சாக்கிய நாயனார்

திருச்சங்கமங்கை என்னும் நகரத்தில் தகவுடைய வேளாண் மரபில் உதித்தவர் சாக்கிய நாயனார். இவர் எல்லா உயிர்களிடத்தும் அன்பும், அருளும் ஒருங்கே அமையப் பெற்றவராய்த் திகழ்ந்தார்.சிவனாரிடத்தும் அவரது அடியார்களிடத்தும் பேரன்புமிக்க இப்பெருந் தலைவர் பிறவித் துன்பத்தில் நின்றும் தம்மை விடுவித்துக் கொள்ள மனங் கொண்டார். அதற்கென நன்னெறி நூல்களைக் கற்றறிய எண்ணினார்.காஞ்சிபுரத்திலுள்ள, சாக்கியர்களைக் கண்டு தன் எண்ணத்தைச் செயல்படுத்த முனைந்தார். அடிகளார் காஞ்சிபுரத்திலுள்ள சாக்கியர்களுடன் பழகினார். நூல்கள் பல ஆராய்ந்தார். ஆனால் நாயனாரால் நல்ல வகையான நெறியைக் காண முடியவில்லை. அதனால் அடிகளார் மேலும் பற்பல சமய நூல்களைக் கற்கலானார். இறுதியாக சைவ சமய நூல்களையும் கற்றார். அதன் பிறகு அடிகளார் பிறவிப் பெருங்கடலைக் கடக்க சிவநெறியே  சாலச் சிறந்த வழி என்ற ஒப்பற்ற உண்மையைக் கற்றுத் தெரிந்துகொண்டார்! அதனால் அவர் உள்ளத் தெளிவு பெற்றார். மன்னிய சீர்ச் சங்கரன் தாள்தனைப் பணிந்து தூய சிவத்தைச் சித்தத்திலிருத்தி சிந்தை குளிர்ந்தார். சாக்கியர் கோலத்திலே இருந்தமையால் தம்மைப் பிறர் அறியா வண்ணம் சிவநாமத்தை அகத்திலேயே எண்ணி ஒழுகிய சாக்கிய நாயனார் பிறர் அறியாத வண்ணம் சிவலிங்க பூசையும் நடத்தி வந்தார். தினமும் சிவலிங்க தரிசன வழிபாட்டிற்குப் பிறகு தான் உண்பது என்ற உயர்ந்த பழக்கத்தையும் மேற்கொண்டிருந்தார். ஒருநாள் நாயனார் பரந்த நிலவெளி வழியாகச் சென்று கொண்டிருக்கும்பொழுது சிவலிங்க உருவம் ஒன்று வழிபாடு எதுவும் இன்றிக் கிடப்பதைக் கண்டு உள்ளமும் உடலும் உருகினார். இத்திருத்தொண்டர் சிவலிங்கத்தைத் தூய நீராட்டி, நறுமலர் இட்டு, பூசித்து மகிழத் திருவுள்ளம் கொண்டார். ஆனால் அந்த இடத்தில் நீரேது? மலரேது? நல்ல மனம் மட்டும்தானே இருந்தது! சாக்கிய நாயனார் அன்பின் பெருக்கால் அருகே கிடந்த சிறு கல்லை எடுத்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடியே சிவலிங்கத்தின் மீது போட்டார். அன்பினால் எதற்கும் கட்டுண்ட இறைவன், சாக்கிய நாயனார் எறிந்ததை அன்புக் குழவியின் தளிர்க்கரம் பற்றித் தழுவுவது போன்ற இன்பப் பெருக்காக எண்ணினார்.

இல்லாவிடில் சாக்கிய நாயனார் எறிந்த கல் கயிலையில் தேவியுடன் கொலு வீற்றிருக்கும் எம்பெருமானின் திருவடித் தாள்களில் பொன் மலரென விழுமா என்ன? சாக்கிய நாயனாரின் அன்பு உள்ளத்தைக் கண்டு அரனார் ஆனந்தம் கொண்டு சாக்கிய நாயனாருக்கு அருள்புரியத் திருவுள்ளம் கொண்டார். சாக்கிய நாயனார், அன்று முழுவதும் சிவலிங்க தரிசனத்தை எண்ணி எண்ணி எல்லையில்லா மகிழ்வு பூண்டார். மறுநாளும் சிவலிங்க வழிபாட்டிற்காக அவ்விடத்தை வந்து அடைந்தார்! சிவலிங்கத்தைக் கண்டு, உவகை பூண்டார். அன்பினால் கல்லெறிந்து வழிபட்ட செயலை எண்ணினார். தமக்கு இத்தகைய மனப் பக்குவத்தைத் தந்தருளியது எம்பெருமானின் திருவருட் செயலே என்று உணர்ந்தார். சாக்கியர் வேடத்தில் இருக்கும் நான் மலரால் சிவனாரை வழிபடுவதைப் பிறர் காணில் ஏசுவர். ஆனால், கல்லால் எறிவதை எவராகிலும் காண்கின், வெறுப்பின் மிகுதியால்தான் இவ்வாறு செய்கிறார் என்று எண்ணுவர். இதுவும் அரனாரின் அருள் மொழியே அன்றி, வேறொன்றுமில்லை என்று தமக்குள் எண்ணிப் பெருமிதம் கொண்டார். ஈசனைக் கல்லெறிந்து வழிபட்டு தமது இல்லத்திற்குச் சென்று  உண்ணலானார். இவ்வாறு சிவலிங்க வழிபாட்டைத் தவறாமல் தினந்தோறும் நடத்தி வந்தார்.ஒருநாள் சாக்கிய நாயனார் அரனார் மீது கொண்டுள்ள பக்திப் பெருக்கால் சிவலிங்க வழிபாட்டைச் சற்று மறந்த நிலையில் திருவமுது செய்ய அமர்ந்து விட்டார். சட்டென்று எம்பெருமான் நினைவு கொண்ட சாக்கிய நாயனார் உள்ளம் பதறிப் போனார். எம்பெருமானே! இதென்ன சோதனை! எவ்வளவு தவறான செயலைப் புரிந்துவிட்டேன்! அண்ணலே ஏழையின் பிழை பொறுத்தருள்வீரே! என்று புலம்பி உள்ளம் உருகினார். எழுந்தோடினார்! பரந்த நிலவெளியை அடைந்து சிவலிங்கப் பெருமான் மீது அன்பு மேலிட கல் ஒன்றை எடுத்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி எறிந்தார். அப்பொழுது சாக்கிய நாயனாரின் அன்பிற்குக் கட்டுப்பட்ட எம்பெருமான் உமாதேவியாருடன் விடையின் மீது எழுந்தருளினார். சாக்கிய நாயனார் கரம் குவித்து நிலந்தனில் வீழ்ந்து பணிந்து, எம்பெருமானை வணங்கினார். இறைவன் சாக்கிய நாயனாருக்குப் பிறவாப் பேரின்பத்தைக் கொடுத்தருளினார்.

சிறுத்தொண்ட நாயனார்

திருச்செங்காட்டங்குடி நீர் வளமும், நில வளமும் நிறைந்த ஒரு சிறந்த நகரம். அந்நகரிலே எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் கோவிலுக்கு கணபதீச்சுரம் என்று பெயர். அந்நகரிலே மாமாத்திரர் என்னும் குலம் உயர்ந்து விளங்கியது. அக்குலத்தைச் சேர்ந்தவர்கள் அரசர் குலத்திற்குப் படைத்தளபதியாகவும், அமைச்சராகவும் பணியாற்றி வந்தனர். இப்பேர்ப்பட்ட உயர்ந்த பெருங்குடியில் பரஞ்சோதியார் என்னும் நாமமுடைய தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பல்லவ மன்னனிடம் படைத் தலைவராகப் பணியாற்றி வந்தார். வாள் வலிமையும், தோள் வலிமையும் கொண்டிருந்த அவர் படைக்கல பயிற்சியில் பேராற்றல் பெற்று விளங்கினார். எண்ணற்ற போர்களில் மன்னனுக்கு ஈடில்லா மாபெரும் வெற்றியை வாங்கிக் கொடுத்தார். இவ்வாறு வீரமிக்கவராய் வாழ்ந்த பரஞ்சோதியார் பக்தி மிக்கவராகவும் இருந்தார். எந்நேரமும் சிவ நாமத்தைச் சிந்தையிலே கொண்டு ஒழுகி வந்தார். அத்தோடு இவர் சிவனடியார்களைச் சிரம்தாழ்த்தி வரவேற்று உபசரித்து உண்பிக்கும் உயர்ந்த பண்பினையும் பெற்றிருந்தார். அடியவர் முன்பு அன்பின் மிகுதியால் தம்மைச் சிறியவராக்கிக்கொண்டு அடக்க ஒடுக்கத்துடன் உள்ளம் உருக உயர் தொண்டாற்றுவதால் இவரைச் சிறுத் தொண்டர் என்று அனைவரும் அழைக்கலாயினர். ஒருமுறை பரஞ்சோதியார் பெரும்படையைத் திரட்டிக் கொண்டு வடநாடு சென்றார். வாதாபியை வென்றார். பாரெல்லாம் பல்லவன் புகழ் பேச வெற்றி முரசம் திக்கெட்டும் முழங்க தென்புலம் திரும்பி வந்தார்.

பரஞ்சோதியாரின் வீரத்தைப் பார்த்த பல்லவன் பெருமகிழ்ச்சிப் பூண்டான். அவையறிய அவரது வீரத்தையும், தீரத்தையும் வானளாவப் போற்றிப் புகழ்ந்தான். விருதுகள் பல வழங்கினான் மன்னன். ஒருநாள் அமைச்சர்கள் பரஞ்சோதியாரின் வெற்றிக்கான முக்கிய காரணத்தை விளக்கும் பொருட்டு மன்னனிடம் சென்றனர். மன்னவா! பரஞ்சோதியார் இறைவனின் திருவடிக் கமலங்களிலே நிறைந்த பக்தியுடையவர். இறைவனின் சக்திக்கும் பரஞ்சோதியாரின் பக்தியுமே இவரது வெற்றிக்குக் காரணம்! இத்தகைய சிவத்தொண்டு மிக்க நம் தளபதியை பகையரசர்கள் வெல்வது என்பது எவ்வாறு சாத்தியமாகும் என்று கூறினார். அமைச்சர்கள் கூறியதைக் கேட்ட மன்னவன் திகைப்படைந்தான். பரஞ்சோதியாரின் சிவபக்தியை எண்ணி எண்ணி சிந்தை குளிர்ந்தான். அதே சமயத்தில் வேதனையும் அடைந்தான். தான் அறியாமல், கடவுளுக்கு ஏதோ பெரும் பிழை செய்துவிட்டதாக எண்ணி மனம் வாடினான் மன்னன். தெய்வத்தைப் போல் போற்றி வழிபடுவதற்குரிய திருத்தொண்டரை போர்முனைக்கு அனுப்பியது மிகப்பெரிய தவறு என்பதையும் உணர்ந்தான். தனக்குள் கலக்கமுற்றான். மன்னன் சித்தம் தடுமாறினான். போர்க்களத்தில் எதிர்பாராமல் இச்சிவனடியார்க்கு ஏதாகிலும் தீங்கு ஏறபட்டிருந்தால் அஃது தமக்கு எத்ததைய பெரும் பழியை ஏற்படுத்தியிருக்கும் என்பதை எண்ணி எண்ணிப் புலம்பினான்.

மன்னன் ஒரு முடிவிற்கு வந்தான். பரஞ்சோதியாரைத் தளபதி என்று எண்ணவில்லை. தொழுதற்குரிய பெரும் பேறு பெற்ற மகான் என்றே கருதினான். அரசன் அவசர அவசரமாக பரஞ்சோதியாரை வரவழைத்தான். பரஞ்சோதியார் அரசரின் கட்டளை கேட்டு அரண்மனைக்கு வந்தார். அரசன் பணிவுடன் அருந்தவத்தினரே! தங்களது மகிமையை உணராமல் தங்களைப் போருக்கு அனுப்பி பல தொல்லைகள் கொடுத்ததற்குப் பொறுத்தருள வேண்டும். இந்த எளியேனுக்காக தாங்கள் எல்லையில்லா இன்னல்களைப் பல காலம் அனுபவித்தீர்கள். இனியும் தாங்கள் எமக்கு ஏவல் புரிதல் ஆகாது. அருள் புரிதல் வேண்டும். தாங்கள் சித்தம் போல் சிவனார் அடிபோற்றி தாங்கள் விரும்பியவாறு சிவநெறியில் சிவத்தொண்டுகள் பல புரிந்து ஒழுகுவீர்களாக என்று இறைஞ்சி நின்றான். மன்னனின் மொழி கேட்ட பரஞ்சோதியார் திடுக்கிட்டார். செய்வதறியாது சிலையாக நின்றார். அவருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. முடிவில் மன்னனின் ஆணையை சிரமேற்கொண்டார். நடப்பது யாவும் இறைவனின் அருட் செயலே என்று மனதிலே உறுதி பூண்டார். மன்னன் பரஞ்சோதியாருக்கு நிறையப் பொன்னும் பொருளும் வழங்கினான். பரஞ்சோதியார் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். மன்னன் அவரை ராஜ மரியாதையுடன் ஊருக்கு அனுப்பி வைத்தான். பல்லவ மன்னனிடமிருந்து பொன்னும் பொருளும் பெற்ற பரஞ்சோதியார் அவற்றை ஆலய திருப்பணிக்கும், அடியார்களைப் பேணுவதற்கும் செலவு செய்து வரலானார். அல்லும் பகலும் பக்தி மார்க்கத்தில் வாழத் தொடங்கிய பரஞ்சோதியார் நற்குடியிற் பிறந்த திருவெண்காட்டு நங்கை என்னும் பெயருடைய மங்கை நல்லாளை மணம் புரிந்துகொண்டார்.

