திருவாரூர் – ஸ்ரீ தியாகராஜர் கோவில்

கோயில் பெயர்

ஸ்ரீ தியாகராஜர் கோவில்

தோற்றம் காலம்

2000 ஆண்டுகளுக்கு முன்பு தெய்வத்தின் பெயர்

மூலவர்:    வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார் (மூலட்டானம்-பூங்கோவில்) தியாகராஜர், வீதிவிடங்கர், தேவரகண்டப்பெருமான், தியாகப்பெருமான், ஆடரவக்கிண்கிணிக்காலழகர், செங்கழுநீரழகர், செவ்வந்தித்தோடழகர், கம்பிக்காதழகர், தியாகவிநோதர், கருணாகரத் தொண்டைமான், அசைந்தாடும் அப்பர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், கமலேசர், செம்பொன் தியாகர், தேவசிந்தாமணி, தியாகசிந்தாமணி

தாயார்:  அல்லியம்பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

தல விருட்சம்: பாதிரி.

தீர்த்தம்: கமலாலயம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், வாணி தீர்த்தம்

தேவாரம் பாடியவர்கள்:   அப்பர், சம்பந்தர், சுந்தரர்

ஸ்தல வரலாறு

தியாகராஜ சுவாமியின் திருமேனிதான் திருவாரூர் ரகசியம். இதை சோமகுல ரகசியம் என்பர்.  ஆறு சிவத்தலை விராட புருடனின் ஆறு ஆதாரங்கள் என்று போற்றுவது சைவமரபு. அம்முறையில் திருவாரூர் மூலாதாரத்தலம். பஞ்சபூத ஸ்தலங்களில் பூமிக்கான திருத்தலம் திருவாரூர் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறந்து விளங்குந்தலம் திருவாரூர். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும்.

புராண பெயர்(கள்):

க்ஷேத்ரவரபுரம், ஆடகேசுரபுரம், தேவயாகபுரம், முசுகுந்தபுரம், கலிசெலா நகரம், அந்தரகேசுபுரம், வன்மீகநாதபுரம், தேவாசிரியபுரம், சமற்காரபுரம், மூலாதாரபுரம், கமலாலயபுரம் சிவபெருமான் இத்தலத்தில் மட்டும் 364 திருவிளையாடல்கள் நிகழ்த்தியுள்ளார். திருவாரூரில் பிறந்தால் முக்தி என்பதால்,எமனுக்கு வேலை இல்லாமல் போனது. எனவே இங்கு எமனே,சண்டிகேஸ்வரராக இருந்து இறைவனை வேண்டி தன் வேலையை காப்பாற்றிக் கொண்டார். எமபயம் உள்ளவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு.

திருமால், திருமகள், பிரம்மா, இந்திரன், , அகத்தியர், விசுவாமித்திரர், மகாபலி, துர்வாசர், சுகுந்தன், தசரதன், ஸ்ரீராமன், லவ-குசர். புரூரவஸு, தேவர், யட்சர், கின்னரர், கிம்புருடர், சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், தண்டி அடிகள் என பலரும் தியாகேசரை வழிபட்டு, வரம் பெற்ற திருத்தலம் இது!

திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம்காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு. சிதம்பர ரகசியம் போல தியாகராஜருக்கு பின்னுள்ள மூலஸ்தானத்தில் ரகசியம் உள்ளதாக கூறப்படுகிறது. நினைத்தாலே முக்தி தரும் தலம் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தான் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை நடத்தப் படும். ஆனால், திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தினமும்  மாலை 6 மணிக்கு பிரதோஷபூஜை நடத்தப்படுவது இக்கோவிலின் தனிச்சிறப்பு. இதை ‘நித்தியபிரதோஷம்` என்பார்கள். இந்த நேரத்தில் தியாகராஜரை முப்பத்து முக்கோடி தேவர்களும் தரிசிப்பதாக ஐதீகம். எனவே, இந்தக்கோயிலுக்கு மாலை வேளையில் சென்றால், எல்லா தேவர்களின் அருளையும் பெற்ற புண்ணியம் கிடைக்கும். நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம். எமனே சண்டிகேஸ்வரரை ஆட்கொண்டு எமபயம் போக்கும் திருத்தலம் . சுந்தரருக்காக (நால்வரில் ஒருவர் ) சிவனே வீதியில் நடந்துசென்று பெண் கேட்ட திருத்தலம். நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த திருத்தலம்.

