திருச்சி-உறையூர் -அருள்மிகு கமலவல்லி நாச்சியார், ஸ்ரீ அழகியமணவாளர் கோயில்

கோயில் பெயர் 

ஸ்ரீ அழகியமணவாளர் கோயில்

தோற்றம் காலம் 

2000 ஆண்டுகளுக்கு முன்பு

தெய்வத்தின் பெயர் 

மூலவர்:அழகிய மணவாளன்

தாயார்:கமலவல்லி நாச்சியார்

தீர்த்தம்: கல்யாண தீர்த்தம், சூர்ய புஷ்கரணி

ஆகமம்: பாஞ்சராத்ரம்

பிரத்யட்சம்: ரவிதர்மா, கமலவல்லி.

பாடல் வகை: நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

மூலவர்: –

அழகிய மணவாளப் பெருமான் என்றழைக்கப்படுகிறார். நின்ற திருக்கோலத்தில் கையில் பிரயோக சக்கரத்துடன் வடக்கு முகமாகக் காட்சியளிக்கிறார்.

தாயார்: –

பெருமாள் அருகிலேயே கமலவல்லி நாச்சியாராக அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். வாஸலக்ஷ்மி, உறையூர் வல்லி என்ற பெயர்களும் உண்டு. தாயாருக்குத் தனி சன்னிதி இல்லை.

மங்களாசாஸனம்: –

திருமங்கையாழ்வார் ஒன்றும், குலசேராழ்வார் ஒன்றுமாக மொத்தம் இரண்டு பாசுங்கள் பாடி உறையூர் பெருமானை மங்களா சாஸனம் செய்துள்ளனர். 108 வைணவத் திருத்தலங்களுள் இரண்டாவது திருத்தலம், மணவாளன் என்றால் மாப்பிள்ளை என்று பொருள் இத்தலம் திருஉறையூர்  மற்றும் திருக்கோழி என்ற பெயரில் புராண காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது.

திருக்கோழி பெயர்க்காரணம்

சோழ நாட்டு அரண்மனை யானை இங்கு வந்தபோது கோழி ஒன்று யானையைத் தாக்கி ஓடச் செய்ததால் கோழியூர் என்ற பெயர் ஏற்பட்டு அது பின்னர் திருக்கோழி என மாறிற்று.

திருப்பாணாழ்வார் இத்தலத்தில் தான்  அவதரித்தார். இவர் தனிச்சன்னதியில் இருக்கிறார்.நாயன்மார்களில் புகழ் சோழர், கோச்செங்கட்சோழர் ஆகிய இருவரும் இவ்வூரில் அவதரித்தவர்களே ஆவர்.

கலியுகத்தில் மண்ணில் மறைந்த இப்பகுதியை மீட்டு சோழ மன்னன் இப்பொழுதிருக்கும் பெருமாளையும் தாயாரையும் பிரதிஷ்டை செய்து அமைத்த திருக்கோயிலே தற்போது உள்ளது. பொதுவாக பெருமாள் ஸ்தலங்களில் குங்கும பிரசாதம் கொடுப்பர்.  ஆனால், இங்கு  சந்தன பிரசாதம் தருகின்றனர்.  அம்பாளுக்கு படைக்கப்படும் நைவேத்தியத்தில் காரத்துக்காக  மிளகாய் வத்தல் சேர்க்காமல் மிளகு சேர்க்கப்படுகிறது. ரங்கநாதரே தாயாரை மணந்து கொண்டதால் இங்கு சுவாமி, தாயார் இருவரும் அவரை பார்த்தபடி  வடக்கு திசை நோக்கி இருக்கின்றனர்.  திருமணத்தடை உள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தன்று  தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை.  இத்தலம்  தாயாரின் பிறந்த தலம் என்பதால், இவளே இங்கு பிரதானமாக இருக்கிறாள்.  இவளது பெயரால்  இத்தலம் நாச்சியார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.  மூலஸ்தானத்தில் தாயார் மட்டுமே  உற்சவராக இருக்கிறாள்.  பெருமாள் உற்சவர் இல்லை.

எல்லா வைணவ  கோவில்களிலும்   வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் பரமபத வாசல்கடந்து வரும் வைபவம் நடக்கும். ஆனால் உறையூரில் தாயார் பரமபத வாசல் கடக்கும் நிகழ்வு நடக்கிறது.வைகுண்ட ஏகாதசி நாளன்று இங்கு சொர்க வாசல் திறப்பதில்லை. மாறாக மாசி மாத தேய் பிறை ஏகாதசியில் சொர்க வாசல் திறக்கப்பட்டு தாயார் சொர்க   வாசலை கடக்கும் நிகழ்வு நடக்கும். பெருமாளுக்கு நடக்கும் அத்தனை அனுஷ்டானங்களும் இங்கு தாயாருக்கும் நடக்கும்

தலவரலாறு

துவாபர யுகத்தில் தர்மவர்மாவின் வம்சத்தில் வந்த திருமாலின் பக்தரானநந்தச் சோழ மன்னன், இப்பகுதியை ஆண்டு வந்தான். அவனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.  திருமாலிடம் குழந்தை பாக்கியம் தரும்படி வேண்டினான்.தன் தீவிர பக்தனுக்காக, மகாலட்சுமியையே மன்னனின் மகளாக அவதரிக்கும் படி திருமால்  அனுப்பினார்.ஒரு சமயம் நந்தசோழன் வேட்டைக்குச் சென்ற போது, ஒரு தடாகத்தில் தாமரை  மலரில், ஒரு குழந்தை படுத்திருப்பதைக் கண்டான். மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை எடுத்து,  “கமலவல்லி” என பெயரிட்டு வளர்த்தான்.பருவமடைந்ததும், தோழியருடன் வனத்தில் உலவிக்  கொண்டிருந்தாள்.  அப்போது, திருமால் அவள் முன்பு குதிரையில் சென்றார்.  அவரைக் கண்ட  கமலவல்லி அவர் மீது காதல் கொண்டாள்.அவரையே திருமணம் செய்ய வேண்டும் என  நினைத்தாள்.இதை புரிந்துகொண்ட திருமால், நந்தசோழனின் கனவில் தோன்றி, தான்  கமலவல்லியை மணக்க விரும்புவதாக கூறினார். நந்தசோழன், கமலவல்லியை ஸ்ரீரங்கம்  அழைத்துச் சென்றார்.  அங்கு , கமலவல்லி திருமணக்கோலத்தில் அரங்கநாதனுள்  ஐக்கியமானாள்பின்னர் திருமண நினைவாக நந்தசோழ மன்னர் எழுப்பிய திருக்கோயிலே கமலவல்லி நாச்சியார் திருக்கோவில் .

வேண்டுதல்கள்:

கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்க இங்கு வேண்டிக்கொள்ளலாம். பிரிந்த உறவுகள் ஒன்று சேரவும்

கடன் தொல்லைகள் நீங்கவும் நாள்பட்ட நோய்கள் குணமாகவும் இங்கு வேண்டி கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

தாயாருக்கு திருமஞ்சனம் செய்து வேண்டுதல்கள் நிறைவேற்றி கொள்ளலாம்,

திருவிழாக்கள் :

நவராத்திரி, கார்த்திகையில் திருப்பாணாழ்வார் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். ஆண்டு தோறும் பங்குனி உத்தரத்திற்கு முதல் நாள் ஸ்ரீரங்கத்திலிருந்து ஸ்ரீரங்கநாதன் உத்ஸவர் இங்கு எழுந்தருளி கல்யாண உத்ஸவம் நடைபெறுகிறது. அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ஆதி பிரம்ம உற்சவத்தை ஒட்டிப் பதினோரு நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவின் ஒன்பதாம் திருநாளன்று மட்டையடி வைபவம் நடைபெறும். உறையூர் சென்று திரும்பி வரும் நம் பெருமாள் தாயாரைக் காண வருகிறார். ஸ்ரீரங்க நாச்சியாரோ, அவர் வந்தால் கதவைச் சாத்திவிடுமாறும், வாழை மட்டையால் அடித்து விரட்டுமாறும் ஆணையிடுகிறார். இதுவே ஸ்ரீரங்கத்தில் நடக்கும் மட்டையடி வைபவம். இந்நிகழ்ச்சியின் பொழுது, தயிர், வெண்ணெய், பலாச் சுளை ஆகியவற்றைத் தாயாரின் தோழிகள், நம் பெருமாள் மீது விட்டெறிவார்கள்.ஸ்ரீரங்கநாச்சியார் ஏன் பெருமாளை உள்ளே விட வேண்டாம் என்கிறார்? நம் பெருமாள் உறையூர் சென்று வேறு ஒரு பெண்ணுடன் தங்கி வந்தார். இச்செய்தி அறிந்ததால் ஸ்ரீரங்கநாச்சியார் பெருமாளை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டுவிடுகிறார். இதுவே ஊடலின் தொடக்கம். ஆறாம் திருநாளன்று நம் பெருமாளாகிய அழகிய மணவாளன் கமலவல்லித் தாயாருடன் இருந்தார். தன் கையில் இருந்த கணையாழியை (மோதிரம்) தன் நினைவாகக் கமலவல்லித் தாயாருக்குக் கொடுத்தார். வீட்டுக்குத் திரும்பி வந்தால் ரங்கநாயகித் தாயார் பல கேள்விகள் கேட்கிறார். இரண்டு நாளாக மணிச் சத்தமே கேட்கவில்லையே நீங்கள் எங்கே போயிருந்தீர்கள், உறையூர் போயிருந்ததாகத் தகவல் வந்ததே என்று கேட்கிறார் தாயார். லீலைகளில் மன்னனான நம் பெருமாள், உறையூரை இதுவரை கண்ணால் பார்த்ததும் இல்லை. காதால் கேட்டதுமில்லை என்கிறார். நெற்றியில் உள்ள திருமண் காப்பு கலைந்தது ஏன்? திருமேனி வாடியது ஏன் என்று மேலும் கேள்விகளைத் தூக்கிப் போடுகிறார் தாயார். வேட்டைக்குப் போயிருந்தேன் அப்போது மோதிரம் கழன்று விழுந்துவிட்டது. ஆற்று மணலில் அதனைச் சலித்துத் தேடியபோது உடலை முட்கள் கிழித்தன என்று பதிலளிக்கிறார் பெருமாள். வியர்வை பெருகியதால் திருமண் கலைந்தது என்றார். அதனால் வாட்டமான திருமேனியும், திருமண் காப்பும் கலைந்தது என்று பொய் மேல் பொய்யாக அடுக்கிக்கொண்டே போகிறார் பெருமாள். இவர்களுக்குள் இந்தச் சண்டை நிடக்கும்போது, பெருமாளின் மாமனார் பெரியாழ்வார் வருகிறார். தன் மாப்பிள்ளை வெளியே நிற்பதைக் காண்கிறார். உள்ளே வரக் கூப்பிடுகிறார். அதற்கு முன் தாயார் கதவைச் சாத்திவிடுகிறார்.

அழகிய மணவாளன் என்ற ராஜாவை உள்ளே வரவிடாமல் வெளியே நிற்க வைக்கிறார் என்ற அவமானம் உனக்கே அன்றி எனக்கில்லை என்கிறார் பெருமாள். இந்தச் சண்டைதான் திருவிழாவில் நாடகம்போல நிகழ்த்தப்படுகிறது. ஊர்வலம் போய்விட்டு வரும் பெருமாள் பல்லக்கில் உள்ளே வர எத்தனிக்கும் பொழுதெல்லாம் பெரும் கதவு மூடப்படுகிறது. இதனைக் கண்ட பக்தர் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.தாயாரிடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பிப்பதற்காகவே தன் பெயரை அழகிய மணவாளன் என்று மாற்றிக்கொண்டாராம் பெருமாள். மணவாளன் என்றால் மாப்பிள்ளை. அழகிய என்றால் அழகான மாப்பிள்ளை என்று பொருள்.தாயாரோ தவறு செய்ததற்காகப் பெருமாளை உள்ளே வரவிடாமல் வெளியே நிற்கவைத்துத் தண்டனை அளிக்கிறாள் அந்தத் தைரிய லஷ்மி. பெருமாள் உள்ளே வரும்பொழுது நான்கு முறை பெருங்கதவை அடைக்கிறார்கள். அப்பொழுது பெரியாழ்வார் பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் இடையே தூது போகிறார். அந்த உரையாடலில் தொனிக்கும் நகைச்சுவை கண்டு பக்தர் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. தாயார் பெருமாளைக் கேள்வி மேல் கேள்வி போட்டுத் தாக்க, பெண்கள் முகமெல்லாம் சிவக்கிறது. ஆண்கள் கை கொட்டிச் சிரிக்கிறார்கள். பெருமாளைக் கதவுக்கு அருகே வர விடாமல் பக்தர்கள் வெண்ணெய், தயிர் ஆகியவற்றை வீசி எறிகிறார்கள். பல்லக்கின் மீது மட்டையடியும் விழுகிறது. எல்லாம் பெருமாளின் மீது தாயாருக்கு ஏற்பட்ட கோபத்துக்காக. பெருமாளின் குணங்களையும் பக்தர்களுக்கு அருள அவர் எந்த எல்லைக்கும் செல்வார் என்பதையும் பெரியாழ்வார் எடுத்துச் சொல்ல, தாயாரின் கோபம் கரைகிறது. பின்னர் பெருமாள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார். தாயாரும், நம் பெருமாளும் ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி உற்சவம் பெறுகிறார்கள். இதற்கு முன்னதாக ஸ்ரீகமலவல்லி நாச்சியாருக்கும், நம் பெருமாளுக்கும் உறையூரில் சேர்த்தி உற்சவம் நடக்கும்.

கோயில் நேரம்

காலை 6.30 மணி முதல் காலை 8.00 மணி வரை, காலை 9.30 மணி முதல் நண்பகல்  12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

பாதை

திருச்சிராப்பள்ளி கோட்டை இரயில் நிலையச் சந்திப்புக்கு மேற்கில் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளி முக்கிய இரயில் நிலையச் சந்திப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது.

கோயில் தொலைபேசி எண்

0431 2762 446, 94431 88716.

கோயில் முகவரி

ஸ்ரீ கமலாவல்லி நச்சியர் கோயில்,

உறையூர்,

திருச்சி-620 003.