அவரது மனைவியாரும் அவரைப் போலவே சிவனாரிடத்தும், அவரது அடியார்களிடத்தும் நல்ல பக்தியும், அன்புடையவராகவும் இருந்தார். பரஞ்சோதியார் அவ்வம்மையாரோடு இல்லறத்தை முறைப்படி நடத்தத் தொடங்கினார். குறள்வழி வாழும் இவ்வில்லறத்தார் இன்பத்தின் முழுப் பயனையும் பெற்றுக் கருத்தொருமித்த காதலர்களாக வாழ்ந்து வந்தனர். பரஞ்சோதியாரும் அவரது மனைவியாரும் தொண்டர்களை அன்போடு வரவேற்று அமுதளித்து விருந்தினர் முன்னுண்டு தாங்கள் பின் உண்ணும் முறை அறிந்து ஒழுகினர். சிவத்தொண்டர்கள் மனங்குளிர அவர்கள் விரும்பியவாறே எது கேட்டாலும் இல்லையெனாது அளித்து அமுதூட்டி மகிழ்ந்தனர். இத்தகைய நல்ல இல்லத்தாருக்கு சிவபெருமானின் அருளாள் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்குச் சீராளன் எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர்கள். இவ்வாறு வாழ்ந்து வந்த சிறுத்தொண்டரின் பெருமையையும், பக்தியையும் உலகோர்க்கு உணர்த்தத் திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான். அன்று ஒருநாள் சீராளன் பள்ளிக்கச் சென்றிருந்தான். பெற்றோர்கள் விருந்தினரை எதிர்பார்த்து வாயிலிலே நின்றுகொண்டிருந்தனர். நெடுநேரமாகியும் விருந்துண்ண ஒரு சிவனடியார் கூட வராதது கண்டு கவலை மிகக்கொண்ட சிறுத்தொண்டர் விருந்தினரைத்  தேடி வெளியே சென்றார். சிறுத்தொண்டரின் மனைவி கவலையோடு  உள்ளே சென்று சிவநாமத்தை ஜபிக்கத் தொடங்கினாள். அதுசமயம் சிவபெருமான் பைரவ சந்நியாசியாக வேடம் பூண்டு பரஞ்சோதியார் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். எம்பெருமான் வெளியே நின்றபடியே சிவனடியார்களுக்குத் திருவமுது செய்விக்கும் சிறுத்தொண்டர் வீட்டில் இருக்கிறாரா? என்று கேட்டார்.

அடியாரின் குரலைக் கேட்டு மனைக்குள் இருந்த சந்தன நங்கை என்னும் பணிப்பெண் வெளியே ஓடிவந்து, சிறுத்தொண்டர் எங்கு போயிருக்கிறார் என்பதை விளக்கி விட்டு அகத்து வந்து அமருமாறு பணிவன்போடு கேட்டுக் கொண்டாள். பணிப்பெண் மொழிந்ததைக் கேட்ட இறைவன் அப்படியாயின் பெண்கள் தனித்து இருக்கும் இடத்தில் யாம் தங்குவதில்லை என்று கூறினார். இறைவன் மொழிந்ததைக் கேட்டு உள்ளிருந்து ஓடிவந்த சிறத்தொண்டரின் மனைவி  சுவாமி! சற்று பொறுங்கள். என் நாதன் எப்படியும் இப்பொழுது வருவார் என்று கூறினாள். அதற்கும் அவ்வடியார் இயைந்து கொடுக்கவில்லை. அதுகண்டு அம்மையார் மீண்டும் சுவாமி ! தொண்டர்களுக்கு அமுது செய்விக்காமல் நாங்கள் உண்பதில்லை. நாடோறும் ஆயிரக்கணக்கான அடியார்கள் அமுதுண்ணும் மனையில் இன்று இதுவரைத் திருத்தொண்டர் ஒருவர் கூட வந்தாரில்லை. அது கருதியே என் நாயகன் அடியார்களைத் தேடிச் சென்றுள்ளார். அவர் எப்படியும் இப்பொழுது வந்துவிடுவார். என் ஐயன் வந்ததும் தங்களது அருட் தோற்றத்தைக் கண்டால் மட்டில்லா மகிழ்ச்சி கொள்வார். அதனால் சுவாமி எங்ஙனமாகிலும் அருள்கூர்ந்து மனைக்குள் எழுந்தருளல் வேண்டும் என்று விண்ணப்பித்தாள். அம்மையார் விண்ணப்பத்தை பைரவர் ஏற்றுக்கொள்ளவில்லை. வடபுலத்திலிருந்து யாம் புறப்பட்டு வந்தது தொண்டரைக் காண்பதற்காகத்தான். அவரின்றி யாம் மனைக்குள் தங்குவதாக இல்லை. எதற்கும் யாம் கோயிலுள்ள ஆத்தி மரத்தின் கீழே காத்திருக்கிறோம். அவர் வந்தால் எம் அடையாளங்களைக் கூறி அனுப்பி வையுங்கள் என்று சொல்லிவிட்டு வேகமாகச் சென்றார் சிவபெருமான்! சிவத்தொண்டரின் மனைவியோ வேதனையோடு உள்ளே சென்றாள்.

பைரவர் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் சிவனடியார்கள் யாரையும் காணாமல், வாட்டத்தோடு மனையிற் புகுந்தார் சிறுத்தொண்டர். கணவரின் கவலை தோய்ந்த முகத்தைக் கண்டு மனைவியார் பைரவரின் திருக்கோலத்தைக் கணவருக்கு நன்றாக விளக்கிக் கூறி அன்னார் ஆத்தி மரத்தடியே அமர்ந்திருப்பார் என்பதையும் இயம்பினாள். அதுகேட்டு சிறுத்தொண்டர் உள்ளமும் உடலும் பூரித்துப் போனார். உயர்ந்தேன் என்று மகிழ்ச்சிப் பெருக்கோடு சற்றும் தாமதியாமல் ஆலயத்திற்கு விரைந்தார். ஆத்தி மரத்தடியே வீற்றிருக்கும் அருள் வடிவான பற்றற்ற துறவியின் ஒப்பற்ற அடிதனைப் போற்றி வணங்கி நின்றார். சிறுத்தொண்டரை ஏற இறங்கப் பார்த்த பைரவர் – நீ தான் பெருமை பெற்ற சிறுத்தொண்டரோ என்று கேட்டார். சிறுத்தொண்டர் முகம் மலர, தொண்டரைக் காக்க வந்த  தவமிக்க எந்தையே! உலகில் எதற்கும் எத்தகைய தகுதியும் இல்லாத இச்சிறியோனை அந்தி வண்ணர் அடிபோற்றும் அன்பர்கள் இப்பெயரால் அழைப்பதுண்டு. இவ்வடியேனுக்கு அத்தகுதியிருப்பதாகத் தெரியவில்லை. சுவாமி! இனிமேல் சற்றும் தாமதியாமல் இந்த ஏழையின் இல்லத்திற்கு எழுந்தருளி அமுது செய்து அருள வேண்டும் என்று மிக்க பணிவன்போடு வேண்டி நின்றார். அருந் தவத்தீர்! ஐயம் ஒன்றுமில்லை. எமக்குத் தேவையான உணவை வழங்குதல் என்பது உம்மால் ஆகாத காரியம் ஆயிற்றே. ஐயன் இங்ஙனம் எண்ணுதல் ஆகாது. சுவாமி! திருவாய் மலர்ந்து அருளுங்கள். திருவாக்கின்படியே, அமுது செய்விக்கின்றேன். அப்படியா சிறுதொண்டரே! மிக்க மகிழ்ச்சி. நாம் ஆறு மாதத்திற்கு ஒருமுறைதான் உண்போம். பசுவை வதைத்துதான் உண்பது வழக்கம். அக்காலம் இன்றுதான் வந்தது. உம்மால் அத்தகைய பசுவின் மாமிச உணவைச் சமைத்து அமுது செய்ய முடியுமா என்றுதான் சிந்திக்கிறேன்.

சுவாமி! சாலவும் நன்று! இந்த எளியேனுக்கு இதுவா ஒரு பெரிய காரியம். என்னிடம் மூவகை ஆநிரைகள் உண்டு. ஐயன் எழுந்தருளி எத்தகைய ஆநிரை வேண்டுமென்று பணிகின்றீர்களோ, அதனையே பக்குவமாகச் சமைத்து அளிக்கத் தவறேன். பசுவென்றால், நீர் எண்ணுவதுபோல் விலங்கினத்தைப் பற்றி நாம் கூறவில்லை. யாம் குறிப்பிடுவது பசு, ஐந்தாண்டு பிராயமுள்ள இளம் ஆண் பிள்ளையைத்தான்! அந்த ஆண் பிள்ளைக்கு அங்கங்களில் எவ்வித பழுதும் இருக்கக்கூடாது ! அந்த ஆண் பிள்ளையையும், யாம் கூறுவது போன்ற பக்குவத்தில் கறி சமைத்தல் வேண்டும். ஒரு குடிக்கு ஒரு மகனாய்ப் பிறந்துள்ள அப்பாலகனின் உடலைத் தாயார் பிடிக்கத் தந்தையார் அரிந்து, அதனைச் சமைத்தல் வேண்டும். அப்பொழுது மனையிலுள்ளோர் எவரும் வருந்தக்கூடாது. ஒரேபோல் அனைவருமே சந்தோஷத்துடனேயே இருத்தல் வேண்டும். ஐயனின் ஆணை இதுவாயின் அங்ஙனமே அமுது அளிக்கிறோம். நன்று! நீவிர் உடனே சென்று விருந்திற்கான ஏற்பாட்டை முடித்துவிட்டு அமுதுண்ண வேண்டிய தருணத்திற்கு அழைத்துச் செல்லும். அதுவரை யாம் இங்கேயே காத்திருப்போம்! சீக்கிரம் ஆகட்டும். நான் மிகவும் பசித்திருக்கிறேன் என்று பைரவர் கூறினார். சிறுத்தொண்டர் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு தமது மாளிகையை விரைவாக வந்து அடைந்தார். பெருமனைக் கிழத்தியிடம் பைரவர் பகர்ந்ததை அப்படியே ஒன்றுவிடாமல் விவரமாகக் கூறினார். அவர் மொழிந்தது கேட்டு மனைவியார் எம்பெருமான் அருளியவாறு ஒரு குடிக்கு ஒரு மகனை எங்கு சென்று தேடுவோம் என்றாள். சிறுத்தொண்டர் நற்குண நங்கையே ! நாம் பெற்ற அருந்தவப் புதல்வனையே அதன் பொருட்டு அழைப்போம் என்றார்.