பசுவிற்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த திருத்தலம். திருவாரூர் கோவில் அளவும் , தெப்பக்குளமும் ஒரே அளவுகொண்டதாகும். இக்கோவில் 9 இராஜகோபுரம், 80 விமானம், 12 உயர மதில்கள் , 13 மண்டபங்கள், 15 தீர்த்த கிணறுகள், 3 தோட்டம், 3 பிரகாரம் என பிரமாண்டமான கட்டட அமைப்பாகும்.24 உட்கோவில்களையும், 365 சிவலிங்ககளையும், 86 விநாயக சிலைகளையும் கொண்ட திருத்தலம் திருவாரூர் ஆகும்.

கோயில் ஐந்து வேலி

குளம் ஐந்து வேலி

ஓடை ஐந்து வேலி

என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம்.  ஐந்து வேலி – 1000 அடி நீளம் 700 அடி அகலம்.  இத்தலத்தின் கோயில், கமலாலயக் குளம், இறைவனுக்குச் சார்த்தப்பெறும் செங்கழுநீர் மலரோடை இவை ஒவ்வொன்றும் ஐந்துவேலி பரப்புடையது. கரிகாலன் கி.பி. 50 முதல் 95 வரை ஆண்டதாக வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.  கரிகாலனுக்கும் முற்பட்ட புராண காலச் சோழர்களான முகுந்தன், புறாவுக்காக தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி, கன்றுக்காக மகனைக் கொன்ற மனுநீதிகண்ட சோழன் மூவரும் வாழ்ந்த இடமாக கூறப்படும் இடம் திருவாரூர் ஆகும்.  திருவாரூரையும் தியாகராசர் கோயிலையும் பிரித்து வரலாறே எழுத முடியாது.

காவிரி ஆற்றின் வளமான வண்டல்பகுதியை உள்ளடக்கியது திருவாரூர் வட்டம். சோழ அரசர்கள் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து ஊர்களுள் இதுவும் ஒன்று. (மற்ற ஊர்கள்: காவிரிப்பூம்பட்டினம், உறையூர், செய்ஞலுர், கருவூர்). சப்த விடங்கத் தலங்களுள் இந்தத் தலமும் ஒன்று. வி+டங்கம் என்றால் உளியினால் செதுக்கப்படாதது என்று பொருள். மூலவர் வன்மீகநாதர் சுயம்புத் திருமேனி. தியாகராஜர் இங்கே, சோமாஸ்கந்தராகக் காட்சி தருகிறார் தியாகராஜ சுவாமியின் திருமேனிதான் திருவாரூர் ரகசியம். இதை சோமகுல ரகசியம் என்று போற்றுகிறார்கள் சிவாச்சார்யர்கள்.  ஸ்ரீசக்ரம் இறைவனின் மார்பை அலங்கரிப்பதால் கூடுதல் சிறப்பையும் சாந்நித்தியத்தையும் பெறுகிறது ஆலயம்! நித்திய பூஜை, திருமஞ்சனம் ஆகியவை மூலவரின் அருகிலிருக்கும் மரகத லிங்கத்துக்கே நடைபெறுகிறது.  தில்லை நடராஜ சபை- பொன் அம்பலம். ஆரூர் ஸ்ரீதியாகராஜ சபை- ‘பூ அம்பலம்’ என்று பெயர். வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படுவதால் இந்தப் பெயர். பஞ்ச தாண்டவங்களில் இங்கு அஜபா தாண்டவம் நடைபெறுகிறது.  வாயால் சொல்லாமல் சூட்சுமமாக ஒலிப்பதால் இதற்கு அஜப என்று பெயர்.  அஜபா என்றால் ஜபிக்கப்படாதது என்று அர்த்தம். இந்த வித்தையை விளக்குவதே திருவாரூர் தியாகராஜரின் அஜபா, ஹம்ஸ நடனத் தத்துவம். எல்லாக் கோயில்களிலும் பாடும் முன் திருச்சிற்றம்பலம் என்பார்கள். இங்கு ‘ஆரூரா தியாகேசா’ என இரு முறை கூறுவர். தில்லை நடராஜ சபை- பொன் அம்பலம். ஆரூர் ஸ்ரீதியாகராஜ சபை- ‘பூ அம்பலம்’ என்று பெயர். வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படுவதால் இந்தப் பெயர் அமைந்தது. மணித் தண்டு, தியாகக் கொடி, ரத்தின சிம்மாசனம், செங்கழுநீர் மாலை, வீரகண்டயம், அஜபா நடனம், ஐராவணம், அரதன சிருங்கம், பஞ்சமுக வாத்தியம், பாரி நாகஸ்வரம், சுத்த மத்தளம், குதிரை-வேதம், சோழ நாடு, ஆரூர், காவிரி, பதினெண் வகைப் பண்- ஆகியவை தியாகராஜரின் 16 விதமான அங்கப் பொருட்கள்.

