திருவண்ணாமலை – ஸ்ரீ  அருணாசலேஸ்வரர் கோயில்

கோயில் பெயர்

ஸ்ரீ  அருணாசலேஸ்வரர் கோயில்

தோற்றம் காலம்

2000 ஆண்டுகளுக்கு முன்பு

தெய்வத்தின் பெயர்

மூலவர்: அண்ணாமலையார் (சிவன்)

அம்பாள்: உண்ணாமுலையாள் (பார்வதி)

ஸ்தல தீர்த்தம்: சிவகங்க

ஸ்தல விருக்ஷம்: மகிழ மரம்

ஸ்தல வரலாறு

திருவாரூரில் பிறக்க வேண்டும், காசியில் இறக்க வேண்டும், தில்லை சிதம்பரத்தை போய் பார்க்க வேண்டும், ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமிது திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் இருக்கிறார். சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்.  அண்ணாமலை – அண்ணா என்ற சொல்லுக்கு நெருங்க இயலாதது என்று பொருளாகும்.  திருவண்ணாமலையிலுள்ள மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது என டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். இம்மலையானது  கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும்,  துவாபரயுகத்தில் தங்க மலையாகவும்,  கலி யுகத்தில் கல் மலையாகவும் இருக்கிறது. பால் பிரண்டன் எனும் ஆய்வாளார் மெசேஜ் பிரம் அருணாச்சலா எனும் நூலில் “லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை” எனக் கூறியுள்ளார் மலையைச் சுற்றியுள்ள பாதையை ஜடவர்ம விக்கிரம பாண்டியனால்  கி.பி 1240ல் திருப்பணி செய்யப்பட்டது. எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது.

இத்தலம் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். நினைத்தாலே முக்தி தலமென சிவபுராணம் குறிப்படுகிறது. காமதகனம் நிகழ்வு இத்தலத்தில் மட்டுமே நடைபெறுகிறது. ஆடிப்பூரத்தன்று மாலையில் உண்ணாமுலையம்மன் சந்நிதி முன் தீமிதி திருவிழா நடைபெறுகிறது. இவ்வாறு தீமிதி திருவிழா நடைபெறும் சிவாலயம் இதுவே. இத்தலம் சித்தர்களின் சரணாலயமாகவும் விளங்குகிறது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காட்டுச் சித்தர் இத்தலத்திற்கு உரியவராக விளங்குகிறார். முகலாயர்கள் கோவிலை இடிக்க வந்த போது  ஐந்து பேர் பல்லக்கில் நந்தியை சுமந்து செல்வதை பார்த்து நாங்கள் சாப்பிடும் காளையை தூக்கி செல்கிறீர்களே என சிரித்தவுடன் இது எங்கள் கடவுளின் வாகனம் என்றவுடன் காளையை இரண்டாக வெட்டினர் அந்த ஐவரும் கடவுளை வேண்ட ஐந்து எழுத்து மந்திரத்தை ஓதுபவர் ஒருவர் மலைக்கு அந்தபுரம் உள்ளார் அவரை அழைத்து வர காளை உயிர்பெரும் என அசரிரியாய் சொன்னார். ஐந்து எழுத்து மந்திரம் ஒலித்தது அம் மந்திரத்தை பின் தொடர்ந்து போனால் ஒரு சிறுவன் ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லியபடி வந்தார். ஐந்து பேரும் அந்த சிறுவன் நம்பாமல் பார்க்க காட்டில் இருந்து புலி ஒன்று இவர்களை நோக்கி வந்ததை கை சைகையால் போக சொல்லி இவர்களுடன் வந்து காளையை நமசிவாய மந்திரம் சொல்லி  உயிர்பித்தார் இதனை நம்பாத முகலாயர்கள் சக்தி இல்லாத இடம் உங்களுக்கு தேவையில்லை இடிக்கவேண்டியதுதான் என சொல்ல பக்தர்கள் வேண்டாம் என சொன்னவுடன் மாமிச தட்டை கொடுத்து சிவனுக்கு உணவாக படையுங்க என்றனர்.மாமிச தட்டை இறைவனிடம் நைவேத்தியமாக காட்ட மாமிசம் பூவாக மாறி இருந்தது. இதனையும்  நம்பாமல் ஏதோ சித்து வேலை என நினைத்த முகலாயர்கள் கோவில் வாசலில் உள்ள நந்தியெம்பெருமான் காலை மாற்றி போட்டு அமர்ந்தால் நாங்கள் கோவிலை இடிக்காமல் வணங்கிச்செல்கிறோம் என சொன்ன மாத்திரத்திலேயே கால் மாற்றி அமர்ந்தார்  ந்தியெம்பெருமான்.அன்று முதல் வலது காலை மடித்து இடது காலை முன் வைத்து அமர்ந்துள்ளார். முகலாயர்கள் இறைவனை வணங்கி கோவிலை இடிக்காமல் விட்டு சென்றனர். சிறுவனாக வந்தவரே  வீரக்கியமுனிவராவர். நந்தி இவரின் ஊராகிய சீநந்தல் வடக்கே இருப்பதால் நந்தியும் சிறிது வடக்கு நோக்கியுள்ளார்.

மகா சிவராத்திரி

படைப்புக் கடவுளான பிரம்மனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவிற்கும் தனது பேருண்மையை உணர்த்த சிவபெருமான் அக்னி வடிவமாய் எழுந்தருளிய திருத்தலம் என்று சிவபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்களுக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும், விஷ்ணுவும் வாதிட்டனர். அந்த வாத்திற்கு பதில் தேடி சிவபெருமானிடம் வந்தனர். அவர்களில் யார் பெரியவர் என்பதை விளக்கிட சிவபெருமான் ஒரு சோதனையை நடத்தினார். தனது தலையையும், பாதத்தையும் காண்பவரே உங்களுள் பெரியவர் என்று கூறி வானத்திற்கும், பூமிக்குமாய் ஜீவஜோதியாய் எழுந்தருளினார்.  அந்த சோதனையை ஏற்ற விஷ்ணு வராக அவதாரம் எடுத்து சிவபெருமானின் காலடியைக் காண பூமியைத் தோண்டிச் சென்றார். அன்னத்தின் வடிவத்தைப் பெற்ற பிரம்மன் சிவபெருமானின் உச்சியைக் காண வானத்திற்கு எழும்பினார். இருவரும் கடுமையாக முயற்சித்தும் சிவனின் தலையையோ, அடியையோ காண முடியவில்லை.  தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விஷ்ணு திரும்பினார். உயர உயரப் பறந்து முயன்ற பிரம்மன் களைப்படைந்திருந்த நிலையில், வானத்தில் இருந்து பூமியை நோக்கி விழுந்துக் கொண்டிருந்த தாழம்பூவைக் கண்டார். எங்கிருந்து வருகிறாய் என்று பிரம்மன் கேட்க, நான் சிவனின் தலைமுடியில் இருந்து விழுந்து கொண்டிருக்கிறேன். யுகம், யுகமாய் பயணித்தும் பூமியை அடையவில்லை என்று கூறியது. தான் சிவனின் தலை முடியைக் கண்டதாக அவரிடம் சாட்சி கூறுமாறு பிரம்மன் கேட்க, தாழம்பூ அதற்கு ஒப்புக்கொண்டு அவ்வாறே சிவபெருமானிடமும் உரைத்தது.