அம்மையாரும், அவரது மொழிக்கு இயைந்தாள். ஆசானிடம் கல்வி பயிலச் சென்றிருக்கும் நமது அன்புச் செல்வனை அழைத்து வாருங்கள் என்று கூறினாள். சிறுத்தொண்டர் பெருமகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் சென்று மகனை அழைத்துக்கொண்டு மனைக்கு மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார். எம்பெருமான் உண்மையான சீராளனை மறைத்து மாயச் சீராளனை அவர்களிடம் அனுப்பியதனை அவர்கள் எங்ஙனம் அறிய இயலும். சீராளனை எதிர்பார்த்து, வீட்டுத் திண்ணையோரமாக நின்று கொண்டிருந்த திருவெண்காட்டு நங்கையார், எதிர் சென்று பொன்னிற வண்ணப் பெருமேனியனாகிய மகனை வாரி அணைத்து உச்சி மோந்தவாறு உள்ளே அழைத்துச் சென்றாள். ஒன்றுபட்ட மனமுடைய கணவனும், மனைவியும் சேர்ந்து தெய்வத் தன்மை பொருந்திய சீராளப் பெருமானைச் சீரோடு அரிந்து, பாலோடு, பசுந்தேனோடு, பச்சைக் காய்கறிகளோடு சேர்த்து பக்குவமாகச் சமைப்பதில் முனைந்தனர். உடனே அடிகளார் பைரவச் சங்கரரை அழைத்துவர ஆத்தி மரத்தடிக்குப் புறப்பட்டார். திருவெண்காட்டு நங்கையாரும், சந்தான தாதியாரும் வீட்டைத் தூப தீபத்தாலும் நிறை குடங்களாலும் அலங்காரம் செய்தனர். நன்றாக வீட்டை கோமய நீரால் மெழுகினர். மாக்கோலமிட்டனர். வண்ண மலர்களைப் பரப்பினர். ஆங்காங்கே மலர் மாலைகளும், முத்து மாலைகளும் தோரணங்களும் அழகுறத் தொங்க விட்டனர். விருந்தினரைப் பேணும் பேராற்றல் பெற்ற அடியார் ஆராக் காதலுடன் நமச்சிவாய மந்திரத்தை நினைத்தவாறு பக்திப் பெருக்குடன் ஆத்தி மரத்திற்கு வந்து பைரவரை அழைத்துக்கொண்டு தமது திருமனையை அடைந்தார். பைரவரை வரவேற்று உபசரிக்க ஆவலோடு நின்று கொண்டிருந்த திருவெண்காட்டு நங்கையார், பைரவரது திருவடிக் கமலங்களில் நறு மலரைக் கொட்டிக் குவித்து கும்பிட்டு அழைத்துக்கொண்டு மனையுள் புகுந்தார்.

மலர் பரப்பிய ஆசனத்தில் அவரை அமரச் செய்தார். அம்மையார் நீர்வார்க்க, அடிகளார் பாதத்தை விளக்கினார். திருவடிகளுக்குச் சந்தனம் தடவி மலரால் அர்ச்சித்து, தூப தீபம் காட்டிப் பாத பூஜை செய்த நன்னீரைச் சென்னி மீதும் மனைவியார் சிர மீதும் வீடு முழுவதும் தெளித்தார். இருவரும் அமுது படைக்க ஐயனின் கட்டளையை எதிர்பார்த்து நின்றனர். அதற்கு ஏற்ப அடிகளார் திருவாய் மலர்ந்து, எல்லாக் காய்கறிகளையும் ஒருங்கே படைத்தாக வேண்டும் என்றார். அடியாரின் விருப்பப்படியே அமுது படைத்தனர். அப்பொழுது பைரவர், எல்லா உறுப்புக்களையும் படைத்தீர்களோ? என்று கேட்க, திருவெண்காட்டு நங்கையார், தலை இறைச்சியை மட்டும் அமுதுக்கு உதவாதென்று சமைக்கவில்லை என்று கூறினாள். அதற்கும் இறைவன் அதனையே யாம் உண்போம் என்றார். சந்தன நங்கையார், நான் அதனைச் சமைத்துப் பக்குவம் செய்து வைத்துள்ளேன் என்றவாறு உள்ளே சென்று தலையிறைச்சியைக் கொண்டு வந்தாள். அம்மையாரும், நாயனாரும் சந்தன தாதியாரின் திறத்தினையும்,பேராற்றலையும், தக்க சமயத்தில் தங்களைக் காத்த நிலையையும் எண்ணி உள்ளுக்குள் மகிழ்ந்தனர். அம்மையார் அவ்விறைச்சியையும் அடியவருக்கு படைத்தாள். சிறுத்தொண்டர், அன்போடு அடியாரை நோக்கி சுவாமி! அமுது செய்து அருளலாமே! என்று வணங்கி நின்றார். இறைவன் மேலும் சோதிக்கலானார். அடியார்கள் எவரையாவது அழைத்து வாரும். யாம், தனித்து உண்பதில்லை என்றார். அடியவரின் இம்மொழி கேட்டு சிறுத்தொண்டர் மனம் வருந்தினார். வேதனை மேலிட அடியார்களை எங்ஙனம் தேடி பிடிப்பது ? என்ற கலக்கத்துடன் வெளியே சென்றார். இருமருங்கும் நோக்கி அடியார்கள் எவரையும் காணாமல் மனச்சோர்வுடன், பைரவர் முன் ஏக்கமுடன் வந்து நின்றார்.

சுவாமி! எம்மைப் பொறுத்தருள்க. சிவனடியார்களை எங்கு தேடியும் காணவில்லை. அடியவர்களை போலவே அடியேனும் திருவெண்ணீறு அணிந்துள்ளேன் என்று பணிவன்போடு பகர்ந்தார் திருத்தொண்டர். அப்படியா? நன்று! வருந்தாதீர். நீரும் ஒரு சிவனடியார்தானே! தாராளமாக நீரே எம்முடன் இருந்து உண்ணலாம் என்று ஆணையிட்டார் பைரவர். அம்மையாரை நோக்கி, இருவருக்கும் பக்கத்தில் ஓர் இலை இட்டு, எமக்குப் படைத்தாற் போலவே இறைச்சியும், அன்னமும் படையும் என்று மொழிந்தார். திருவெண்காட்டம்மையாரும், பரமன் பணித்த படியே படைத்தாள். சிறுத்தொண்டர் அமுதுண்ண அமர்ந்தார். தாம் உணவு உண்டபின் தான் அடியார் உண்ணுவார் என்னும் கருத்திற்கு ஏற்ப சிறுத்தொண்டர் உணவில் கையை வைத்தவாறு உண்ண புகுந்தார். பைரவருக்கு கோபம் மேலிட்டது. அவரைத் தடுத்தார். உண்பதற்கு உமக்கு என்ன அவசரம் ; ஆறு மாத காலமாக பட்டினியாக இருக்கிறேன் நான். தினந் தவறாமல் உண்ணும் உமக்குப் பசி அதிகமோ? நன்று! நன்று! உம்முடன் யாம் உண்பதாக இல்லை. நம்முடன் உண்ண உமக்கு மகனிருந்தால் அழைத்து வாரும்! என்று ஆணையிட்டார். எம்பெருமான் மொழிந்தது கேட்ட நாயனார் இடியேறுண்ட நாகம்போல் நடுங்கினார். ஐயனே! அவன் இப்பொழுது உதவான் என்றார். சிறுத்தொண்டரே! அவன் வந்தால்தான் நாம் உண்போம். அவனைப் போய் எப்படியாவது தேடி அழைத்து வாரும் என்று திருவாய் மலர்ந்தருளினார். சிறுத்தொண்டர், சிவபெருமானை மனதில் எண்ணியபடியே தமது அன்பிற்கினிய மனைவியாருடன் வெளியே வந்தார். இருவரும் செய்வதறியாது திகைத்தனர். அடியவருக்கு அமுது அளிக்க தங்களுக்கு ஏற்பட்ட பெரும் தடையை எண்ணிக் கலங்கினர். சிறுத்தொண்டர் நமச்சிவாய மந்திரச் சக்தியால் வாய்விட்டு, சீராளா! வருக!! என்று அழைத்து விட்டார். அம்மையாரும், கண்ணே! மணியே ! சீராளா வாராய்! சிவனடியார் நாம் உய்யும் நிலைபெற உடன் இருந்து திருவமுது செய்ய உன்னையும் அழைக்கின்றார் வா மகனே! வா! என்று உரக்க அழைத்தாள். அப்பொழுது எல்லாம் வல்ல இறைவனின் திருவருளால் சீராளன் பள்ளிச் சென்று திரும்பி வரும் பிள்ளையைப்போல் சதங்கை ஒலிக்க ஓடிவந்தான்.

பெற்றோர்கள் ஒன்றும் புரியாமல் திகைத்தனர். எம்பெருமான் பைரவராக வந்து மாயம் புரிவதை அவர்கள் எவ்வாறு அறிய இயலும்! அம்மையார் மகனை வாரித் தழுவி மகிழ்ந்து உச்சிமோந்து கணவரிடம் கொடுத்தாள். சிறுத்தொண்டரும் அழகு மைந்தனை அன்போடு அணைத்துப் பேருவகை பூண்டார். சிறுத்தொண்டருக்கும், அவரது மனைவியாருக்கும் ஏற்பட்ட வியப்பிற்கு எல்லையே இல்லை. சீராளனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு பைரவரைக் காணோம். உணவை நோக்கினார். கலத்தில் கறிகளில்லை. இல்லத்தில் பேரொளி பிறந்தது. கயிலை மலை மீது களிநடனம் புரியும் மாதொரு பங்கன் மலைமகளுடன் வெள்ளி விடையின்மேல் அருட்காட்சி தந்தார். பூதகணங்களும், தேவர்களும், முனிவர்களும், விஞ்சையர்கள் முதலியோர்களும் புடைசூழ்ந்து வேதகானம் எழுப்பினர். சிறுத்தொண்ட நாயனாரும் திருவெண்காட்டு நங்கையும், சீராளனும், சந்தன தாதியும் சிரமீது கரம் உயர்த்தி சிவநாம மந்திரத்தை ஓதினர்; நிலத்தில் வீழ்ந்து வணங்கினர். ஆனந்தக் கண்ணீர் வடித்து நின்றனர். தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். அன்பே சிவம் என்று கருத்தில் கொண்டு, சிவபோதை நிலையில் நின்று, அருந்தவப் புதல்வனையே, அடியார் மனதிற்கேற்ப அரிந்து விருந்து செய்ய இயைந்த சிறுத்தொண்ட நாயனாருக்கும், திருவெண்காட்டு நங்கையாருக்கும், சந்தனத் தாதியாருக்கும், தம்மை அரியும்போது சிவநாமத்தை நினைத்து புன்முறுவல் பூத்த சீராளத் தேவனுக்கும், எவருக்குமே கிட்டாத பெரும் பேற்றை அளித்தார் எம்பெருமான். திருசடைநாதரின் பொற்கழல் பாதத்தின் கீழ் சிறுத்தொண்டரும், உமையம்மையார் திருவடியின் கீழ் திருவெண்காட்டு நங்கையும், சந்தனத் தாதியும், வெற்றிவேல் முருகனின் செஞ்சேவடியின்  கீழ் சீராளத் தேவனும் அமர்ந்து இன்புற்றிருக்கும் சிவலோகப் பிராப்தியை அந்நால்வர்க்கும் அளித்து அருள் செய்தார் அம்பலத்திலே ஆடுகின்ற ஆனந்தக் கூத்தன்.

சேரமான் பெருமாள் நாயனார்

மலைநாடு எனப் புகழப்படும் வளமிக்கச் சேர நாட்டின் ஒப்பற்ற தலைநகரம் கொடுங்கோளூர். இந்நகருக்கு மாகோதை என்று ஒரு பெயரும் உண்டு. இங்குள்ள கோயிலின் பெருநாமம் திருவஞ்சைக் களம் என்பதாகும். எம்பெருமானுக்கு அஞ்சைக் களத்தீசுரர் என்று பெயர். அம்மையாரின் பெயர் உமையம்மை. இத்தலத்திலுள்ள புண்ணிய தீர்த்தத்துக்கு சிவகங்கை என்று பெயர். அந்நகர் செய்த நற்றவப் பயனாய் சேரர் குலம் தழைக்க அவதாரம் செய்தார் பெருமாக் கோதையார். மாகோதையார் மன்னர்க் குலத்திற்குரிய படைக்கல பயிற்சியைக் கற்காமல் கண்ணுதலார் கமல மலர்ப்பாதங்களைப் பற்றுவதற்கான சிவ மார்க்கங்களை உணர்ந்து சமய நூல்களைக் கற்று வந்தார். அரவணிந்த அண்ணலின் சிந்தனையில் அரச போகத்தையும், அரண்மனை வாழ்வையும் வெறுத்தார். சிவனார் எழுந்தருளியிருக்கும் திருவஞ்சைக் களம் என்னும் திருத்தலத்தை அடைந்து கோயிலருகே மாளிகையொன்று அமைத்துக்கொண்டு சிவத்தொண்டு புரிந்து வரலானார். சித்தத்தை சிவன்பால் வைத்துச் சிந்தை குளிர்ந்தார். ஒவ்வொரு நாளும் வைகறைத் துயில் எழுவார். தூய நீராடுவார். திருமேனி முழுவதும் திருவெண்ணீற்றை முறையோடு வேதநெறிப்படி அணிந்து கொள்வார். மலர்வனம் செல்வார். வழிபாட்டிற்கு உகந்த நறுமலர்ச் செடி, கொடிகள் வளர, பாத்தி வெட்டிகளையெடுப்பார். நீர் பாய்ச்சித் திருப்பணிகள் பல செய்வார். மாலையில் மலரக் கூடிய மலர் வகைகளையும், காலையில் மலர்ந்த மலர்களையும், வகை வகையாகப் பறித்துக் கொள்வார். வித விதமான மாலைகள் தொடுத்து கோயிலுக்குள் செல்வார். கோயிலைக் கூட்டி மெழுகி கோமய நீரால் சுத்தம் செய்வார்.

இறைவனின் பாத கமலங்களில் தாம் தொடுத்து முடித்துப் பூமாலைகøளைச் சாத்தி தமிழ்த் தேனால் எடுத்து முடித்த திருப்பதிகப் பாமாலைகளால் போற்றுவார். தம்மையே மறந்து வழிபடுவார்! இவ்வாறு இப்பெருமாக் கோதையார் திருவஞ்சைக் களத்துப் பெருமானுக்குத் தொண்டுகள் பல புரிந்து வரும் நாளில் கொடுங்கோளுரிலிருந்து அரகோச்சி வந்த செங்கோற்பொறையன் என்னும் மன்னன் பிறவிப் பெருங்கடலைக் கடக்கக் கருதினான். மன்னன் பதவி என்ற பட்டத்தை உதறினான். துறவி என்ற பட்டத்தைத் தாங்கினான். நாடு களைந்தான்; காடு புகுந்தான்; அருந்தவம் ஆற்றத் தொடங்கினான். அதன் பிறகு அமைச்சர்கள், நன்கு ஆராய்ந்து பெருமாக்கோதையாரையே அரசனாக்குவது என்ற முடிவிற்கு வந்தனர். ஒருநாள் அமைச்சர்கள் அரச மரியாதையுடன் மங்கல வாத்தியங்கள் முழங்கத் திருவஞ்சைக் களத்தை அடைந்தனர். பெருமாக் கோதையாரை வணங்கி அரசாட்சியை ஏற்றுக்கொள்ளுமாறு பணிவன்போடு வேண்டிக் கொண்டனர். அமைச்சர்கள் மொழிந்ததைக் கேட்டு, திருமாக் கோதையார் சற்று சித்தம் கலங்கினார். அரசு கட்டிலில் அமர்வது அரனார் திருவடித் தொண்டிற்கு இடையூறு ஏற்படுத்துவதாகும். அரண்மனை வாழ்வு அரவணிந்த அண்ணலை மறந்திருக்கச் செய்யும். மாய சக்தி படைத்ததாகும் என்றெல்லாம் பலவாறாக தமக்குள் எண்ணினார். அமைச்சர்களைப் பார்த்து, அமைச்சர் பெருமக்களே! யான் அரசாட்சி ஏற்பதென்பது எமது சிவத்தொண்டிற்கு பாதகமான செயலாகும். அறிந்தும் தவறு செய்யலாமா? அறம் வளர்க்கும் செங்கோலை நான் தொட வேண்டுமென்றால், தோடுடைய செவியன் திருவருள் எனக்குக் கிட்ட வேண்டும். இறைவன் திருவருளினால் மட்டுமே என்னால் மகுடத்தைச் சூட்டிக்கொள்ள முடியமே அன்றி, வேறு வழியே கிடையாது என்றார் அமைச்சர்களும் சம்மதித்தனர்.

பெருமாக்கோதையார் அமைச்சர்களை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்று எம்பெருமானைப் பணிந்து தமது விண்ணப்பத்தை பகர்ந்தார். அப்பொழுது ஆலயத்திலே ஒரு பேரொளி பிறந்தது; எம்பெருமானின் அருள்வாக்கு எழுந்தது. சேரர் குலக்கொழுந்தே! வருந்தற்க! நீ அரச பதவியை மனமகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வாயாக! உலகிலுள்ள உயிர்களுக்கு என்றும்போல் தொண்டு செய்து வருவாயாக. விலங்குகள், பறவைகள் போன்ற மற்றெல்லா ஐந்தறிவு படைத்த உயிர்களும் பேசக் கூடிய பேச்சை அறியக்கூடிய ஆற்றலையும் உனக்கு அளித்தோம். அரசின் வல்லமையையும், பெரும் கொடையையும், ஆயுதம், வாகனம் முதலிய அரசர்க்குரியனவற்றையும் உனக்கு அளிக்கிறோம். எம்பெருமான் திருவாய் மலர்ந்து அருளிய அத்தனைப் பேறுகளையும் பெற்றார் பெருமாக்கோதையார். திருமாக்கோதையார் அமைச்சர்களிடம், அரசை ஏற்றுக்கொள்கிறோம் என்று அறிவித்தார். அனைவரும் பெருமகிழ்ச்சி பூண்டனர். பெருமாக்கோதை எம்பெருமான் திருவருளோடு கொடுங்கோளூரை அடைந்து , நாளும் கோளும் நன்னிலையுற்ற ஓர் பொன்னாளில் மங்கலச் சடங்குகள் நடைபெற இம்மைக்கும் மறுமைக்கும் பொருந்தக் கூடிய பொன் மணிமுடியினைச் சூட்டிக் கொண்டார். பெருமாக் கோதையார் சேரமான் பெருமாள் ஆனார். மணிமுடிப் பெருவிழா சிறப்புற முடிந்ததும் சேரமான் பெருமான் திருவஞ்சைக்களம் கோயில் சென்று முடிபட நிலத்தில் வீழ்ந்து பெருமானை வணங்கினார். பட்டத்து யானை மீது அமர்ந்து பரிசனங்கள் பணிபுரியச் சிறப்புடன் மேளதாளங்களும், வேத கோஷங்களும் இன்னிசைகளும் முழங்க திருநகரை வலம் வந்தார். அப்பொழுது வண்ணான் ஒருவன் உவர்மண் சுமந்தவாறு வந்து கொண்டிருந்தான். உவர்மண் மேனியில் பட்டு மழை நீரோடும், வியர்வையோடும் கலந்து உலர்ந்து காணப்பட்டது.

பவனி வரும் சேரமான் பெருமான் அவ்வண்ணானின் வெண்ணிக் கோலத்தைக் கண்டு, திருவெண்ணீற்றுப் பொலிவுடன் எழுந்தருளும் சிவனடியார் திருக்கோலத்தை நேரில் காண்பது போல் நினைத்து மகிழ்ந்தார். யானையின் மீதிருந்து கீழே இறங்கினார். வண்ணான் அருகே சென்று அவனைத் தொழுது நின்றார். வண்ணான் மன்னருடைய செயலைக் கண்டு அஞ்சி நடுநடுங்கினான். அவன் உவர்மண் பொதியைக் கீழே போட்டுவிட்டு, மன்னரின் பாதங்களைப் பணிந்து, அடியேன் அடிவண்ணான் என்றான். அவன் மொழிந்தது கேட்டு மன்னர் மகிழ்ச்சிப் பெருக்கோடு, அடியேன் அடிச்சேரன் ! நீவிர் திருவெண்ணீற்றை நினைப்பித்தீர்! வருந்தாது செல்வீர்களாக! என்று விடையிறுத்தார். அடியார் மட்டு அரசர் கொண்டுள்ள அளவற்ற அன்பினைக் கண்டு அமைச்சர்களும், மெய்யன்பர்களும் அதிசயித்து அஞ்சலி செய்து வாழ்த்தினர். மன்னர் மனநிறைவோடு மாடவீதியையும் கூட கோபுரத்தையும் கடந்து, தமது பொன் மாளிகைக்கு எழுந்தருளினார். வைரச் சிம்மாசனத்தின் மீது வெண்கொற்றக் குடை நிழலில் அமர்ந்தார். ஆண்களும், பெண்களும், அன்பர்களும், அடியார்களும் வாசனைப் பொடிகளையும், மலர்களையும் தூவி மன்னரை வணங்கினர். சேரமான் பெருமாள் வாழ்க! என்று மக்கள் எழுப்பிய கோஷம் விண்ணை முட்டியது. சேரமான் பெருமான் நாயனார் அரசோச்சும் பொற்காலத்தில் இவரிடம் பாண்டியரும், சோழரும் பெரும் நண்பர்களாயிருந்தனர். மனுநீதி முறைப்படி அரசோச்சி வந்த சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பல தேசத்துச் சிற்றரசர்கள் கப்பங்கட்டி வந்தனர். அகத்தும், புறத்தும் பகைமையை அறுத்து அறநெறி காட்டும் சிவநெறியை வளர்த்து அரசாட்சி நடத்தி வந்த இவரது காலத்தில் சைவம் தழைத்தது. பக்தி பெருகியது; எங்கும் சுபிட்சம் நீடித்தது.

போற்றுகின்ற பேரரசினால் பெறுகின்ற பயனும், அருந்தவப் பேறும், சீரும், செல்வமும், எல்லாம் ஆடுகின்ற அம்பலவாணரின், காக்கின்ற கமலமலர்ப் பாதங்களே என்று கருத்தில் கொண்டார் சேரமான் பெருமான்! எம்பெருமானைத் தினந்தோறும் மணமிக்க மஞ்சள் நீர், சந்தனம், நறும்புகை, தூப தீபம், திருவமுது முதலிய வழிபாட்டுப் பொருட்களுடன் சிவாகம முறைப்படி மன்னர் வழிபட்டு வந்தார். இவ்வாறு வழிபாடு புரிந்து வரும் தொண்டரின் பக்திக்கு கட்டுப்பட்ட அம்பலவாணர் அடியாருக்கு அளவிலா இன்பம் பெருக வழிபாட்டின் முடிவில் தமது அழகிய காற்சிலம்பின் ஒலியினைக் கேட்டு இன்புறுமாறு செய்தார். ஒருமுறை மதுரையம்பதியில் பாணபத்திரன் என்று ஒரு புலவன் வாழ்ந்து வந்தான். இவன் எந்நேரமும் இன்னிசைப் பாடலால், அன்போடு சிவனை வழிபட்டு வந்தான். அவனது இசையில் சிந்தை மகிழ்ந்த பெருமான், தம்மைப் போற்றிவரும் பைந்தமிழ்ப் புலவன் பாணபத்திரனின் வறுமையைப் போக்கிப் பெரும் செல்வத்தை அவனுக்கு அளிக்கத் திருவுள்ளம் கொண்டார். ஒருநாள் பாணபத்திரன் திருக்கோயிலுள் துயில் கொண்டபோது பகவான் கனவிலே எழுந்தருளினார். திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள், பாணபத்திரா! அன்பால் என்பால் பாடிப் பணியும், உன்பால் பற்றியுள்ள வறுமையைப் பனிபோல் விலகச் செய்ய எப்பொழுதும் உன்போல் என்பால் அன்புடைய சேரமானுக்கு ஒரு ஸ்ரீமுகம் எழுதித் தருகின்றோம். காலம் கடத்தாமல் அக்காவலனைச் சென்று கண்டு, வறுமை நீங்கி வருவாயாக! என்று ஆணையிட்டு திருவோலையைத் தந்தருளினார். பாணபத்திரன் கண் விழித்தெழுந்து, கண்ணுதலார் தந்தருளிய திருவோலையைக் கண்களிலே ஒற்றிக் கொண்டார்.

அத்திருவோலையைச் சென்னிமீது சுமந்துகொண்டு கொடுங்கோளூரை அடைந்தார். சேரர் குல மாமணியைக் கண்டு வணங்கினார். சங்கப் புலவராகிய சோமசுந்தரக் கடவுள் தந்தருளிய திருமுகப் பாசுரத்தைக் கொடுத்தார் பாணபத்திரன்! அதனை வாங்கிக்கொண்ட சேரமான் பெருமாள் நாயனார், அடியேனையும் ஒரு பொருளாக எண்ணி எம்பெருமான் திருமுகம் கொடுத்தருளினாரே! எம்பெருமான் திருவருள்தானே! என்னே! புலவர் பெருந்தகையே ! எம்மை மதித்து வந்து உமது ஆற்றலைத்தான் என்னெற்று போற்றுவேன் என்று பூரிப்போடு பகர்ந்தார். மதிமலி புரிசை மாடக்கூடல் எனத் தொடங்கும்  திருமுகப் பாசுரத்தைப் படித்தார் சேரமான் பெருமாள். நமது அரண்மனைக் களஞ்சியத்திலுள்ள பல்வகையான நவநிதிகள் முழுவதையும் ஒன்று விடாமல் ஏற்றபடி பெரும் பொதியாகக் கட்டி எடுத்து வாருங்கள் என்று அமைச்சர்களுக்கு ஆணையிட்டார். அமைச்சர்கள் பொதி பொதியாக நவநிதிகளைக் கொண்டு வந்து குவித்தனர். மன்னர் பாணபத்திரனை வணங்கி நிதிகளையெல்லாம் வாரி வாரி வழங்கினார். அத்தோடு திருப்தியடையாமல், மன்னன் அப்புலவனிடம், யானை, குதிரை, பசுக்கள் முதலியவைகளையும், எமது அரசாட்சியையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பணிவன்போடு பகர்ந்தார். இவற்றை எல்லாம் கண்டு வியந்த பாணபத்திரன், வேந்தரின் உயர் குணத்திற்குத் தலைவணங்கினான். பொங்கி வந்த எல்லையில்லா மகிழ்ச்சிப் பெருக்கில் அகமும் முகமும் மலரத் தமக்கு வேண்டிய பொருள்களை மட்டும் எடுத்துக் கொண்டான். அரசே! தாங்கள் கொடைவள்ளல் மட்டுமல்ல; அடியார்களின் நெஞ்சத்திலே கோயில் கொள்ளும் காவலன், குவலயம் போற்றும் மெய்யன்பர். இவ்வடியேன் தேவையானவற்றை எடுத்துக் கொண்டோம். அரசாட்சி முதலியவற்றைத் தாங்களே கைக்கொண்டு ஆளுதல் வேண்டும் என்பதுதான் ஆலவாய் அண்ணலின் ஆணை என்று விடை பகர்ந்தார் பாணபத்திரன்.

அரசர் புலவரை ஒரு யானை மீது அமரச் செய்து தாம் அளித்த விலையில்லாச் செல்வங்கள் அனைத்தையும் கரிமா முதலியவற்றின் மீது ஏற்றி வழி அனுப்பி வைத்தார். சேரப் பேரரசு பாணபத்திரன் எல்லையைத் தாண்டிச் செல்லும்வரை தொடர்ந்து சென்று அன்போடு வழி அனுப்பி வைத்தார். பாணபத்திரனும் மதுரை சென்று மட்டற்ற மகிழ்ச்சியோடு மனையறத்தை வளர்த்ததோடு சங்கத் தமிழையும் வளர்த்தார். இவ்வாறு வியக்கத்தக்க முறையில் அரசாண்டு வந்த சேர மன்னர் வழக்கம்போல் ஆலயப் பணியையும் தவறாமல் நடத்தி வந்தார். ஒருநாள் நாயனார் சிவ வழிபாட்டை முடித்ததும் வழக்கமாகக் கேட்கும் பரமனின் பாதமணிச் சிலம்பொலி கேட்கவில்லை. மன்னர் வருந்தினார். கண்களில் நீர் வழிய, கரமிரண்டையும் மேலே உயர்த்தி, ஆலமுண்ட அண்ணலே! அடியேன் செய்த பிழை யாது? என்னை ஆளும் ஐயனே! இனியும் இவ்வெளியோன் உயிர் தரிவது யார் பொருட்டு? எதன் பொருட்டு? கூர்வாளும், செங்கோலும் ஏந்தி ஆள்வதை விட கூர்வாளுக்கு இரையாகி மாள்வதே நல்லவழி! எம்பெரும் தலைவா! அடியேன், அறிந்தோ அறியாமலோ பிழை ஏதும் புரிந்திருந்தால் பிழையைப் பொருத்தருளும் என்று பரமனின் பாதகமலங்களைப் பற்றி பணிந்தார். மன்னன் உடைவாளை உருவி மார்பில் நாட்ட முயன்றபோது எம்பெருமான் முன்னை விடப் பன்மடங்கு ஒலியோடு கலீர், கலீர் என்று சிலம்பொலியை மிகுதியாகக் கேட்கும்படிச் செய்தார். நாயனார் எய்திய உவப்பிற்குத்தான் அளவேது! நிலமுற வீழ்ந்து வணங்கி எழுந்தார். அருட்கடலே! அன்புப் புனலே ! அமிழ்தம் அளித்த அரசே! வழக்கம்போல் ஐயன் சிலம்பொலியை முன்னால் கேட்கச் செய்யாதிருந்ததன் காரணம் யாதோ? என்று கேட்டார். அப்பொழுது விண் வழியே அசரீரி வாக்கு எழுந்தது. சேரனே! எம்மால் தடுத்தாட் கொள்ளப்பட்ட தோழன் சுந்தரன் தில்லையம்பலத்துப் பொன்னம் பலத்தை வழிபட்டு, வண்ணத் தமிழால் பதிகம் பாடினான். தேனென இனிக்கும் அவனது அருட்பாக்களில் அன்பு வயப்பட்டு என்னை மறந்த நிலையில் ஈடுபட்டிருந்தமையால் உன் வழிபாட்டு முடிவில் சிலம்பொலியைச் சற்று தாமதித்து கேட்குமாறு செய்தோம்.

இவ்வருள் வாக்கு கேட்டு, சேரமான் பெருமாள் நாயனார், இத்தகைய பெருமைமிக்க அருந் தொண்டனைக் காணப் பெறாத நான் பிறவி எடுத்து என்ன பயன்? போற்றதற்குரிய அப்பெருந்தகையை இக்கணமே நேரில் கண்டு மகிழ்ந்து களிப்பேன். தில்லையம்பதி சென்று ஆடுகின்ற அரனாரைப் போற்றி எம்பெருமானை மதிமயங்க வைத்த ஒப்பற்ற திருத்தொண்டராம் வன்றொன்டனையும் கண்டு வணங்கி வழிபட்டே வருவேன் என்று எண்ணினார். நாளாக, நாளாக அரசர்க்கு அரண்மனை வாழ்வும், அரசபோகமும் வேம்பாக கசந்தது. திருத்தொண்டர்கள் கூட்டத்தில் ஒருவராய் வாழ்வதனையே பேரின்பமாகக் கொண்டார். அதற்கு மேல் மன்னன் அரசாள விரும்பவில்லை. ஆட்சிப் பொறுப்பை அமைச்சர்களிடம் ஒப்படைத்தான் மன்னன். ஓர் நன்னாளில் வேல் ஏந்திய மல்லர்களும், வில்லேந்திய வீரர்களும், வாள் ஏந்திய காவலர்களும், அறம் கூறும் அமைச்சர்களும், நால்வகைப் படையினரும் புடை சூழ அத்தாணி மண்டபத்தில் அரசோச்சிய அருங்காவலன் அரச போகத்தைத் துறந்தான். திருவஞ்சைக் களத்து அண்ணல் அடிபோற்றி தில்லைக்குப் புறப்பட்டார். தில்லை வந்தடைந்த சேரப் பெருந்தகையை, தில்லைவாழ்  அந்தணர்களும், அன்பர்களும், அடியார்களும் வேதம் ஒலிக்க, மங்கல முழக்கங்கள் விண்ணை முட்ட எதிர்கொண்டு அழைத்து வந்தனர். சேரமான் பெருமாள் நாயனார் ஏழு நிலை கோபுரத்தை இசைத் தமிழால் ஏற்றி துதித்து, நிலமுற பணிந்தெழுந்து உள்ளே சென்றார். சிற்றம்பலத்துக்கு முன் சென்று, சித்தம் ஒடுங்க, பக்தி, காதலாகிக் கசிந்துருக, தமிழ்ச் சுவை அருளோடு கூடி ஆறாகப் பெருகிவர, பொன் வண்ணத் தந்தாதி என்னும் பிரபந்தத்தினைப் பாடியருளினார் சேரமான்.

தில்லையிலே பல நாட்கள் தங்கியிருந்து, அற்புதக் கூத்தாடுகின்ற நாதரின் திருவடியைப் பாடி பரவி ஓர் நாள் திருவாரூருக்குப் புறப்பட்டார் நாயனார். வரும் வழியில் திருஞான சம்பந்தர் அவதாரம் செய்த சீர்காழியை அடைந்து தோணியப்பரைத் தொழுது புறப்பட்டு திருவாரூரை வந்தடைந்தார். அது சமயம் சுந்தரர், திருநாகைக் காரோணத்திற்கு சென்று அரனாரைத் துதித்துப்பாடி பொன்னும் மணியும், பட்டாடைகளும், கஸ்தூரியும், குதிரையும் பெற்றுத் திருவாரூர் அடைந்திருந்தார். சுந்தரர் தம்மைக் காணவரும் சேரன் பெருமாள் நாயனாரை, அன்புடன் எதிர்கொண்டு அழைத்தார். சேரமான் சுந்தரர் சேவடியைப் பணிந்தெழுந்தார். இருவரும் ஆரத்தழுவி அக மகிழ்ந்தனர். இவ்வாறு அன்பின் பெருக்கால் சேரமான் பெருமாள் நாயனாரும், தம்பிரான் தோழரும் ஒருவரோடு ஒருவர் அன்பு பூண்டு நின்றனர். இவர்களது ஒப்பற்ற தோழமையைக் கண்ட திருவாரூர்த் தொண்டர்கள் சேரமான் தோழன் என்னும் திருநாமத்தைச் சுந்தரருக்குச் சூட்டி மகிழ்ந்தனர். சுந்தரர் சேரர் பெருமானை அழைத்துக்கொண்டு தியாகேசப் பெருமானின் தாள் போற்றி திருவாரூர்த் திகழும் மணிக்கோவை என்னும் பிரபந்தத்தைப் பாடினார். சுந்தரரின் செவிக்கினிய கீதத்தில் சேரமான் சிந்தை மகிழ்ந்தார். பக்தியில் மூழ்கினார். சுந்தரர், மன்னரைத் தமது திருமாளிகைக்கு அழைத்தார். சேரமான் சுந்தரரின் அழைப்பிற்கு இணங்கி சுந்தரர் திருமாளிகைக்குச் சென்றார். பரவையார் மன்னவனையும், மணவாளனையும் முகமன் கூறி வரவேற்றாள். மன்னருக்கு மனைவி நல்லாளை அறிமுகம் செய்து வைத்தார் சுந்தரர். கணவர் பணித்ததற்கு ஏற்ப, மன்னர்க்கு சிறப்புமிக்க விருந்து சமைத்தாள் பரவையார்.

சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் ஈடு இணையில்லா அன்பிற்கு அடிமையாகி ஆனந்த வெள்ளத்தில் மகிழ்ந்து மூழ்கி இன்பம் கண்டனர். ஒருமித்த மனமுள்ள, இவ்விரு சிவனருட் செல்வர்களும், சில நாட்கள் திருவாரூரிலிருந்து தியாகேசப் பெருமானை வழிபட்டு பெருமானின் பேரருளைப் பெற்றுக் களிப்புற்று வந்தனர். இருவரும் பாண்டிய நாடு செல்லக் கருதி ஒருநாள் திருவாரூரிலிருந்து புறப்பட்டனர். திருக்கீழ்வேளூர், திருநாகைப்பட்டிணம், திருமறைக்காடு, திருவகத்தியான்பள்ளி, திருப்புத்தூர் முதலிய சிவத்தலங்களை வணங்கிப் பதிகம்பாடி பரவசமுற்றவாறு மதுரை மாநகரை வந்தடைந்தனர். பாண்டிய மன்னன், தக்க மரியாதையுடன் இருவரையும் எதிர்கொண்டு வரவேற்றார். பாண்டிய நாட்டிற்கு வந்திருந்த பாண்டியன் மகளை மணம் புரியப்போகும் சோழ அரசனும் உடன் சென்று உபசரித்தார். இப்படி மூவேந்தரும் ஒன்றுபட்டனர். சுந்தரமூர்த்தி நாயனாருடன் சொக்கலிங்கப் பெருமானின் கோயிலுக்குச் சென்றனர். சேரமான் பெருமாள் நாயனார், பாண்டியனிடமும், சோழனிடமும் விடைபெற்றுக் கொண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளுடன் புறப்பட்டார். பல திருத்தலங்களைத் தரிசித்துப் பதிகம் பாடி உளம் மகிழ்ந்தவாறு இருவரும் சோழ வளநாட்டை வந்தணைந்தனர். இருவரும் சோழ நாட்டுத் திருத்தலங்கள் பலவற்றை வணங்கியவாறு மீண்டும் திருவாரூரை அடைந்தனர். தியாகேசப் பெருமானை வணங்கி மகிழ்ந்த இருவரும் பரவையார் மாளிகைக்கு எழுந்தருளினர். சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனாரின் விருந்தினராகச் சிலகாலம் தங்கியிருந்து நாடோறும் நலம் தந்த தியாகேசப் பெருமானை வழிபட்டு வந்தார். சுந்தரரும், சேரரும் எல்லையில்லா இன்பப் பெருக்கில் இன்புற்று வாழ்ந்து வரும் நாளில், சேரர்கோன் சுந்தரரைத் தம் நாட்டிற்கு வரும்படி வேண்டினார். சுந்தரர் அவரது விருப்பத்தை மன நிறைவோடு ஏற்றுக்கொண்டு  பரவையாரிடம் விடைபெற்றுக்கொண்டு, சிவத்தொண்டர்களுடன் திருவாரூர் எல்லையை நீத்தார்.

சுந்தரரும் சேரரும் காவிரிக் கரையோரமுள்ள சிவக் கோவில்களை வழிபட்டவாறு திருக்கண்டியூர் என்னும் தலத்தை அடைந்து, எம்பெருமானை வணங்கி வழிபட்டு வெளியே வந்தனர். காவிரியாற்றின் தென்கரையில் அமைந்திருந்த திருக்கண்டியூர் தெய்வத்தைத் தரிசித்தனர். இரு ஞானச் செல்வர்களும், வடகரையில் அமைந்திருக்கும் திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் ஐயாற்றுப் பெருமானை வழிபட்டு வர எண்ணினர். அவர்கள் உள்ளத்தில் பக்திப் பெருக்கெடுத்து ஓடியதுபோல், காவிரியிலும், ஓடங்கள் செல்ல முடியாத அளவிற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. இரு ஞானமூர்த்திகளும் திகைத்து நின்றனர். சுந்தரமூர்த்தி நாயனார் கண்டியூர் நீலகண்டப் பெருமானைப் பணிந்து பரவும் பரிசு எனத் தொடங்கித் திருப்பாட்டுக்கள் ஒவ்வொன்றின் இறுதிதோறும் ஐயாருடைய அடிகளோ என்று அன்பு மேலிட அழைத்தவராய்த் திருப்பதிகத்தினைப் பாடினார். சிவபெருமான் திருவருளால் காவிரி நதி பிரிந்து அருட்செல்வர்களுக்கு வழி காட்டியது. இருவரும் அவ்வழியாக அக்கரை சென்று ஐயாற்றுப் பெருமானைக் கண்டு மகிழ்ந்தனர். மீண்டும் வடகரையை அடைந்து தங்கள் சிவயாத்திரையைத் தொடர்ந்தனர். மேற்குத் திசை நோக்கிப் புறப்பட்ட இருவரும் பல தலங்களைத் தரிசித்தவாறு கொங்கு நாட்டின் வழியாக மலைநாட்டின் எல்லையை அடைந்தனர். மலைநாட்டு மக்கள் தங்கள் அரசரையும், ஆரூர்ப் பெருமானையும் மலர் தூவி வணங்கி வரவேற்றனர். மலைநாட்டு இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்த ஆரூரர், சேரமான் பெருமான் நாயனாருடன், கொடுங்கோளூரை வந்தணைந்தார். அரசரையும், சுந்தரரையும் வரவேற்க ஆயிரக்கணக்கான அன்பர்களும், அடியார்களும் கூடினர். சேரமான் பெருமான் நாயனார் சுந்தரரை அழைத்துக் கொண்டு திருவஞ்சைக் களம் ஆலயத்துள் சென்றார்.

இரு தவச் செம்மல்களும் திருசடைப் பெருமான் திருமுன் பக்திப் பிழம்பாக நின்று கொண்டிருந்தார்கள். சுந்தரர், முடிப்பது கங்கை எனத் தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடினார். சேரர் பெருமான் சுந்தரரோடு புறத்தே வந்து, அலங்காரமாக நிறுத்தப்பட்டிருந்த யானை மீது அவரை எழுந்தருளச் செய்தார். தாமும் கூடவே எழுந்தருளினார். வெண் சாமரங்களை வீசிக்கொண்டு, திருமாளிகைக்குப் புறப்பட்டார். தம்பிரான் தோழரும், அத்தோழருக்குத் தோழரும் உலா வந்த காட்சியைக் கண்டு நகர மக்கள் வாழ்த்திப் பணிந்தனர்; மலர் தூவி வணங்கினர். இங்ஙனம் விண்ணவர் வியக்குமளவிற்குத் திருக்கோலம் வந்த இரு தவச் செம்மல்களும் திருமாளிகையின் மணிவாயில் வழியாக அரண்மனை வந்தனர். சேரர் பெருமான் சுந்தரரை அரண்மனைக்குள் அழைத்துச் சென்று தமது அரியணையில் அமரச் செய்து அவரது பாதகமலங்களைச் சிவாகம முறைப்படி வழிபாடு புரியத் தொடங்கினார். சுந்தரர் இது செய்தல் தகாது என்று தமக்கு பாதபூசை புரிய வந்த சேரரைத் தடுத்தபோது சேரமான் பெருமாள், அன்பின் மிகுதியால் செய்யும் வழிபாடுகள் எல்லாவற்றையும், ஏற்று அருளல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சுந்தரர் அவரது அன்பிற்குக் கட்டுப்பட்டார். அவரோடு திருவமுது செய்து மகிழ்ந்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் சேரப்பெருந்தகையுடன் அரண்மனையில் தங்கியிருந்தார். சுந்தரர் சேரமான் பெருமாள் நாயனாருடன் இருந்து வரும் நாளில் அவருக்குத் திருவாரூர்ப் பெருமானின் நினைவு வரவே அப்பொழுதே புறப்பட்டார். சேரமான் பெருமாள் நாயனார் சுந்தரரைப் பிரிய மனமில்லாமல் மனம் உருகிக் கண்ணீர் வடித்தார். இருப்பினும் சுந்தரர் விருப்பத்திற்கு ஏற்ப அவரது பயணத்தைத் தடுக்க விரும்பவில்லை. அவரது விருப்பம்போல் அரசு கட்டிலில் அமர்ந்தார். சேரமான் பெருமாள், சுந்தரர்க்குப் பொன்னும் பொருளும் மணியும் பலவகையான பண்டங்களையும் கொடுத்து அவரது திருவடிப் பணிந்து எல்லைவரைச் சென்று தொண்டர்களுடன் வழி அனுப்பி வைத்தார். திருவாரூரை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சுந்தரர், மிக்க சிரமத்துடன் ஒருவாறு திருமுருகன் பூண்டி என்னும் இடத்தை நெருங்கினார். களைப்பு மேலிடத் தொண்டர்களுடன் ஓரிடத்தில் தங்கினார். எம்பெருமான், தம்முடைய பூதகணங்களை வேடுவர் உருவில் அனுப்பி, நாயனார் கொண்டு வரும் பொருள்களை எல்லாம் கவர்ந்து கொண்டு வரச் செய்தார். சுந்தரர்க்கு வேதனை மேலிட திருமுருகன்பூண்டியை அடைந்து அங்கு குடிகொண்டிருக்கும் எம்பெருமானிடம் கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடினார். எம்பெருமான் சிவகணங்கள் மூலம் கவர்ந்து வந்த பொருள்களை எல்லாம், கோயிலின் முன்னே மலைபோல குவிக்கச் செய்தார். சுந்தரர் அகமகிழ்ந்தார். தொண்டர்களுடன், பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு திருவாரூரை வந்தணைந்தார். திருவாரூர்த் தியாகேசப் பெருமானை வணங்கி வழிபட்டு, பரவையார் மாளிகைக்கு எழுந்தருளினார் சுந்தரர்!

கணநாதர் நாயனார்

திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழி என்னும் பெருமைமிக்க நகரில் மறையவர் குலத் தலைவராய்க் கணநாதர் என்னும் பெயருடைய சிவத்தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.இவர், அந்தணர் மரபிற்கு ஏற்ப நாடோறும் சிவாகம விதிப்படி தோணியப்பரை வழிபட்டு வந்தார். சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு புரியும் உயர்ந்த அறத்தை உணர்ந்து வாழ்க்கையை நடத்தி வந்தார். இப்பெரியார், அடியார்களுக்குச் செய்ய வேண்டிய சிறந்த தொண்டினைப் பற்றிய ஒப்பற்ற உண்மையான தத்துவத்தை உலகிற்கு உணர்த்தத் தவறவில்லை ! திருத்தொண்டு புரிவோர் முவ்வுலகமும் போற்றும் பெருமை பெற்று உயர்வர். அவர்கள் தாங்கள் செய்துவரும் திருத்தொண்டிற்கு இடையூறு நேருங்கால் தங்கள் உயிரையும் விட அஞ்சமாட்டார்கள். இந்த உண்மையை உலகிற்கு உணர்த்தியதோடு நில்லாமல் தாமும் அதன்வழி நடந்தார். கோயிலில் அமைந்துள்ள நறுமலர்ச் சோலைகளைச் சீர்படுத்துவது, பொற்றாமரைக் குளத்தைச் செப்பஞ் செய்து சீர்படுத்துவது முதலியனவற்றைத் தவறாது செய்து வந்தார். திருமந்திர வாக்கின்படி, புண்ணியஞ் செய்வாருக்கு நறுமலர் உண்டு, திருநீருண்டு என்பதை கற்றறிந்து தெளிந்திருந்த இத்தொண்டர், இறைவழிபாட்டிற்கு இன்றியமையாத மலர்களைத் தரும் நந்தவனம் அமைத்தார்.மலர்ச் செடிகளை முறைப்படி வளர்த்து மலர்களைப் பறித்து அழகுறத் தொடுத்து எழில்மிகும் பூ மாலையாக்கிப் பரமனின் பொன்னனாற் மேனிதனில் சாத்தி மகிழும் சிவபுண்ணியத்தைப் பெற்றிருந்தார் கணநாதர்.

இவர் திருசடை அண்ணலின் பூங்கழலைப் பணிந்ததோடு திருஞானசம்பந்தரின் திருவடிக் கமலங்களையும் அன்போடு மகிழ்ந்து வழிபட்டு வந்தார். திருமஞ்சனம் செய்தல், கோயிலில் மெழுகிடுதல், விளக்கிடுதல், திருமுறைகளை எழுதுதல், படித்தல் முதலிய திருத்தொண்டுகளையும் தவறாது செய்து வந்தார் இத்திருத்தொண்டர் ! மற்றவர்களுக்கும் யார் யாருக்கு எது எது விருப்பமோ அவ்வப்பணியில் அவர்களை ஈடுபடச் செய்தார். அவர்களுக்குப் பக்தியும், நல்ல பழக்கமும் ஏற்படுமாறு செய்ய அரும்பாடுபட்டார். சிவத்தொண்டு புரிந்து வந்த கணநாதருக்குத் தொண்டர்கள் பலர் தோன்றினர். இறைவழிபாட்டின் தனிமையான இனிமையை உணர்ந்திருந்த இவர் இல்லறத்தின் இனிமையையும், தனிமையையும் நன்கு உணர்ந்திருந்தார். வள்ளுவன் வகுத்த இல்லற நெறியை நன்கு உணர்ந்து மனையாளோடு கருத்தொருமித்து வாழ்ந்து வந்தார். நாயனாரின் திருத்தொண்டினையும், பக்தியின் மேன்மையையும் கண்டு அவருக்குப் பேரின்ப நிலையை அளிக்கத் திருவுள்ளம் கொண்டார் திருத்தோணியப்பர். தொண்டருக்குத் தொண்டராகி, அரனாருக்கு அன்பராகி, ஆளுடைப்பிள்ளைக்கு அரும்பக்தனாகி வாழ்ந்தவர் கணநாதர்! வித்தகம் பேச வேண்டா, பக்திப் பணி செய்ய வேண்டும் என்ற நெறிமுறையைக் கடைப்பிடித்து வாழ்ந்த அருமையான சிவத்தொண்டர். பூ உலகில் பேரும் புகழும் பெற்று வாழ்ந்த இப்பெரியார், இறைவன் அருளால் பேரின்ப வீடு பெற்றுச் சிவகணங்களுக்குத் தலைமைப் பதவி பெற்றுத் திருத்தொண்டில் நிலையான இன்பத்தைப் பெற்றார். 

கூற்றுவ நாயனார்

வீரமிக்க குறுநில மன்னர்கள் பலர், சீரோடும், சிறப்போடும் செங்கோலோச்சி வந்த திருத்தலம் திருக்களந்தை! இத்திருத்தலத்தில் களப்பாளர் மரபில் தோன்றிய கூற்றுவ நாயனார் என்பவரும் ஒருவர். வாளெடுத்து, வில்தொடுத்து, வீரம் வளர்த்து, வெற்றிகள் பல பெற்ற கூற்றுவ நாயனார், பகைவர்களுக்கு கூற்றுவன் போல் இருந்தார் என்ற காரணம் பற்றியே இத்திருப்பெயர் பெற்றார். அதுவே இவரது இயற்பெயர் மறைவதற்குக் காரணமாகவும் இருந்தது. வாள் சுழற்றும் வீரத்தோடு, பரமனின் தாள் போற்றும் பக்தியையும் பெற்றிருந்ததால் , களந்தை நாட்டை, அரனார் அருளோடு பெரும் வெற்றிகளைப் பெற்று அறம் பிறழாது புகழ்பட ஆட்சியும் புரிந்து வந்தார். சிவனருட் செல்வர்களின் திருவடிகளைப் பணிந்து அவர்கட்கு உயர்ந்த திருத்தொண்டுகள் பல புரிந்து வந்தார். இவ்வரசர் ஐந்தெழுத்து மந்திரத்தை இடையறாது ஓதிவரும் பக்தி படைத்தவர். இக்குறுநில மன்னர், தம்மிடமுள்ள அணி, தேர், புரவி, ஆட்பெரும் படை கொண்டு நாடு பல வென்று தமதுக் கொடி கீழ் கொண்டு வந்தார். மன்னர் தும்பை மாலை சூடிப் போர் செய்து பெற்ற வெற்றிகளால் குறுநிலம் விரி நிலமானது. முடியுடைய மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களையும் வென்றார். இவ்வாறு திக்கெட்டும் வெற்றி முரசு கொட்டிய காவலனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. தில்லைவாழ் அந்தணர்களின் பாதுகாப்பிலுள்ள சோழ மன்னர்களுக்கே உரிய மணி மகுடத்தைத் தாம் அணிய வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார். சோழ மன்னர்கள் தில்லை, திருவாரூர், உறையூர், பூம்புகார் என்னும் இடங்களில்தான் முடி சூட்டிக் கொள்வது வழக்கம். மணிமகுடம், ஆதிகாலம் தொட்டே சோழர் மன்னர்களுக்குரிய சிறப்புப் பொருளாகவே இருந்து வந்தது. இம் மணிமகுடத்தைப் பாதுகாத்து வரும் தில்லை வாழ் அந்தணர்கள் இம்மணி மகுடத்தைத் தக்க காலத்தில் சோழ மன்னர்களுக்கு மட்டுமே சூட்டும் நியதியைக் கொண்டிருந்தனர்.