தியாகேசர் சந்நிதியில், மேல் வரிசையில் ஒன்பது விளக்குகள் உள்ளன. நவக்கிரகங்கள் இங்கு தீப வடிவில் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்! பெருமானுக்கு முன் ஆறு மற்றும் ஐந்து அடுக்குகள் கொண்ட இரு விளக்குகள் உள்ளன. இவை ஏகாதச ருத்திரர்களைக் குறிக்கும். சந்தனத்தின் மீது குங்குமப் பூவையும் பச்சைக் கற்பூரத்தையும் சேர்த்து, உத்ஸவ வீதிகளில் ஆடிய அசதி தீர, தியாகேசருக்கு மருந்து நிவேதிக்கப்படுகிறது. இது சுக்கு, மிளகு, திப்பிலி, வெல்லம் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது. அத்துடன், தியாகராஜர் சந்நிதியில் ‘திருச்சாலகம்’ எனும், தென்றல் தவழும் சாளரம் உள்ளது குறிப்பிடத் தக்கது. தியாகராஜருக்கு மாலை நேர பூஜையின் போது 18 இசைக் கருவிகள் (சுத்த மத்தளம், கர்ணா, சங்கு, எக்காளம், நகரா, நமுகி (நட்டுமுட்டு), கிடுகிட்டி (கொடுகொட்டி), புல்லாங்குழல், தாரை, பாரிநாயனம், பஞ்சமுக வாத்தியம், தவண்டை, பேரிகை, பிரம்மதாளம், வாங்கா, திருச்சின்னம், தப்பட்டை, முக வீணை) இசைக்கப் பட்டன என்கிறார் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன்! ஆரூர்ப் பெருமானை ‘பவனி விடங்கர்’, ‘விடங்கராய் வீதி போந்தார்’ என்றெல்லாம் சிறப்பிக்கிறது தேவாரம். இவருக்கு ‘தக்கார்க்குத் தக்கான்’ எனும் பெயரும் உண்டு. மற்றும் சில பெயர்களைப் பார்ப்போமா. மூலவர் வன்மீகநாதர் தலையில் பிறைச்சந்திரனை சூடியுள்ளதைப் போல, இத்தலத்து நாயகி கமலாம்பிகையும் சந்திரனை நெற்றியில் சூடியிருக்கிறாள். கலை மகள், மலைமகள், அலைமகள்  ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமாக அம்பிகை விளங்குகிறாள். இத்தலத்துக்கு சென்று தியாகேசரை வணங்கினால் , அம்மன் சந்நதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும். கலை மகள், மலைமகள், அலைமகள்  ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமாக அம்பிகை விளங்குகிறாள். இத்தலத்துக்கு சென்று தியாகேசரை வணங்கினால் , அம்மன் சந்நதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும்.