பிரம்மனுக்காக தாழம்பூ பொய் கூறியதைக் கேட்ட சிவபெருமான் கோபமுற்று ஜோதி வடிவாய் இருந்தவர், அக்னிப் பிழம்பாக மாறினார். அந்த அக்னியால் ஏற்பட்ட வெப்பம் பூமியை மட்டுமின்றி, சொர்க்கத்தையும் வாட்டியது. சிவனின் உடம்பில் குடிகொண்டிருந்த இந்திரன், எமன், அக்னி, குபேரன் உள்ளிட்ட அட்டத்திக்கு பாலகர்கள் எட்டு பேரும் வெப்பம் தாங்காமல் வெளியில் வந்து விழுந்தனர்.  சிவபெருமானை அமைதி பெறும்படி வேண்டினர். சக்தியும், தேவர்களும் அவ்வாறே வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், ஓர் மலையாய் அடங்கி சிறிய ஜோதியாய் அதன் உச்சியில் தென்பட, அனைவரும் வணங்கினர். அந்த நாளே மகா சிவராத்திரியாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது அக்னி ரூபமாய் எழுந்து பிறகு சாந்தமடைந்து உரைந்த சிவனின் வடிவத்தையே திரு அண்ணாமலையார் என்றும், ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் என்றும் அழைத்து வணங்குகின்றோம். எனவே இந்தத் திருத்தலத்தில் இந்த மலைதான் இறைவனாகும்.

சிவனை அக்னி வடிவிலும், விஷ்ணு அவருடைய காலடியில் வராக அவதாரத்திலும், பிரம்மனை அன்னம் வடிவத்திலும் மேலிருந்து விழும் தாழம்பூவுடன் வடிக்கப்பட்ட சிலை உருவையே லிங்கோத்பவர் என்று அழைக்கின்றோம். சிவனின் எந்தக் கோயிலிற்குச் சென்றாலும் லிங்கம் வீற்றிருக்கும் அந்தக் கருவறைச் சுவற்றின் பின்புறத்தில் லிங்கோத்பவர் சிலை பதிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அந்த வடிவம் தோன்றிய இடம் இந்த புனிதத் திருத்தலமே.  அண்ணாமலையார், மலையடிவாரத்தில் உள்ள திருவண்ணாமலை திருக்கோயிலில் உண்ணாமலை அம்மனுடன் எழுந்தருளியுள்ளார் திருவண்ணாமலை திருக்கோயிலின் நேர் பின்புறமாக மற்றொரு திருக்கோயில் உள்ளது. ஆதி அண்ணாமலையார் திருக்கோயில் என்றழைக்கப்படும் அதுவும் பழமை வாய்ந்தது. மலையைச் சற்றி கிரிவலம் செல்லும் பாதையில் சிவனின் உடலில் இருந்து விழுந்த அட்டத் திக்கு (8 திசைகளின்) தேவர்களான (பாலகர்கள்) பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கங்கள் உள்ளன. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்கம் என்று 8 லிங்கங்கள் உள்ளன.

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபப் பெருநாள் அன்றுதான் திருவண்ணாமலை திருத்தலத்தில் இறைவன் இறைவிக்கு இடப்பாகம் அளித்து அர்த்தநாரீஸ்வரர் ஆகக் காட்சி அளித்தார் சிவன். திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் 2,668 அடி அண்ணாமலை உச்சியில்  மகா தீபம் ஏற்றப்படுகிறது. தீபம் ஏற்ற தேவையான 5 அடி உயர ராட்சத கொப்பரை, 3,500 கிலோ நெய், 11 ஆயிரம் மீட்டர் காடா துணி உபயோகப்படுத்தப்படுகிறது. மலை உச்சியில் ஏற்றப் படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும். 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும். இதனால் மகா தீப கொப்பரை, தீபம் ஏற்றும் போது வெப்பதால் சேத மடையாமல் இருக்க, மேல் பாகம் மூன்றே முக்கால் அடி, கீழ்பாகம் இரண்டே முக்கால் அடி சுற்றளவில் 150 கிலோ எடையில் கால் இன்ச் தடிமனுடன், 20 வளைய ராடுகளுடன் கூடிய செப்பு தகட்டினால் செய்யப்பட்டுள்ளது.

முதல் கதை

விஷ்ணுவும் பிரம்மனும் அடிமுடி காண இருவரும் பல ஆண்டுகள் பயணித்தும் தங்கள் இலக்கை அடைய முடியவில்லை. கடைசியில் தமது தோல்வியை இருவரும் ஒப்புக் கொண்டனர்.  அப்படி சோதிப் பிழம்பாக சிவன் தோன்றிதை அனைவருக்கும் காட்ட வேண்டும் என இருவரும் கோர அதை சிவன் ஏற்றுக் கொள்கிறார், அதன்படி ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை நாளில் சோதியாய் வெளிப்பட்ட நாள்தான் கார்த்திகை தீபம் நாள்.  அதை நினைவுப்படுத்தத்தான் அக்னி மையமான திருவண்ணாமலையில் தீபத்தை மலைமீது ஏற்றி வைக்கிறார்கள்.

இரண்டாம் கதை

தங்களை வதைக்கும் சூரனை கொல்ல வேண்டும் என்ற தேவர்கள் சிவனிடம் கோரிக்கை வைக்கின்றனர். அதை ஏற்ற அவர் அதற்கான காலம் விரைவில் வரும், சூரனை அழிக்க தமது படைப்பில் ஒருவன் வருவான் என வாக்குறுதி அளிக்கிறார். அதன்படி தமது படைப்பை உருவாக்க தமது மனைவி சக்தியுடன் புணரத் தொடங்குகிறார். புணர்ச்சி நிற்கவில்லை. யுகம் யுகமாகத் தொடர்கிறது. அப்படி தொடரும்போது மானாகவும் யானையாகவும் இன்னும் பல மிருகங்களாவும் உருவெடுத்து புணர்ச்சியில் ஈடுபடுகின்றனர் சக்தியும் சிவனும். இவர்களின் செய்கையினால் தேவலோகம் தடுமாறுகிறது, இவர்களின் புணர்ச்சியை எப்படி நிறுத்துவது என்றுத் தெரியாமல் தேவர்கள் கவலைப் படுகிறார்கள். இருவரின் புணர்ச்சியினால் உருவான வியர்வை துளிகள் லட்சக்கணக்கில் பெருகி வழிகின்றன, அதிலிருந்து தேவ கணங்கள் உருவாகின்றன, முன்னணி படையணிகள் தோன்றுகின்றன, இறுதியில் சிவன் தனது சுக்கிலத்தை தனது மூன்றாவது கண்ணான நெற்றிக் கண் மூலம் தெறிக்க வைக்கிறார். அவை ஆகாய கங்கையில் ஆறு சுடர்களாக மிதந்து சரவணப் பொய்கை அடைகின்றன. அங்கே சக்தியானவள் தமது சக்தியின் மூலம் ஆறு பெண்களை உருவாக்கி ஆளுக்கொரு சுடரை வளர்க்க வைக்கிறாள். அந்த ஆறு சுடர்களும் ஆறு குழந்தைகளாக வளர்கின்றன. அந்தக் குழந்தைகளை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அவர்கள் வளர்த்த குழந்தைகள் கார்த்தைகேயன். குழந்தை வளர்ந்ததும் சிவனும் சக்தியும் அங்கே வருகின்றனர். அப்போது சக்தி ஆறு குழந்தைகளையும் சேர்த்து ஒரு குழந்தையாக மாற்றுகிறாள். அதனால் அக்குழந்தைக்கு ஆறுமுகன் என்று பெயர் உண்டாகிறது. சிவன்  கார்த்திகைப் பெண்களை வானத்தில் நட்சத்திரங்களாக மாற்றியமைக்கிறார். அது கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் என்று அழைக்கப்படுகிறது. சுடராகப் பிறந்து ஒருங்கிணைந்த கார்த்திகேயனின் நாள்தான் கார்த்திகை நாள். அதாவது கார்த்திகேயன் பிறந்தநாள்.  அதன் நினைவாக தீபம் ஏற்றப்படுகிறது..