 

திருமோகூர்-ஸ்ரீ காலேமேகா பெருமாள் கோயில் 

கோயில் பெயர் 

ஸ்ரீ காலேமேகா பெருமாள் கோயில்

தோற்றம் காலம் 

2000 ஆண்டுகளுக்கு முன்பு

தெய்வத்தின் பெயர்

மூலவர்: காலேமேகா பெருமாள்

தயார்: மோஹனவல்லி, திருமோகூர்வல்லி, மோகவல்லி என்ற திருப்பெயர்கள் உண்டு

புஷ்கார்ணி: திருப்பாற்கடல் பொய்கை.

விமானம்: கேத்தகி விமானம்

மங்களாசசனம்: நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார்

மூலவர் காளமேகப் பெருமாள். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். உற்சவர் திருமோகூர் ஆப்தன் நண்பன்  பஞ்சாயுதங்களுடன் கூடிய திருக்கோலம். குடமாடு கூத்தன், தயரதன் பெற்ற மரகத மணித்தடம், சுடர்கொள் ஜோதி என்றும் இவருக்குப் பல பெயர்கள் உண்டு.

இக் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்  நிர்வாகத்தில் உள்ளது. மூலவராக காளமேகப் பெருமாளும் உற்சவராக ஸ்ரீ ஆப்தனும் உள்ளனர். பல மண்டபங்கள் சிவகங்கையை ஆட்சிபுரிந்த மருது பாண்டியர் திருப்பணியாகும். இங்கு ஆதிசேடனுக்குத் தங்கக் கவசங்கள் இருப்பது சிறப்பு. தேவர்களை ரட்சிக்க இறைவன் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்த தலம் திருமோகூர் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் இத்தலமும் ஒன்று. இங்குள்ள பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் கொடுத்தவர்.வைகுண்டத்திற்கு வழிகாட்டி அழைத்துச் சென்றார் என்று கூறப்படுகிறது. இந்த தலம் வந்து பெருமாளை மனம் உருக வணங்கி வேண்டினால், செய்த பாவங்கள் தீர்ந்து மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.

திருமோகூர் நண்பன்!

காளமேகம் (கருமேகம்) நீரைத் தனக்குள் தாங்கி, மக்களுக்கு மழையாய்த் தருவது போல் இங்கு திருமால் ஐந்து ஆயுதங்களைக் கரங்களில் தாங்கி, வலக்கையால் தன் திருவடிகளைச் சுட்டிக்காட்டி, தன் அருளை மழையாய்த் தருகிறார். உற்சவர் ”நண்பன்” (வடமொழியில் ஆப்தன்) என்று அழைக்கப்படுகிறார். தன்னை நாடும் பக்தர்களுக்கு உற்ற நண்பனாகவும், அவர்கள் இறுதிக்காலத்தில் வழித்துணையாக வந்து வைகுண்டம் வரை அழைத்து சென்று அருளுவதால் இந்தப் பெயர்.

ஸ்தல புராணம்:

தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலில் அமிர்தம் கடைகின்றனர்.  அமிர்தம் கிடைத்தவடன் பங்கீடு செய்வதில் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அசுரர்கள் தேவர்களுக்கு தொல்லை தருகின்றனர். அசுரர்களின் தொல்லை தாங்கமுடியாமல் தேவர்கள் பெருமாளிடம் சென்று முறையிடவே, பெருமாளும் மோகினி அவதாரம் எடுத்து தேவர்களை காத்தருளினார். பெருமாள் மோகினி அவதாரம் எடுத்ததால் இவ்வூர் திருமோனவூர் என்றிருந்து பின்பு திருமோகூர் என்று அழைக்கப்படுகிறது. மதுரை திருமோகூர் காளமேகப் பெருமாளை வணங்கினால் வியாபார விருத்தி, திருமண பாக்கியம் கிடைக்கும். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் பெருமாளுக்கும்  தாயார் மோகன வள்ளிக்கும் வஸ்திரம், புடவை சாத்தி, வெண்ணை மற்றும் துளசி மாலைகள் அணிவிக்கின்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பு.இந்தத் திருத்தலம் நவக்ரஹ தோஷங்களை போக்கக் கூடிய ஸ்தலம். இதற்கு ஸ்ரீ மோகன க்ஷேத்திரம் என்ற பெயர் உண்டு. திருமோகூர் ராகு கேது ஸ்தலமாகும். ராகு கேதுவினால் உண்டாகும் தோஷங்களுக்கு திருமோகூர் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.

ஸ்ரீ காளமேகப்பெருமாள்

காளமேகப்பெருமாள் கிரீடம், சங்கு, சக்கரம் ஆகியவை வெண் கற்களால் செய்து அணிவிக்கப்பட்டுள்ளது. பெருமாளுக்கு சாளகிராம மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. சாளகிராமம் என்பது இமய மலையில் கிடைக்கும் ஒரு புனிதமான கல். இதனை மகாவிஷ்ணுவின் வடிவமாகவே பூஜிக்கின்றனர். சாளகிராமத்தை வீட்டில் வைத்து பூஜை செய்வது சிறந்த புண்ணிய பலன்களைத் தரும்.

ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

இங்குள்ள சக்கரத்தாழ்வார் மிகவும் பிரசித்தி பெற்றவர். உற்சவர் சிலையில் 154 மந்திரங்களும், மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. 16 கரங்களில் ஆயுதங்களுடன் காட்சிதரும் இவர், அக்னி கிரீடத்துடன் ஓடிவரும் நிலையில் இருப்பது சிறப்பு. ஏனைய பெருமாள் தலங்களான ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம், காஞ்சீபுரம் கும்பகோணம்  ஆகிய இடங்களில் சக்கரத்தாழ்வார் இருந்தாலும்  மந்திர எழுத்துக்களுடன் இருப்பது சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன்பின்புறம் யோக நரசிம்மரோடு காட்சி தருவதால் நரசிம்ம சுதர்சனம் என்கின்றனர். இவரை வணங்க, வியாபார விருத்தி, திருமண பாக்கியம் ஆகியவை நிறைவேறும் என்பது நம்பிக்கை. மேலும் வேலை வாய்ப்பு, வெளிநாட்டு பயணம், செல்வம் பெருக, புதிய வாகனம் மற்றும் நிலம் வாங்க வசதி அருள்பாலிக்கிறார்.  புதிய வாகனம் வாங்கியோர் முதலில் இங்கு வந்து இவரது பாதத்தில் சாவியை வைத்து வழிபட்டு செல்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியவர்கள்  சக்கரத்தாழ்வாருக்கு தயிரால் அபிஷேகம் செய்கின்றனர்.

தலவிருட்சம்

திருப்பாற்கடல் பொய்கைக்குக் கிழக்கில் ஒரு விருட்சம் இருக்கிறது. இந்த மரம் ஆதியில் கிருதாயுகத்தில் திவ்ய விருட்சமாகவும், திரேதாயுகத்தில் வன்னி மரமாகவும், துவாபரயுகத்தில் வில்வ மரமாகவும், கலியுகத்தில் அரச மரமாகவும் திகழ்கிறது.

தீர்த்தக்குளம்

பாற்கடலில் அமிர்தம் கடையும் போது அதிலிருந்து ஒரு துளி அமிர்தம் இக்கோயிலில் உள்ள குளத்தில் விழுந்ததால், இக்கோயில் குளத்திற்கு பெரிய திருப்பாற்கடல், சிறிய திருப்பாற்கடல் என்ற பெயர் உண்டானது. மோகினி அவதாரம் எடுத்த சம்பவத்திற்கு காரணமாக திருப்பாற்கடல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ சக்கரத்தாழ்வார் பற்றி

திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார். இவர் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார். இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கப்படுபவர். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு. இவர் பதினாறு, முப்பத்திரண்டு என்ற எண்ணிக்கைகளில் கைகளை உடையவர். பெரியாழ்வார் `சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு’ என வாழ்த்திப் பாடியுள்ளார். திருமாலுக்கு இணையானவர் என்று எழுதிய சுவாமி தேசிகன், சுதர்சனாஷ்டகத்தில் சக்கரத்தாழ்வாரைப் பலவாறும் போற்றியுள்ளார்.

சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள் பதினாறு. அதில் வலக்கையில் உள்ள ஆயுதங்கள் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவை. இடக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியன.

சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார். ஆனால் சில இடங்களில் மாறுபட்டும் அமைந்திருப்பது உண்டு. திருக்கோவிலூரில் மூலவர் இடக்கையில் காட்சி அளிக்கிறார் சக்கரத்தாழ்வார். அதே போல் அமைந்து பிரயோகிக்கும் நிலையில் காணப்படுவது பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில்.

நவகிரக தோஷம் நீங்க

சிவன் கோயில்களில் மட்டுமே நவகிரக வழிபாடு உண்டு. அவ்வழிபாடுகளினால் பக்தர்கள் தங்கள் தோஷங்களை நீக்கிக்கொள்வார்கள். விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும் நவகிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி, `ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம’ என்ற மந்திரம் சொன்னால் நவகிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. மேலும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும் என்பதும் ஐதீகம். இந்த சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்று அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது.

சக்கரத்தாழ்வார் எதிரிக்கு எதிரி

சிசுபாலனின் தாய்க்கு அளித்த வாக்கின்படி, சிசுபாலனின் தவறை நூறு முறை மன்னித்துவிட்டார் கிருஷ்ணர். அவனது நூற்றியோராவது தவறைக் கண்டு கொதித்த சுதர்சன சக்கரம் சீறி எழுந்து பெருமாளின் எதிரியான சிசுபாலனை அழித்தது. மகாபாரத யுத்தத்தின்போது, ஜயத்ரதனை வெல்ல இயலாத நிலையில் பெருமாளின் சக்கரம் வானில் சுழன்று எழுந்து சூரியனை மறைத்தது. அதனால் குருஷேத்திரமே இருண்டது. இதனால் ஜயத்ரதன் ஒழிக்கப்பட்டு, மகாபாரத வெற்றிக்கு வித்திடப்பட்டது. கஜேந்திர மோட்சம் என்ற புராணக் கதையில், யானையின் காலைப் பிடித்துக்கொண்ட மகேந்திரன் என்ற முதலையை சீவித் தள்ளி, கஜேந்திரனைக் காப்பாற்றியது சுதர்சன சக்கரமே. பக்தர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால், பெருமாளுக்கே இடையூறு ஏற்பட்டாற்போல் விரைந்து காப்பவர் சக்கரத்தாழ்வார் என இவை நிரூபிக்கின்றன.பக்தர்களுக்கு சந்தோஷம் தருபவர் பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தை போக்கிக் காப்பவர் சுதர்சனர். மனிதனின் நிம்மதியை பாதிப்பவை கடன், வியாதி, எதிரி தரும் துன்பம் இவற்றை முற்றிலும் நீக்கி சந்தோஷத்தை அளிப்பவர். இவர் கல்வியில் தடையை நீக்கி இடைவிடாது தொடரும் கல்வி யோகத்தைத் தருபவர் என்பது நம்பிக்கை. சக்கரத்தாழ்வாரை சனிக்கிழமைகளில் தரிசிக்க வாழ்வு வளம் கூடும். சென்னை திருவொற்றியூரில் காலடிப்பேட்டை சந்நிதி தெருவில் அமைந்துள்ள கல்யாண வரதராஜர் கோவிலில் அருள்பாலிக்கும் சக்கரத்தாழ்வார் பொன்னையும் பொருளையும் மட்டுமல்ல திருமண வரத்தையும் வாரி வழங்குபவர். `சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’ என்று பெருமாளுடன் அவரது சக்கரத்திற்கும் சேர்த்தே ஏற்றம் தருகிறாள் ஆண்டாள்.

வழி:

மதுரை, மேலூர் வழித்தடத்தில் மதுரையிலிருந்து 10 km தொலைவில், இந்த அழகிய காளமேகப் பெருமாள் வீற்றிருக்கும் திருமோகூர் அமைந்துள்ளது. மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திலிருந்தும், பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்தும் நிறைய பேருந்துகள் இங்கே செல்கின்றன. மதுரையிலிருந்து ஒத்தக்கடை சென்று, அங்கிருந்து ஆட்டோவிலும் இந்த கோயிலுக்கு செல்லலாம். மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திலிருந்து 7 km தொலைவிலும், பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 15 km தொலைவிலும், யானைமலை ஒத்தைக்கடை என்னும் ஊரில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது இந்த திருமோகூர் திருத்தலம். திருவாதவூர் செல்லும் பேருந்துகள் ஆலயத்தின் அருகிலேயே இறக்கிவிடுகின்றன. திருவாதவூர் திருமறை நாதர் ஆலயத்துக்கும் செல்பவர்கள், முதலில் அங்கு வழிபட்டுவிட்டு இங்கு வந்தால் நேரத்தைச்  சேமிக்கலாம்.

கோவில் நேரம்:

காலை 7.00 மணி முதல் 12 மணி வரை, 4.00 மணி. 8.00 க்கு பி.எம்.

கோயில் தொலைபேசி எண்:

+ 91- 98420 24866

கோயில் முகவரி:

ஸ்ரீ காளமேகப்பெருமாள்

கோவில்,

திருமோகூர் -625 107,

மதுரை மாவட்டம்.

ஸ்ரீ ரங்கம் -ஸ்ரீ அரங்கநாதர பெருமாள்

கோயில் பெயர்

ஸ்ரீ அரங்கநாதர பெருமாள்

தோற்றம் காலம்

2000 ஆண்டுகளுக்கு முன்பு

தெய்வத்தின் பெயர்

 மூலவர்: அரங்கநாதர்

உற்சவர்: நம்பெருமாள்

தாயார்:ரங்கநாயகி

தல விருட்சம்:புன்னை

நவ தீர்த்தம்

சந்திர புஷ்கரணிவில்வ தீர்த்தம்சம்பு தீர்த்தம்பகுள தீர்த்தம்பலாச தீர்த்தம்அசுவ தீர்த்தம்ஆம்ர தீர்த்தம்கதம்ப தீர்த்தம்புன்னாக தீர்த்தம்

ஆகமம்: பாஞ்சராத்திரம்

மங்களாசாசனம்பாடல் வகை:

நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

மங்களாசாசனம் செய்தவர்கள்: பெரியாழ்வார்

ஆண்டாள்

குலசேகர ஆழ்வார்

திருமழிசையாழ்வார்

தொண்டரடிப்பொடியாழ்வார்

திருப்பாணாழ்வார்

திருமங்கையாழ்வார்

பொய்கையாழ்வார்

பூதத்தாழ்வார்

பேயாழ்வார்

நம்மாழ்வார்

ஸ்தல வரலாறு

ஸ்ரீ பரமசிவன் நாரதருக்கு  ஸ்ரீரங்க மஹாத்மியத்தைப் பற்றிச் சொல்லும்போது காவிரி நடுவே சந்த்ரபுஷ்கரணி கரையிலுள்ள ஸ்ரீரங்கம் செல்பவர்களுக்கு நரகமோ, ஞானக் குறைவோ கிட்டாது என்று சொல்கிறார். அந்த இடம்தான் ஸ்ரீரங்கம், ரங்கம் என வழங்கப்படுகிறது.

பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண்

அச்சுதா! அமரேறே! ஆயர் தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.

தொண்டரடிப்பொடியாழ்வார் .

வைணவத்தின் மையத் தலைமைச்செயலகமாக ஸ்ரீரங்கம் திகழ்ந்தது. ஸ்ரீராமானுஜர் பரப்பிய விசிஷ்டாத்வைதம் நெறிக்கு ஸ்ரீரங்கமே நிலைக்களம். திருவரங்கத் திருத்தலம் பற்றி அகநானூறு, புறநானூறு மற்றும் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. கோவில்களில் அழகு என்றல் அது “திருவரங்கம்” கோவில் தான், ஏழு பிரகாரங்களை கொண்ட இந்த கோயிலில் நான்கு உட்புறமும், மூன்று வெளிப்புறமும் அமைந்துள்ளது 236அடி உயரம் (72 m) கொண்ட இந்த கோயிலின் ராஜகோபுரம் ஆசியாவின் பெரிய கோபுரமாக விளங்குகின்றது. கோயிலைச் சுற்றி 21 கோபுரங்கள் உள்ளன.  பூலோக வைகுண்டம் என்ற பெருமை பெற்ற  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்,  108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது.  11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்று பாடிய ஒரே தலம். பஞ்சரங்க தலங்களுல் ஒன்று.

பஞ்சரங்க தலங்கள்

ஸ்ரீ ரங்கநாதசுவாமி திருக்கோவில்

ஸ்ரீரங்கப்பட்டணம்

திரு அரங்கநாதசுவாமி திருக்கோவில்

திருவரங்கம்

சாரங்கபாணி திருக்கோவில் கும்பகோணம்

திரு ஆப்பக்கூடத்தான் பெருமாள் திருக்கோவில் திருப்பேர்நகர் என்ற கோவிலடி (திருச்சி)

பரிமள ரங்கநாதபெருமாள் திருக்கோவில் திருஇந்தளூர் மயிலாடுதுறை

உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் திருவரங்கம் இருக்கும் திசையை நோக்கி வணங்கினாலே போதும்; இந்தத் தலத்துக்கு நேரில் வந்து, இங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி திருவரங்கனை தரிசித்த பலன் கிடைக்கும். பெருமாளுக்கு நைவேத்தியம் செய்ய சமைப்பதற்கு மடப்பள்ளியில் மண்பாத்திரங்களே தற்போதும் பயன்படுத்தப்படுகிறது.  ஸ்ரீரங்கத்தில்  ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்கநாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.

கங்கை vs காவிரி

ஒரு முறை கங்கை, காவிரி, யமுனை உட்பட புண்ணிய நதிக் கன்னியர்கள், இமயமலை அடிவாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வான்மார்க்கமாக சென்ற கந்தர்வன் ஒருவன், இவர்களைப் பார்த்து வணங்கினான். உடனே, ‘கந்தர்வன் வணங்கியது தன்னையே!’ என்று நதிக் கன்னியர் ஒவ்வொருவரும் தங்களுக்குள் வாதிட்டனர். இது வீண் விவாதம் என்றுணர்ந்த சிலர் விலகிக் கொள்ள… காவிரியும், கங்கையும் மட்டும் விவாதம் தொடர்ந்தனர். முடிவை தெரிந்து கொள்ள திருமாலை நாடினர். அவர், ‘‘கங்கை என் திருப்பாதத்தில் தோன்றியவள் ஆதலால் அவளே பெரியவள். கந்தர்வனின் வணக்கம் அவளையே சாரும்!’’ என்றார். இதனால் வருந்திய காவிரி, தான் கங்கையை விட மேன்மை நிலை பெற வேண்டும் என்று திருமாலைக் குறித்து தவம் இருந்தாள். அதனால் மகிழ்ந்த பகவான் அவள் முன் தோன்றி, ‘‘எதிர்காலத்தில் நான் உன் மடியில் சயனிப்பேன். அப்போது நீ கங்கைக்கு மேற்பட்டவளாவாய்!’’ என்றருளினார். அதன்படியே பிற்காலத்தில் காவிரியின் மத்தியில் ஒரு தீவும், சந்திர புஷ்கரணியும், அனந்த பீடமும் தோன்றின. ஆற்று நீர் சூழ மத்தியில் அமைந்துள்ள பகுதிக்கு அரங்கம் என்று பெயர். அதன்படி இந்த தீவு, இரு ஆறுகளின் (காவிரி மற்றும் கொள்ளிடம்) மத்தியில் இருப்பதாலும் லட்சுமி கடாட்சத்துடன் திகழ்வதாலும் ஸ்ரீரங்கம் அல்லது திருவரங்கம் எனப் பெயர் பெற்றது. திருவரங்கத்தில் பாயும் காவிரி நதி, பரம பதமான ஸ்ரீவைகுண்டத்துக்கு வெளியே ஓடும் ‘விரஜா’ நதிக்கு ஒப்பானது. பெயர், கோயில், பெருமாள், தாயார், ஊர், தளிகை, வாத்யம், மற்றும் பலகாரங்கள் அனைத்தும் ‘பெரியது’ என்று ஏற்றிச் சொல்லப்படும் பெருமை இந்தத் தலத்துக்கு மட்டுமே உண்டு. இங்குள்ள மூலவர் ரங்கநாதர் என்றும் பெரிய பெருமாள் என்றும் திருநாமங்கள் உடையவர்.  கோயிலும் பெரிய கோயில், சயனக்கோலத்தில் காட்சியளிக்கும் பெருமாள் பெரிய பெருமாள், தனிக் கோயில் கொண்டிருக்கும் அரங்கநாயகி பெரிய பிராட்டியார் எனவும் தளிகைக்குப் பெரிய தளிகை என்றும், மேளத்திற்கு பெரிய மேளம் என்றும் திருவரங்கத்தின் பெருமையை “பெரிய’ என்று அடைமொழி இட்டு வழங்குகிறார்கள். உற்சவ மூர்த்தியான ரங்கராஜர், நம்பெருமாள் என்றும் அழகிய மணவாளன் என்றும் போற்றப்படுகிறார்.

ஸ்ரீரங்கம், நவக்கிரகங்களில் ஒன்றான சுக்கிர க்ஷேத்திரமாகவும் கருதப்படுகிறது வலக்கை திருமுடியைத் தாங்க, இடக்கை மலர்ப்பாதத்தை சுட்டிக் காட்ட தெற்கு முகமாக இலங்கையை நோக்கியபடி அருள் பாலிக்கிறார் மூலவர் ஸ்ரீரங்கநாதர். திருவரங்கத்தில் இருக்கும் ‘ரங்க விமானம்’ ஆதியில் தானாகவே உருவானது.  இந்த விமானம் பொன்னால் வேயப்பட்டு ‘ஓம்’ என்கிற பிரணவ வடிவில் அமைந்துள்ளது.  இந்த தங்க விமானத்தில் உள்ள பரவாசு தேவர், கையில் கிண்ணத்துடன் காட்சியளிக்கிறார். அந்தக் கிண்ணம் அவரின் வாயை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக வும், அது வாயருகில் சென்று சேர்ந்தால் உலகம் அழியும் என்றும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. கோயில், ‘நாழிக்கேட்டான் வாயில்’ வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள் உள்ளனர். கோயிலின் உட்புற முகப்பில் பெரியபெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி, மகாவிஷ்ணுவுக்கு உரியவராக முறையே சங்கு, தாமரை வடிவங்களில், ‘சங்க நிதி’, ‘பதும நிதி’ உருவங்களுடன் இருக்கின்றனர். விஜயரங்க சொக்கநாத நாயக்கர், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை முறையில், வண்ணம்தீட்டி வைக்கப்பட்டுள்ளன.  மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு, மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.  மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்யப்படுவதில்லை. அதற்குப் பதில் கோயில் பணியாளரைக் கொண்டு இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட தைலக்காப்புடன் மெரு கூட்டப்படுகிறது.

கோயில் கருவறையின் மேல் தங்கத் தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன. இந்தத் திருத்தலத்துக்கு வந்து ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்க நாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர். ரங்கநாதர், பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். நாபியில் பிரம்மா இல்லை. ஆனால், சூரிய உதயத்திற்கு சற்று முன்பு ரங்கநாதரை, அவர் பூஜிப்பதாக ஐதீகம். கோயிலுக்குள் பாவம் தீர்க்கும் சந்திர தீர்த்தம் உள்ளது. வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த 6 நாட்களும் சுவாமி, முத்தங்கி சேவை சாதிக்கிறார். இந்த வைபவம் இங்கு பிரசித்தி பெற்றது.  வருடத்துகொருமுறை,பங்குனி உத்திர நாளில் பெருமாளும், தாயாரும். தாயார் சன்னதியில் இருக்கும் சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரால் கட்டமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள 1,000 தூண்களும் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் போய்விட்டது. 951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. மீதமிருக்கும் 49 தூண்கள், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் காலத்தில் மணல்வெளியில் 49 மரத்தூண்கள் நடப்பட்டு ஆயிரம் தூண்களுடன் விழா நடைபெறுகிறது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாதிருந்த தெற்குராயகோபுரம் முன்பு மொட்டை கோபுரமாக இருந்தது.  ராயர் கோபுரத்தில் திருஷ்டிபரிகாரத்திற்காக முனிக்கு அப்பனான ஸ்ரீனிவாசனை எழுந்தருள செய்தனர்.  நித்ய வழிபாடுகள் இன்றும் நடந்து வருகிறது. இந்த ராஜகோபுர வாசலை முனியப்பன் கோட்டை வாசல் எனவும் அழைக்கின்றனர்.

ஸ்ரீ ராமானுஜர்

கோயிலில் நிர்வாக முறையை ஏற்படுத்திய ராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார். இத்தலத்தில் தங்கி பல காலம் ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர், இங்கேயே மோட்சம் அடைந்தார். அவரது உடலை, சீடர்கள் பத்மாசனமாக அமர்த்தி அடக்கம் செய்தனர். சிலகாலம் கழித்து அவரைபெருமாள் அவரது உடலை மேல் எழுப்பி  என்றும் அழியா திருமேனியோடு இருக்கச் செய்தார். இன்றும் அவரது சிகை மற்றும் நகங்கள் தரிசனம் செய்யக் கிடைக்கின்றன. வருடத்துக்கு இரு முறை பச்சை கற்பூரம், குங்குமப் பூ போன்றவை விழுதாக அரைத்து அவருக்குப் பற்றாக உடலில் பூசப்படுகின்றன. இவர் இங்கு தனிச்சந்நதியில் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாது.

துலுக்க நாச்சியார்

கி.பி. 1331-ல் மாலிக்காபூர்  படை யெடுப்பின்போது அரங்கன் விக்கிரகம் பக்தர்களால் வெளியே எடுத்துச் செல்லப் பட்டது. அரங்கன் திரும்பவும் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தது 1371-ஆம் ஆண்டு. திருவரங்கனின் விக்கிரகம், இரண்டு வருடங்கள் டெல்லியில் இருந்ததாக வரலாறு. அப்போது அரங்கனின் அழகில் மயங்கி அவனுக்காகத் தன் உயிரையே கொடுத்த தில்லி சுல்தானின் மகளுக்காக ஆலயத்தில் ஓர் இடம் அளித்துள்ளார்கள். துலுக்க நாச்சியார் என்ற பெயரால் அழைக்கப்படும் அவளுக்காக அரங்கனுக்கு ஏகாதசி, அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து, ரொட்டி, வெண்ணெய், பருப்பு, கிச்சடி ஆகிய வட இந்திய உணவு வகைகளை நைவேத்தியமாக ஏற்கிறார்.

கம்பர்

கம்பராமாயணத்தை கம்பர் இங்கு அரங்கேற்றம் செய்தபோது, அதில் நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அறிஞர்கள், ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி சொல்லக்கூடாது என்றனர். கம்பர், ‘அதை நரசிம்மரே சொல்லட்டும்!’ எனச்சொல்லி நரசிம்மரிடம் வேண்டினார்.  அப்போது நரசிம்மர்,  கர்ஜனையுடன் தூணிலிருந்து வெளிப்பட்டு, ‘கம்பரின் கூற்று உண்மை!’ என ஆமோதித்து  தலையாட்டினார். மேட்டழகிய சிங்கர் என்றழைக்கப்படும் இவர், தாயார் சந்நதி அருகில் தனிச்சந்நதியில்  இருக்கிறார். கையில் சங்கு மட்டும் இருக்கிறது, சக்கரம் கிடையாது. சந்நதி எதிரில், கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம் உள்ளது.

கருடாழ்வார்

கோயில் பிராகாரத்தில் அமுத கலசம் ஏந்திய கருடாழ்வாருக்கு சந்நதி இருக்கிறது. அசுரர்களிடம் இருந்து  வேதங்களை மீட்ட பெருமாள், அதனை கருடாழ்வாரிடம் ஒப்படைத்தார். இதன் அடிப்படையில் இவர் கையில், வேதங்களை வைத்திருக்கிறார். இவரது சிலை சாளக்ராமத்தால் ஆனது. கருடாழ்வாருக்கு பருப்பு, வெல்லம், கொழுக்கட்டை படைத்து, மல்லிகைப்பூ மாலை, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். கருட பஞ்சமியன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும். சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது. கார்த்திகை கைசிக ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி) இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது. சுவாமிக்கு தினசரி பூஜையில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த பரிகாரம் செய்கின்றனர். கார்த்திகை, மார்கழி குளிர் மாதங்கள் என்பதால், சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும், போர்வை அணிவிப்பதாகச் சொல்வர். ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தன்று அகில், சந்தனக்கலவையை சாத்தி ரங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம் (தைலாபிஷேகம்) செய்கின்றனர். அன்றைய  தினம் உற்சவர் நம்பெருமாளுக்கு (வைகுண்ட ஏகாதசியன்று பவனி வருபவர்) அணிவிக்கப்பட்ட தங்கக்கவசம் களையப்பட்டு, 22 குடங்களில் காவிரித்தீர்த்தம் அபிஷேகம் செய்யப்படும். மற்ற நாட்களில் காப்பு அணிந்த நிலையிலேயே அபிஷேகம் நடக்கும்.  இந்த  அபிஷேகத்தை காவிரியே செய்வதாக ஐதீகம்.

ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த நாளில் இருந்து 48வது நாளில் ஆடிப் பெருக்கு உற்சவம் கொண்டாடப்படுகிறது. சில ஆண்டுகளில் ஆடி 18ம் தேதியும், சில ஆண்டுகளில் ஆடி 28ம் தேதியும் இந்த விழா கொண்டாடப்படும். சித்திரை, தை, பங்குனி ஆகிய மாதங்களில் இங்கு பிரம்மோற்ஸவம் நடக்கிறது. சத்தியலோகத்தில் ரங்கநாதருக்கு பிரம்மா நடத்திய விழா பங்குனியில் கொண்டாடப்படுகிறது.  இதை, ‘ஆதி பிரம்மோற்ஸவம்’  என்கின்றனர். இவ்விழாவின் இடையே வரும் உத்திரம் நட்சத்திரத்தில் சுவாமி,  ரங்கநாயகி தாயாருடன் சேர்ந்து காட்சி தருகிறார். ரங்கநாதருக்கு, அயோத்தியில் ராமர் கொண்டாடிய விழா, தை மாதம் நடக்கிறது. பூமாதேவியின் பதி ராமர் நடத்திய விழா என்பதால் இவ்விழா, பூபதி திருநாள் என்றே அழைக்கப்படுகிறது. இதை ராமனே நடத்துவதாக ஐதீகம். அன்னப்பெருமாள் கோயில் பிராகாரத்தில் தானிய லட்சுமிக்கு சந்நதி இருக்கிறது. இவளுக்கு வலப்புறம் கிருஷ்ணர்,  இடதுபுறம் நரசிம்மர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. சுக்கிர  கிரகத்தால் பாதிக்கப்படும் ஜாதகதாரர்கள் இவளுக்கு வெண்பட்டு, வெள்ளை மலர் அணிவித்து, வெண்மொச்சை தானியம் படைத்து வழிபடுகிறார்கள். பிரம்மோற்ஸவத்தின்போது பெருமாள், இவளது  சந்நதி அருகில் எழுந்தருளி நெல் அளக்கும் வைபவம் காண்கிறார். அன்னத்திற்கு அதிபதியான அன்னப்பெருமாள் இக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் இருக்கிறார். கைகளில் கலசம், தண்டம், மற்றும் அன்ன உருண்டை வைத்திருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள உணவிற்கு பஞ்சமில்லாத நிலை ஏற்படும்

தலவரலாறு

திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து தோன்றியதாகும். பிரம்மா நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இக்ஷ்வாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான்.  இலங்கை போருக்குப் பின்னர் ராமனுக்கு பட்டாபிசேகம் நடக்கிறது. அதில் கலந்து கொண்டு திரும்பும் விபீஷணனுக்கு ராமன் தன் நினைவாக ஸ்ரீரங்கநாதர் சிலையை பரிசாகத் தருகிறான்.எடுத்துச் செல்லும்போது கீழே எங்கும் வைக்கக்கூடாது என்ற நிபந்தனையையும் சொல்கிறான்.ஆகாய மார்க்கமாக வரும் விபீஷணன், வழியில் சோலைகளோடு கூடிய காவிரியைக் கண்டு நீராட விரும்புகிறான்.

கதை 1

கீழே இறங்கி சிலையை தரையில் வைக்கக் கூடாதே என்று எண்ணும்போது அங்கே சிறுவன் வடிவில் வந்த விநாயகரிடம் சிலையை வைத்திருக்கச் சொல்லிவிட்டு காவிரியில் நீராடுகிறான். சிறுவன் சிறிது நேரம் அந்த சிலையை கைகளில் வைத்திருந்து விட்டு தரையில் வைத்து விடுகிறான். காவிரியில் நீராடி முடித்த விபீஷணன் தரையில் வைக்கப் பட்ட சிலையை எடுக்கும் போது எடுக்கமுடியவில்லை. தரையோடு ஒட்டிக் கொண்ட அந்த சிலையை பெயர்த்தெடுக்கவும் முடியவில்லை. கோபம் கொண்ட விபீஷணன் அந்த சிறுவனை அடிக்க முற்படும்போது அவன் ஓடிப் போய் அருகிலுள்ள மலையின் (திருச்சி மலைக்கோட்டை) உச்சியில் உட்கார்ந்து கொள்கிறான். விபீஷணன் துரத்திச் சென்று சிறுவன் தலையில் குட்டுகிறான்.சிறுவன் மலை உச்சியில் அமர்ந்தஇடம் திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயில் என்றும், விபீஷணன் அவர் தலையில் குட்டும்போது நின்ற இடத்தில் உருவான பாதம் இரண்டும்“ விபீஷணர் பாதம் “ என்றும் அழைக்கப் பெற்றது. உச்சிப் பிள்ளையாருக்கு இதனால் தலையில் பள்ளம் ஏற்பட்டது. காவிரியில் சோலைகள் நடுவே வைக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதர் சிலை இருந்த இடம் ஸ்ரீரங்கம் ஆயிற்று.

கதை 2

விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான்.  அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் “தென்திசை இலங்கை நோக்கி’’ பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார்.  பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான். தர்மவர்ம சோழன் கட்டிய திருவரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது.  பின்னர் கிளிச் சோழன் காட்டில் வேட்டையாடும் போது  மரம் ஒன்றில் கிளி பேசியதை கண்டான்  அந்தக் கிளி ‘‘வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்’’ என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது, ஆற்று வெள்ளத்தால் மூடி இருந்த  விமானத்தை   கண்டுபிடித்தான் பின்னர் விமானம் மற்றும் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான். அவன் எழுப்பிய மண்டபத்திற்கு கிளி மண்டபம் என பெயரிட்டான். இன்றும் இம் மண்டபம் கருவறைக்கு அருகே உள்ளது. இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளது. மையப் பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இது தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. கோயிலிலிருந்து நான்கு திசைகளிலும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன. ராஜகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது.

திருப்பாணாழ்வார்

எம்பெருமானின் ஸ்ரீவத்சம் என்னும் மறுவின் அம்சமாகத் தோன்றியவர் திருப்பாணாழ்வார். இவருடைய இயற்பெயர் தெரியவில்லை. பாணர் குலத்தில் அவதரித்ததால் பாணர் என்றழைக்கப்பட்டார். தாழ்ந்த குலமாகிய பாணர் குலத்தில் பிறந்ததால் பூலோகவைகுண்டமாம் திருவரங்கத்தைத் தம் கால்களாலும் தீண்டக் கூடாதென்று காவிரியின் தென்கரையிலிருந்தபடி யாழ்மீட்டிப் பெரிய பெருமாள் அரங்கநாதனைத் துதித்து வந்தார்.

பாணரின் தியானம்

ஒருநாள் இவர் கண்களை மூடிக் கருத்தினில் அரங்கனை நினந்து கவனந்தனை மறந்து அரங்கனையே தியானித்துக் கொண்டிருந்தார். பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்ய நீர் கொண்டு செல்வதற்காக அங்குவந்த லோகசாரங்க முனிவர், இவரை தூரத்தில் விலகும்படி சொன்னார். ஆனால் அரங்கனையே நினைத்துக் கொண்டிருந்த பாணர் காதில் இது விழவில்லை. அவர் கவனம்தான் பெருமாளிடம் சென்று விட்டதே! அதனால் கோபம் கொண்ட லோகசாரங்கர் ஒரு கல்லைத் தூக்கிப் பாணர்மேல் எறிய பாணர் முகத்தில் இரத்தம் வழிந்தது. பாணர் கண்களைத் திறந்து பார்த்தார். ‘ஐயோ, அரங்கனுக்குத் திருமஞ்சனம் கொண்டு செல்லும் இம்முனிவரின் கைங்கர்யத்துக்குத் தடங்கலாக இருந்து விட்டோமே’ என்று வருந்தி விலகிச் சென்றார். திருமஞ்சன தீர்த்தம் எடுத்துக்கொண்டு, குடை, சாமரம், மேளதாளங்களோடு கோவில் சன்னதிக்குச் சென்றார் லோகசாரங்கர். அங்கே கண்ட காட்சி அவரைத் திடுக்கிடச் செய்தது. பெருமாளின் திருமுக மண்டலத்தில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. லோகசாரங்கர் பெருமானின் நிலைகண்டு பதறினார். அன்றிரவு லோகசாரங்கரின் கனவில் காட்சியளித்த பெருமாள் “லோகசாரங்கரே, பாணபெருமாளின் பெருமையை நீர் அறியவில்லை. பாண்பெருமாள் நமக்கு அத்யந்த பக்தர். நாளைக்காலையில் பாண்பெருமாளைத் தோள்களிலே ஏற்றிக்கொண்டு இங்கு அழைத்து வரவேண்டும்” என்று உத்தரவிட்டார்.

முனிவாஹனம்

மறுநாள் லோகசாரங்கர் பாணரிடம் சென்று பெருமானின் உத்தரவைப் பற்றிச் சொன்னார். அதைக்கேட்ட பாணர் உள்ளம் பதறி “அபசாரம், அபசாரம், நான் தங்கள் தோள்களில் ஏறுவது மிகவும் அபசாரம், மஹாபாபம்” என்றார். ஆனால் முனிவர் இது பெரிய பெருமாளின் கட்டளை. அதை மீறமுடியாது என்று வற்புறுத்திப் பாணரைத் தம் தோள்களின் மேல் எழுந்தருளச் செய்து பெருமானின் சன்னதிக்கு அழைத்துச் சென்றார். அழகிய மணவாளன் சன்னதிக்குள் சென்ற பாணருக்குத் தன் திவ்யமங்கள வடிவத்தைக் காட்ட பாணர் தம் கண்ணார அரங்கனின் பாதாதிகேச அழகை அனுபவித்தார். அவருடைய அனுபவம் ‘அமலனாதிபிரான்’ என்று தொடங்கும் பத்துப் பாசுரங்களாக வெளிப்பட்டது.

தொண்டரடி பொடியாழ்வார்

பிறந்த இடம் : திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)

பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு பராபவ ஆண்டு மார்கழி மாதம்

நட்சத்திரம் : கேட்டை (தேய்பிறை சதுர்த்தசி திதி)

கிழமை : செவ்வாய்

எழுதிய நூல் : திருமாலை, திருப்பள்ளி எழுச்சி

பாடிய பாடல் : 55

வேறு பெயர் : விப்பிர நாராயணர்

சிறப்பு : திருமாலின் வனமாலையின் அம்சம்

சோழநாட்டின் திருமண்டங்குடி என்ற கிராமத்தில் வேத விசாரதர் என்பவர் சிறந்த திருமால் தாசராக விளங்கி வந்தார்.இவர் எப்பொழுதும் நாராயணனின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே பூமாலைகள் தொடுத்து பெருமாளுக்கு சாற்றி வந்தார்.அந்த உலகளந்த பெருமாளின் கருணையால் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் திருமாலின் வைஜயந்தி வனமாலையின் அம்சமாக ஒரு புதல்வர் பிறந்தார்.  பெற்றோர்களும் அவருக்கு விப்பிர நாராயணர் என்று பெயர் சூட்டினார்கள். சகல கலைகளையும் கற்றுணர்ந்த விப்பிரநாராயணருக்காக விண்ணுலகிலிருந்து, திருமாலின் சேனைத்தலைவரான சேனை முதலியர் பூமிக்கு வந்து உண்மைப்பொருளை உணர்த்தி சென்றார். இதன் பிறகு விப்பிர நாராயணருக்கு அரங்கனைப்பற்றிய சிந்தனையே மேலோங்கி இருந்தது. இதனால் திருமணம் செய்யாமல் பிரம்மச்சரிய விரதத்தையே உயர்வாக எண்ணி வாழ்ந்து வந்தார். ஒரு முறை திருமாலின் திருத்தலங்கள் அனைத்தையும் பார்த்து வர ஆசைப்பட்டு முதலில் ஸ்ரீரங்கம் சென்று அரங்கனை தரிசித்தார்.அவர் பெருமையை கேட்டறிந்தார். அரங்கனைப்பார்த்த மகிழ்ச்சியில் திருமால் பெருமைக்கு நிகரில்லை எனவே பெருமானே போதும் வேறெதுவும் வேண்டியதில்லை என்று நினைத்து,

பச்சை மாமலைபோல் மேனி !

பவள வாய்க் கமலச் செங்கண்,

அச்சுதா ! அமரா ! ஆயர்தம் கொழுந்தே

எனும் இச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே என்று நெஞ்சுருகி பாடினார்.

ஸ்ரீரங்கத்துப்பெருமாளுக்கு சேவை செய்வதற்காக கோயிலிலேயே தோட்டம் அமைத்து பூக்களை பறித்து பெருமாளுக்கு தினமும் மாலை தொடுத்து கொடுப்பார். அதன் பின் பிற வீடுகளுக்கு  சென்று உணவு வாங்கி அருந்துவார். இவருக்கு ஆண் பெண் என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது. அனைவரிடமும் சமமாக பழகுவார். இதை சோதிக்க நினைத்தார் பரந்தாமன். திருக்கரம்பனூரில் தேவி, தேவதேவி என இரு தாசிகள் இருந்தனர். இவர்கள் உறையூர் அரசசபையில் ஆடி பாடி பரிசுகள் பல பெற்று திரும்பும் வழியில் விப்பிர நாராயணரின் தோட்டத்தின் அழகில் மயங்கி அதை பராமரிப்பவர் சந்திக்க சென்றார்கள். ஆனால் இவர்கள் வந்ததையோ, இவர்களது  பேச்சையோ கவனிக்காமல் பெருமாளுக்கு பூமாலை தொடுப்பதிலேயே கவனமாக இருந்தார். இவரது கவனத்தை திருப்பி தன் மீது எப்போதும் மாறாத அன்புவைக்க சபதம் ஏற்றாள். அதேபோல் பெருமாளுக்கு தானும் சேவை செய்வதாக கூறி கொஞ்சம் கொஞ்சமாக விப்பிர நாராயணரின் மனதில் இடம் பிடித்தார். தேவதேவி இல்லாமல் தான் இல்லை என்ற நிலைக்கு மாறி விட்டார்.  தன் குடும்பத்தை பார்க்க சென்ற தேவதேவியுடன் விப்பிரநாராயணனும் சென்றார். அவரிடம் இருந்த செல்வம் எல்லாம் தீர்ந்ததால் தேவ தேவியின் தாயாருக்கு அவர் மீது வெறுப்பு ஏற்பட்டது. எனவே வெளியே சென்று தோட்டத்தில் அமர்ந்தார். அப்போது பெருமாள் ஒரு பொன் கிண்ணத்தை விப்பிர நாராயணன் கொடுத்ததாக தேவதேவியின் தாயாரிடம் கொடுத்தார். மறுநாள் கோயிலில் தங்ககிண்ணம் காணாமல் தேவதேவியின் தாயாரையும், விப்பிரநாராயணனையும் விசாரித்து விட்டு இவரை மட்டும் சிறையிலடைத்தான் மன்னன். மன்னனின் கனவில் பெருமாள் தோன்றி விப்பிரநாராயணனின் பெருமைகளை கூறி அவரை விடுவிக்க கூறினார். அதன்பின் விப்பிரநாராயணன் தொண்டரடிப்பொடியாழ்வாராக நெடுங்காலம் பெருமாளை  பாடி இறைவனுடன் கலந்தார்.

