their duties.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *