ஸ்ரீ ரங்கம் -ஸ்ரீ அரங்கநாதர பெருமாள்

கோயில் பெயர்

ஸ்ரீ அரங்கநாதர பெருமாள்

தோற்றம் காலம்

2000 ஆண்டுகளுக்கு முன்பு

தெய்வத்தின் பெயர்

 மூலவர்: அரங்கநாதர்

உற்சவர்: நம்பெருமாள்

தாயார்:ரங்கநாயகி

தல விருட்சம்:புன்னை

நவ தீர்த்தம்

சந்திர புஷ்கரணிவில்வ தீர்த்தம்சம்பு தீர்த்தம்பகுள தீர்த்தம்பலாச தீர்த்தம்அசுவ தீர்த்தம்ஆம்ர தீர்த்தம்கதம்ப தீர்த்தம்புன்னாக தீர்த்தம்

ஆகமம்: பாஞ்சராத்திரம்

மங்களாசாசனம்பாடல் வகை:

நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

மங்களாசாசனம் செய்தவர்கள்: பெரியாழ்வார்

ஆண்டாள்

குலசேகர ஆழ்வார்

திருமழிசையாழ்வார்

தொண்டரடிப்பொடியாழ்வார்

திருப்பாணாழ்வார்

திருமங்கையாழ்வார்

பொய்கையாழ்வார்

பூதத்தாழ்வார்

பேயாழ்வார்

நம்மாழ்வார்

ஸ்தல வரலாறு

ஸ்ரீ பரமசிவன் நாரதருக்கு  ஸ்ரீரங்க மஹாத்மியத்தைப் பற்றிச் சொல்லும்போது காவிரி நடுவே சந்த்ரபுஷ்கரணி கரையிலுள்ள ஸ்ரீரங்கம் செல்பவர்களுக்கு நரகமோ, ஞானக் குறைவோ கிட்டாது என்று சொல்கிறார். அந்த இடம்தான் ஸ்ரீரங்கம், ரங்கம் என வழங்கப்படுகிறது.

பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண்

அச்சுதா! அமரேறே! ஆயர் தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.

தொண்டரடிப்பொடியாழ்வார் .

வைணவத்தின் மையத் தலைமைச்செயலகமாக ஸ்ரீரங்கம் திகழ்ந்தது. ஸ்ரீராமானுஜர் பரப்பிய விசிஷ்டாத்வைதம் நெறிக்கு ஸ்ரீரங்கமே நிலைக்களம். திருவரங்கத் திருத்தலம் பற்றி அகநானூறு, புறநானூறு மற்றும் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. கோவில்களில் அழகு என்றல் அது “திருவரங்கம்” கோவில் தான், ஏழு பிரகாரங்களை கொண்ட இந்த கோயிலில் நான்கு உட்புறமும், மூன்று வெளிப்புறமும் அமைந்துள்ளது 236அடி உயரம் (72 m) கொண்ட இந்த கோயிலின் ராஜகோபுரம் ஆசியாவின் பெரிய கோபுரமாக விளங்குகின்றது. கோயிலைச் சுற்றி 21 கோபுரங்கள் உள்ளன.  பூலோக வைகுண்டம் என்ற பெருமை பெற்ற  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்,  108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது.  11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்று பாடிய ஒரே தலம். பஞ்சரங்க தலங்களுல் ஒன்று.

பஞ்சரங்க தலங்கள்

ஸ்ரீ ரங்கநாதசுவாமி திருக்கோவில்

ஸ்ரீரங்கப்பட்டணம்

திரு அரங்கநாதசுவாமி திருக்கோவில்

திருவரங்கம்

சாரங்கபாணி திருக்கோவில் கும்பகோணம்

திரு ஆப்பக்கூடத்தான் பெருமாள் திருக்கோவில் திருப்பேர்நகர் என்ற கோவிலடி (திருச்சி)

பரிமள ரங்கநாதபெருமாள் திருக்கோவில் திருஇந்தளூர் மயிலாடுதுறை

உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் திருவரங்கம் இருக்கும் திசையை நோக்கி வணங்கினாலே போதும்; இந்தத் தலத்துக்கு நேரில் வந்து, இங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி திருவரங்கனை தரிசித்த பலன் கிடைக்கும். பெருமாளுக்கு நைவேத்தியம் செய்ய சமைப்பதற்கு மடப்பள்ளியில் மண்பாத்திரங்களே தற்போதும் பயன்படுத்தப்படுகிறது.  ஸ்ரீரங்கத்தில்  ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்கநாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.

கங்கை vs காவிரி

ஒரு முறை கங்கை, காவிரி, யமுனை உட்பட புண்ணிய நதிக் கன்னியர்கள், இமயமலை அடிவாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வான்மார்க்கமாக சென்ற கந்தர்வன் ஒருவன், இவர்களைப் பார்த்து வணங்கினான். உடனே, ‘கந்தர்வன் வணங்கியது தன்னையே!’ என்று நதிக் கன்னியர் ஒவ்வொருவரும் தங்களுக்குள் வாதிட்டனர். இது வீண் விவாதம் என்றுணர்ந்த சிலர் விலகிக் கொள்ள… காவிரியும், கங்கையும் மட்டும் விவாதம் தொடர்ந்தனர். முடிவை தெரிந்து கொள்ள திருமாலை நாடினர். அவர், ‘‘கங்கை என் திருப்பாதத்தில் தோன்றியவள் ஆதலால் அவளே பெரியவள். கந்தர்வனின் வணக்கம் அவளையே சாரும்!’’ என்றார். இதனால் வருந்திய காவிரி, தான் கங்கையை விட மேன்மை நிலை பெற வேண்டும் என்று திருமாலைக் குறித்து தவம் இருந்தாள். அதனால் மகிழ்ந்த பகவான் அவள் முன் தோன்றி, ‘‘எதிர்காலத்தில் நான் உன் மடியில் சயனிப்பேன். அப்போது நீ கங்கைக்கு மேற்பட்டவளாவாய்!’’ என்றருளினார். அதன்படியே பிற்காலத்தில் காவிரியின் மத்தியில் ஒரு தீவும், சந்திர புஷ்கரணியும், அனந்த பீடமும் தோன்றின. ஆற்று நீர் சூழ மத்தியில் அமைந்துள்ள பகுதிக்கு அரங்கம் என்று பெயர். அதன்படி இந்த தீவு, இரு ஆறுகளின் (காவிரி மற்றும் கொள்ளிடம்) மத்தியில் இருப்பதாலும் லட்சுமி கடாட்சத்துடன் திகழ்வதாலும் ஸ்ரீரங்கம் அல்லது திருவரங்கம் எனப் பெயர் பெற்றது. திருவரங்கத்தில் பாயும் காவிரி நதி, பரம பதமான ஸ்ரீவைகுண்டத்துக்கு வெளியே ஓடும் ‘விரஜா’ நதிக்கு ஒப்பானது. பெயர், கோயில், பெருமாள், தாயார், ஊர், தளிகை, வாத்யம், மற்றும் பலகாரங்கள் அனைத்தும் ‘பெரியது’ என்று ஏற்றிச் சொல்லப்படும் பெருமை இந்தத் தலத்துக்கு மட்டுமே உண்டு. இங்குள்ள மூலவர் ரங்கநாதர் என்றும் பெரிய பெருமாள் என்றும் திருநாமங்கள் உடையவர்.  கோயிலும் பெரிய கோயில், சயனக்கோலத்தில் காட்சியளிக்கும் பெருமாள் பெரிய பெருமாள், தனிக் கோயில் கொண்டிருக்கும் அரங்கநாயகி பெரிய பிராட்டியார் எனவும் தளிகைக்குப் பெரிய தளிகை என்றும், மேளத்திற்கு பெரிய மேளம் என்றும் திருவரங்கத்தின் பெருமையை “பெரிய’ என்று அடைமொழி இட்டு வழங்குகிறார்கள். உற்சவ மூர்த்தியான ரங்கராஜர், நம்பெருமாள் என்றும் அழகிய மணவாளன் என்றும் போற்றப்படுகிறார்.

ஸ்ரீரங்கம், நவக்கிரகங்களில் ஒன்றான சுக்கிர க்ஷேத்திரமாகவும் கருதப்படுகிறது வலக்கை திருமுடியைத் தாங்க, இடக்கை மலர்ப்பாதத்தை சுட்டிக் காட்ட தெற்கு முகமாக இலங்கையை நோக்கியபடி அருள் பாலிக்கிறார் மூலவர் ஸ்ரீரங்கநாதர். திருவரங்கத்தில் இருக்கும் ‘ரங்க விமானம்’ ஆதியில் தானாகவே உருவானது.  இந்த விமானம் பொன்னால் வேயப்பட்டு ‘ஓம்’ என்கிற பிரணவ வடிவில் அமைந்துள்ளது.  இந்த தங்க விமானத்தில் உள்ள பரவாசு தேவர், கையில் கிண்ணத்துடன் காட்சியளிக்கிறார். அந்தக் கிண்ணம் அவரின் வாயை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக வும், அது வாயருகில் சென்று சேர்ந்தால் உலகம் அழியும் என்றும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. கோயில், ‘நாழிக்கேட்டான் வாயில்’ வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள் உள்ளனர். கோயிலின் உட்புற முகப்பில் பெரியபெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி, மகாவிஷ்ணுவுக்கு உரியவராக முறையே சங்கு, தாமரை வடிவங்களில், ‘சங்க நிதி’, ‘பதும நிதி’ உருவங்களுடன் இருக்கின்றனர். விஜயரங்க சொக்கநாத நாயக்கர், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை முறையில், வண்ணம்தீட்டி வைக்கப்பட்டுள்ளன.  மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு, மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.  மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்யப்படுவதில்லை. அதற்குப் பதில் கோயில் பணியாளரைக் கொண்டு இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட தைலக்காப்புடன் மெரு கூட்டப்படுகிறது.

கோயில் கருவறையின் மேல் தங்கத் தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன. இந்தத் திருத்தலத்துக்கு வந்து ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்க நாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர். ரங்கநாதர், பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். நாபியில் பிரம்மா இல்லை. ஆனால், சூரிய உதயத்திற்கு சற்று முன்பு ரங்கநாதரை, அவர் பூஜிப்பதாக ஐதீகம். கோயிலுக்குள் பாவம் தீர்க்கும் சந்திர தீர்த்தம் உள்ளது. வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த 6 நாட்களும் சுவாமி, முத்தங்கி சேவை சாதிக்கிறார். இந்த வைபவம் இங்கு பிரசித்தி பெற்றது.  வருடத்துகொருமுறை,பங்குனி உத்திர நாளில் பெருமாளும், தாயாரும். தாயார் சன்னதியில் இருக்கும் சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரால் கட்டமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள 1,000 தூண்களும் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் போய்விட்டது. 951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. மீதமிருக்கும் 49 தூண்கள், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் காலத்தில் மணல்வெளியில் 49 மரத்தூண்கள் நடப்பட்டு ஆயிரம் தூண்களுடன் விழா நடைபெறுகிறது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாதிருந்த தெற்குராயகோபுரம் முன்பு மொட்டை கோபுரமாக இருந்தது.  ராயர் கோபுரத்தில் திருஷ்டிபரிகாரத்திற்காக முனிக்கு அப்பனான ஸ்ரீனிவாசனை எழுந்தருள செய்தனர்.  நித்ய வழிபாடுகள் இன்றும் நடந்து வருகிறது. இந்த ராஜகோபுர வாசலை முனியப்பன் கோட்டை வாசல் எனவும் அழைக்கின்றனர்.

ஸ்ரீ ராமானுஜர்

கோயிலில் நிர்வாக முறையை ஏற்படுத்திய ராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார். இத்தலத்தில் தங்கி பல காலம் ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர், இங்கேயே மோட்சம் அடைந்தார். அவரது உடலை, சீடர்கள் பத்மாசனமாக அமர்த்தி அடக்கம் செய்தனர். சிலகாலம் கழித்து அவரைபெருமாள் அவரது உடலை மேல் எழுப்பி  என்றும் அழியா திருமேனியோடு இருக்கச் செய்தார். இன்றும் அவரது சிகை மற்றும் நகங்கள் தரிசனம் செய்யக் கிடைக்கின்றன. வருடத்துக்கு இரு முறை பச்சை கற்பூரம், குங்குமப் பூ போன்றவை விழுதாக அரைத்து அவருக்குப் பற்றாக உடலில் பூசப்படுகின்றன. இவர் இங்கு தனிச்சந்நதியில் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாது.

துலுக்க நாச்சியார்

கி.பி. 1331-ல் மாலிக்காபூர்  படை யெடுப்பின்போது அரங்கன் விக்கிரகம் பக்தர்களால் வெளியே எடுத்துச் செல்லப் பட்டது. அரங்கன் திரும்பவும் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தது 1371-ஆம் ஆண்டு. திருவரங்கனின் விக்கிரகம், இரண்டு வருடங்கள் டெல்லியில் இருந்ததாக வரலாறு. அப்போது அரங்கனின் அழகில் மயங்கி அவனுக்காகத் தன் உயிரையே கொடுத்த தில்லி சுல்தானின் மகளுக்காக ஆலயத்தில் ஓர் இடம் அளித்துள்ளார்கள். துலுக்க நாச்சியார் என்ற பெயரால் அழைக்கப்படும் அவளுக்காக அரங்கனுக்கு ஏகாதசி, அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து, ரொட்டி, வெண்ணெய், பருப்பு, கிச்சடி ஆகிய வட இந்திய உணவு வகைகளை நைவேத்தியமாக ஏற்கிறார்.