கோவில் சிறப்பு

இந்த ஒரு வைணவக் கோயிலில்தான் கருடாழ்வான் மிகப்பெரிய திருமேனியுடன் கைக்கூப்பிய நிலையில் காட்சி தருகிறார். சுற்றுப்பிரகாரங்களில் ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள், மற்றும் விஷ்ணுவின் பல அவதாரங்கட்கு எனத் தனிச் சிறு கோயில்கள் உண்டு ஒவ்வொரு சிறு கோயிலுக்கும் அதற்கென்று தனித்தனியே கிணற்றுடன் கூடிய நந்தவனம் மற்றும் மடப்பள்ளி அமைந்துள்ளன. பெரிய கோயிலுக்கு சற்று வெளியே தள்ளி கிழக்கில் காட்டழகியசிங்கர் கோயில் , மேற்கே ஆண்டாள் கோயில், தெற்கில் திருக்குறளப்பன் சன்னதியும், வடக்கில் தசாவதார சந்நிதியும் அமைந்துள்ளன.

கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை பல்லவ அரசர்கள், 10-ஆம் நூற்றாண்டில் சோழ அரசர்கள், கி.பி.1223-25-ல் கலிங்க அரசர்கள், 1225-ல் மாறவர்மன் சுந்தர பாண்டியன், 14-ஆம் நூற்றாண்டில் ஹொய்சாள மன்னர்கள், 17-ஆம் நூற்றாண்டு மற்றும் 18-ஆம் நூற் றாண்டுகளில் விஜயநகர ராஜா மற்றும் மதுரை நாயக்கர், தஞ்சை நாயக்கர்கள் முதலானோர் இந்தக் கோயிலின் சுவர்கள் மற்றும் கோபுரங்களைக் கட்டியும், பழுதுபார்த்தும் வந்துள்ளனர்! அரங்கநாதரைச் சுற்றி இருக்கும் ஏழு (ஸப்த) பிராகாரங்களும் ஏழு (ஸப்த) லோகங்களாகக் கருதப் படுகின்றன. பொதுவாக ஆலயம், அதைச் சுற்றி ரத வீதிகள் என ஒரு நகரம் அமைந்திருக்கும். ஆனால், வீதிகளே பிராகாரங்களாக, நகரை தனக்குள் கொண்டிருக்கும் ஆலயம் இது.7-ஆம் பிராகாரம் மாட மாளிகை பிரதட் சணம் எனப்படுகிறது. இந்த பிராகாரத்தின் தெற்கு வாயிலாக இருந்த மொட்டை கோபுரம் அகோபில மடம் 44- வது பட்டம் அழகிய சிங்கர் ஜீயரால் கட்டப்பட்டது. இந்த கோபுரத்தின் உயரம் 236 அடி. உலகிலேயே அதிக உயரமானது. 7-வது பிராகாரத்தில் விஜய நகர சமஸ்தான அரண்மனை இருந்தது. 16-ஆம் நூற்றாண்டில் அச்சுதராயர், திருவனந்தபுரத்தின் மீது படையெடுத்தபோது, இந்த அரண்மனையைக் கட்டினார். அப்போது தன் மைத்துனனைப் படைகளுடன் திருவனந்தபுரம் அனுப்பினார். அவன் வெற்றி யுடன் திரும்பும் வரை ஸ்ரீரங்கத்திலேயே தங்கி இருந்தார் அச்சுதராயர். ஒரு முறை கிருஷ்ண ஜயந்தி உற்சவத்தின் போது ஸ்ரீரங்க நாதனும், கிருஷ்ண பரமாத்மாவும் திருவீதிவுலாவாக எழுந்தருளினர். தனது அரண்மனைக்கு முன்னால் ஸ்வாமிக்கு ஓர் உபயம் ஏற்படுத்தி னார் அச்சுத ராயர். அதற்காக ஏராளமான மானியங்களை ஏற்படுத்தினார். அந்த உபயம் இன்றும் தொடர்கிறது. (அரண் மனை இருந்த இடத்தில் பின்னர் ‘வாணி விலாஸ் பிரஸ்’ செயல்பட்டது. ஏராளமான ஞான நூல்களை வெளியிட்ட அந்த அச்சகம் இப்போது அங்கு இல்லை. அங்கு அச்சுதப்பர் ஏற்படுத்தி வைத்த உபயம் இன்றும் நடக்கிறது).

ஸ்ரீரங்கத்தின் சந்திர புஷ்கரணியைச் சுற்றி அதன் அங்கமாக தெற்கே- அசுவ தீர்த்தம், தென் கிழக்கில்- ஜம்பு தீர்த்தம், கிழக்கே- பில்வத் தீர்த்தம், வடமேற்கே- வகுள தீர்த்தம், வடக்கே- கதம்ப தீர்த்தம், வடகிழக்கில்- ஆம்ர தீர்த்தம், மேற்கே- புன்னாக தீர்த்தம், தென்மேற்கே- பலாச தீர்த்தம் ஆகிய எட்டு தீர்த்தங்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. நூற்றுக்கணகான சந்நிதிகள் உள்ள இந்த ஆலயத்தில் கோதண்ட ராமர், பரமபதநாதர், பெரிய வீர ஆஞ்சநேயர் சந்நிதிகள் சிறப்பானவை. தாயார் சந்நிதிக்கு செல்லும் வழியில் அரங்கனுக்கே வைத்தியம் செய்யும் விதமாக ஸ்ரீமந் நாராயணனே தன்வந்திரியாகக் காட்சியளிக்கிறார். கையில் அட்டைப் பூச்சி, அமிர்த கலசம் இவற்றுடன் தரிசனம் தரும் இவரை வழிபட்டால் தீராத நோயும் தீருகிறது. சாதாரணமாக எல்லாச் சந்நிதிகளின் மேலும் விமானம் அமைப்பது மரபு. ஆனால் தன்வந்திரி வைத்திய ராக இருப்பதால் நோயாளிகள், வியாதியஸ்தர்கள் அவரிடம் வருவார்கள் என்பதால் ஆகம விதிகளின்படி அவர் சந்நிதிக்கு மேல் விமானம் கட்டப்படவில்லை. உள் ஆண்டாள் சந்நிதிக்கு அருகிலும் வேணுகோபாலர் சந்நிதி மண்டபத்திலும் அழகிய சிற்பங்கள் பல காட்சி அளிக்கின்றன. வைணவ ஆச்சார்யர்யரான ஸ்வாமி வேதாந்த தேசிகன் சந்நிதி தனி ஆலயமாகத் தாயார் கோயில் அருகே அமைந்துள்ளது இங்குள்ள கருட பகவான் மிகப் பெரிய உருவத்துடன் கூரையை முட்டியவாறு அமர்ந்துள்ளார்.கம்ப ராமாயணம் அரங்கேறிய போது அதை அங்கீகரிக்கும் விதமாக சிரத்தை அசைத்து அதன் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டியவர் ஸ்ரீரங்கத்தில் அருள்பாலிக்கும் மேட்டு அழகிய சிங்கர். முன்னொரு காலத்தில் வங் காள அரசன் பெரும் செல்வத்தை ரங்கநாதருக்குக் காணிக்கையாக அளித்தான். ரங்கநாதர் அவற்றை பெற்றுக் கொள்ளாததால் அந்த தனம் வாசலிலேயே வைக்கப்பட்டது. அதை வடக்கிலிருந்து வந்த ஆரியர்கள் காவல் காத்தனர். அதனால் அந்த வாசல் ஆர்யபடாள் வாசல் என்று அழைக்கப்படுகிறது. பாண்டிய மன்னர்களில் சிறந்தவனான சுந்தர பாண்டியன் காணிக்கையாக அளித்த கிரீடம் பாண்டியன் கொண்டை என்று இன்றும் சிறப்பாக நம்பெருமாளுக்கு அணிவிக் கப்படுகிறது. வைணவ அந்தணர்களில் அரையர் என்பவர்கள் பரம்பரை பரம்பரையாக நம்பெருமாள் முன்பு நாலாயிர திவ்யப்பிரபந்த பாடல்களை இசைத்து அதற்கேற்ப நடனம் செய்வார்கள். அதற்கு அரையர் சேவை என்று பெயர்.

ஸ்ரீரங்கம் ஆலயத்தின் நிர்வாகம், கோயிலொழுகு ஆகியவற்றை சீர்ப்படுத்திய பெருமை வைணவ ஆச் சார்யரான ராமானுஜரையே சாரும். 120 ஆண்டுகள் வாழ்ந்து வைணவ சம்பிரதாயத்துக்குத் தொண்டு புரிந்த ராமானுஜர் கி.பி 1137-ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கத் தில் பரமபதம் அடைந்தார். ஆழ்வார்களில் தொண்டரடிப் பொடியாழ்வார், திருப் பாணாழ்வார் ஆகியோர் இங்கு மட்டுமே தொண்டு புரிந்து வாழ்ந்தவர்கள். நாதப்பிரம்மம் தியாகராஜ ஸ்வாமிகள் ஸ்ரீரங்கநாதரை தரிசித்து அவர் மேல் கீர்த்தனைகள் பாடியுள்ளார். இங்கு உத்திரை வீதியில் இரண்டு பிரம்மோற்சவங்கள் சித்திரை வீதியில் இரு பிரம்மோற்சவங்கள் என வருடத்தில் நான்கு பிரம்மோத்சவங்கள் நடைபெறுகின்றன. ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி அன்று ரத்னாங்கி அணிந்து உலா வரும் நம்பெருமாளை, படி தாண்டாத தாயார் தனது கோயிலிலிருந்து ஐந்து குழிகளிலும் தன் ஐந்து விரல்களை வைத்து மூன்று வாயில்கள் வழியாகக் கண்டு மகிழ்வாராம். அதைக் குறிக்கும் விதமாக தாயார் செல்லும் வழியில் ஐந்து குழிகள் தரையில் உள்ளன. வைகுண்ட ஏகாதசி அன்று மூலவர், தசா வதாரம் சித்திரிக்கப்பட்ட முத்தங்கி அணிந்து காட்சி தருகிறார்இங்கு ஒரு வருடத்தில் 114 நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. எல்லாப் பெருமாள் கோயில்களிலும் மூலவருக்கு ஆனி ஜ்யேஷ்டாபிஷேகத்தன்று மட்டுமே தைலக் காப்பு சாத்தப்படும். ஆனால்,  ரங்கத்தில் மட்டும் இத்துடன் கூட ஆவணி பவித்ரோற்சவத்தின் இறுதி நாளிலும் தைலக்காப்பு சாத்தப்படும். எனவே, ஸ்ரீரங்க நாதருக்கு மட்டும் இரு முறை தைலக்காப்பு..

முதல் திருச்சுற்று முதல் ஏழாம் திருச்சுற்று வரை

மூலஸ்தானத்திற்கு அருகே உள்ள முதல் திருச்சுற்று விமான ப்ரதக்ஷிணம் எனப்படும் தர்மவர்மா திருச்சுற்று என்று பெயர். தற்போது இதில் யாரையும் அனுமதிப்பதில்லை. இதற்கு வெளியே காயத்ரி மண்டபம் இருக்கிறது. இங்கு பெரிய பெருமாள், உபய நாச்சிமாருடன் கூடிய உத்ஸவர் நம்பெருமாளைத் தரிசிக்கலாம். 2வது திருச்சுற்று ராஜ மகேந்திரன் திருச்சுற்று எனப்படும். இங்க முக்கியமாக ரேவதி மண்டபம், அர்ச்சுன மண்டபம், கிளி மண்டபம், சந்தன மண்டபம், யாக சாலை, கோயில் கருவூலம், தெக்கலறை (பெருமாளுக்கும், தயாருக்கும் அணிவிக்கப்படும் ஆபரணங்கள் வைக்குமிடம்) ஆகியவற்றை காணலாம். 3வது திருச்சுற்றின் பெயர் குலசேகரன் திருவீதி என்பதாகும். இங்க பவித்ரோத்ஸவ மண்டபம், ஹயக்ரீவர் சரஸ்வதி சந்நிதிகள், வராகப்பெருமாள் சந்நிதி, வேத விண்ணப்ப கோஷ்டி மண்டபம், ஆஞ்சநேயர் சந்நிதி, ஊஞ்சல் மண்டபம், த்வஜஸ்தம்பம், பலிபீடம், பரமபதவாசல் ஆகியவையும் துரை மண்டபம் அரவிந்த நாச்சியார் திருமடப்பள்ளியும் காணலாம். நான்காவது திருச்சுற்று ஆலிநாடன் திருவீதி என வழங்கப்படுகிறது. இதற்குக் கார்த்திகை கோபுரவாசல் என்ற பெயரும் உண்டு. இதில் நம்மாழ்வார், மதுரகவி, திருநங்கையாழ்வார் சன்னதி, கொட்டாரம், மேலபட்டாபிராமர் சந்நிதி, முதலாழ்வார் மூவர் சந்நிதி, தீர்க்கக்கரை வாசுதேவ பெருமாள் சந்நிதி, தன்வந்திரி பெருமாள் சந்நிதி, 5 குழி 3 வாசல் சந்த்ரபுஷ்கரணி, கோதண்டராமர் சந்நிதி, பரமபதநாதன் சந்நிதி, கீழபட்டாபிராமன் சந்நிதி, பூச்சாத்து மண்டபம், திருமழிசையாழ்வார் சந்நிதி, பிரசாதங்கள் விற்பக்கப்படும் ஸ்ரீ பண்டாரம், கண்ணன் சந்நிதி, வாகன மண்டபம், சூர்யபுஷ்கரிணி, திருக்கச்சி நம்பி, ஆளவந்தார் சந்நிதி, தேவராஜன் கொறகு ஆகியவற்றைக் காணலாம். ஐந்தாவது திருச்சுற்று அகளங்கன் திருவீதி எனப்படும். இங்கு திவ்யப்ரபந்தத்தைக் கொணர்ந்த ஸ்ரீமந்நாதமுனிகள், ஸ்ரீஆண்டாள், வேணுகோபாலன், சக்ரத்தாழ்வார் சந்நிதிகள், வஸந்த மண்டபம், ரங்கநாச்சியார், தேசிகர், அழகியசிங்க பெருமாள் சந்நிதிகள் ஆயிரங்கால் மண்டபம், மணல்வெளி, சேஷராயர் மண்டபம், பிள்ளை லோகாச்சாரியார், பார்த்தசாரதி, உடையவர் சந்நிதிகள், அரும்பொருள் காட்சியகம், கோயில் அலுவலகம், திருப்பணாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், கூரத்தாழ்வான், விட்டல கிருஷ்ணன் சந்நிதிகள், ரங்கவிலாச மண்டபம், திருவந்திக் காப்பு மண்டபம், யானை வாகனத்திற்கான வட்டமணை என்னும் இடங்கள் காணப்படும். 6வது திருசுற்று திருவிக்ரமன் திருவீதி எனப்படும். இதை உள்திருவீதி (உத்தரவீதி) என்றும் அழைப்பர். ஒருபுறம் மதிலும் எதிர்பக்கத்தில் கட்டிடங்களும் காணப்படுகின்றன. இங்கு யானை கட்டும் இடம், அரையர் திருமாளிகைகள், தைத்தேர், ஆண்டவன் ஸ்ந்நிதி, அகோபிலமடம், கோயில் ஜீயர் சுவாமி மடம், மணவாளமாமுனிகள் சந்நிதி, மார்வாரி சத்திரம் ஆகியவை உள்ளன. 7ஆம் திருச்சுற்று மாடமாளிகை சூழ் திருவீதி எனப்படும். சித்திரைத்தேர், சில ஆச்சாரியார்களின் திருமாளிகைகள், விளைவித்தகர் மாளிகை, சில மடங்கள் , பாடசாலைகள், கோரதம் ஆகியவை உள்ளன.

ரங்கநாயகித் தாயார் சந்நிதிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில்தான் கம்பர் தனது ராமகாதையை அரங்கேற்றினார். பிள்ளைலோகச்சார்யார், பெரியவாச்சான் பிள்ளை, கூரத்தாழ்வான் நிகமாந்த மகாதேசிகன், பராசரபட்டர், மணவாள மாமுனிகள் போன்ற பல ஆச்சார்யார்கள் ரங்கநாதனைப் பற்றி பாடியுள்ளார்கள். பிறகு பிள்ளைபெருமாள் அய்யங்கார், தியாகராஜர், முத்து சுவாமி தீக்ஷிதர், ஸ்யாம சாஸ்திரிகள், அருணாசலக் கவிராயர் போன்ற அருளாளர்கள் பெருமாளைப் போற்றிப் பாடியுள்ளார்கள். காவேரி இரு பிரிவாகப் பிரிந்து வடதிருக்காவேரி, தென்திருக்காவேரி என்று அரங்கன் திரவடிகளை எப்போதும் ஸ்பரித்துக் கொண்ட இருக்கிறது. ஒன்பது வகையான புண்ய தீர்த்தங்கள் உண்டு என்று ஸ்ரீரங்கமகக்தமயம் கூறுகிறது. அவை சந்த்ர புஷ்கரணி, விஸ்வதீர்த்தம், நாவல் தீர்த்தம், அரசு தீர்த்தம், புன்னை தீர்த்தம், மகிழ தீர்த்தம், பொரசு தீர்த்தம், மாதீர்த்தம் கடம்ப தீர்த்தம் என்பன. இவைகளில் தற்போது நன்கு பராமரிக்கப்படுகிறது சந்த்ர புஷ்கரணி ஒன்றுதான்.கோயில் நிர்வாகத்தை ராமானுஜர் என்று ஏற்றுக் கொண்டாரோ அன்றிலிருந்து இன்று வரை அவரது கட்டளைப்படியே விழாக்காணும் நித்ய ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன. பெரிய பிராட்டியாரைத் தவிர பாண்டிய நாட்டுப் பெண் ஆண்டாள், சேர நாட்டு சேரகுலவல்லி, சோழ தேசத்து ராஜகுமாரி கமலவல்லி ரங்கநாதனையே மணாளனாக வரித்து அவன் திருவடி அடைந்தார்கள். பின் தொடர்ந்த வல்லி : முஸ்லீம் படையெடுப்பின்போது அவர்களால் கவர்ந்து செல்லப்பட்ட பல விக்ரகங்களுள் அழகிய மணவாளன் இருந்தாகவும், பெருமாளைத் திருப்பித்தருமாறு டில்லி வரை சென்று சுல்தானை கேட்டபொழுது அவைகளெல்லாம் அந்தப்புரத்தில் உள்ளன என்று சொல்லிவிட்டார். அழகிய மணவாளன் மீது எல்லையில்லா பக்தியும் காதலும் கொண்ட சுல்தானின் மகள் அவரைத் திருப்பித் தர மறுத்துவிட்டாள். பெருமாளின் திருமேனிக்கு எந்த ஆபத்தும் இல்லையென்று எல்லோரும் மகிழ்ந்தனர். பின்பு திருவரங்கத்தைச் சேர்ந்த பலர் “”உங்கள் புதல்வி எங்கள் பெருமாளை வைத்துக் கொண்டிருக்கிறாள்” என்று சொல்ல, அவனும் முடியுமானால் “” உங்கள் தெய்வத்தை நீங்களே அழைப்பித்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டார். கோயிலில் பாடும் அரையர்கள் என்கின்ற செந்தமிழ் ஒதுவார் தங்கள் தேவ கானத்தினாலே பெருமாளை ஆகர்ஷித்து எடுத்து வந்தனர். மயக்கத்தில் இருந்த சுல்தான் மகள் விழித்தெழுத்து பெருமாளைக் காணாமல் பதறினாள். அதிக பிரிவாற்றாமையால் தன் உயிரை விட்டாள் என்று கூறப்படுகிறது. பெருமாளின் இந்தப் பக்தைக்குப் “”பின்தொடர்ந்த வல்லி” என்ற பெயர் இடப்பட்டது. இன்றும் அர்ச்சுனா மண்டபத்தின் கிழக்கு மூலையில் “”துலக்க நாச்சியார்” என சித்திர வடிவில் இவரைத் தரிசிக்கலாம். இந்த சம்பந்ததால் பெருமாளுக்கு இன்றும் காலையில் ரொட்டி. பால்நிவேதனம் செய்கிறார்கள். திருமஞ்சன காலங்களில் உத்ஸவ மூர்த்திக்கு கைலி அணிவிக்கப்படுகிறது.

பாதை

திருச்சி நகரத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் ஸ்ரீரங்கம் உள்ளது.

கோயில் நேரம்

6 am to 12.30 pm and 4 pm to 9 pm

கோயில் தொலைபேசி எண்

+91 – 431- 223 0257, 243 2246.

கோயில் முகவரி

ஸ்ரீ அரங்கநாதர பெருமாள் கோயில்,

ஸ்ரீரங்கம்-620 006,

திருச்சி

அழகர் கோவில்  -ஸ்ரீ கள்ளழகர் கோவில்

கோயில் பெயர்

ஸ்ரீ கள்ளழகர் கோவில்

தோற்றம் காலம்

2000 ஆண்டுகளுக்கு முன்பு

தெய்வத்தின் பெயர்

சுவாமி : கள்ளழகர்,பரமஸ்வாமி,சுந்தராஜர்.

அம்பாள் : கல்யாண சுந்தரவல்லி தாயார்.

தீர்த்தம் : நூபுரகங்கை,சந்திரபுஷ்கரணி, கருடதீர்த்தம், அனுமார்தீர்த்தம் உள்ளிட்ட 108 புண்ணிய தீர்த்தங்கள்.

தலவிருட்சம் : சந்தன மரம்.

விமானம்: சோமசண்ட விமானம்

மங்களாஸாஸனம்: பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், பேயாழ்வார், திருமங்கை யாழ்வார் மற்றும்  பூதத்தால்வார்.

ஸ்தல வரலாறு

பஞ்சாயுதங்களோடு நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுகமண்டலம். கள்ளர்கள் வாழ்ந்த மலையடிவாரத்தில் எழுந்தருளியிருப்பதால் , இவருக்கு கள்ளழகர் என்ற திருநாமம் ஏற்பட்டது தருமதேவதையே இம்மலை வடிவத்தில் பெருமாளைத் தாங்குவதாகக் கூறுவர் கருவறையில் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி எனப்படுகிறார். உற்சவ மூர்த்தி அழகர், அல்லது சுந்தரராசப் பெருமாள் எனப்படுகிறார். 108 திவ்யதேசத்தில் ஒன்று. 108 திவ்ய தேசங்களில் இது 93 வது திவ்ய தேசம். பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியஆறு ஆழ்வார்கள்123 பாசுரங்களை இங்கு பாடியுள்ளனர். மற்ற மலைகளை விட அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது.இம்மலை 7 மலைகளை கொண்டது.  இது கிழக்கு மேற்காக 18 கி .மீ நீளமும் 320 மீட்டர் உயரமும் உடையது .அதிலிருந்து பல சிறிய மலைகள் , நாலா பக்கமும் பிரிந்து போகின்றன. இதன் தென்புறம் அடிவாரத்தில் தான் அழகர் கோயில் இருக்கிறது இம் மலையில் பலவகை மரங்களும் ,செடிகளும் , கொடிகளும் மிகவும் நெருக்கமாக வளர்ந்து பச்சைப்பசேலெனக் கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சியைத் தந்து நிற்கின்றன. இதில் இயற்கையாகவே பல சோலைகள் அமைந்திருப்பதால் இதைச் சோலைமலை , திருமாலிருஞ் சோலை , வனகிரி , முதலிய பெயர்களால் அழைக்கிறார்கள். இச் சோலைகளில் பூக்களும் காய்களும், கனிகளும் மிகுதியாக உண்டாகிப் கண்ணுக்கும் மனத்திற்கும் இன்பம் ஊட்டுகிறது. அழகர் என்ற பெயர் கொண்ட திருமால் கோயில் கொண்டிருப்பதால் இது அழகர் மலை என்று சொல்லப்படுகிறது . இதற்குத் திருமாலிருஞ் சோலை , உத்யான சைலம் , சோலைமலை , மாலிருங்குன்றம் , இருங்குன்றம் , வனகிரி , விருஷ பாத்திரி அல்லது இடபகரி முதலிய பல பெயர்கள் உண்டு பார்ப்பதற்கு காளை வடிவிலிருப்பதால் இந்த மலைக்கு ‘விரிஷபாத்ரி’ என்று ஒரு பெயர் உண்டு.  தன்மேல் ஏவி விடப்பட்ட சாபத்துக்கு விமோசனம் கேட்டு, எமதர்மன் இந்த மலைக்கு வந்து பெருமாளை வேண்டித் தவமிருந்தான். தர் மராஜனின் தவத்தை மெச்சி பெருமாள்  காட்சிதந்தார். இறைவனின் கருணையை போற்றும் விதமாக தர்மராஜன் பெருமாளிடம்  தினந்தோறும் நான் ஒரு மு‌றையாவது பூஜை செய்ய வரம் தர வேண்டும் என்று கேட்டார்.   அதன்படியே பெருமாளும் வரம் தர இன்றும் இக்கோயிலில் தினமும் நடக்கும் அர்த்த ஜாம  பூஜையை எம தர்ம ராஜனே நடத்துவதாக ஐதீகம். எல்லா மக்களுக்கும் அருள் தருமாறு  எமதர்மராஜன் கூறவே, எமதர்மராஜனின் விருப்பத்தின் பேரில் இங்கு எழுந்தருளினார். தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும். கள்ளழகர் திருத்தலம் மிகவும் பழமையானது.  இது எப்பொழுது தோன்றியது என்ற சொல்ல முடியாத பழமை உடையது . மிகவும் பழைய தமிழ் நூல்களிலும் வடமொழிப் புராணங்களிலும் கூட இதன் பெருமை பேசப்பட்டிருக்கிறது.

இங்கே உள்ள மூர்த்தி , தலம் , தீர்த்தம் , ஆகியவை பற்றிய வராக புராணம் , பிரம்மாண்டமான புராணம் , வாமன புராணம் , ஆக் நேய புராணம் முதலியவற்றில் மிகவும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது . அவற்றை தொகுத்து ஒன்று சேர்த்து “விருஷ பாத்திரி மகாத்மியம்” என்ற ஸ்தல புராணத்தின் தமிழாக்கம் தனி நூலாக வெளியிடப்பட்டுள்ளது . அந்நூலில் இத் தலத்தின் புராணப் பெருமைகளை அறிந்து கொள்ளலாம். மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம் வட்ட வடிவமானது. ஆரியன் மண்டபத்தில் கொடுங்கைகள் மற்றும் இசைத் தூண்கள் உள்ளன. இசைத் தூணின் உச்சியிலுள்ள சிங்கத்தின் வாயில், சுழலும் நிலையில் ஆனால் வெளியே எடுக்க முடியாதபடி உள்ளது. கோயிலின் காவல் தெய்வம் பதினெட்டாம்படிக் கருப்பசாமிசந்நிதியில் உள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. இராயகோபுரம் திருமலை மன்னரால்ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறா நிலையில் உள்ளது. சிதைந்த நிலையிலும் இக்கோபுரத்தின் சிற்ப வேலைப்பாடுகள் சிற்பிகளின் உன்னத உளி வேலைப்பாட்டினை வெளிப்படுத்துகிறது. கோவிலைச் சுற்றி உள்கோட்டை மற்றும் வெளிக்கோட்டை எனப்படும் இரணியன் கோட்டை , அழகாபுரிக் கோட்டை அமைந்துள்ளது.

மூலவர் சந்நிதி

மூலவர் பெயர் பரமஸ்வாமி . இவரது உற்சவ மூர்த்திக்குத் தான் அழகர் என்றும் சுந்தரராஜன் என்றும் பெயர். பெயருக்கேற்ப திவ்ய சௌந்தர்யம் உடையவர். 108 திவ்ய தேசங்களில் மதுரை கூடலழகர், அன்பில் மற்றும் திருநாகை திருத்தலங்களின் எம்பெருமானுக்கு இப்பெயர் உண்டு. அழகான இந்த உற்சவமூர்த்தியை நூபுரகங்கை நீரால் மட்டுமே அபிஷேகம் செய்வர். வேறு நீரால் திருமஞ்சனம் செய்தால் இவருடைய நிறம் கருப்பாக மாறிவிடும். இவரைத் தவிர அபரஞ்சி என்னும் உயர்ந்த தங்கத்தினால் ஆன இன்னொரு விக்கிரகமும் உண்டு. இதே போன்று அபரஞ்சியினால் செய்யப்பட்ட உற்சவமூர்த்தி திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் மட்டுமே உள்ளது.

தாயார் சந்நிதி

சுவாமி சந்நிதியைச் சுற்றியுள்ள முதல் பிரகாரத்தில் வலம்புரி விநாயகர் , விஷ்வக்சேனர், சேத்ரபாலகர் முதலியோர் சந்நிதிகளைத் தரிசிக்கிறோம். இரண்டாவது பிரகாரத்தில் கல்யாண சுந்தர வள்ளித் தாயார் சந்நிதி உள்ளது. இவர் தான் பரமஸ்வாமியின் தேவி ஆவார். தினசரி இவருக்கு ஆறுகால பூஜை நடைபெறும். இங்கு குழைத்த மஞ்சளே பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் இவருக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. தாயார் சந்நிதிக்குப் பின்னால் ஸ்ரீ சுதர்சனர் சந்நிதி உள்ளது. இவர் 16 வகையான ஆயுதங்களை தமது 16 கைகளில் வைத்துள்ளார். இவர் 3 கண்கள் உடையவர். இவரைச் சுற்றி எழுதியிருக்கும் மந்திர தந்திர எழுத்துக்கள் மிக சக்தி வாய்ந்தவை ஆகும். பெரும்பாலும் முன் பக்கம் சக்கரத்தாழ்வாரும் , பின் பக்கம் நரசிம்ம மூர்த்தியும் இணைந்து இருப்பார்கள். ஆனால் இங்கு சக்கரத்தாழ்வாரின் மேல் பக்கம் ஹிரண்யனை சம்ஹாரம் செய்யும் கோலத்துடன் ஸ்ரீநரசிம்மர் காட்சி தருகிறார். அடுத்து நாம் யோக நரசிம்மரைத் தரிசிக்கிறோம். இவர் கோபமாகவும், கடுகடுப்பாகவும் வீற்றிருப்பதால் , இவருடைய கோபத்தைத் தணிப்பதற்கு தினமும் கங்கை நீர், எண்ணை , பால் , தயிர் முதலியவற்றால் அபிஷேகம் நடைபெறுகிறது. இக்கோவிலில் நரசிம்மருடைய உருவங்களை அநேக இடங்களில் நாம் காண்கிறோம். அடுத்து லட்சுமி நரசிம்மர், லட்சுமி நாராயணர், பார்த்த சாரதி , நர்த்தன கிருஷ்ணர், சரஸ்வதி ஆகியோரைத் தரிசிக்கிறோம். மூன்றாம் பிரகாரத்தில் இருக்கும் காவல் தெய்வம் இராக்காயி அம்மனுக்கு அம்மாவாசையன்று பூஜை நடைபெறுகிறது. இவர் ஆங்கிரஸ் முனிவரின் மகள் என்பர். இத்தலத்திற்கு இவள் ஒரு முக்கிய காவல் தெய்வம் ஆகும்.

ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி

இச்சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் உற்சவமூர்த்தி செப்புத் திருமேனியுடன் உட்கார்ந்திருக்கும் கோலத்தில் அருளுகிறார். உட்கார்ந்த நிலையில் ஸ்ரீஆண்டாளை காண்பது மிக அபூர்வம். இவருக்கு ஆறு கால பூஜை நடைபெறுகிறது. மஞ்சள் போடி பிரசாதம் வழங்கப்படுகிறது. திருக்கல்யாணத்தன்று ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் தனது 4 தேவியருடன் இங்கு தரிசனம் தருகிறார். ஸ்ரீஆண்டாள் தன் தந்தை பெரியாழ்வாருடன் இத்தலத்திற்கு வந்து பாசுரங்கள் பாடியுள்ளார். ஸ்ரீரெங்கநாதரே அழகராக வந்து இவ்விடத்தில் ஆண்டாளை மணந்ததாகக் கூறுவர். ஸ்ரீ ஆண்டாள் மணப்பெண் போல உட்கார்ந்த நிலையில் இருப்பதே இதற்கு சாட்சி என்பர். பெரியாழ்வாரும் தமது இறுதி நாள் வரை இங்கேயே தங்கிவிட்டதாகக் கூறுவர்.

அழகரின் அபூர்வ வரலாறு :

ஒரு காலத்தில் இந்த உலகில் இறப்பு என்பதே இல்லாமல் இருந்தது. ஏனெனில் யாரும் தவறு செய்வதே கிடையாது. இருந்தும் ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வதற்காக துரத்தி வரும் போது அங்கு வந்த தர்மதேவன் அவனை ஒரே அடியில் வீழ்த்தினார். இந்த விஷயத்தை கேள்விப் பட்ட சிவன், உலகில் தர்ம, நியாயம் அழிந்து விடக்கூடாது. அதை பாதுகாப்பது உன் பொறுப்பு. எனவே அதற்குரிய உருவத்தை உனக்கு தருகிறேன் என கூறி தர்மதேவனுக்கு, பற்கள் வெளியே தெரியும் படி ஒரு கொடூரமான உருவத்தை வழங்கி விட்டார். இதைக்கண்ட உயிர்கள் நாம் தப்பு செய்தால் தர்மதேவன் அழித்து விடுவான் என்று பயம் கொண்டன. நல்லது செய்யப்போய் நமது உருவம் இப்படி ஆகி விட்டதே என கவலை கொண்டான் தர்மதேவன். சரி! நமது உருவம் தான் இப்படி ஆகி விட்டது. நாம் தினமும் எழுந்தவுடன் விழிக்கும் முகமாகவது மிகவும் அழகாக இருக்க வேண்டும் என இந்த அழகர்கோவில் மலையில் தவம் இருந்தான். இவனது தவத்திற்கு மகிழ்ந்த அழகின் தெய்வமான விஷ்ணு, இவனுக்கு காட்சி கொடுத்து  வேண்டியதை கேள்”  என்று கூறினார். அதற்கு தர்மதேவன், நான் இந்த மலையில் தவம் செய்த போது காட்சி கொடுத்தீர்கள். எனவே நீங்கள் நிரந்தரமாக இங்கேயே எழுந்தருள வேண்டும். அத்துடன் தினமும் ஒரு முறையாவது உங்களுக்கு பூஜை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும் என்றான்.  தர்மதேவனின் வேண்டுகோளின் படி மகாவிஷ்ணு சுந்தரராஜப்பெருமாளாக இந்த மலையில் எழுந்தருளினார். சுந்தரம் என்றால் “அழகு’. எனவே அழகர் என்ற பெயரே நிலைத்து விட்டது. அத்துடன் தர்மதேவனுக்கு காட்சி கொடுத்த மலை அழகர் மலை என்றானது. இன்றும் கூட அழகர் கோவிலில் அர்த்தஜாம பூஜையை தர்மதேவனே செய்வதாக ஐதீகம்.

தல சிறப்பு

பீஷ்மரும், பஞ்சபாண்டவர்களும் இத்தல பெருமாளை தரிசித்து பலனடைந்துள்ளனர். கள்ளழகர் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது : அழகர்கோவில் மூலவர் பரமசாமி. ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். மகாவிஷ்ணுவின் திருக்கோலங்களிலேயே அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜப்பெருமாள் தான் பெயருக் கேற்றாற் போல் மிகவும் அழகாக இருப்பார். தர்மதேவனுக்கு காட்சி தர பெருமாள் வந்ததால் வைகுண்டத்தில் பெருமாளை காணாமல் மகாலட்சுமி பெருமாளைத்தேடி இங்கு வந்துவிட்டாள். மகாவிஷ்ணுவை விட மிக அழகான லட்சுமியைக்கண்ட தர்மதேவன், மகாலட்சுமியும் பெருமாளுக்கு அருகில் இங்கேயே தங்க வேண்டும் என அடம் பிடித்தார்.  இவனது வேண்டுகோளின் படி மகாலட்சுமி பெருமாளை கைப்பிடித்து அவருக்கு அருகில் கல்யாண சுந்தரவல்லி எனும் திருநாமத்துடன் இங்கு வீற்றிருக்கிறாள்.  இப்படி அழகான இருவரது திருமணக்கோலம் அனைவர் மனதையும் திருடிக்கொண்டது. மக்கள் மனதை கொள்ளை கொண்டதால் அழகர் “கள்ளழகர்’ ஆனார்.

 ஜ்வலா யோக நரசிம்மர்

கோவிலின் பிரகாரத்தில் உள்ள ஜ்வலா யோக நரசிம்மர் பிரசித்த பெற்றதாகும். இவர் உக்கிர ரூபத்தில் உள்ளதால் நரசிம்மரின் உக்கிரத்தை தனிப்பதற்காக தினமும் நூபுர கங்கை நீர், தயிர், வெண்நெய், தேன் முதலியவைகளால் திருமஞ்சனம் நடைபெறுகிறது . யோக நரசிம்மரின் கோபத்தை தனித்து சாந்தி அடைவதற்காக சன்னதிக்கு மேல் காற்று வருவதற்காக அடிக்கூரை திறந்த நிலையில் உள்ளது.  மற்ற விஷ்ணு கோயிலில் நரசிம்மர் முலவரின் இடது ஓரத்தில் இருப்பார். இங்கு நரசிம்மர் மூலவர்க்கு நேர் பின்புறம் உள்ளார்

தலச்சிறப்பு :

சித்ரா பவுர்ணமியன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பான திருவிழாவாக மதுரை மக்களால் கொண்டாடப்படுகிறது எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரை மாநகரில் சித்திரையிலும் ஒரு தீபாவளி. அது, மதுரை சித்திரைத் திருவிழா. சைவமும் , வைணவமும் இணைந்த பெரு விழா ஆகும். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். திருவிழா நடக்கும் பத்து நாட்களும் ஊரே திமிலோகப்படும். மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள். சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது  சித்திரை திருவிழாவின் போது சுந்தரராஜ பெருமாள்,  கள்ளழகர் திருக்கோலம் பூண்டு மதுரைக்கு எழுந்தருளுவார்.  இந்த சித்திரைத் திருவிழாவுக்கு ஒரு  புராணக் கதையும் உண்டு. சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் ‘மண்டூகோ பவ’ (தவளையாக போகக் கடவாய்!) என சாபமிட்டார். உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, ‘விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு. சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்’ என சொல்லியிருக்கிறார் துர்வாசர். அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் விவரிக்கின்றன. கோவிலின் காவல் தெய்வமான பதினெட்டாம் படி கருப்பண்ணசாமியிடம் ஆலய பொறுப்பை ஒப்படைத்து விட்டு தன் தங்கை ஸ்ரீமீனாட்சிக்கும் ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கும் கல்யாணம் நடக்கும் போது செய்தியைக் கேள்விப்பட்டு ஸ்ரீஅழகர், கள்ளழகர் திருக்கோலத்துடன் அந்த வைபவத்தைப் பார்க்க அழகர் மலையில் இருந்து இறங்கி சகல கோலாகலகங்களுடன் மதுரையை நோக்கி வருகிறார். சித்ரா பௌர்ணமிக்கு நான்கு நாள் முன்னதாகச் சித்திரைத் திருவிழா தொடங்கிவிடுகிறது. மீனாட்சி வீதியுலா, பட்டாபிஷேகம், திருக்கல்யாணமும் மறுநாள் நடக்கும் தேரோட்டமும் என விழாக்கள் தொடர்கின்றன. இதனிடையே, அழகர் வரும் வழி எங்கும் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதால் தங்கையின் திருமணத்தை காணமுடியாமல் போய்விடுகிறது. அந்த சோகத்துடன் வைகையில் எழுந்தருகிறார் என்கிறது புராண கதை. தல்லாகுளத்தில் எதிர்சேர்வை காணும் அழகர், பின்னர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.  ஆற்றிலிறங்கும் அழகரை மதுரையில் உள்ள வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார். ஆற்றுக்குள் இருவரும் மாலை மாற்றி மரியாதை பண்ணிக் கொள்வார்கள். அதன்பிறகு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு ஐந்தாம் நாள் இரவு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர். ஆறாம் நாள் அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை. பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர், வண்டியூர் பெருமாள் கோயிலை வலம் வருவார். அதன்பிறகு சர்ப்பவாகத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் (இந்த மண்டபம் வைகை ஆற்றுக்குள் திருமலைநாயக்கரால் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே தேனூரில் நடந்து கொண்டிருந்த வைபவங்கள் இப்போது இந்த மண்டபத்தில் நடக்கிறது) வந்து சேருகிறார் அழகர். தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார். பிறகு தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு ஆறாம்நாள் இரவு வந்து சேருகிறார். அன்றிரவு அங்கு தங்குகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், ஏழாம் நாள் காலையில் அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் (திருமலை நாயக்கரின் திவானால் செய்து கொடுக்கப்பட்ட இது முழுக்கத் தந்தத்தால் இழைக்கப்பட்டது) தல்லாகுளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். அன்றிரவு அங்கு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் ஜோடனை நடக்கும். எட்டாம்நாள் அதிகாலையில் பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பூஜை புனஸ்காரங்களை ஏற்றுக்கொண்டு ஒன்பதாம் நாள் காலையில் அழகர் கோயிலைச் சென்றடைவார். பத்தாம் நாள் பயணக்களைப்பு நீக்குவதற்காக உற்சவசாந்தி அபிஷேகம் நடக்கிறது. அத்துடன் சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் கொண்டாட்டங்கள் சுபமாக நிறைவுற்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது மதுரை.