இவற்றை எல்லாம் நன்கு தெரிந்து வைத்திருந்த கூற்றுவ நாயனார் தில்லைவாழ் அந்தணர்களிடம் தமது எண்ணத்தைச் சொல்ல எண்ணியபடியே, ஒருநாள் தில்லைக்குப் புறப்பட்டார். தில்லையை வந்தடைந்து தில்லை நடராஜப் பெருமானை வணங்கி வழிபட்டு, தில்லைவாழ் அந்தணர்களைச் சந்தித்தார். தமக்கு மணிமுடி சூட்ட வேண்டும் என்று வேண்டினார். மன்னரின் மொழி கேட்டு தில்லைவாழ் அந்தணர்கள் அஞ்சி நடுங்கினர். அவர்கள் மன்னர்க்கு முடிசூட்ட மறுத்தனர். மன்ன! நாங்கள் பரம்பரை பரம்பரையாகச் சோழ குலத்திலே பிறந்த மன்னர்களுக்குத்தான் முடிசூட்டி வருவது வழக்கம். மற்றபடி வேறு மன்னர்களுக்கு இத்திருமுடியைச் சூடுவதற்கில்லை என்று துணிச்சலோடு விடையளித்து மன்னரின் கோரிக்கையை நிராகரித்தனர். தில்லைவாழ் அந்தணர்கள் கூற்றுவ நாயனாரைக் கண்டு சற்று பயந்தனர். அவரால் தங்களுக்கு ஏதாகிலும் தீங்கு வந்துவிடுமோ என்று தங்களுக்குள் தவறான எண்ணங்கொண்டனர். தில்லையின் எல்லை நீத்து சேர மன்னர்பால் சென்று வாழ எண்ணினர். மணிமகுடத்தை தங்கள் மரபில் வந்த ஒரு குடும்பத்தாரிடம் ஒப்புவித்து, பாதுகாக்கும்படி செய்யத்தக்க ஏற்பாடுகளைச் செய்தனர். இவர்கள் அச்சமின்றி மொழிந்ததைக் கேட்டு கூற்றுவ நாயனார் செய்வதறியாது திகைத்தார். முடியரசு ஆவதற்கு குடியொரு தடையா? எனத் தமக்குள் எண்ணி வருந்தினாரே தவிர, தில்லைவாழ் அந்தணர்களை வற்புறுத்தியோ, தொல்லைப் படுத்தியோ, அம்மகுடத்தைச் சூட்டிக்கொள்ள விரும்பவில்லை. கூற்றுவ நாயனார், திருமுடி சூட்டிக்கொள்ளும் பேறு தமக்குக்கிட்டவில்லையே என்ற மனவேதனையோடு, திருக்கோயிலுக்குச் சென்றார்.

இறைவனைப் பணிந்து, அருட்புனலே ! ஆடும் ஐயனே! உமது திருவருளால் மண்ணெல்லாம் என் வெற்றித் திருவடி பட்டும் தில்லைவாழ் அந்தணர்கள் மட்டும் அந்த மகுடத்தை எனக்குச் சூட்ட மறுத்துப் போய்விட்டார்களே! ஐயன் இந்த எளியோனுக்கு முடியாக உமது திருவடியினைச் சூட்டி அருள்புரிதல் வேண்டும் என்று இறைஞ்சினார். தமது இருப்பிடத்தை அடைந்து துயின்றார். அன்றிரவு கண்ணுதற் பெருமான் மன்னன் கனவிலே எழுந்தருளி தமது திருவடியை நாயனாரின் சென்னியின் மீது திருமுடியாகச் சூட்டி அன்பு அடியாரின் ஆசையை நிறைவேற்றி அருள்புரிந்து மறைந்தார். கூற்றுவ நாயனார் கண்விழித்தெழுந்தார். அவரது மகிழ்ச்சி அவர் களத்திலே பெற்ற வெற்றியைக் காட்டிலும் எல்லையற்று நின்றது. தில்லைவாழ் அந்தணர்கள் தமக்குச் செய்ய வேண்டிய கடமையை மறந்தபோதும் தில்லைப் பெருமானே தம் பொருட்டு கனவிலே எழுந்தருளி திருமுடி சூட்டினார் என்பதை எண்ணிப் பார்த்துப் பேரானந்தமுற்றார். சென்னி மீது கைகூப்பி, நிலத்தில் வீழ்ந்து வீழ்ந்து பரமனைப் பணிந்து எழுந்தார் நாயனார். எம்பெருமானுடைய திருவடியையே மணிமகுடமாகக் கொண்டு, உலகமெல்லாம் ஒரு குடைக்கீழ் கொண்டவந்து அரசு புரிந்தார் கூற்றுவ நாயனார்! அறநெறி நிறைந்த கூற்றுவ நாயனார், இறைவன் எழுந்தருளியிருக்கும் கோயில்களுக்கெல்லாம் பொன்னும் மணியும் வாரி வாரிக் கொடுத்தார். தன்னந்தனியே ஒவ்வொரு கோயில்களுக்கும் நித்திய நைமித்திய வழிபாடுகள் தங்கு தடையின்றி தட்டாமல் இனிது நடைபெற ஆவனச் செய்தார். திருத்தலங்கள் தோறும் சென்று சிவ வழிபாடு நடத்தினார். இவ்வாறு திருசடை அண்ணலின் திருவடி சூடி திக்கெட்டும் வெற்றிக்கொடி நாட்டி, பாராண்ட கூற்றுவ நாயனார், முடிவில் சஞ்சிதவினை தீர்க்கும் குஞ்சிதபாதத்தில் கலந்து இன்பமெய்தினார். 

புகழ்ச் சோழ நாயனார்

தந்த மாமன்னர் சோழருக்குத் தலைநகரமாக விளங்கிய திருத்தலம் உரையூர். இத்தலத்தைத் தலைநகராகக் கொண்டு அநபாயச் சோழன் திருக்குலத்தின் மூதாதையராகிய புகழ்ச் சோழ நாயனார் அரியணை அமர்ந்து அறநெறி வழுவாது அரசாண்டு வந்தார். வீரத்திலும், கொடையிலும் புகழ்பெற்ற புகழ்ச் சோழன் சிவபெருமானிடத்தும், அவருடைய அடியார்களிடத்தும் எல்லையில்லா அன்பும்,  பக்தியும் பூண்டிருந்தார். சிவாலயங்களுக்குத் திருப்பணி பல செய்தார். இவர் ஆட்சியிலே சைவம் தழைத்தது. புகழ்ச் சோழர் கொங்குநாட்டு அரசரும், மேற்கு திசையில் உள்ள பிறநாட்டு அரசர்களும் கப்பம் கட்டுவதற்கு வசதியாக தம் தலைநகரை மலைநாட்டுப் பக்கம் உள்ள கருவூருக்கு மாற்றிக் கொண்டார். கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்த புகழ்ச்சோழர் கருவூரில் எழுந்தருளியிருக்கும் ஆனிலை என்ற கோயிலுக்குச் சென்று பசுபதீச்சுரரை இடையறாது வழிபட்டு இன்புற்றார். பசுபதீசுவரர் புகழ்ச் சோழனின் ஒப்பற்ற பக்தியை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார். அதற்கான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது.

வேற்று அரசர்கள் கொண்டு வந்து கொடுக்கும் யானைகள், குதிரைகள், பொற்குவியல்கள், ரத்தின குவியல்கள் முதலிய திரைப் பொருள்களையெல்லாம் பெற்று, அந்தந்த அரசர்களுக்கு அவரவர்கள் நிலைமைக்குத் தக்க அரசுரிமைத் தொழிலினைப் பரிபாலனம் புரிந்து வருமாறு பணித்தார்.எண்ணற்ற மன்னர்கள் கப்பம் கட்டிவரும் நாளில் அதிகன் என்னும் அரசன் மட்டும் மன்னர்க்குக் கப்பம் கட்டாமல் இருந்தான். அதிகன் திரை செலுத்தாமல் இருக்கும் செய்தியை அமைச்சர் மூலம் அறிந்துகொண்டான் மன்னன். அதிகனை வென்றுவர கட்டளையிட்டான். மன்னரின் கட்டளைக்கு அடிபணிந்து அமைச்சர் மாபெரும் படையோடு சென்று அதிகனை வென்று பலவகை பொருட் குவியல்களையும், யானைகளையும், குதிரைகளையும், பெண்களையும் மாண்ட வீரர்களது தலைகளையும் எடுத்து வந்தார். படைகளின் வீரம் கண்டு பூரிப்படைந்த மன்னர் ஒரு தலையில் சடைமுடியிருக்கக் கண்டார். சடைமுடி கண்டு அரசர் உடல் நடுங்கியது. உள்ளம் பதைபதைத்தார். அவர் கண்களில் நீர் நிறைந்தது. பெரும் பிழை நடந்துவிட்டதாக மனம் வெதும்பினார். அடியார்களின் அன்பிற்குக் கட்டுப்பட்ட புகழ்ச்சோழர் எறிபத்த நாயனாரிடமும், தம் கழுத்தையும் வெட்டுமாறு பணிந்து நின்ற தொண்டர் அல்லவா…? மன்னர் உள்ளம் உருக அமைச்சர்களிடம், என் ஆட்சியில் சைவ நெறிக்குப் பாதுகாப்பில்லாமற் போய் விட்டதே ! திருமுடியிலே சடை தாங்கிய திருத்தொண்டர் என்னால் கொல்லப்பட்டிருக்கிறாரே! என் ஐயனுக்கு எவ்வளவு பெரும் பாவத்தைச் செய்து விட்டேன்.

சைவ நெறியை வளர்க்கும் வாள்வீரர் சிரசைக் கொன்ற நான் கொற்றவன் அன்று; கொடுங்கோலன். இனியும் நான் உலகில் உயிருடன் இருப்பதா? என்றெல்லாம் பலவாறு சொல்லி மனம் புண்பட்டார். மன்னர் அரசாட்சியைத் தமது மகனுக்கு அளித்து தீக்குளித்து இறக்கத் துணிந்தார். திருச்சடையையுடைய தலையை ஓர் பொற்தட்டில் சுமந்து கொண்டு ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் தியானித்தவாறே அழற்குண்டத்தை வலம் வந்தார் மன்னர். பொற்றாமரைக் குளத்தில் குளிப்பார் போல் உள்ளக்களிப்போடு தீப்பிழம்பினுள்ளே புகுந்தார் மன்னன். மெய்யன்பர்கள் மன்னரின் சிவபக்திக்கு உள்ளம் உருகினர். மன்னரின் பெருமையைப் புகழ்ந்து போற்றினர். மன்னர் தொழுதற்குரிய மகான் என்று கொண்டாடினர். எம்பெருமானின் திருவடி நீழலை அடையும் பெரு வாழ்வைப் பெற்றார் மன்னர் புகழ்ச்சோழர்!

நரசிங்க முனையரையர்

சீரும் சிறப்புமிக்க திருமுனைப்பாடி நாட்டை நரசிங்க முனையரையர் என்னும் சிவத்தொண்டர் சைவநெறி வழிகாத்து மாண்போடு ஆண்டு வந்தார். எம்பெருமானால் தடுத்தாட் கொள்ளப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்க்கும் அரும் பெரும் பேற்றை பெற்றவர். ஒரு திருவாதிரைத் திருநாளன்று  மன்னர் வழக்கம்போல் அடியார்களுக்குப் பொன்னும், பட்டாடைகளும் வழங்கிப் கொண்டிருந்தார். அப்பொழுது மன்னரிடம் பொருள் பெற்றுப் போக வந்த ஒருவர் காம நோயால் உடல் சீர்கெட்டு நோய் பெற்ற நிலையில் காணப்பட்டார். அவரைப் பார்த்து பலரும் அருவருப்படைந்து விலகிச் சென்றனர். ஆனால் மன்னர் அடியாரது ரோகம் பிடித்த மேனியில் தூய திருவெண்ணீறு துலங்கக் கண்டு விரைந்து அவர்பால் சென்று அவரைக் கரங்குவித்து வணங்கி ஆரத்தழுவி அகமகிழ்வோடு வரவேற்றார். அவருக்கு இரட்டிப்புப் பொன் கொடுத்து அனுப்பி வைத்தார். திருவெண்ணீற்றுக்குப் பேரன்புடையவராய்த் திகழ்ந்த நரசிங்க முனையரைய நாயனார் சிவபெருமான் சேவடிக்கமலங்களை அடையும் அமர வாழ்வைப் பெற்றார்.