மூன்றாவது கதை

சப்த ரிஷிகளின் மனைவிகளின் அழகில் மயங்கிய அக்னிபகவானுக்கு அந்த பெண்கள் மீது அடக்க முடியாத மோகம் உண்டானது. அதைப் பற்றி தெரிந்துக் கொண்ட அவனது மனைவி சுவாகாதேவி தனது கணவன் முறைத் தவறி நடந்துக் கொண்டால் சப்த ரிஷிகள் சபித்துவிடுவார்கள் என்று எண்ணிப் பயந்துபோனாள். அதனால் தானே ஆறு ரிஷிகளின் மனைவிமார்களைப் போல் உருவத்தை மாற்றிக் கொண்டு, தன் கணவன் ஆசையை நிறைவேற்றிளாள். ஆனால் வசிட்டரின் மனைவி அருந்ததியைப் போல அவளால் உருமாற முடியவில்லை. எனினும்  சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை பெண்கள்  என்று பெயர். இப்பெண்கள்தான் கார்த்திகேயனை வளர்த்தார்கள் என்பது ஒரு கதை. கார்த்திகேயன் பிறந்தநாள்  நினைவாக தீபம் ஏற்றப்படுகிறது.

கிரிவலம்

மலையை வளம் வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும், ஏனென்றால் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம்.  கிரிவலம் செல்லும்போது பஞ்சாச்சர நாமத்தையோ( நமசிவாய,சிவாயநம) அல்லது திருமுறைகளையோ ( தேவாரம், திருவாசம்……) உச்சரிக்க வேண்டும்  பௌர்ணமி தினத்தன்று வலம் வருவதற்கு காரணம்   அன்றுதான் அன்னை பராசக்தி, அருணாசலேஸ்வரரை வலம் வந்து இடப்பாகம் பெற்றாள். அன்று சந்திரன் சூரியனிடம் இருந்து சக்திகளை அதிக அளவில் பெற்று, அதை வெளியிடும் பூர்ண நிலாவாக உலா வருகிறான்.  அந்த ஒளி, மலை மீது பட்டு பிரதிபலிக்கும்போது, அது நமது உடலுக்கும்  நம் மனதுக்கும் பற்பல நன்மைகளை நமக்குத் தெரியாமலே செய்கின்றது.  இதனால் பௌர்ணமி மலைவலம் சித்தர்களால் சிறப்பாக போற்றப்படுகிறது. இன்றும் திருவண்ணாமலையில் சித்தர்கள் சூட்சும வடிவில் வலம் வருவதாகக் கூறப்படுகிறது. இத்திருமலையை காலணி ஏதுமின்றி கிரிவலம் வருவோர் எல்லா பாவங்களில் இருந்து விடுபடுவது மட்டுமின்றி, பந்த, பாசம், பற்று எனும் தடைகளில் இருந்து விடுபட்டு முக்தி பெறுவர் என்று கூறப்படுகிறது. அருணாசலத்தை வலம் வரவேண்டும் என்ற நினைவோடு ஓர் அடி எடுத்துவைத்தால், யாகம் செய்யும் பலன் கிடைக்கும் . இரண்டாம் அடி  எடுத்து வைத்தால், சர்வதீர்த்தமாடிய பலன் கிடைக்கும்  மூன்றாம் அடியில்  மகத்தான தானம் செய்த பலன் கிடைக்கும் .கிரிவலம் வந்தால் பாவங்கள் முழுவதும் நீங்கிவிடும். மேலும் பாவம் செய்யக்கூடாது என்ற எண்ணத்தையும் நமக்குத் தோற்றுவித்துவிடும். வயதானவர்களுக்கும் உடல் நலிவுற்றவர்களுக்கும், வலம் வர வேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் அண்ணாமலையை தொழுது கிரிவலம் வந்தால், மது, மாது, சூது, கொலை, களவு போன்ற ஐந்து பாதகங்கள் தொலையும் என்று புராணங்கள் கூறுகின்றன. பௌர்ணமி நாள் அன்று மட்டும்தான் கிரிவலம் வரவேண்டுமா? வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம்.

ஞாயிற்று கிழமை – சிவலோக பதவி கிட்டும் .

திங்கட்கிழமை  – இந்திர பதவி கிடைக்கும்

செவ்வாய்க்கிழமை – கடன், வறுமை நீங்கும் .

புதன் கிழமை – கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும்.

வியாழக்கிழமை – ஞானம் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை – வைகுண்டப் பதவி கிடைக்கும்.

சனிக்கிழமை – பிறவிப்பிணி அகலும்.

அஷ்டமி – தீவினைகள் போகும்.

குறிப்பாக செவ்வாய்க்கிழமை கிரிவலம் வருவது மிகவும் சிறப்பு. மஹான் சேஷாத்திரி ஸ்வாமிகளும் செவ்வாய்க்கிழமை கிரிவலம் வந்தால், கர்மவினை அகல்வதுடன் மோட்சமும் கிட்டும் என்று கூறியுள்ளார்.

அர்தநாரீஸ்வரராக உருவான வரலாறு

ஒரு நாள் அம்மன் விளையாட்டாக சிவனின் இரு கண்களையும் பொத்தினாள். இதனால் உலகமே இருண்டு போயிற்று. இச்செயலினால் கோபமடைந்த சிவபெருமான் அம்மனை பூலோகத்தில் சென்று தவம் செய்து தன்னை அடையும் படி கூறினார்.  கணவரின் சொல்படி பூலோகத்திற்கு சென்று அம்மன் தவம் செய்ய தொடங்கினாள்.   பிறகு பதிதன்னின் சொல்படி மாங்காட்டிலிருந்து காஞ்சிக்கு அம்மன் புறப்பட்டு சென்றாள். பிறகு காஞ்சியில் சிவனின் உருவத்தை செய்து வேண்டி வந்தாள். இதனால் சிவபெருமான், திருவண்ணாமலைக்கு வந்து தன்னுடைய உடலில் சரிபாதையை பெருமாறு கூறினார்.  பிறகு அம்மன் திருவண்ணாமலைக்கு சென்று சிவனையெண்ணி தவம் செய்ய தொடங்கினாள். அப்பொழுது அத்தவத்தை கலைக்க மகிடாசூரன் அங்கே வந்தான். இதனால் அம்மன் மகிஷாசுரமர்தினியாக உருவெடுத்து அவனைக் கொன்றாள். அதன்பின்னர் கார்த்திகை மாதம் பௌர்னமி கூடிய சுப தினத்தில் பிரதோஷ வேளையில் ஜோதிரூபமான சிவனை தரிசித்துவிட்டு அம்மன் சிவனின் இடபாகத்தைப் பெற்றாள். அதனால் தான் கார்த்திகை தீபத்தின் போது அர்த்தனாரீஸ்வரர் ரூபமாக எழுந்தருளி சிவனும் அம்பாளுமாக சேர்ந்து எல்லோருக்கும் காட்சி கொடுக்கிறார்.

கிரிவல மகிமை

புராண காலத்தில் பார்வதி தேவியார் சிவனின் இடப்பாகம் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் தன் பரிவாரங்களூடன் மலையை வலம் வந்தார். அப்போது சிவன் காட்சி தந்து உமையாளுக்கு இடப்பாகம் அளித்தார் என்பது வரலாறு. சித்தர்கள், ஞானிகள் ஆகியோர் ஒவ்வொரு மாதப்பிறப்பு மற்றும் பிரதோஷ காலத்தில் மலை வலம் வந்தனர். இன்றும் சூட்சும ரீதியாக வந்து கொண்டிருக்கின்றனர்.சந்திரன் நம் மனத்துக்கு (எண்ணத்திற்கும்) காரகன். பௌரணமியன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகளவில் கிரகித்து பூர்ண நிலவாக, அதிகக் கலைகள் கொண்டவனாக சந்திரன் விளங்குகிறான். இதனால் பௌர்ணமி மலை வலம் வருவது சாலச்சிறந்தது என பெரியோர்களால் போற்றப்பட்டது.

நால்வர்

திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலானோர் அண்ணாமலையாரை வந்து தரிசித்து பதிகங்கள் பாடியுள்ளார்கள். மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கு வந்து பலகாலம் தங்கியிருந்து  மார்கழியில் சிவனை பாட  “திருவெம்பாவை” (20) பாடல்களையும், திருவம்மானை பதிகங்களையும் இயற்றி உள்ளார். கிரிவலப்பாதையில் அடியண்ணாமலை என்னும் இடத்தில் மாணிக்கவாசகருக்கு ஒரு கோயில் இருப்பதை இன்றும் காணலாம்.

முருகனின் அருள்பெற்ற அருணகிரிநாதர்

அருணகிரிநாதர் தன் இளமை காலத்தில் வாழ்க்கையை வெறுத்து வள்ளாள மகாராஜா கோபுரத்திலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். ஆனால் முருகப்பெருமான் அங்கு தோன்றி அருணகிரிநாதரை காப்பாற்றி அவருக்கு அருள் புரிந்தார். பின்பு அவர் முருகப்பெருமானின் மீது அளவு கடந்த பக்தி வைத்து பல பாடல்களை இயற்றினார். அரசவைப்புலவராக இருந்த சம்பந்தன் காளி தேவியிடம் வரங்கள் பல பெற்றவர். அருணகிரிநாதரின் புகழில் பொறாமையுற்ற சம்பந்தன் தனக்கும் அருணகிரிநாதருக்குமிடைய ஒரு போட்டியை ஏற்பாடு செய்யுமாறு மன்னரைக் கேட்டுக்கொண்டார். அதாவது இருவரில் யார் தங்களுடைய கடவுளை நேரில் தோன்றச் செய்விப்பது என்பது தான் போட்டி.இப்போட்டியில் சம்பந்தனால் தனது தெய்வமான காளியைத் தோன்றச் செய்ய இயலவில்லை. ஆனால் அருணகிரிநாதர் வேண்டுதலின் பேரில் முருகப்பெருமான் நேரில் காட்சியளித்தார். இந்நிகழ்ச்சிக்குப்பின் இத்தலம் முருகபக்தர்கள் யாத்திரை செல்லும் புகழ் மிக்க தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.அகந்தையாக பேசியதால் காளி தேவி சம்பந்தனுக்கு காட்சி கொடுக்கவில்லை. இதனால் பெரும் கோபம் கொண்ட சம்பந்தன், அருணகிரிநாதனின் புகழை அழிக்க தக்க சமயத்திற்காக காத்திருந்தார்.

ஒரு சமயம் விஜயநகர் மன்னரான பிரபுவிட தேவராயர் தன்னுடைய கண் பார்வை இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். இதனை தனக்கு சாதகமாகிக்கொள்ள சம்பந்தன், பிரபுவிட மன்னரைப் பார்த்து தங்களுக்கு கண் பார்வை கிடைக்க ஒரு வழி இருக்கிறது என்றார். அது என்னவென்றால் சொர்க்கத்தில் இருக்கும் பாரிஜாத மலரைக் கொண்டு வைத்தியம் செய்தால் இழந்த கண்களை திரும்ப பெற முடியும் என்றும், ஆனால் இதை அருணகிரிநாதரால் தான் கொண்டு வர முடியும் என்றார். இதனால் மன்னரும் அருணகிரிநாதரிடம் தனக்கு இச்செயலை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அருணகிரிநாதரும் அதற்கிணங்க தன்னுடைய பூத உடலோடு சொர்க்கத்திற்கு செல்ல முடியாததால் ஒரு இறந்த கிளியிடம் தன் உயிரை வைத்து கூடுவிட்டு கூடு பாய்ந்து சொர்க்கத்திற்கு சென்றார். ஆனால் சம்பந்தரின் சூழ்ச்சியால் அருணகிரினாதரின் உடல் தகனம் செய்யப்பட்டு விட்டது. தமது உடலை காணாது திகைத்தார். தமது உடல் அழிக்கப்பட்டு விட்டதை அறிந்து அருணகிரிநாதர், கிளி உருவிலேயே மன்னனிடம் சென்று பாரிஜாத மலரை சேர்பித்தார். முருகனை நினைத்து துதித்தார். முருகப்பெருமான், அருணகிரிநாதரிடம் “கவலை வேண்டாம். இந்த கிளி உருவிலேயே கவி பாடுமாறு” அருளினார். பாரிஜாத மலரால் பார்வை பெற்ற மன்னன், கிளி உருவில் வந்தது அருணகிரிநாதரே என்பதை உணர்ந்து போற்றினான். திருவண்ணாமலை கோபுரத்தில் இருந்து கிளி உருவில் அருணகிரிநாதர் பாடிய பாடலே கந்தர் அனுபூதியாகும். கிளி வடிவிலேயே இருந்த அவரை அவ்வடிவிலேயே முருகன் ஆட்கொண்டான். அவர் கிளி உருவில் வந்து அமர்ந்த கோபுரம் தற்போதும் கிளிக்கோபுரம் என்ற அழைக்கப்படுகிறது. இத் தலத்தில் அருணகிரி நாதருக்கு விழா எடுக்கப்படுகிறது. வள்ளாள மகாராஜாவின் மகனான பரமசிவன் வள்ளாள மகாராஜாவிற்கு தன் மேல் மிகவும் கர்வம் கொண்டு அருணாசலேசுவரர், தான் சொன்னால் அனைத்தையும் நிறை வேற்றுவார் என்ற நினைப்போடு வாழ்ந்து வந்தார். இதனால் இவருக்கு பாடம் புகட்ட எண்ணிய சிவபெருமான் அவருக்கு குழந்தையாக பிறந்தார். ஆனால் வள்ளாள மகாராஜா, தாம் எடுத்து அந்த குழந்தையை கொஞ்சும் போது சிவனாக பிறந்த அந்த குழந்தை மறைந்து விட்டது.  மனம் கலங்கி சிவனை வந்து மகாராஜா வேண்டினார். இதனால் மகாராஜாவின் தவறை உணர்த்தி அவருக்கு மகனாக பிறந்ததால் தாமே அவருக்கு ஈமக்கிரியைகளை செய்துவிப்பதாக அருணாசலேசுவரர் வாக்களித்தார். இதனால் தான் இன்றும் மாசி மாதத்தில் வள்ளாள மகாராஜாவிற்கு அருணாசலேசுவரர் திதி செய்து வைக்கிறார். இதற்கு மாசி மகம் தீர்த்தவாரி என்று பெயர்.

மற்றொரு சம்பவம்;

வள்ளாள மகாராஜா தன் பெயரில் ஒரு கோபுரத்தை கட்டி முடித்து விட்டு தன் பேரில் கர்வம் கொண்டார். இதனால் இவருக்கு புத்தி சொல்ல விரும்பிய சிவபெருமான் பத்து நாட்கள் தொடர்ந்து வரும் திருவிழாவில் ஒன்பது நாளும் வள்ளாள மகாராஜா கோபுரம் வழியாக செல்ல மறுத்து விட்டார். இதனால் மனம் வருந்தி தன் தவரை உணர்ந்து சிவனிடம் மன்னிப்பு கேட்டார். இதனால் திருவிழாவின் கடைசி நாளில் வள்ளாள மகாராஜா கோபுரம் வழியாக செல்ல சிவபெருமான் அனுமதித்தார்.

கோவில் அமைப்பு:

கிழக்குப் பக்கத்தில் வானளாவ நின்று காட்சியளிக்கும் கோபுரம்- ராஜகோபுரம் எனப்படுகிறது. இது 217 அடி உயரமுடையது. பதினொரு நிலைகளை – மாடங்களையுடையது. மாநகருக்குச் சிறப்பு கோவில் கோபுரம். மேற்குக் கோபுரம் பேய்க் கோபுரம் என அழைக்கப்படுகிறது. மேலக் கோபுரம் என்பது மேக்கோபுரமாகி அது நாளடைவில் பேய்க் கோபுரமாக மருவியது. தெற்குக் கோபுரம் திருமஞ்சன கோபுரம் என்ற பெயரைத் தாங்கி மங்கலமாக நிற்கிறது. வடக்குக் கோபுரம்- அம்மணி அம்மன் கோபுரம் அம்மணி அம்மாள்- இவர் திருவண்ணாமலைக்கு மேற்கில் உள்ள செங்கம் வட்டம் சென்ன சமுத்திரத்தை சேர்ந்த இவர் வீடு தோறும் சென்று பொருள் ஈட்டி வடக்குக் கோபுரத்தைக் கட்டி முடித்தார். அதனால் இவ்வம்மையார் பெயரால் அம்மணி அம்மன் கோபுரம் என்று விளங்குகிறது. வடக்குத் தெற்காக உள்ள கோவில் மதில் சுவரின் நீளம் 700 அடிகள். தென் மதில் 1479 அடி நீளம். வடக்கு மதில் 1590 அடி நீளம்.தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் இரண்டு இரண்டு கோபுரங்களாக உள்ளன. ராஜ கோபுரம் மட்டும் ஒற்றையாய் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் ஆறு பிரகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு பிராத்திலும் பல சந்நிதிகள் இருக்கிறது. முதல் பிராகரத்தில் சுவாமி சந்நிதியுள்ளது. மூன்றாவது சந்நிதியில் உண்ணாமலை அம்மன் சந்நிதி உள்ளது.

ஆலயங்களில் அம்பாள் சன்னதி முன்பு சிம்மம்தான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் திருவண்ணாமலை ஆலயத்தில் உண்ணாமுலை அம்மன் சன்னதியில் நந்தி உள்ளது. அம்பாளுக்குரிய சிம்மம் அங்கு இல்லை. ஈசனிடம் கோபித்துக் கொண்டு பூலோகத்துக்கு வந்த பார்வதி இத்தலத்தில் தவம் இருந்தாள். அவளுக்கு பாதுகாப்பாக நந்தியும் வந்து விட்டார். இதை பிரதிபலிக்கவே உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு நந்தி உள்ளது. மற்ற பிராகரங்களில் வேணுகோபாலசுவாமி சந்நிதி, விநாயகர் சந்நிதி, முருகன் சந்நிதி, கால பைரவர் சந்நிதி, நவகிரக சந்நிதி, வள்ளாள மகாராஜா கோபுரம், கிளி கோபுரம், அருணகிரினாதர் மண்டபம், பாதாள லிங்கம், ஆயிரங்கால் மண்டபம், மற்றும் பல சந்நிதிகள் உள்ளது. ஆலயத்தில் மிகப் பிரமாண்டமான 3மணிகள் உள்ளன. அதில் 2 மணிகள் அண்ணாமலையார் சன்னதி மண்டபத்தில் உள்ளது. மற்றொரு மணி உண்ணாமுலை அம்மன் சன்னதியில் கட்டப்பட்டுள்ளது.  இக்கோவிலின் ஸ்தல விருட்சம் மகிழ மரம். இந்த மரம் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. குழந்தையில்லாதவர்கள் இந்த மரத்தில் சிறிய தொட்டில்கள் செய்து கட்டி வேண்டிக்கொள்வார்கள். குழந்தை பிறந்தவுடன் தொட்டில்களை நீக்கிவிட்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு விட்டு செல்வார்கள்.

360 தீர்த்தங்கள் :

இத்தலத்தில் அம்பிகை, கணேசர், முருகன், வயிரவர், பிரம்மன், திருமால், இலக்குமி, கலைமகள், சூரியன், சந்திரன், சப்த கன்னிகைகள், அஷ்ட வசுக்கள் முதலியோர் அமைந்தனவும், மூழ்கிப்பேறு பெற்றனவுமாகிய அவரவர் பெயரால் வழங்கப்பெறும் முன்னூற்று அறுபது புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. அவற்றுள் மிகச் சிறந்தவை சிவகங்கையும், பிரம்ம தீர்த்தமும், சக்கர தீர்த்தமும், இந்திர தீர்த்தமும் அக்கினி தீர்த்தமும் ஆகும். இந்திர தீர்த்தத்தில் தெப்போற்சவம் நடைபெறும்.

அபிதகுசாம்பாள் சன்னதி :

இத்திருக்கோவிலில் சதுர் புஜத்துடன் வீற்றிருக்கும் அபிதகு சாம்பாள் வேறெங்கும் இல்லாத அளவிற்கு சுமார் 6 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காணப்படுகிறாள்.இந்த அம்பிகை தெற்கு முகமாக வீற்றிருந்து சாந்தமாக தினம் ஒரு விதமான முகத் தோற்றத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது குறிப்பிடத்தக்கது.  ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பகல் வேலையில் சிறப்பு பூஜையும், அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் மகளிரால் செய்யப்படுகிறது. வெள்ளிக் கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில் ராகு காலத்தில் சிறப்பு வழிபாடும், கூட்டுப் பிரார்த்தனையும், கோ பூஜையும் வெகு விமரிசையாக நடைபெற்று வரப்படுகிறது. அவ்வப்போது அம்பாளுக்கு பூச்சொரிதல், சந்தனகாப்பு, 108 பால்குட அபிஷேகம், நிறை பணி காட்சி போன்ற வைபவங்கள் பக்தகோடிகளால் செய்து வரப்பட்டு அம்மனின் பரிபூர்ண அருளை பெற்றுவருவதாக நம்பப்படுகிறது. காஞ்சி ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் 1967-ல் இத்தலத்துக்கு வருகை புரிந்து ஸ்ரீ சக்கரத்தினை அபீதகுசாம்பாள் சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளார்கள். வியாபாரத்திலும், தொழிலிலும் சிறந்த லாபங்களை பெற்று வளமடைய அதிர்ஷ்ட தேவியாக இத் திருத்தலத்தில் உள்ள அம்பாள் விளக்குகிறாள். இந்த அம்பாளை மனம் உருகி வழிபட்டால் மாணவர்கள் கல்வியில் மேம்படவும், குடும்பத்தில் அதிர்ஷ்டம், ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் முதலிய னவற்றை பெறலாம்.

மலைக்குள் இயங்கும் மர்ம உலகம் :

அண்ணாமலை முழுவதும் கருங்கல் வடிவமல்ல, மலைக்குள் பிரும்மலோகம் உள்ளதென்பது ஐதீகம். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலையில் ஒரு இரவு முழுவதும் தியானித்திருந்த சுஜாதாசென் என்கிற ஆங்கிலேய பெண் மலைக்குள் ஒரு பெரிய உலகத்தையே தாம் கண்டதாகக் கூறி இருக்கிறார். அப்போது இதனை யாரும் நம்பவில்லை. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் எஸ்.என்.டாண்டன் என்பவருக்கு பல அற்புதக் காட்சிகள் காணக் கிடைத்தன. அவர்தாம் கண்டதாகக் கூறிய பலவும் ஆங்கில அம்மையார் கண்டவற்றை ஒத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எட்டுக்கை கால பைரவர் :

திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக் கரையில் கால பைரவர் சந்நிதி இருக்கிறது. இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் சுமார் 6 அடி உயரத் துக்கு வடித்திருக்கின்றனர். எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார். தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது. திருஷ்டி, பயம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். தேய்பிறை அஷ்டமி நாளிலும் ஞாயிறு ராகு காலத்திலும் இவரை வழிபடுவது சிறப்பு. இந்தியாவில் உள்ள கால பைரவர் சிலைகளில் இந்த சிலையே உயரமானது.

பலன்கள்

ஊழ்வினைகளை நீக்கக்கூடியது அண்ணாமலையார் கோயில். பிறவிப்பிணி நீங்க வேண்டும் என விரும்பும் எவரும் மலை வலம் வருவதால் தத்தம் கர்மாவை குறைத்து கொள்ள முடியும். மன்னர்களும் சேவையும். சோழ பாண்டிய மன்னர்கள் கோவிலை கட்டினர். விஜய நகரை ஆண்ட மன்னர்கிருஷ்ணதேவராயர் திருவண்ணாமலை கோயில்வளர்ச்சிக்காக கோபுரங்கள், மண்டபங்கள் என பலகட்டிடங்களை கட்டிக்கொடுத்து உதவியுள்ளார்.இதில் 217 அடி கொண்ட ராஜகோபுரம் மன்னர்கிருஷ்ணதேவராயர் உதவியால்உருவாக்கப்பட்டது. இவர் அண்ணாமலையாரின்தீவிர பக்தராக விளங்கினார். இக்கோபுரமானதுஇந்தியாவின் உயரத்தில் இரண்டாவது இடத்தைபிடித்துள்ளது. சிவன் பக்தரான  பல்லாலா  இக்கோயிலுக்காக பல கட்டிடங்கள் கட்டி கொடுத்துள்ளார்.

கரும்புத் தொட்டில்

குழந்தையில்லாதவர் திருவண்ணாமலையை கிரிவலம் வந்து தங்களுக்கு குழந்தை பிறக்க அண்ணாமலையை வேண்டுகின்றார்கள். அவ்வாறு குழந்தை பிறந்தால் கரும்புத் தொட்டிலினை இட்டு மீண்டும் கிரிவலம் வந்து வேண்டிக் கொள்கின்றார்கள். இவ்வாறு கரும்புத் தொட்டியலிடுவது இக்கோவிலின் முக்கிய நேர்த்திக் கடன்களில் ஒன்றாகும்.

ஞானிகளும் துறவிகளும்

அண்ணாமலை சுவாமிகள்,அப்பைய தீட்சிதர்,அம்மணி அம்மாள்,அருணகிரிநாதர்,அழகானந்த அடிகள்,ஆதி சிவ பிரகாச சாமிகள்,இசக்கி சாமியார்,இடைக்காட்டுச் சித்தர்,இரமண மகரிசி,இறை சுவாமிகள்,ஈசான்ய ஞானதேசிகர்,கண்ணாடி சாமியார்,காவ்யகண்ட கணபதி சாத்திரி,குகை நமச்சிவாயர்,குரு நமச்சிவாயர்,குருசாமி பண்டாரம்,சடைச் சாமிகள்,சடைச்சி அம்மாள்,சற்குரு சுவாமிகள்,சேசாத்திரி சாமிகள்,சைவ எல்லாப்ப நாவலர்,சோணாசலத் தேவர்,ஞான தேசிகர்,தட்சிணாமூர்த்தி சாமிகள்,தம்பிரான் சுவாமிகள்,தெய்வசிகாமணி சித்தர்,பத்ராச்சல சுவாமி,பழனி சுவாமிகள்,பாணி பத்தர்,மங்கையர்கரசியார்,ராதாபாய் அம்மை,வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்,விசிறி சாமியார்,விருபாட்சி முனிவர்,வீரவைராக்கிய மூர்த்தி சாமிகள் ஆகிய சித்தர்கள் அண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களாவார்கள்.  இவர்களில் பலர் அண்ணாமலையிலேயே ஜீவசமாதி அடைந்துள்ளார்கள்.  சில சித்தர்களின் ஆசிரமம் திருவண்ணமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது பிரம்மோற்சவம் அண்ணாமலையார் கோயிலில் ஆண்டு தோறும் நான்கு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. ஆனி மாத பிரம்மோற்சவம் ஆனி மாத பிரம்மோற்சவம் என்பது தட்சணாயன பிரம்மோற்சவம் என்று அழைக்கப்படுகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா, அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனையும் பராசக்தியம்மன், விநாயகர், சந்திரசேகரர் சாமிகளுக்கு பூசைகள் செய்யப்படுகின்றன. விநாயகர் மற்றும் சின்னநாயகர் அம்மன், சந்திரசேகரர் வீதியுலா, ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர் எழுந்தருளுதல், ஆனி திருமஞ்சனம் ஆகியவை நடைபெறுகின்றன. மாசி மகம் தீர்த்தவாரி அண்ணாமலையார் கோயிலில் உள்ள நந்தி சிலை வள்ளாள ராஜாவின் மகனாக சிவபெருமானே பிறந்ததாக ஒரு தொன்மக் கதையுண்டு. இதன் காரணமாக வள்ளாள மகாராஜாவின் திதியை சிவபெருமானே அளிக்கின்றார். இந்நிகழ்வினை மாசி மகம் தீர்த்தவாரி என்றழைக்கின்றனர்.

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது. இதில் பத்து நாட்கள் உற்றவர்களின் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும் அதனையடுத்து சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூசைசெய்வர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’ தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும்.

பரணி தீபம்

பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும். பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கின்றனர்.

மகாதீபம்

மகா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்த்தநாரீசுவரர் உற்வச கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

சிறப்பு திருவிழாக்கள்:

கார்த்திகை தீபம், கிரிவலம், சிவராத்திரி

பள்ளியறை பூஜை    : 9.15 மணி

நடைசாற்றுதல்    : 9.30 மணி

பாதை

திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் கோயில் உள்ளது தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பேருந்து வசதிகள் உள்ளன.

கோயில் நேரம்

தினசரி பூஜை காலங்கள் :

நடை திறப்பு    : காலை 5.00 மணி

கோ பூஜை    : காலை 5.15 மணி

பள்ளியெழுச்சி பூஜை     : 5.30 மணி

உஷாகால பூஜை     : 6.00 மணி

காலசந்தி பூஜை     : 8.30 மணி

உச்சிகால பூஜை     : 11.00 மணி

நடைசாற்றுதல்    : நண்பகல் 12.30 மணி

நடை திறப்பு    : 3.30 மணி

சாயரட்சை பூஜை     : மாலை 5.30 மணி

இரண்டாம் கால பூஜை  : இரவு 7.30

மணி

அர்த்தஜாம பூஜை    : 9.00 மணி

கோயில் தொலைபேசி எண்

+91-4175 252 438.

கோயில் முகவரி

ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில்,

திருவண்ணாமலை -606 601,

திருவண்ணாமலை மாவட்டம்

 

காஞ்சிபுரம் – ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில்

கோயில் பெயர்

ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில்

தோற்றம் காலம்

3000 ஆண்டுகளுக்கு முன்பு

தெய்வத்தின் பெயர்

மூலவர்:  காம்பரேஸ்வரர்,ஏகாம்பரநாதர், திருவேகம்பர்

தாயார்: ஏலவார்குழலி

தலவிருட்சம்: மாமரம்

தீர்த்தம்: சிவகங்கை(குளம்), கம்பாநதி

தேவாரம் பாடியவர்கள்: சமயக்குரவர் மூவர்.

ஸ்தல வரலாறு:

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் காஞ்சி நகரம் கச்சி என்றும் கச்சிப்பேடு என்றும் வழங்கி வந்தது.  ‘காஞ்சனம்’ என்ற பெயரில் இருந்து மருவி ‘காஞ்சி’ ஆனது. காஞ்சனம் என்றால் பொன்னாலான் நகரம் என்று பொருள்.  அந்நாளில் காஞ்சி நகரம் பெரும் சீரும் சிறப்போடு இருந்ததை இந்த சொல் குறிக்கிறது.

சங்கக்காலத்தில் புகழ் பெற்றுத் திகழ்ந்த காஞ்சியையே பல்லவர்கள் தங்களின் தலைநகராய்க் கொண்டு ஆண்டனர். பல்லவர்கள் காஞ்சியைப் பல்லவேந்திரபுரி என்றழைத்தனர். திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ,கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம் மற்றும் சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலம்

பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று.  இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது.  இத் தலத்தை  இயற்கை பேரழிவுகள் நான்கு யுகங்களாய் தாக்கியது இல்லை. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது.  மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இக்கோவில். இங்கு உள்ள சிவபெருமான் மண்ணால் ஆனவர்  பிருத்வி லிங்கம்  என பெயர் பெற்ற அவர், சுயம்பு லிங்கம்.

இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள்  கிடையாது.  லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும்.   இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது.  காஞ்சிபுரத்தில் அனைத்து சிவன் கோயில்களிலும் அம்மன் கிடையாது. அனைத்து கோவிலுக்கு காஞ்சி காமாட்சியே அம்மனாக உள்ளது தனி சிறப்பு. இக் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்த்துள்ளது.

பழங்கால சமயம் சார்ந்த நூல்களில் இக் கோவில் திருக்கச்சிஏகம்பம் என்று  குறிப்பிடப்பட்டுள்ளது. இந்துக்களின் தொன்ம நம்பிக்கையின் படி முக்தி தரும் ஏழு நகரங்கள் உள்ளன. இந்நகரங்களில் காஞ்சிபுரமும் ஒன்று.  முக்தி தரும் ஏழு நகரங்கள்  வாரணாசி, அயோத்தி, காஞ்சிபுரம், மதுரா, துவாரகை, உஜ்ஜையின் மற்றும் ஹரித்துவார். காஞ்சிபுரம் ஆயிரம் கோயில்களின் நகரம் எனப்புகழ் பெற்றது. “நகரங்களுள் காஞ்சி” என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளாங்கிய நகரம் காஞ்சி.  பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில், வேகவதி ஆறு எல்லையாய் அமைய, நிர்மாணிக்கப் பட்டதாக குறிப்புகள் உள்ளன.  சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் இந்நகரத்திற்கு பயனம் மேற்கொண்டார். அவரது குறிப்பின் படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்கு பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.  இங்கு பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் தொழுத இலிங்கங்கள் இருக்கின்றன.  அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் அழைக்கப்படுகின்றன.

தேவாரப்பாடல்பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் இது முதல் தலம். இந்நகரம் பற்றி சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.  2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன்என்ற மன்னன் ஆட்சிபுரிந்ததை பரிபாடல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  கி.மு வில் பதஞ்சலிமுனிவரால் காஞ்சி நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது.  கி.பி 4 முதல் கி.பி 9 ம் நூற்றாண்டு வரை பல்லவ மன்னர்கள் கஞ்சியை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தனர். ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது ராபர்ட் கிளைவ்,  ஏகாம்பரநாதர் கோயிலை தனது கோட்டையாகவே பயன்படுத்திக் கொண்டான்

தல வரலாறு 1 :