கம்பர்

கம்பராமாயணத்தை கம்பர் இங்கு அரங்கேற்றம் செய்தபோது, அதில் நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அறிஞர்கள், ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி சொல்லக்கூடாது என்றனர். கம்பர், ‘அதை நரசிம்மரே சொல்லட்டும்!’ எனச்சொல்லி நரசிம்மரிடம் வேண்டினார்.  அப்போது நரசிம்மர்,  கர்ஜனையுடன் தூணிலிருந்து வெளிப்பட்டு, ‘கம்பரின் கூற்று உண்மை!’ என ஆமோதித்து  தலையாட்டினார். மேட்டழகிய சிங்கர் என்றழைக்கப்படும் இவர், தாயார் சந்நதி அருகில் தனிச்சந்நதியில்  இருக்கிறார். கையில் சங்கு மட்டும் இருக்கிறது, சக்கரம் கிடையாது. சந்நதி எதிரில், கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம் உள்ளது.

கருடாழ்வார்

கோயில் பிராகாரத்தில் அமுத கலசம் ஏந்திய கருடாழ்வாருக்கு சந்நதி இருக்கிறது. அசுரர்களிடம் இருந்து  வேதங்களை மீட்ட பெருமாள், அதனை கருடாழ்வாரிடம் ஒப்படைத்தார். இதன் அடிப்படையில் இவர் கையில், வேதங்களை வைத்திருக்கிறார். இவரது சிலை சாளக்ராமத்தால் ஆனது. கருடாழ்வாருக்கு பருப்பு, வெல்லம், கொழுக்கட்டை படைத்து, மல்லிகைப்பூ மாலை, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். கருட பஞ்சமியன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும். சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது. கார்த்திகை கைசிக ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி) இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது. சுவாமிக்கு தினசரி பூஜையில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த பரிகாரம் செய்கின்றனர். கார்த்திகை, மார்கழி குளிர் மாதங்கள் என்பதால், சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும், போர்வை அணிவிப்பதாகச் சொல்வர். ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தன்று அகில், சந்தனக்கலவையை சாத்தி ரங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம் (தைலாபிஷேகம்) செய்கின்றனர். அன்றைய  தினம் உற்சவர் நம்பெருமாளுக்கு (வைகுண்ட ஏகாதசியன்று பவனி வருபவர்) அணிவிக்கப்பட்ட தங்கக்கவசம் களையப்பட்டு, 22 குடங்களில் காவிரித்தீர்த்தம் அபிஷேகம் செய்யப்படும். மற்ற நாட்களில் காப்பு அணிந்த நிலையிலேயே அபிஷேகம் நடக்கும்.  இந்த  அபிஷேகத்தை காவிரியே செய்வதாக ஐதீகம்.

ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த நாளில் இருந்து 48வது நாளில் ஆடிப் பெருக்கு உற்சவம் கொண்டாடப்படுகிறது. சில ஆண்டுகளில் ஆடி 18ம் தேதியும், சில ஆண்டுகளில் ஆடி 28ம் தேதியும் இந்த விழா கொண்டாடப்படும். சித்திரை, தை, பங்குனி ஆகிய மாதங்களில் இங்கு பிரம்மோற்ஸவம் நடக்கிறது. சத்தியலோகத்தில் ரங்கநாதருக்கு பிரம்மா நடத்திய விழா பங்குனியில் கொண்டாடப்படுகிறது.  இதை, ‘ஆதி பிரம்மோற்ஸவம்’  என்கின்றனர். இவ்விழாவின் இடையே வரும் உத்திரம் நட்சத்திரத்தில் சுவாமி,  ரங்கநாயகி தாயாருடன் சேர்ந்து காட்சி தருகிறார். ரங்கநாதருக்கு, அயோத்தியில் ராமர் கொண்டாடிய விழா, தை மாதம் நடக்கிறது. பூமாதேவியின் பதி ராமர் நடத்திய விழா என்பதால் இவ்விழா, பூபதி திருநாள் என்றே அழைக்கப்படுகிறது. இதை ராமனே நடத்துவதாக ஐதீகம். அன்னப்பெருமாள் கோயில் பிராகாரத்தில் தானிய லட்சுமிக்கு சந்நதி இருக்கிறது. இவளுக்கு வலப்புறம் கிருஷ்ணர்,  இடதுபுறம் நரசிம்மர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. சுக்கிர  கிரகத்தால் பாதிக்கப்படும் ஜாதகதாரர்கள் இவளுக்கு வெண்பட்டு, வெள்ளை மலர் அணிவித்து, வெண்மொச்சை தானியம் படைத்து வழிபடுகிறார்கள். பிரம்மோற்ஸவத்தின்போது பெருமாள், இவளது  சந்நதி அருகில் எழுந்தருளி நெல் அளக்கும் வைபவம் காண்கிறார். அன்னத்திற்கு அதிபதியான அன்னப்பெருமாள் இக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் இருக்கிறார். கைகளில் கலசம், தண்டம், மற்றும் அன்ன உருண்டை வைத்திருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள உணவிற்கு பஞ்சமில்லாத நிலை ஏற்படும்

தலவரலாறு

திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து தோன்றியதாகும். பிரம்மா நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இக்ஷ்வாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான்.  இலங்கை போருக்குப் பின்னர் ராமனுக்கு பட்டாபிசேகம் நடக்கிறது. அதில் கலந்து கொண்டு திரும்பும் விபீஷணனுக்கு ராமன் தன் நினைவாக ஸ்ரீரங்கநாதர் சிலையை பரிசாகத் தருகிறான்.எடுத்துச் செல்லும்போது கீழே எங்கும் வைக்கக்கூடாது என்ற நிபந்தனையையும் சொல்கிறான்.ஆகாய மார்க்கமாக வரும் விபீஷணன், வழியில் சோலைகளோடு கூடிய காவிரியைக் கண்டு நீராட விரும்புகிறான்.

கதை 1

கீழே இறங்கி சிலையை தரையில் வைக்கக் கூடாதே என்று எண்ணும்போது அங்கே சிறுவன் வடிவில் வந்த விநாயகரிடம் சிலையை வைத்திருக்கச் சொல்லிவிட்டு காவிரியில் நீராடுகிறான். சிறுவன் சிறிது நேரம் அந்த சிலையை கைகளில் வைத்திருந்து விட்டு தரையில் வைத்து விடுகிறான். காவிரியில் நீராடி முடித்த விபீஷணன் தரையில் வைக்கப் பட்ட சிலையை எடுக்கும் போது எடுக்கமுடியவில்லை. தரையோடு ஒட்டிக் கொண்ட அந்த சிலையை பெயர்த்தெடுக்கவும் முடியவில்லை. கோபம் கொண்ட விபீஷணன் அந்த சிறுவனை அடிக்க முற்படும்போது அவன் ஓடிப் போய் அருகிலுள்ள மலையின் (திருச்சி மலைக்கோட்டை) உச்சியில் உட்கார்ந்து கொள்கிறான். விபீஷணன் துரத்திச் சென்று சிறுவன் தலையில் குட்டுகிறான்.சிறுவன் மலை உச்சியில் அமர்ந்தஇடம் திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயில் என்றும், விபீஷணன் அவர் தலையில் குட்டும்போது நின்ற இடத்தில் உருவான பாதம் இரண்டும்“ விபீஷணர் பாதம் “ என்றும் அழைக்கப் பெற்றது. உச்சிப் பிள்ளையாருக்கு இதனால் தலையில் பள்ளம் ஏற்பட்டது. காவிரியில் சோலைகள் நடுவே வைக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதர் சிலை இருந்த இடம் ஸ்ரீரங்கம் ஆயிற்று.

கதை 2

விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான்.  அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் “தென்திசை இலங்கை நோக்கி’’ பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார்.  பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான். தர்மவர்ம சோழன் கட்டிய திருவரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது.  பின்னர் கிளிச் சோழன் காட்டில் வேட்டையாடும் போது  மரம் ஒன்றில் கிளி பேசியதை கண்டான்  அந்தக் கிளி ‘‘வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்’’ என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது, ஆற்று வெள்ளத்தால் மூடி இருந்த  விமானத்தை   கண்டுபிடித்தான் பின்னர் விமானம் மற்றும் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான். அவன் எழுப்பிய மண்டபத்திற்கு கிளி மண்டபம் என பெயரிட்டான். இன்றும் இம் மண்டபம் கருவறைக்கு அருகே உள்ளது. இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளது. மையப் பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இது தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. கோயிலிலிருந்து நான்கு திசைகளிலும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன. ராஜகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது.

திருப்பாணாழ்வார்

எம்பெருமானின் ஸ்ரீவத்சம் என்னும் மறுவின் அம்சமாகத் தோன்றியவர் திருப்பாணாழ்வார். இவருடைய இயற்பெயர் தெரியவில்லை. பாணர் குலத்தில் அவதரித்ததால் பாணர் என்றழைக்கப்பட்டார். தாழ்ந்த குலமாகிய பாணர் குலத்தில் பிறந்ததால் பூலோகவைகுண்டமாம் திருவரங்கத்தைத் தம் கால்களாலும் தீண்டக் கூடாதென்று காவிரியின் தென்கரையிலிருந்தபடி யாழ்மீட்டிப் பெரிய பெருமாள் அரங்கநாதனைத் துதித்து வந்தார்.

பாணரின் தியானம்

ஒருநாள் இவர் கண்களை மூடிக் கருத்தினில் அரங்கனை நினந்து கவனந்தனை மறந்து அரங்கனையே தியானித்துக் கொண்டிருந்தார். பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்ய நீர் கொண்டு செல்வதற்காக அங்குவந்த லோகசாரங்க முனிவர், இவரை தூரத்தில் விலகும்படி சொன்னார். ஆனால் அரங்கனையே நினைத்துக் கொண்டிருந்த பாணர் காதில் இது விழவில்லை. அவர் கவனம்தான் பெருமாளிடம் சென்று விட்டதே! அதனால் கோபம் கொண்ட லோகசாரங்கர் ஒரு கல்லைத் தூக்கிப் பாணர்மேல் எறிய பாணர் முகத்தில் இரத்தம் வழிந்தது. பாணர் கண்களைத் திறந்து பார்த்தார். ‘ஐயோ, அரங்கனுக்குத் திருமஞ்சனம் கொண்டு செல்லும் இம்முனிவரின் கைங்கர்யத்துக்குத் தடங்கலாக இருந்து விட்டோமே’ என்று வருந்தி விலகிச் சென்றார். திருமஞ்சன தீர்த்தம் எடுத்துக்கொண்டு, குடை, சாமரம், மேளதாளங்களோடு கோவில் சன்னதிக்குச் சென்றார் லோகசாரங்கர். அங்கே கண்ட காட்சி அவரைத் திடுக்கிடச் செய்தது. பெருமாளின் திருமுக மண்டலத்தில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. லோகசாரங்கர் பெருமானின் நிலைகண்டு பதறினார். அன்றிரவு லோகசாரங்கரின் கனவில் காட்சியளித்த பெருமாள் “லோகசாரங்கரே, பாணபெருமாளின் பெருமையை நீர் அறியவில்லை. பாண்பெருமாள் நமக்கு அத்யந்த பக்தர். நாளைக்காலையில் பாண்பெருமாளைத் தோள்களிலே ஏற்றிக்கொண்டு இங்கு அழைத்து வரவேண்டும்” என்று உத்தரவிட்டார்.

முனிவாஹனம்

மறுநாள் லோகசாரங்கர் பாணரிடம் சென்று பெருமானின் உத்தரவைப் பற்றிச் சொன்னார். அதைக்கேட்ட பாணர் உள்ளம் பதறி “அபசாரம், அபசாரம், நான் தங்கள் தோள்களில் ஏறுவது மிகவும் அபசாரம், மஹாபாபம்” என்றார். ஆனால் முனிவர் இது பெரிய பெருமாளின் கட்டளை. அதை மீறமுடியாது என்று வற்புறுத்திப் பாணரைத் தம் தோள்களின் மேல் எழுந்தருளச் செய்து பெருமானின் சன்னதிக்கு அழைத்துச் சென்றார். அழகிய மணவாளன் சன்னதிக்குள் சென்ற பாணருக்குத் தன் திவ்யமங்கள வடிவத்தைக் காட்ட பாணர் தம் கண்ணார அரங்கனின் பாதாதிகேச அழகை அனுபவித்தார். அவருடைய அனுபவம் ‘அமலனாதிபிரான்’ என்று தொடங்கும் பத்துப் பாசுரங்களாக வெளிப்பட்டது.

தொண்டரடி பொடியாழ்வார்

பிறந்த இடம் : திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)

பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு பராபவ ஆண்டு மார்கழி மாதம்

நட்சத்திரம் : கேட்டை (தேய்பிறை சதுர்த்தசி திதி)

கிழமை : செவ்வாய்

எழுதிய நூல் : திருமாலை, திருப்பள்ளி எழுச்சி

பாடிய பாடல் : 55

வேறு பெயர் : விப்பிர நாராயணர்

சிறப்பு : திருமாலின் வனமாலையின் அம்சம்

சோழநாட்டின் திருமண்டங்குடி என்ற கிராமத்தில் வேத விசாரதர் என்பவர் சிறந்த திருமால் தாசராக விளங்கி வந்தார்.இவர் எப்பொழுதும் நாராயணனின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே பூமாலைகள் தொடுத்து பெருமாளுக்கு சாற்றி வந்தார்.அந்த உலகளந்த பெருமாளின் கருணையால் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் திருமாலின் வைஜயந்தி வனமாலையின் அம்சமாக ஒரு புதல்வர் பிறந்தார்.  பெற்றோர்களும் அவருக்கு விப்பிர நாராயணர் என்று பெயர் சூட்டினார்கள். சகல கலைகளையும் கற்றுணர்ந்த விப்பிரநாராயணருக்காக விண்ணுலகிலிருந்து, திருமாலின் சேனைத்தலைவரான சேனை முதலியர் பூமிக்கு வந்து உண்மைப்பொருளை உணர்த்தி சென்றார். இதன் பிறகு விப்பிர நாராயணருக்கு அரங்கனைப்பற்றிய சிந்தனையே மேலோங்கி இருந்தது. இதனால் திருமணம் செய்யாமல் பிரம்மச்சரிய விரதத்தையே உயர்வாக எண்ணி வாழ்ந்து வந்தார். ஒரு முறை திருமாலின் திருத்தலங்கள் அனைத்தையும் பார்த்து வர ஆசைப்பட்டு முதலில் ஸ்ரீரங்கம் சென்று அரங்கனை தரிசித்தார்.அவர் பெருமையை கேட்டறிந்தார். அரங்கனைப்பார்த்த மகிழ்ச்சியில் திருமால் பெருமைக்கு நிகரில்லை எனவே பெருமானே போதும் வேறெதுவும் வேண்டியதில்லை என்று நினைத்து,

பச்சை மாமலைபோல் மேனி !

பவள வாய்க் கமலச் செங்கண்,

அச்சுதா ! அமரா ! ஆயர்தம் கொழுந்தே

எனும் இச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே என்று நெஞ்சுருகி பாடினார்.

ஸ்ரீரங்கத்துப்பெருமாளுக்கு சேவை செய்வதற்காக கோயிலிலேயே தோட்டம் அமைத்து பூக்களை பறித்து பெருமாளுக்கு தினமும் மாலை தொடுத்து கொடுப்பார். அதன் பின் பிற வீடுகளுக்கு  சென்று உணவு வாங்கி அருந்துவார். இவருக்கு ஆண் பெண் என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது. அனைவரிடமும் சமமாக பழகுவார். இதை சோதிக்க நினைத்தார் பரந்தாமன். திருக்கரம்பனூரில் தேவி, தேவதேவி என இரு தாசிகள் இருந்தனர். இவர்கள் உறையூர் அரசசபையில் ஆடி பாடி பரிசுகள் பல பெற்று திரும்பும் வழியில் விப்பிர நாராயணரின் தோட்டத்தின் அழகில் மயங்கி அதை பராமரிப்பவர் சந்திக்க சென்றார்கள். ஆனால் இவர்கள் வந்ததையோ, இவர்களது  பேச்சையோ கவனிக்காமல் பெருமாளுக்கு பூமாலை தொடுப்பதிலேயே கவனமாக இருந்தார். இவரது கவனத்தை திருப்பி தன் மீது எப்போதும் மாறாத அன்புவைக்க சபதம் ஏற்றாள். அதேபோல் பெருமாளுக்கு தானும் சேவை செய்வதாக கூறி கொஞ்சம் கொஞ்சமாக விப்பிர நாராயணரின் மனதில் இடம் பிடித்தார். தேவதேவி இல்லாமல் தான் இல்லை என்ற நிலைக்கு மாறி விட்டார்.  தன் குடும்பத்தை பார்க்க சென்ற தேவதேவியுடன் விப்பிரநாராயணனும் சென்றார். அவரிடம் இருந்த செல்வம் எல்லாம் தீர்ந்ததால் தேவ தேவியின் தாயாருக்கு அவர் மீது வெறுப்பு ஏற்பட்டது. எனவே வெளியே சென்று தோட்டத்தில் அமர்ந்தார். அப்போது பெருமாள் ஒரு பொன் கிண்ணத்தை விப்பிர நாராயணன் கொடுத்ததாக தேவதேவியின் தாயாரிடம் கொடுத்தார். மறுநாள் கோயிலில் தங்ககிண்ணம் காணாமல் தேவதேவியின் தாயாரையும், விப்பிரநாராயணனையும் விசாரித்து விட்டு இவரை மட்டும் சிறையிலடைத்தான் மன்னன். மன்னனின் கனவில் பெருமாள் தோன்றி விப்பிரநாராயணனின் பெருமைகளை கூறி அவரை விடுவிக்க கூறினார். அதன்பின் விப்பிரநாராயணன் தொண்டரடிப்பொடியாழ்வாராக நெடுங்காலம் பெருமாளை  பாடி இறைவனுடன் கலந்தார்.

கோவில் சிறப்பு

இந்த ஒரு வைணவக் கோயிலில்தான் கருடாழ்வான் மிகப்பெரிய திருமேனியுடன் கைக்கூப்பிய நிலையில் காட்சி தருகிறார். சுற்றுப்பிரகாரங்களில் ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள், மற்றும் விஷ்ணுவின் பல அவதாரங்கட்கு எனத் தனிச் சிறு கோயில்கள் உண்டு ஒவ்வொரு சிறு கோயிலுக்கும் அதற்கென்று தனித்தனியே கிணற்றுடன் கூடிய நந்தவனம் மற்றும் மடப்பள்ளி அமைந்துள்ளன. பெரிய கோயிலுக்கு சற்று வெளியே தள்ளி கிழக்கில் காட்டழகியசிங்கர் கோயில் , மேற்கே ஆண்டாள் கோயில், தெற்கில் திருக்குறளப்பன் சன்னதியும், வடக்கில் தசாவதார சந்நிதியும் அமைந்துள்ளன.

கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை பல்லவ அரசர்கள், 10-ஆம் நூற்றாண்டில் சோழ அரசர்கள், கி.பி.1223-25-ல் கலிங்க அரசர்கள், 1225-ல் மாறவர்மன் சுந்தர பாண்டியன், 14-ஆம் நூற்றாண்டில் ஹொய்சாள மன்னர்கள், 17-ஆம் நூற்றாண்டு மற்றும் 18-ஆம் நூற் றாண்டுகளில் விஜயநகர ராஜா மற்றும் மதுரை நாயக்கர், தஞ்சை நாயக்கர்கள் முதலானோர் இந்தக் கோயிலின் சுவர்கள் மற்றும் கோபுரங்களைக் கட்டியும், பழுதுபார்த்தும் வந்துள்ளனர்! அரங்கநாதரைச் சுற்றி இருக்கும் ஏழு (ஸப்த) பிராகாரங்களும் ஏழு (ஸப்த) லோகங்களாகக் கருதப் படுகின்றன. பொதுவாக ஆலயம், அதைச் சுற்றி ரத வீதிகள் என ஒரு நகரம் அமைந்திருக்கும். ஆனால், வீதிகளே பிராகாரங்களாக, நகரை தனக்குள் கொண்டிருக்கும் ஆலயம் இது.7-ஆம் பிராகாரம் மாட மாளிகை பிரதட் சணம் எனப்படுகிறது. இந்த பிராகாரத்தின் தெற்கு வாயிலாக இருந்த மொட்டை கோபுரம் அகோபில மடம் 44- வது பட்டம் அழகிய சிங்கர் ஜீயரால் கட்டப்பட்டது. இந்த கோபுரத்தின் உயரம் 236 அடி. உலகிலேயே அதிக உயரமானது. 7-வது பிராகாரத்தில் விஜய நகர சமஸ்தான அரண்மனை இருந்தது. 16-ஆம் நூற்றாண்டில் அச்சுதராயர், திருவனந்தபுரத்தின் மீது படையெடுத்தபோது, இந்த அரண்மனையைக் கட்டினார். அப்போது தன் மைத்துனனைப் படைகளுடன் திருவனந்தபுரம் அனுப்பினார். அவன் வெற்றி யுடன் திரும்பும் வரை ஸ்ரீரங்கத்திலேயே தங்கி இருந்தார் அச்சுதராயர். ஒரு முறை கிருஷ்ண ஜயந்தி உற்சவத்தின் போது ஸ்ரீரங்க நாதனும், கிருஷ்ண பரமாத்மாவும் திருவீதிவுலாவாக எழுந்தருளினர். தனது அரண்மனைக்கு முன்னால் ஸ்வாமிக்கு ஓர் உபயம் ஏற்படுத்தி னார் அச்சுத ராயர். அதற்காக ஏராளமான மானியங்களை ஏற்படுத்தினார். அந்த உபயம் இன்றும் தொடர்கிறது. (அரண் மனை இருந்த இடத்தில் பின்னர் ‘வாணி விலாஸ் பிரஸ்’ செயல்பட்டது. ஏராளமான ஞான நூல்களை வெளியிட்ட அந்த அச்சகம் இப்போது அங்கு இல்லை. அங்கு அச்சுதப்பர் ஏற்படுத்தி வைத்த உபயம் இன்றும் நடக்கிறது).

ஸ்ரீரங்கத்தின் சந்திர புஷ்கரணியைச் சுற்றி அதன் அங்கமாக தெற்கே- அசுவ தீர்த்தம், தென் கிழக்கில்- ஜம்பு தீர்த்தம், கிழக்கே- பில்வத் தீர்த்தம், வடமேற்கே- வகுள தீர்த்தம், வடக்கே- கதம்ப தீர்த்தம், வடகிழக்கில்- ஆம்ர தீர்த்தம், மேற்கே- புன்னாக தீர்த்தம், தென்மேற்கே- பலாச தீர்த்தம் ஆகிய எட்டு தீர்த்தங்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. நூற்றுக்கணகான சந்நிதிகள் உள்ள இந்த ஆலயத்தில் கோதண்ட ராமர், பரமபதநாதர், பெரிய வீர ஆஞ்சநேயர் சந்நிதிகள் சிறப்பானவை. தாயார் சந்நிதிக்கு செல்லும் வழியில் அரங்கனுக்கே வைத்தியம் செய்யும் விதமாக ஸ்ரீமந் நாராயணனே தன்வந்திரியாகக் காட்சியளிக்கிறார். கையில் அட்டைப் பூச்சி, அமிர்த கலசம் இவற்றுடன் தரிசனம் தரும் இவரை வழிபட்டால் தீராத நோயும் தீருகிறது. சாதாரணமாக எல்லாச் சந்நிதிகளின் மேலும் விமானம் அமைப்பது மரபு. ஆனால் தன்வந்திரி வைத்திய ராக இருப்பதால் நோயாளிகள், வியாதியஸ்தர்கள் அவரிடம் வருவார்கள் என்பதால் ஆகம விதிகளின்படி அவர் சந்நிதிக்கு மேல் விமானம் கட்டப்படவில்லை. உள் ஆண்டாள் சந்நிதிக்கு அருகிலும் வேணுகோபாலர் சந்நிதி மண்டபத்திலும் அழகிய சிற்பங்கள் பல காட்சி அளிக்கின்றன. வைணவ ஆச்சார்யர்யரான ஸ்வாமி வேதாந்த தேசிகன் சந்நிதி தனி ஆலயமாகத் தாயார் கோயில் அருகே அமைந்துள்ளது இங்குள்ள கருட பகவான் மிகப் பெரிய உருவத்துடன் கூரையை முட்டியவாறு அமர்ந்துள்ளார்.கம்ப ராமாயணம் அரங்கேறிய போது அதை அங்கீகரிக்கும் விதமாக சிரத்தை அசைத்து அதன் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டியவர் ஸ்ரீரங்கத்தில் அருள்பாலிக்கும் மேட்டு அழகிய சிங்கர். முன்னொரு காலத்தில் வங் காள அரசன் பெரும் செல்வத்தை ரங்கநாதருக்குக் காணிக்கையாக அளித்தான். ரங்கநாதர் அவற்றை பெற்றுக் கொள்ளாததால் அந்த தனம் வாசலிலேயே வைக்கப்பட்டது. அதை வடக்கிலிருந்து வந்த ஆரியர்கள் காவல் காத்தனர். அதனால் அந்த வாசல் ஆர்யபடாள் வாசல் என்று அழைக்கப்படுகிறது. பாண்டிய மன்னர்களில் சிறந்தவனான சுந்தர பாண்டியன் காணிக்கையாக அளித்த கிரீடம் பாண்டியன் கொண்டை என்று இன்றும் சிறப்பாக நம்பெருமாளுக்கு அணிவிக் கப்படுகிறது. வைணவ அந்தணர்களில் அரையர் என்பவர்கள் பரம்பரை பரம்பரையாக நம்பெருமாள் முன்பு நாலாயிர திவ்யப்பிரபந்த பாடல்களை இசைத்து அதற்கேற்ப நடனம் செய்வார்கள். அதற்கு அரையர் சேவை என்று பெயர்.

ஸ்ரீரங்கம் ஆலயத்தின் நிர்வாகம், கோயிலொழுகு ஆகியவற்றை சீர்ப்படுத்திய பெருமை வைணவ ஆச் சார்யரான ராமானுஜரையே சாரும். 120 ஆண்டுகள் வாழ்ந்து வைணவ சம்பிரதாயத்துக்குத் தொண்டு புரிந்த ராமானுஜர் கி.பி 1137-ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கத் தில் பரமபதம் அடைந்தார். ஆழ்வார்களில் தொண்டரடிப் பொடியாழ்வார், திருப் பாணாழ்வார் ஆகியோர் இங்கு மட்டுமே தொண்டு புரிந்து வாழ்ந்தவர்கள். நாதப்பிரம்மம் தியாகராஜ ஸ்வாமிகள் ஸ்ரீரங்கநாதரை தரிசித்து அவர் மேல் கீர்த்தனைகள் பாடியுள்ளார். இங்கு உத்திரை வீதியில் இரண்டு பிரம்மோற்சவங்கள் சித்திரை வீதியில் இரு பிரம்மோற்சவங்கள் என வருடத்தில் நான்கு பிரம்மோத்சவங்கள் நடைபெறுகின்றன. ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி அன்று ரத்னாங்கி அணிந்து உலா வரும் நம்பெருமாளை, படி தாண்டாத தாயார் தனது கோயிலிலிருந்து ஐந்து குழிகளிலும் தன் ஐந்து விரல்களை வைத்து மூன்று வாயில்கள் வழியாகக் கண்டு மகிழ்வாராம். அதைக் குறிக்கும் விதமாக தாயார் செல்லும் வழியில் ஐந்து குழிகள் தரையில் உள்ளன. வைகுண்ட ஏகாதசி அன்று மூலவர், தசா வதாரம் சித்திரிக்கப்பட்ட முத்தங்கி அணிந்து காட்சி தருகிறார்இங்கு ஒரு வருடத்தில் 114 நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. எல்லாப் பெருமாள் கோயில்களிலும் மூலவருக்கு ஆனி ஜ்யேஷ்டாபிஷேகத்தன்று மட்டுமே தைலக் காப்பு சாத்தப்படும். ஆனால்,  ரங்கத்தில் மட்டும் இத்துடன் கூட ஆவணி பவித்ரோற்சவத்தின் இறுதி நாளிலும் தைலக்காப்பு சாத்தப்படும். எனவே, ஸ்ரீரங்க நாதருக்கு மட்டும் இரு முறை தைலக்காப்பு..

முதல் திருச்சுற்று முதல் ஏழாம் திருச்சுற்று வரை

மூலஸ்தானத்திற்கு அருகே உள்ள முதல் திருச்சுற்று விமான ப்ரதக்ஷிணம் எனப்படும் தர்மவர்மா திருச்சுற்று என்று பெயர். தற்போது இதில் யாரையும் அனுமதிப்பதில்லை. இதற்கு வெளியே காயத்ரி மண்டபம் இருக்கிறது. இங்கு பெரிய பெருமாள், உபய நாச்சிமாருடன் கூடிய உத்ஸவர் நம்பெருமாளைத் தரிசிக்கலாம். 2வது திருச்சுற்று ராஜ மகேந்திரன் திருச்சுற்று எனப்படும். இங்க முக்கியமாக ரேவதி மண்டபம், அர்ச்சுன மண்டபம், கிளி மண்டபம், சந்தன மண்டபம், யாக சாலை, கோயில் கருவூலம், தெக்கலறை (பெருமாளுக்கும், தயாருக்கும் அணிவிக்கப்படும் ஆபரணங்கள் வைக்குமிடம்) ஆகியவற்றை காணலாம். 3வது திருச்சுற்றின் பெயர் குலசேகரன் திருவீதி என்பதாகும். இங்க பவித்ரோத்ஸவ மண்டபம், ஹயக்ரீவர் சரஸ்வதி சந்நிதிகள், வராகப்பெருமாள் சந்நிதி, வேத விண்ணப்ப கோஷ்டி மண்டபம், ஆஞ்சநேயர் சந்நிதி, ஊஞ்சல் மண்டபம், த்வஜஸ்தம்பம், பலிபீடம், பரமபதவாசல் ஆகியவையும் துரை மண்டபம் அரவிந்த நாச்சியார் திருமடப்பள்ளியும் காணலாம். நான்காவது திருச்சுற்று ஆலிநாடன் திருவீதி என வழங்கப்படுகிறது. இதற்குக் கார்த்திகை கோபுரவாசல் என்ற பெயரும் உண்டு. இதில் நம்மாழ்வார், மதுரகவி, திருநங்கையாழ்வார் சன்னதி, கொட்டாரம், மேலபட்டாபிராமர் சந்நிதி, முதலாழ்வார் மூவர் சந்நிதி, தீர்க்கக்கரை வாசுதேவ பெருமாள் சந்நிதி, தன்வந்திரி பெருமாள் சந்நிதி, 5 குழி 3 வாசல் சந்த்ரபுஷ்கரணி, கோதண்டராமர் சந்நிதி, பரமபதநாதன் சந்நிதி, கீழபட்டாபிராமன் சந்நிதி, பூச்சாத்து மண்டபம், திருமழிசையாழ்வார் சந்நிதி, பிரசாதங்கள் விற்பக்கப்படும் ஸ்ரீ பண்டாரம், கண்ணன் சந்நிதி, வாகன மண்டபம், சூர்யபுஷ்கரிணி, திருக்கச்சி நம்பி, ஆளவந்தார் சந்நிதி, தேவராஜன் கொறகு ஆகியவற்றைக் காணலாம். ஐந்தாவது திருச்சுற்று அகளங்கன் திருவீதி எனப்படும். இங்கு திவ்யப்ரபந்தத்தைக் கொணர்ந்த ஸ்ரீமந்நாதமுனிகள், ஸ்ரீஆண்டாள், வேணுகோபாலன், சக்ரத்தாழ்வார் சந்நிதிகள், வஸந்த மண்டபம், ரங்கநாச்சியார், தேசிகர், அழகியசிங்க பெருமாள் சந்நிதிகள் ஆயிரங்கால் மண்டபம், மணல்வெளி, சேஷராயர் மண்டபம், பிள்ளை லோகாச்சாரியார், பார்த்தசாரதி, உடையவர் சந்நிதிகள், அரும்பொருள் காட்சியகம், கோயில் அலுவலகம், திருப்பணாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், கூரத்தாழ்வான், விட்டல கிருஷ்ணன் சந்நிதிகள், ரங்கவிலாச மண்டபம், திருவந்திக் காப்பு மண்டபம், யானை வாகனத்திற்கான வட்டமணை என்னும் இடங்கள் காணப்படும். 6வது திருசுற்று திருவிக்ரமன் திருவீதி எனப்படும். இதை உள்திருவீதி (உத்தரவீதி) என்றும் அழைப்பர். ஒருபுறம் மதிலும் எதிர்பக்கத்தில் கட்டிடங்களும் காணப்படுகின்றன. இங்கு யானை கட்டும் இடம், அரையர் திருமாளிகைகள், தைத்தேர், ஆண்டவன் ஸ்ந்நிதி, அகோபிலமடம், கோயில் ஜீயர் சுவாமி மடம், மணவாளமாமுனிகள் சந்நிதி, மார்வாரி சத்திரம் ஆகியவை உள்ளன. 7ஆம் திருச்சுற்று மாடமாளிகை சூழ் திருவீதி எனப்படும். சித்திரைத்தேர், சில ஆச்சாரியார்களின் திருமாளிகைகள், விளைவித்தகர் மாளிகை, சில மடங்கள் , பாடசாலைகள், கோரதம் ஆகியவை உள்ளன.