அம்மன் சன்னதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும். ஆடிப் பூரம், ஆடி வெள்ளி, தை வெள்ளி ஆகிய தினங்களில் இங்குள்ள அம்பாளை வழிபட்டால் அருள்பெறலாம். அம்பாள் கோயிலின் மேற்கு மூலையில் அக்ஷர பீடமுள்ளது. இதில் பீடமும் ஐம்பத்தோரு எழுத்துக்கள் எழுதப்பெற்ற திருவாசியுமே உள்ளன. அசைந்தாடும் பெருமாள், அடிக்காயிரம் பொன்னளிப்பவர், ரத்தின சிம்மாசனாதிபதி, கருணாகரத் தொண்டை மான், கனகமணித் தியாகர், தியாக விநோதர், மணித் தண்டில் அசைந்தாடும் பெருமான், செவ்வந்தித் தோடழகர், செம்பொற் சிம்மாசனாதிபதி, இருந்தாடழகர், கம்பிக் காதழகர், வசந்த வைபோகத் தியாகர், தேவசிந்தாமணி, முன்னிலும் மும்மடங்கு பின்னழகர், தியாக சிந்தாமணி, அந்திக் காப்பழகர், தியாகப் பெருமான், செம்பொன் தியாகர், கிண்கிணிக்காலழகர், தேவரகண்டன் இப்படிப் பல திருநாமங்கள் இறைவனுக்கு! இங்கு மாலை வேளையில் தேவேந்திரன் வந்து பூஜிப்பதாகவும், சாயரட்சை பூஜையின் போது தேவர்களும் ரிஷிகளும் கலந்து கொள்வதாகவும் ஐதீகம். தியாகேசரின் அசல் விக்கிரகத்தை ‘செங்கழுநீர்ப்பூ மூலம் சரியாகக் கணித்தான் முசுகுந்தன். எனவே, தியாகேசருக்கு செங்கழுநீர்ப்பூ சாத்துவது சிறப்பு. மூன்றாவது பிராகாரத்தில், வடமேற்குத் திசையில் ஈசான்யத்தை நோக்கி அருள்மிகு கமலாம்பிகை திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த அம்பிகை மூன்று தேவியரின் சங்கமம். (க- & கலைமகள், ம- & மலைமகள், ல- & அலைமகள்). அம்பிகைக்குத் தனிக் கொடி மரம் உண்டு. சர்வேஸ்வரனைப் போன்று தன் சிரசில் கங்கையையும், பிறையையும் சூடி, யோக வடிவில் அமர்ந்திருக்கிறாள். அம்பாள் கோயிலின் மேற்கு மூலையில், 51 அட்சரங்கள் எழுதப்பெற்ற அட்சர பீடமும், திருவாசியும் உள்ளன. கமலாம்பிகை கருவறையின் அணுக்க வாயிலின் இரு புறமும் சங்க- பதும நிதிகள் உள்ளன. இந்தத் தலத்தின் ஆதிசக்தியான நீலோத்பலாம்பிகைக்கும் (அல்லியங்கோதை) தனிச் சந்நிதி உள்ளது. நான்கு கரங்கள் கொண்ட இவளின் அருகே இடுப்பில் முருகப் பெருமானைத் தாங்கியபடி தோழி ஒருத்தி காட்சி தருகிறாள். அம்பிகை, தன் இடக் கரங்களுள் ஒன்றால் முருகப் பெருமானின் தலையைத் தொட்டபடி காட்சியளிக்கிறாள். இந்தக் கோயிலில் எரிசினக் கொற்றவை (ரௌத்திர துர்கை) சந்நிதி உள்ளது. இவளை ராகு காலத்தில் வழிபட்டால் திருமணத் தடை அகலும். கோயிலுக்கு எதிரில் அழகிய திருக்குளம். கமலாலயம் என்று பெயர்.பங்குனி உத்திரத்தில் இங்கு நீராடினால், கும்பகோணத்தில் 12 மகாமகம் நீராடிய பலன் உண்டு என்பது ஐதீகம். இந்தக் குளக்கரையில் மாற்றுரைத்த விநாயகர் எழுந்தருளி உள்ளார். விருத்தாசலத்தில் இறைவனிடம் பொன் பெற்ற சுந்தரர் அதை அங்குள்ள மணிமுத்தா நதியில் இட்டு, திருவாரூர் வந்து கமலாலயக் குளத்தில் பெற்றுக் கொண்டார் என்று ஸ்தல வரலாறு தெரிவிக்கிறது. பொன் தரமானவையா என்று மாற்றுரைத்துப் பார்த்ததால், இந்தப் பெயர்.  இங்கு தெப்பத் திருவிழா 3 நாட்கள் நடைபெறும்.  நாள் ஒன்றுக்கு மூன்று சுற்று வீதம் நடைபெறும் தெப்பத்தில் ஸ்ரீகல்யாண சுந்தரரராக பவனி வருவார் சிவபெருமான்! துர்வாச முனிவருக்காக கமலாலயத் தீர்த்தத்தில் கங்கையை வரவழைத்தார் சிவபெருமான்.  அதனால் இந்தத் தீர்த்தத்துக்கு ‘கங்காஹ் ரதம்’ என்றும், துர்வாசரின் தாபத்தைத் தீர்த்ததால், ‘தாபஹாரணீ’ என்றும் திருநாமம் வந்தது.  இதில் நீராடினால் கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும்.  இந்தத் தீர்த்தத்தின் தென்கரையில் துர்வாச மகரிஷி மடம் இருக்கிறது. தீர்த்தக் கரையில் பர்ணசாலை அமைத்து, கமலநாயகி எனும் பெயரில் தவம் செய்தாள் அம்பிகை. இதனால், பங்குனி மாதம், பௌர்ணமி, சுவாதி நட்சத்திரத்தில் தியாகராஜர் – கமலநாயகி திருமணம் நடந்தது. இங்கு உள்ள அழகான ஆழித் தேருக்கு சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் விஷமி ஒருவன் தீவைத்தான். தேரை புனரமைப்பு செய்யும் பணியில் முக்கியமானவர் எழுலூர் ஸ்ரீமான் சுப்பராய வாத்தியார். இவர் பின்னாளில் ‘ஸ்ரீநாராயண பிரம்மேந்திரர்’ எனப்பட்டார். இங்கு ஆனந்தீஸ்வரர், தட்சிணேஸ்வரர், அகத்தீஸ்வரர், சித்தீஸ்வரர், அல்வாதீஸ்வரர், பந்தேஸ்வரர், பிரம்மேஸ்வரர், புலஸ்திய ரட்சேஸ்வரர், அண்ணாமலேஸ்வரர், வருணேஸ்வரர், பாதாளேஸ்வரர், பாண்டியநாதர், சேரநாதர் என்று சந்நிதிகள் நிறைய உண்டு! எட்டு துர்கைகள், இங்கு அருள்பாலிக்கின்றனர். முதல் பிராகாரத்தில் மகிஷாசுரமர்த்தினி பிரதான துர்கையாக திகழ்கிறாள். தவிர, முதல் பிராகாரத்தில் மூன்றும், 2-ம் பிராகாரத்தில் நான்கும், கமலாம்பாள் சந்நிதியில் ஒன்று. ஆக, எட்டு துர்கைகள். இங்கு சுமார் 15 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் காட்சி அளிக்கிறார். இதை விசேஷமாகச் சொல்கின்றனர் பக்தர்கள். இங்குள்ள நவக்கிரக மூர்த்தியர் வக்கிரம் இன்றி ஒரே வரிசையில் தென் திசையில் உள்ள ஸ்ரீ தியாகராஜஸ்வாமி நோக்கி அமைந்துள்ளனர். நளனும் சனியும் வழிபட்ட தலம் இது. வடக்கு கோபுரத்தின் எதிரில் வெளிப்புறச் சுவரை ஒட்டி சிவன் சந்நிதி உள்ளது. இவர் ஒட்டுத் தியாகேசர் என்பார்கள். விறன் மிண்ட நாயனார், ஆலயத்துக்குள் போக விடாமல் தடுத்ததால் மனம் வருந்தினார் சுந்தரர். அவரது வருத்தத்தைப் போக்க ஸ்ரீதியாகராஜ பெருமான் சுந்தரருக்குக் காட்சியளித்தார். இங்குள்ள விஸ்வகர்ம லிங்கத்துக்கு ஒற்றைப் படை எண்ணிக்கையில் செங்கல் வைத்து அபிஷே கித்து வழிபட்டால் வாஸ்து தோஷம் நீங்கும். 2&ம் பிராகாரத்தில் ‘ஜுரஹரேஸ்வரர்’ சந்நிதி உள்ளது. நோயாளிகள் இவரை வேண்டி, ரசம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், நோய்களிலிருந்து விடுபடலாம்.  இதே பிராகாரத்தில் மேற்கு நோக்கி உள்ளது அசலேஸ்வரர் சந்நிதி. அப்பரால் பாடப்பட்டது. சமற்காரன் என்ற அரசனின் கடும் தவத்துக்கு மகிழ்ந்து அவன் பிரதிஷ்டை செய்த லிங்கத் திருமேனியில் எழுந்தருளியதால் அசலேசர் ஆனார். அசலேஸ்வரருடன் பஞ்சபூத லிங்கங்களாக இறைவன் காட்சி தருவது சிறப்பு. நமிநந்தியடிகள், எண்ணெய்க்குப் பதிலாகக் குளத்து நீரைக் கொண்டு இறைவனுக்கு விளக்கு எரித்த திருத்தலம் இது. சங்கீத மும்மூர்த்திகளான தியாகய்யர், முத்துஸ்வாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி அவதரித்த தலமும் இதுவே!