அதிபத்த நாயனார்

சோழ நாட்டிலே காவிரிப் பூம்பட்டினமும், நாகபட்டினமும் இரு பெரும் நகரங்களாக விளங்கின. அந்நகரங்களில் கப்பல் வாணிபத்தில் வல்லமை பெற்ற நாகப்பட்டினத்தின் கடற்கரை ஓரத்தில் நுழைப்பாடி என்ற இடம் அமைந்திருந்தது.இந்நகரில் வலைஞர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மீன் வியாபாரம் செய்து வந்ததோடு சங்கு, பவழம் போன்ற பொருள்களையும் விற்பனை செய்து வந்தனர்.ஆழ்கடலுள் சென்று மீன் பிடித்ததுவரும் அதிபத்தர் முதல் மீனை இறைவனுக்கு என்று சொல்லி கடலிலேயே விட்டு விடுவதைத் தலைசிறந்த இறை நியதியாகக் கொண்டிருந்தார்.எல்லையில்லாப் பக்தி காரணமாகத்தான் அதிபத்த நாயனார் இவ்வாறு திருத்தொண்டு புரிந்து வந்தார்.இவருடைய அன்பிற்குக் கட்டுப்பட்ட எம்பெருமான் இவரது புகழை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார். முன்பெல்லாம் ஏராளமான மீன் பிடித்த நாயனாருக்கு இப்பொழுதெல்லாம் எவ்வளவு தான் வலை வீசிய போதும் ஒரே ஒரு மீனுக்கு மேல் கிடைப்பதில்லை. அந்த மீனையும் இறைவனுக்கு என்றே கடலுக்குள் வீசி விட்டு வெறுங்கையோடு வீட்டிற்குத் திரும்புவார். இதனால் இவரது வியாபாரம் தடைப்பட்டது. இதுகாறும் சேர்த்து வைத்திருந்த செல்வம் சிறுகச் சிறுகக் குறையத் தொடங்கியது.ஒருநாள் அதிபத்த நாயனார் வலை வீசிய போது அவரது வலையில் விசித்திரமான ஒரு மீன் கிடைத்தது. சூரிய ஒளியுடன் தோன்றிய அபபொன் மீன் நவமணி இழைத்த செதில்களைப் பெற்றிருந்தது. வலைஞர்கள் அதிபத்தரிடம் இந்த பொன்மீனைக் கொண்டே இழந்த செல்வத்தை எல்லாம் மீண்டும் பெற்று வறுமை நீங்கி சுபிட்சமாக வாழலாம் என்றார்கள். அதிபத்தர் அவர்களது வார்த்தைகளுக்குச் சற்றும் செவிசாய்க்கவில்லை.எம்பெருமானுக்கு அளிக்கப் பொன் மீன் கிடைத்ததே என்ற மட்டில்லா மகிழ்ச்சியோடு இறைவனை நினைத்தவாறு அப்பொன் மீனைக் கடலிலே தூக்கி எறிந்தார்.அதிபத்தரது பக்தியின் திறத்தினைக் கண்டு அனைவரும் வியந்து நின்றனர். வானத்திலே பேரொளி பிறந்தது.இறைவன் உமையாளுடன் விடை மீது காட்சி அளித்தார். சிவபுரியிலே தமது திருவடி நீழலை அடைந்து வாழும் பேரின்பத்தை அதிபத்த நாயனாருக்கு அருளி மறைந்தார் எம்பெருமான்.

கலிக்கம்பா நாயனார்

சீரும் சிறப்புமிக்கப் பல்வளம் செறிந்த பெண்ணாகடத் தலத்தில் வணிகர் குலத்திலே தோன்றினார் கலிக்கம்பர். சிவனடிப் பற்றேயன்றி வேறு எப்பற்றும் அற்ற இச்சிவனடியார் அடியார்களை உபசரித்து பாதபூசை செய்து அறுசுவை உணவளித்து பொன்னும் பொருளும் வேணவும் கொடுத்து அளவற்ற சேவை செய்து அகமகிழ்ந்தார். திருசடையுடைய விடையவர் திருவடியை இரவும் பகலும் இடையறாது கருத்தில் கொண்டு வாழ்ந்த இச்சிவனடியார், அந்நகரிலுள்ள தூங்கானைமாடம் என்னும் சிவக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் கங்காதரனை மறவாத சிந்தையுடையவராய் வாழ்ந்து வந்தார்.வழக்கம்போல் சிவனடியார் ஒருவர் வந்தார். நாயனார் அச்சிவனடியாரைக் கோலமிட்ட உயர்ந்த பீடத்தில் எழுந்தருளச் செய்து பாதபூசையைத் தொடங்கினார். அவரது மனைவியார் மனையைச் சுத்தமாக விளக்கி அறுசுவை உணவுகளைச் சமைத்துக் கரகத்தில் தூய நீருடன் கணவனருகே வந்தார். அச்சிவனடியாரைப் பார்த்ததும் அம்மையாருக்குச் சற்று அருவருப்பு ஏற்பட்டது. அதற்குக் காரணம் அச்சிவத்தொண்டர் முன்பு நாயனாரிடத்தில் வேலை பார்த்தவர். அதனால் அவர் மீது சற்று வெறுப்பு கொண்டு தண்ணீர் வார்க்கத் தயங்கி நின்றாள். மனைவியின் தயக்க நிலை கண்டு நாயனார் சினங்கொண்டார். தமது மனைவி தயங்குவதின் காரணத்தைப் புரிந்து கொண்டார். சிவக்கோலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவனடியாரது திருச்சேவடிகளை வழிபட கரக நீரைச் சொரிந்து உபசரிக்கத் தவறிய மனைவியாரின் செயலைக் கண்டு உள்ளம் பதைபதைத்துப் போனார் நாயனார். விரைந்து சென்று வாள் எடுத்து வந்தார். மனைவியாரது கையிலிருந்த கரத்தைப் பற்றி இழுத்து அம்மையாரது கரத்தை துண்டித்தார் சிவனடியார். கலிக்கம்பரின் செயலைக் கண்டு துணுக்குற்றார் அடியார். கலிக்கம்பரின் மனைவி கரத்திலிருந்து ரத்தம் ஆறாய்ப் பெருக, சிவனை நினைத்த நிலையில் மயக்கமுற்றாள். அந்த அறையிலே பேரொளிப் பிரகாசம் சிவனடியார்களிடையே எவ்வித வேறுபாடும் கருதாது சிவத்தொண்டு புரிந்து வரும் நாயனாரின் இத்தகைய திருத்தொண்டின் மகிமையை உலகிற்கு உணர்த்துவான் வேண்டி இத்திருவிளையாடல் புரிந்த எம்பெருமான் விடை மீது எழுந்தருளினார். சிவபெருமான் அருளினால் அவரது மனைவி மயக்கம் நீங்கி முன்போல் கரத்தைப் பெற்று எழுந்தாள். அடியவர்கள் அம்பலவாணரின் அருட் தோற்றத்தைத்  தரிசித்து நிலமதில் வீழ்ந்து பணிந்தார்கள். எம்பெருமான் அன்பர்களுக்கு அருள்புரிந்து அந்தர்த்தியாமியானார். நாயனார் மனைவியோடு உலகில் நெடுநாள் வாழ்ந்து இனிய திருத்தொண்டுகள் பல புரிந்து இறுதியில் விடையவர் திருவடி மலரினைச் சேர்ந்து பேரின்பம் பூண்டார்.

கலியநாயனார்

ஓங்கிய புகழுடைய தொண்டை நன்நாட்டில், எல்லா வளங்களையும் தன்னகத்தே கொண்டு சிறப்புற்று விளங்குகின்ற திருத்தலம் திருவொற்றியூர். இங்குள்ள சக்கரப்பாடித் தெருவில் எண்ணெய் வாணிபம் புரியும் வணிகர் குடியில் கலியனார் என்பவர் பிறந்தார். சைவ சமயத்தில் சிறப்புற்று விளங்கிய இச்செம்மல் சிவபெருமானுக்குத் திருத்தொண்டுகள் பல புரியும் அருள் நெறியில் நின்றார். தமது செல்வத்தைக் கோயில் திருப்பணிக்குப் பயன்படுத்தி வந்தார் நாயனார். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள படம்பக்கநாதருடைய கோயிலில் உள்ளும் புறமும் ஆயிரக்கணக்கான விளக்குகளை இரவும் பகலும் இடுகின்ற பணியில் தம்மை முழுக்க முழுக்க அர்ப்பணித்திருந்தார் கலிய நாயனாரது பக்தியின் திறத்தினை உலகிற்கு <உணர்த்தும் பொருட்டு உமைபங்கர் அவருக்கு வறுமையைத் தோற்றுவித்தார். வறுமையையும் ஒரு பெருமையாக எண்ணிய நாயனார் கோயில் திருப்பணிக்காகக் கூலி வேலை செய்து நாலு காசு சம்பாதிப்பதில் ஈடுபடலானார். இவர் தமது குலத்தவரிடம் எண்ணெய் வாங்கி விற்று பொருளீட்டி வந்தார். செக்கு ஓட்டி அன்றாடம் கூலி வாங்கும் தொழிலில் ஈடுபட்டார். அதில் கிட்டும் வருவாயைக் கொண்டு கோயில் திருப்பணியைத் தொடர்ந்து இனிது நடத்தி வந்தார். சில காலத்துக்குப் பின் அக்கூலி வேலையும் இல்லாமற் போகவே நாயனார் வீட்டிலுள்ள பண்டங்களை ஒவ்வொன்றாக விற்று பொருள் பெற்றார். இறுதியில் மனையை விற்று, மாண்புடைய மனைவியையும் விற்க முன்வந்தார்.

மனைவியாரை பெற்றுக்கொண்டு பொன் கொடுக்க ஆளில்லாமை கண்டு செய்வதறியாது திகைத்தார்; சித்தம் கலங்கினார் அடிகளார். மன வேதனை தாளாமல் மனை நலமிக்க மங்கை நல்லாளையும் அழைத்துக் கொண்டு படம்பக்கநாதர் திருக்கோயிலை அடைந்தார். எம்பெருமானின் திருமுன் பணிந்தெழுந்து, ஐயனே! திருவிளக்குப் பணி நின்று விடுமாயின் இவ்வெளியேன் மாள்வது திண்ணம். அம்பலத்து ஒளிவிடுகின்ற அகல் விளக்குகளை எண்ணெய் வார்த்து ஏற்ற முடியாது போனால் நான் உதிரத்தை வார்த்து விளக்கேற்றுவேன் என்று மகிழ்ச்சி பொங்க மொழிந்தார். திருவிளக்குகளை முறையோடு வரிசையாக அமைத்தார். எண்ணெய்க்குப் பதிலாக உதிரத்தைக் கொடுக்க உறுதிபூண்டிருந்த கலியநாயனார் வாள் எடுத்து வந்து தமது கழுத்தை அரியத் தொடங்கினார். திருத்தொண்டர்களை தடுத்தாட்கொள்ளும் தம்பிரான் எழுந்தருளி நாயனாரது திருக்கரத்தைப் பற்றினார். ஆலயத்துள் பேரொளி எழுந்தது. திருவிளக்குகள் எண்ணெய் வழியப் பிரகாசமாக ஒளிபரப்பின. எங்கும் பிறைமுடிப் பெருமானின் அருள் ஒளி நிறைந்தது. நாயனார் கழுத்தில் அரிந்த இடம் அகன்று முன்னிலும் உறுதி பெற்றது. நாயனாரும் அவரது மனைவியாரும் மெய்யுருகி நின்றனர். சடைமுடிப் பெருமானார் அன்னையுடன் அலங்கார விடை மீது எழுந்தருளி அன்புத் தொண்டர்க்கு காட்சி கொடுத்தார். கலிய நாயனாரும் அவரது மனைவியாரும் எம்பெருமானை நிலமதில் வீழ்ந்து பலமுறைப் பணிந்து எழுந்தனர். இறைவன் கலிய நாயனாருக்குப் பேரின்பப் பெருவாழ்வு அளித்து இறுதியில் சிவபதம் புகுந்து சிறப்புற்றிருக்குமாறு திருவருள் செய்தார்.