ரங்கநாயகித் தாயார் சந்நிதிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில்தான் கம்பர் தனது ராமகாதையை அரங்கேற்றினார். பிள்ளைலோகச்சார்யார், பெரியவாச்சான் பிள்ளை, கூரத்தாழ்வான் நிகமாந்த மகாதேசிகன், பராசரபட்டர், மணவாள மாமுனிகள் போன்ற பல ஆச்சார்யார்கள் ரங்கநாதனைப் பற்றி பாடியுள்ளார்கள். பிறகு பிள்ளைபெருமாள் அய்யங்கார், தியாகராஜர், முத்து சுவாமி தீக்ஷிதர், ஸ்யாம சாஸ்திரிகள், அருணாசலக் கவிராயர் போன்ற அருளாளர்கள் பெருமாளைப் போற்றிப் பாடியுள்ளார்கள். காவேரி இரு பிரிவாகப் பிரிந்து வடதிருக்காவேரி, தென்திருக்காவேரி என்று அரங்கன் திரவடிகளை எப்போதும் ஸ்பரித்துக் கொண்ட இருக்கிறது. ஒன்பது வகையான புண்ய தீர்த்தங்கள் உண்டு என்று ஸ்ரீரங்கமகக்தமயம் கூறுகிறது. அவை சந்த்ர புஷ்கரணி, விஸ்வதீர்த்தம், நாவல் தீர்த்தம், அரசு தீர்த்தம், புன்னை தீர்த்தம், மகிழ தீர்த்தம், பொரசு தீர்த்தம், மாதீர்த்தம் கடம்ப தீர்த்தம் என்பன. இவைகளில் தற்போது நன்கு பராமரிக்கப்படுகிறது சந்த்ர புஷ்கரணி ஒன்றுதான்.கோயில் நிர்வாகத்தை ராமானுஜர் என்று ஏற்றுக் கொண்டாரோ அன்றிலிருந்து இன்று வரை அவரது கட்டளைப்படியே விழாக்காணும் நித்ய ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன. பெரிய பிராட்டியாரைத் தவிர பாண்டிய நாட்டுப் பெண் ஆண்டாள், சேர நாட்டு சேரகுலவல்லி, சோழ தேசத்து ராஜகுமாரி கமலவல்லி ரங்கநாதனையே மணாளனாக வரித்து அவன் திருவடி அடைந்தார்கள். பின் தொடர்ந்த வல்லி : முஸ்லீம் படையெடுப்பின்போது அவர்களால் கவர்ந்து செல்லப்பட்ட பல விக்ரகங்களுள் அழகிய மணவாளன் இருந்தாகவும், பெருமாளைத் திருப்பித்தருமாறு டில்லி வரை சென்று சுல்தானை கேட்டபொழுது அவைகளெல்லாம் அந்தப்புரத்தில் உள்ளன என்று சொல்லிவிட்டார். அழகிய மணவாளன் மீது எல்லையில்லா பக்தியும் காதலும் கொண்ட சுல்தானின் மகள் அவரைத் திருப்பித் தர மறுத்துவிட்டாள். பெருமாளின் திருமேனிக்கு எந்த ஆபத்தும் இல்லையென்று எல்லோரும் மகிழ்ந்தனர். பின்பு திருவரங்கத்தைச் சேர்ந்த பலர் “”உங்கள் புதல்வி எங்கள் பெருமாளை வைத்துக் கொண்டிருக்கிறாள்” என்று சொல்ல, அவனும் முடியுமானால் “” உங்கள் தெய்வத்தை நீங்களே அழைப்பித்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டார். கோயிலில் பாடும் அரையர்கள் என்கின்ற செந்தமிழ் ஒதுவார் தங்கள் தேவ கானத்தினாலே பெருமாளை ஆகர்ஷித்து எடுத்து வந்தனர். மயக்கத்தில் இருந்த சுல்தான் மகள் விழித்தெழுத்து பெருமாளைக் காணாமல் பதறினாள். அதிக பிரிவாற்றாமையால் தன் உயிரை விட்டாள் என்று கூறப்படுகிறது. பெருமாளின் இந்தப் பக்தைக்குப் “”பின்தொடர்ந்த வல்லி” என்ற பெயர் இடப்பட்டது. இன்றும் அர்ச்சுனா மண்டபத்தின் கிழக்கு மூலையில் “”துலக்க நாச்சியார்” என சித்திர வடிவில் இவரைத் தரிசிக்கலாம். இந்த சம்பந்ததால் பெருமாளுக்கு இன்றும் காலையில் ரொட்டி. பால்நிவேதனம் செய்கிறார்கள். திருமஞ்சன காலங்களில் உத்ஸவ மூர்த்திக்கு கைலி அணிவிக்கப்படுகிறது.

பாதை

திருச்சி நகரத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் ஸ்ரீரங்கம் உள்ளது.

கோயில் நேரம்

6 am to 12.30 pm and 4 pm to 9 pm

கோயில் தொலைபேசி எண்

+91 – 431- 223 0257, 243 2246.

கோயில் முகவரி

ஸ்ரீ அரங்கநாதர பெருமாள் கோயில்,

ஸ்ரீரங்கம்-620 006,

திருச்சி