இக்கோயிலிலுள்ள ஆயிரங்கால் மண்டபம், கல்தூண்களை மட்டுமே உடையது. விழாக்களின்போது அவற்றின் மீது பந்தல் அமைத்துக் கொள்வர். இம்மண்டபத்தை சேக்கிழார் பாடியுள்ளார்.  நின்ற நிலையில் நந்தி இருப்பது இக்கோயிலின்  சிறப்பாகும். தியாகராசருடைய ‘அசபா நடனம்’ இவ்வூர்த் திருவிழாக்களில் சிறப்பாக நடைபெறுகிறது. மனுநீதிச் சோழன் கதை, அழகிய கல் சித்திரமாகக் கீழைக் கோபுர வாயிலருகே காணப்படுகிறது. சுந்தரரின் மனைவியரான பரவையார் பிறந்த ஊர் இதுவே. பரவை நாச்சியாருக்கென தியாகராசர் கோயில் தெற்குக் கோபுரத்தின் தென்புறத்தில் தனி ஆலயம் உள்ளது. தண்டபாணிக் கோயில், இராஜதுர்கை கோயில், மாணிக்க நாச்சியார் கோயில், திருவாரூர்ப் பரவையுண் மண்டலி முதலியன இவ்வூரில் காணத்தக்கவை. இக்கோயிலிலுள்ள தேவாசிரிய மண்டபத்தில்தான் சுந்தரருடைய திருத்தொண்டத் தொகையை இயற்றப்பட்டதாக கூறுவர். 64 சக்தி பீடங்களில் திருவாரூர் முக்கியமான ஊர். இக்கோயிலில் ஞானசக்தியாகவும் (கமலாம்பிகை), கிரியா சக்தியாகவும் (நீலோத்பலாம்பாள்), இச்சாசக்தியாகவும் (கொண்டி) வடிவு கொண்டு அருள் புரிகிறாள். இக்கோயிலில் உள்ள சித்தீஸ்வரம், மேதா தட்சிணாமூர்த்தி சன்னதியில் தருமபுர ஆதீன நிறுவனர் உபதேசம் பெற்றதாக கருதப்படுகிறது. 17 ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மன்னன் சகாஜி திருவாரூர் தியாகராஜர் மீது தமிழில் பல நூறு கீர்த்தனைகள் பாடியுள்ளார். இவரும் இவருக்குப் பின்னர் முதல் சரபோஜியும் ஆண்டபோது திருவாரூரில் மன்னரின் பிரதிநிதியாக சாமந்தனார் ஒருவர் பணிபுரிந்தார். அவருடைய மந்திரியாய் பணிபுரிந்தவர் சிங்காதனம். இவர் சிறந்த ஓவியர். இவர் வரைந்த ஓவியங்களில் கோயிலின் மண்டபத்தில் இன்றும் உள்ளது. அதன் வாயிலாக 17 ஆம் நூற்றாண்டில் ஆரூர் திருக்கோயில் எப்படித் திகழ்ந்துள்ளது என்றும் ஆரூர் மக்களின் பண்பாடு, அவர்களின் இயல், இசை, கூத்துக்கள் பற்றி விளக்கமாக நாம் காண முடிகிறது. ‘திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்’ என்று சுந்தரர் தேவாரம் பாடுகிறது. இதைவிட இவ்வூர்ச் சிறப்பு பற்றி வேறு சொல்ல வேண்டுமா?