முன்னொரு காலத்தில் பிரம்மன் தன்னுடைய வம்சத்தில் பிறந்து இறந்த அசுரர்களை மீண்டும் உயிர்பித்து வரங்கள் அள்ளித்தர முடிவெடுத்தான். அதற்காக காஞ்சியில் அருந்தவம் மேற்கொண்டான்.அவனின் காவலுக்கு மது-கைடபர் எனும் இரு அசுரர்களை உருவாக்கினான். இதை தடுக்க நினைத்த பராசக்தி,தனது மாயையினால் மஹாவிஷ்ணுவின் வடிவம் கொண்டாள். அந்த இரு அசுரர்களும் மகாவிஷ்ணு என்று எண்ணி பணிந்தனர்.அன்னை தன் கையில் இருந்த சக்ராயுதத்தை ஏவினாள்.அது மது-கைடபரின் கைகளை அறுத்தது. பிரம்மதேவனின் தவம் கலைந்தது,இதனால் கோபம் கொண்ட பிரம்மன் அந்த மாய விஷ்ணுவை நெருங்கி,தன் பிரம்மாஷ்திரத்தை பயன்படுத்த முயன்றான். விஷ்ணுவாக வடிவத்தில் பராசக்தி,பிரம்ம தேவனே உன் காவலாளிகளை கொன்றது உருத்திர மூர்த்தி(சிவன்)தான் என்று சொல்லி ,உன் பின்புறத்தில்தான் ஓடுகிறார் என்று சொல்ல பிரம்மன் திரும்பிய சிறுபொழுதுக்குள்,பராசக்தி ருத்ரமூர்த்தியின் வடிவம் தாங்கி வடக்கு திசையில் ஓடினாள். பிரம்மன் மிகவும் குழப்பமுற்று நின்றான்.அந்த நாள் முதல் வடக்கு திசையில் காட்சி தந்த சிவ வடிவானது ஆம்பர விருஷ(மாமரம்) ரூபமாய் மாறி ஏகம்பரம் ஆனது. அங்கே ஏகம்பரநாதனுக்கு ஒரு கோவில் எழுந்தது.தென் திசையில் காட்சி தந்த திருமால் வரதராஜ மூர்த்தியாக கோவில் கொண்டனர் என்பதாகவும் வரலாறு உண்டு.

தல வரலாறு 2

பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது.  சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு வெளிச்சம் தந்தார்.  இந்த தவற்றினால் பார்வதியை உலகத்துக்குச் சென்று தன்னை நோக்கி தவம் இருக்கச் சொன்னார் சிவபெருமான்.  இங்கு வந்த அம்பாள் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தை பிடித்து வைத்து பஞ்ச அக்னியின் மத்தியில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தை சோதிக்க எண்ணிய சிவன் தன் தலையில் குடிகொண்டிருக்கும் கங்கையை பூமியில் ஓடவிட்டார்.  கங்கை கம்பா நதியாக ஓடி வந்தது. அதிகமான வேகத்துடன் கம்பாநதி  வெள்ளமாக பாய்ந்துவர தான் பிடித்து வைத்த லிங்கம் கரைந்துவிடும் என அஞ்சிய அம்பாள் லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டு காத்தாள்.  உடனே சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்று பார்வதிக்கு அருள் புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார்.

பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம், அந்த மாமரம் தான் ஸ்தல விருட்சம். காமகோட்டம் தான் காமாட்சி அம்மன் கோவில்.  பார்வதி கட்டித் தழுவியதால் இங்கு உள்ள சிவபெருமானை தழுவக் குழைந்தார் என்றும் அழைப்பர்.  காமாட்சி அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது. அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவன் அவளுக்கு காட்சி தந்து பாவத்தை மன்னித்தருளி, திருமணம் செய்துகொண்டார்.  அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு “தழுவக்குழைந்த நாதர்’ என்ற பெயரும் இருக்கிறது.

தலபெருமை:

காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. மண்ணினால் அமைந்துள்ள சுயம்பு லிங்கதிருமேனிக்கு கவசமணிந்து அபிஷேகங்கள், ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றது.

சுந்தரரருக்கு அருள்:

கைலாயத்தில் பார்வதிதேவிக்கு தொண்டு செய்த அனிந்திதை, பூலோகத்தில் ஞாயிறு எனும் தலத்தில் சங்கிலியார் என்ற பெயரில் பிறந்து சிவபணி செய்து கொண்டிருந்தாள். சிவதல யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது சங்கிலியாரை இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டார். திருமணத்தின்போது அவரைவிட்டு பிரிந்து செல்ல மாட்டேன் என்று மகிழமரத்தின் சாட்சியாக சத்தியம் செய்து கொடுத்தார்.  ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவாரூருக்கு சென்றதால் கண் பார்வையை இழந்தார். பார்வையில்லாத நிலையிலும் சிவதலயாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் கொடுத்த சிவன், இத்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி அருள்செய்தார்.  எனவே, இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும், கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீ  நிலாத்துண்ட பெருமாள்

ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப்படுத்த தலையை அலங்கரிக்கும் பிறைச்சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார்.  சிவ ஆலய பிராகாரத்துக்குள் வைணவர்கள் முக்கியமாக கருதப்படும் திவ்ய தேச தலமான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி இருப்பது மிகவும் சிறப்பு. தன் திருமுடியில் இருக்கும் கங்கை, சந்திரன் இருவருக்கும் சிவன் இத்தலத்தில் பணி கொடுத்திருப்பது சிறப்பு.

கோவில் சிறப்புகள்

தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. இந்நாளில் சுவாமியை தரிசனம் செய்தால் பாவம், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. தனகருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், ஸ்படிகத்திலேயே நந்தியும்இருக்கிறது.  ராமர் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ரலிங்கம் மற்றும் அஷ்டோத்ர (108) லிங்கங்களும் இங்கு உள்ளது. இந்த லிங்கத்திடம் 108 விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். கச்சியப்ப சிவாச்சாரியார் இத்தலத்தில்தான் “கந்த புராணத்தை” இயற்றினார். பின்பு தான் இயற்றியதை அருகில் உள்ள குமரகோட்டம் முருகன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார்.  இப்புனிதத் தலத்தில் விநாயகர் விகடசக்ரவிநாயகர் என்ற திருநாமத்துடனும், அழகன் முருகன் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடனும் காட்சியளிக்கின்றனர்.

ஸ்தலவிருட்சம்

இக் கோவிலில் ஸ்தலவிருட்சம்  3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன.  வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு.  இத்தெய்வீக மாமரம் இனிப்பு புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது.  இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன. கோயிலின் ராஜகோபுரம் 9 நிலைகளைக் கொண்டது.

இக்கோயிலிலே பல்லவர் காலம் முதல் நாயக்கர் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணிகள் செய்ததற்கு ஆதாரமாக நிறைய கல்வெட்டுக்கள் பல இவ்வளாகத்தினுள் காணப்படுகின்றன. இக்கோயிலின் தெற்கு வாயிலில் காணப்படும் பெரிய இராஜ கோபுரம், விஜயநகர அரசனான கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. இதன் காலம் கி.பி 1509 எனக் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகின்றது. இங்கே விஜயநகர மன்னர் காலத்திய ஆயிரங்கால் மண்டபம் ஒன்றும் உண்டு. இம்மண்டபம் அதற்கு முன், நூற்றுக்கால் மண்டபமாக இருந்ததாகவும், அது பிற்காலச் சோழர்களால் கட்டப்பட்டுப் பிற்காலத்தில் திருத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

திருவிழாக்கள்

ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை,  ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன.

பாதை

காஞ்சிபுரம் நகரத்தில் அமைந்துள்ளது – சுமார் 2 கி.மீ. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து.

கோயில் நேரம்

காலை 6.00 மணிமுதல் 12.30 மணி வரை.மாலை 4.00 மணிமுதல்இரவு 8.30 மணி வரை.

கோயில் தொலைபேசி எண்

044-2722 2084

கோயில் முகவரி

ஸ்ரீ ஏகம்பரேஸ்வரர் கோயில்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம்

PIN – 631502