 சமய ஒற்றுமை :

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவில் சார்பாக தனித்தனியாக சித்திரைத்திருவிழா கொண்டாடப்பட்டு வந்துள்ளது. பின்னர் மதுரையை ஆண்ட மாமன்னர் திருமலை நாயக்கர் சித்திரை திருவிழாவை சைவ-வைணவ சமயங்களின் ஒற்றுமையை காத்திடும் வகையில் ஒரே விழாவாக இணைத்து நடத்தினார். அதைத்தொடர்ந்து மன்னர் திருமலை நாயக்கர் காலம் முதல் தொன்று தொட்டு, சித்திரைத் திருவிழா ஒரே விழாவாக வரலாற்றுப் பெருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

நூபுர கங்கை

நுாபுர கங்கை தீர்த்தக்கரையில் உள்ள பெண் காவல் தெய்வம் ராக்காயி.ஆங்கிரச முனிவரின் மகளாகக் கருதப்படும் இவளை அமாவாசையன்று வழிபடுவது நன்மையளிக்கும். இத்தீர்த்தத்தில் அமாவாசையில் நீராடி, ராக்காயி அம்மனை வழிபட்டால் முன்னோர் சாபம் நீங்கும் என்பர். மல்லிகை கொடிகள் சூழ்ந்திருந்ததால் ராக்காயி அம்மன் வீற்றிருக்கும் மண்டபத்திற்கு’மாதவி மண்டபம்’ என்ற பெயர் வழங்கியதாகச் சொல்வர்.  அழகர் கோயில் தலபுராணத்தில் இதன் பெருமை கூறப்பட்டுள்ளது. அழகர்மலை உச்சியில் தண்ணீர் வற்றாத நூபுர கங்கை உள்ளது. மகாவிஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து மாவிலி மன்னனிடம் மூன்றடி மண் கேட்டார். அதற்கு மன்னனும் சம்மதித்தார். உடனே மகாவிஷ்ணு, விசுவ ரூபம் எடுத்து ஒரு அடியை பூமியிலும், இன்னொரு அடியை விண்ணிலும், மூன்றாவது அடியை மன்னனின் தலையிலும் வைத்தார். இதில் 2-வது அடியை விண்ணுக்கு கொண்டு செல்லும்போது அங்கிருந்த பிரம்மா அது தன் தந்தையின் கால் என்பதை அறிந்து அதற்கு பாதபூஜை செய்கிறார். பாத பூஜை செய்யும் தண்ணீரில் ஒரு துளி மகாவிஷ்ணுவின் சிலம்பில் பட்டு அழகர் மலையில் விழுகிறது. அதுவே சிலம்பாறு (நூபுரகங்கை) என வர்ணிக்கப்படுகிறது. நூபுர கங்கை தீர்த்தம் தனிச்சுவையும், வினைதீர்க்கும் மருந்துமாக சிறந்து விளங்குகிறது என்று புராதனப்பாடல்கள் கூறுகின்றன. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும்

பதினெட்டாம்படி கருப்பணஸ்வாமி தெய்வம்

பதினெட்டாம்படி கருப்பணசுவாமி. கிருஷ்ணபுத்திரன் எனப்படும் இவருக்கு உருவம் கிடையாது.  கோபுரக் கதவுகளே தெய்வமாக இங்கு வழிபடப்படுகிறது. சந்தனத்தால் கதவை அலங்காரம் செய்து நிலைமாலை சாத்துகின்றனர். நீதி தெய்வமான இவருக்கு பொங்கல் படைத்து வழிபடுவது சிறப்பு. வேண்டுதல் நிறைவேறியதும் கத்தி, அரிவாள்,ஈட்டி, செருப்பு ஆகியவற்றை காணிக்கையாகப் பக்தர்கள் செலுத்துகின்றனர். கிராம மக்கள் தங்களின் குடும்பங்களில்ஏற்படும் வம்பு, வழக்குகளை இவர் முன்னிலையில் பேசி தீர்த்துக் கொள்வது இன்றும் வழக்கமாக உள்ளது.  யானை வாகன மண்டபத்தை அடுத்து இராஜகோபுரம் அமைந்துள்ளது. இக்கோபுர வாசல் எப்பொழுதும் அடைத்தே இருக்கும். இந்த வாசலின் இரெட்டைக் கதவுகள் பதினெட்டாம்படி கருப்பணஸ்வாமியாக வழிபடப்படுகிறது. இவர் கள்ளர்களுக்கு மிகவும் முக்கிய தெய்வம் என்றும் இவர் வடக்கிலிருந்து கொண்டு வரப்பட்டதாகவும் கூறுவர். ஆகையால் இவருக்கு வடக்கு நோக்கி நின்றே பூஜை செய்வர். இவருக்கு இங்கே உருவம் இல்லாததால் , கோபுரக்கதவுகளையே இத்தெய்வமாக எண்ணிப் பூஜை செய்வர். குயவர் குலத்தைச் சேர்ந்த பூசாரிகளே உள்ளனர். பிரம்மோற்சவ காலத்தில் மட்டும் இக்கதவு திறக்கப்படும். பல வழக்குகள் , விவகாரங்கள் முதலியன இப்பதினெட்டாம்படி வாசலில் பிரமாணம் செய்து , இருதரப்பினரும் தீர்த்துக் கொள்வது இன்றும் வழக்கமாக உள்ளது. அழகருடைய அபிஷேகத்திற்கு எடுத்துச் செல்லப்படும் நூபுரகங்கை தீர்த்தத்தை இங்கு பிரமாணம் செய்த பின்னரே , கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்படுகிறது. அழகர் கோவிலை விட்டு வெளியே செல்லும் போதும் , திரும்பும் போதும் , கருப்பணஸ்வாமிக்கு முன் சேவை சாதித்து கற்பூர தீபாராதனை காட்டப்படுகிறது. அப்பொழுது அழகருக்கு அணிந்திருந்த நகைகளின் ஜாபிதாவை வாசித்து சரிபார்ப்பார்கள்.

காவல் தெய்வம் வரலாறு

வளம்மிக்க மலையாள தேசத்தை ஆட்சி செய்து வந்த அரசன் ஒருவன் ,ஒருமுறை பாண்டிய நாட்டில் உள்ள திருமாலிருஞ்சோலை என்னும் திவ்விய தேசத்தில் பள்ளிகொண்ட ,அழகே உருவான கள்ளழகரை தரிசிக்க வந்தான் .அழகரின் செளந்தர்யத்தை கண்ட அந்த அரசன் அதை ஆவாகனம் செய்து தம் தேசத்திற்கு கொண்டு செல்ல திட்டம் தீட்டினான் .நாடு திரும்பிய அரசன் ,மந்திர ,தந்திரங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற 18 பணிக்கர்களை தேர்வு செய்து அழகரின் செளந்தர்யத்தை ஆவாகனம் செய்து வருபடி கட்டளையிட்டான் . பதினெட்டு பணிக்கர்களும் மன்னனின் கட்டளையை நிறைவேற்ற அழகர்மலை வருவதற்கு ஆயத்தமானார்கள் .பதினெட்டு பணிக்கர்களுக்கு காவலாக மலையாள தேசத்தின் காவல் தெய்வமும் வெள்ளை குதிரை மீதேறி அவர்கள் முன்னே சென்றது .காவல் தெய்வத்தின் பின்னே இவர்கள் ,அழகர்மலை நோக்கி புறப்பட்டனர் .அனைவரும் அழகர் மலையை அடைந்தனர் .

மயங்கி நிற்ற காவல் தெய்வம்

அழகர் மலையை அடைந்த காவல் தெய்வம் ,அழகரின் அழகரின் அழகில் மயங்கி தன்னை மறந்து நின்றது .அழகரின் அழகிய தங்க ஆபரணங்களை கண்ட 18 பணிக்கர்களும் தன்னுடன் வந்த காவல் தெய்வத்தை மறந்து ,ஆபரணங்களை ஆவாகனம் செய்யும் எண்ணம் கொண்டு கருவறை நோக்கி சென்றனர் . இவர்களின் கெட்ட நோக்கத்தை கண்ட அடியார் ஒருவர் ,ஊரில் உள்ள மக்களிடம் சொல்ல ,மக்கள் அனைவரும் திரண்டு வந்து ,அந்த 18 பேரையும் கொன்று ,களிமண்ணால் படிகள் செய்து ,படிக்கு ஒருவராக பதினெட்டு படிகளிலும் பதினெட்டு பேரையும் புதைத்தனர் . தன்னிடம் மயங்கி நின்ற காவல் தெய்வத்திற்கு கருணை புரிய இறைவன் திருவுள்ளம் கொண்டார் . காவல் தெய்வம் கருப்பசாமிக்கு கண்கொள்ள காட்சி தந்து, அருள் புரிந்து ,வரம் தந்து ,”என்னையும் மலையையும் காவல் புரிந்து வருவாய் என அருள் புரிந்தார் “.காவல் தெய்வம் உள்ளம் மகிழ்ந்தார் .அழகரின் கட்டளையை ஏற்றார் .நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி ,பூதேவி சமேதராய் கள்ளழகர்,கருமை நிறம் கொண்ட காவல் தெய்வத்திற்கு வரம் தந்தார் . அன்னையர்கள் இருவரும் தன் பிள்ளைக்கு ஆசி தந்தனர் .காடு வீடெல்லாம் முன்னோடியாய் காவல் புரிந்து மக்களை காப்பாய் என இறைவன் கட்டளையிட்டார் .18 பேருடன் வந்த தெய்வமாதலால் ,பதினெட்டு படிகளின் மீது நின்று காவல் தெய்வமாய் காட்சி தந்தார் .

அர்த்த ஜாம பூஜை பிரசாதங்கள்

ஒருநாள் கோவில் பட்டர் கனவில் தோன்றிய கருப்பசாமி ,திருமால் பள்ளிகொண்ட திருவாயிலையும் ,மலையையும் காப்பேன் ,திருமாலின் அர்த்த ஜாம பூஜை பிரசாதங்களை தனக்கு படைக்குமாறு வேண்ட ,அன்று முதல் அழகருக்கு படைக்கப்படும் அர்த்த ஜாம பூஜை பிரசாதங்கள் ,பதினெட்டாம் படி கருப்பசாமிக்கு படைக்கப் படுகிறது . ஒருசமயம் பெரியாழ்வாருடன் இத்தலத்திற்கு விஜயம் செய்த ஆண்டாள் தாயார் , பதினெட்டு படிகளை கண்டு வியந்ததாக கர்ண பரம்பரை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது .ஒவ்வொரு நாளும் அழகர்மலை கோவில் பூட்டபட்டதும் ,கதவின் திறவுகோல் பதினெட்டாம் படி கருப்பசாமியின் முன்பு வைத்துவிட்டு செல்வர் .மறுநாள் காலை கோவில் திறக்கும் முன் ,பட்டர் கருப்பசாமியிடம் பெற்று கதவை திறக்கும் சம்பிரதாயம் நடைபெற்று வருகிறது .சித்திரை திருவிழாவிற்கு அழகர் ,மதுரைக்கு புறப்படும்போதும் ,மதுரையிலிருந்து கோவிலுக்கு திரும்பும்போதும் அழகர் அணிந்த நகைகள் எண்ணப்பட்டு ,அந்த பட்டியல் பதினெட்டாம் படி கருப்பசாமி முன்பு படித்து காட்டப்படும் .கோவில் நகைகளை காவல் தெய்வம் கருப்பசாமியே பாதுகாத்து வருகிறார் .இன்றும் இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது .

திருக்கல்யாணம்

பங்குனி உத்திரநாளில் அழகர்கோவில்பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கும். அன்று காலையில் அழகர் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், கல்யாண சுந்தரவல்லி ஆகிய நான்கு தாயார்களுடன் திருக்கல்யாண மண்டபத்தில்எழுந்தருள்வார். அங்கு பெருமாளுக்கு நான்கு தாயார்களுடன் திருமண வைபவம் நடந்தேறும். அதன் பின் சுவாமி, தாயார்களுடன் பூப்பல்லக்கில் மூலஸ்தானத்திற்கு திரும்புவார். அன்று ஒருநாள் மட்டுமே பெருமாளை நான்கு தாயார்களுடன் ஒன்றாக தரிசிக்க முடியும்.

திருப்பணிகள்

பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோரின் திருப்பணிகளை இக்கோயில் கொண்டுள்ளது.

திருவிழாக்கள்

ஆண்டுதோறும் ஆடி மாதம் பௌர்ணமி அன்று நடைபெறும் அழகர் கோயில் தேரோட்டம் புகழ் பெற்றது.

சித்திரைத் திருவிழா – 10 நாட்கள்

ஆடிப் பெருந்திருவிழா – 13 நாள்

‌ஐப்பசி தலை அருவி உற்சவம் – 3 நாள்

இவை தவிர வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். வாரத்தின் சனி ஞாயிற்று கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.

பிரார்த்தனை

இங்குள்ள அழகுமலையானை வணங்கினால் விவசாய செழிப்பு, வியாபார விருத்தி, புதிய ‌தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவை சாத்தியமாகும். மேலும் மழைவரம் வேண்டுவோர் இத்தலத்தில் பெருமா‌ளை வணங்கலாம். இவை தவிர பெரும்பாலும் குடும்ப நலம், கல்யாண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காக பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.

நேர்த்திக்கடன்

தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி கொடு்த்த அழகருக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனாக முடி காணிக்கை தருகின்றனர். எடைக்கு எடை நாணயம், எடைக்கு எடை தானியங்கள் ஆகியவற்றை தருகின்றனர். இத்தலத்தில் துலாபாரம் மிகவும் சிறப்பு.பெருமாளுக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம். ஊதுவத்தி, வெண்ணெய் சிறு விளக்குகள், துளசி தளங்கள், பூக்கள் பூ‌மாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து அழகருக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். இது தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். நைவேத்தியம் : அழகர் மலை அழகருக்கு வித்தியாசமாக தோசை நைவேத்தியம் செய்யப்படுகின்றது. அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், நெய் கலந்த சிறப்பு தோசை தயாரிக்கப்படும்.

பாதை

மதுரை, நத்தம், மேலூர், வாடிப்பட்டி ஆகிய இடங்களில் சிட்டி பஸ் சேவை உள்ளது. மதுரை சந்திப்பிலிருந்து பஸ் எண் 844,845.18 கி.மீ

கோயில் நேரம்

காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு  7.30 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

கோயில் தொலைபேசி எண்

0452-247 0228, 2470229

கோயில் முகவரி

ஸ்ரீ கள்ளழகர் கோவில்

தேவஸ்தானம்,

மதுரை – 625 001