திருவாரூர்த் தேர்

அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடியாகும். விமானம் வரை தேர்ச்சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி 48 அடி, விமானம் 12 அடி. தேர்க்கலசம் 6 அடி என அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம் 96 அடியாகும். இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள் உள்பட அலங்கரிக்கப்படாத மரத்தேரின் எடை சுமார் 220 டன்களாகும். இதன் மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகளும், 50 டன் எடையுள்ள மூங்கில்களும், சுமார் 10 டன் எடையுள்ள சவுக்கு மரங்களும் பயன்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன. திருச்சி பாரத மிகு மின் நிறுவனத்தார் இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள், மற்றும் ஹைட்ராலிக் பிரேக் போன்ற சாதனங்களைப் பொருத்தினர். 10 சக்கரங்களுக்குப் பதில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இரும்புக் கயிறு, ஹைட்ராலிக் பிரேக் போன்றவற்றின் எடையைக் கூட்டினால் தேரின் எடை சுமார் 300 டன்களாகும். நான்கு வடங்களும் ஒவ்வொன்றும் சுமார் 425 அடி நீளம் கொண்டவை. வடம் இழுக்கப் பயன்படும் கயிற்றின் சுற்றளவு 21 அங்குலமாகும். இந்த மாற்றங்களால் சுமார் 10 ஆயிரம் பேர் சேர்ந்து இழுக்க வேண்டிய இத்தேரை மூவாயிரம் பேர் சேர்ந்து இழுத்தாலே நகரும் என்பது தற்போதைய நிலை. ‘திருவாரூர்த் தேரழகு’ என்றும் ‘திருவாரூர்த் தேரசைவது போல் அசைகிறான்’ என்ற பழமொழியும் நாட்டு மக்களிடம் திருவாரூர் தேர்ப்பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது என்பதை அறியலாம். ‘ஆழித்தேர் வித்தகனே நான் கண்டது ஆரூரே’ என்று திருநாவுக்கரசர் சொல்கிறார். அவர் காலம் 7 ஆம் நூற்றாண்டு. இதன்மூலம் 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தேர்த்திருவிழா நடந்து வருவதை அறியலாம். மற்ற ஊர்களில் உள்ள தேர்கள் அரைத்தேர், முக்கால் தேர்தான். திருவாரூர் தேரே முழுத் தேராகும். தமிழகத் தேர்களில் திருவாரூர் தேரே பெரியதாகும். இதனால் இதனை ‘ஆழித்தேர்’ என்று அழைக்கின்றனர். ‘ஆழி’ என்பது சக்கரமாகும். மனுநீதிசோழன் தன் மகன் கன்றைக் கொன்றதால், மகனையே தன் தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதியைக் காத்ததால் இத்தேர் திருவிழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

1748இல் தேர்த் திருவிழா நடைபெற்றதற்கான குறிப்பு தஞ்சை அரண்மனை சரஸ்வதி மகால் நூலக மேயடி ஆவணம் கூறுகிறது. 1765 ஆம் ஆண்டு தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா, திருவாரூர் தேர் விழாவுக்கு வருகை தந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. 1926 ஆம் ஆண்டு தேரோட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் திருவாரூர் தேர் முழுவதும் எரிந்தது. 2 நாட்கள் எரிந்ததாக கூறுவர். பின்னர் 1928 ஆம் ஆண்டு புதுத்தேர் உருவாக ஆரம்பித்து 1930 ஆம் ஆண்டு மார்ச் 3ந் தேதி மீண்டும் ஓடியது. இது இன்று நாம் காணும் தேராகும். பின்னர் 1948 ஆம் ஆண்டோடு தேரோட்டம் நின்றுவிட்டது. 1970 ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி மற்றும் வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியார் போன்றோரின் முன் முயற்சியால் மீண்டும் ஓடத் தொடங்கியது கடந்த பல வருடங்களாக திருத்தேர் ஓடும் போது ஆரூரா தியாகேசா என தேரில் இருந்து பக்திமணம் கமழ குரலை ஓங்கி ஒளிப்பவர் திரு.ராமசாமி அவர்கள் ஆரூரான் கரும்பு ஆளையில் வேலைபார்க்கிறார் கும்பகோணத்தை சேர்ந்தவர்.

திருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவர் தியாகராசரைத் தமது மார்பில் வைத்துப் பூசித்தார். திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவர் நடமாடினார். பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தார்; அதன்பின் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இந்திரனால் வழங்கப்பெற்றது. (இத்துடன் வழங்கப்பட்ட மேலும் ஆறு தியாகராச மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களுடனே இவை சப்த(ஏழு) விடங்கத் தலங்கள் எனப்படும். இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின் போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம். கமலை என்னும் பராசத்தி தவம் செய்த  பதி. எல்லாச் சிவாலயங்களின் சாந்நித்யமும் சாயரக்ஷை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம். திருவாரூர் நகரமும் ஆலயமும் சிவபெருமானின் ஆணைப்படி விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது என்கின்றன புராண ங்கள். வருட ஆரம்பமான வசந்த காலத்தில் பௌர்ணமி அன்று, குரு சந்திர யோகம் சேர்ந்த கடக லக்கினத்தில், புண்ணியபுரம் எனும் திருவாரூரின் நடுவில் தியாகபதியாகத் தோன்றினார் சிவபெருமான். அப்போது திருக்கோயிலின் நடுவே லிங்கமாகவும், தியாகராஜ வடிவமாகவும் தோன்றினார். இங்கு உள்ள தியாகராஜர், முதலில் திருமாலால் திருப்பாற்கடலில் வழிபடப் பெற்றார். பின்னர் இந்த தியாகராஜ மூர்த்தம், திருமாலால் இந்திரனுக்கும், இந்திரனால் முசுகுந்த சக்ரவர்த்திக்கும் அளிக்கப்பட்டது.

சப்தவிடங்கத் தலங்கள்

சப்தவிடங்கத்தலங்களில் உள்ள இறைவன் பின்வரும் நிலையில் அமைகின்றனர்.

திருவாரூர் – தியாகராசப்பெருமான்

திருநள்ளாறு – நாகவிடங்கர்

நாகைக்காரோணம் – சுந்தரவிடங்கர்

திருக்காராயில் – ஆதிவிடங்கர்

திருக்குவளை – அவனிவிடங்கர்

திருவாய்மூர் – நீலவிடங்கர்

வேதாரண்யம் – புவனிவிடங்கர்

சப்தவிடங்க நடனங்கள்

ஒவ்வொரு தலத்திலும் இறைவன் ஆடும் ஆட்டத்திற்கு ஒவ்வொரு பெயர் உள்ளது.

திருவாரூர் தியாகராசப்பெருமான் – உயிரின் இயக்கமான மூச்சு உள்ளும் வெளியும் போய்வரும் உன்னத இயக்கத்தை உணர்த்தும் அஜபா நடனம்

திருநள்ளாறு – பித்தன் ஆடுவது போன்ற உன்மத்த நடனம்

நாகைக்காரோணம் – கடல் அலைகள் எழுவது போன்று உள்ள தரங்க நடனம்

திருக்காராயில் – கோழியைப் போல் ஆடும் குக்குட நடனம்

திருக்குவளை – வண்டு மலருக்கும் குடைந்து குடைந்து ஆடுதல் போன்று உள்ள பிருங்க நடனம்

திருவாய்மூர் – தாமரை மலர் அசைவது போன்றுள்ள கமல நடனம்

வேதாரண்யம் – அன்னப்பறவை அடியெடுத்து வைத்தாற்போலுள்ள ஹம்சபாத நடனம்

இத்தலங்களில் சிவபெருமான் ஆடும் தாண்டவங்கள் சப்த விடங்க தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

செங்கல் கட்டுமானமாக இருந்த ஆலயம் இது. சோழப் பேரரசி செம்பியன் மாதேவியால் பிறகு கற்றளியாக மாற்றி அமைக்கப்பட்டது. முதலாம் ஆதித்த சோழனால் கி.பி. 9-ம் நூற்றாண்டு) கட்டப்பட்ட இந்தக் கோயில், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் மற்றும் நாயக்கர், விஜய நகர, மராட்டிய மன்னர் களால் பராமரிக்கப்பட்டிருக்கிறது. முதலாம் ஆதித்தன் (கி.பி. 871-907) காலக் கல்வெட்டு முதல் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மராத்திய மன்னர் சரபோஜி காலம் வரையிலான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. முற்கால சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்டிருக்கலாம் என்ற கருத்தே வலிவு பெற்றிருக்கிறது. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்றது திருவாரூர். 330 தேவாரப்பாடல்களும், திருவாசகப் பாடல்களும் உள்ளன. இது தவிர திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், பன்னிரு திருமுறைகளிலும் போற்றப்பட்டுள்ளது. அருணகிரிநாதர், தெலுங்கிசை மும்மூர்த்திகள், கயிலை ஞானப்பிரகாசர், குருஞானசம்பந்தர், இரட்டைப்புலவர்கள், அந்தகக்கண் வீரராகவ முதலியார், மராட்டிய மன்னர் சகாஜி, வள்ளலார் முதலியோராலும், தமிழ், தெலுங்கு, மராட்டி, சம்ஸ்கிருத இலக்கியங்களிலும் இவ்வூரைப்பற்றி பாடப்பட்டுள்ளன.

அருட்திரு தியாகராஜசாமி கருவறை விமானத்துக்கு தங்கத்தகடு போர்த்திய முதலாம் இராஜேந்திரன் குடமுழுக்கும் செய்வித்ததாக இக்கோயிலின் கல்வெட்டு கூறுகிறது. இக்கோயிலின் ராஜகோபுரம் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டதென்று திருபுவனம் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இரண்டாம் இராஜாதிராஜன் பெரிய கோபுரத்தையும் சபாபதி மண்டபத்தையும் கட்டினான். இரண்டாம் இராஜேந்திரன் வீதிவிடங்கர் எழுந்தருளியுள்ள கருப்பக் கிருகத்தையும், வன்மீகநாதர் கருவறையையும் பொன்வேய்ந்தான் என்பதும், திருமுறை ஆசிரியர்களின் திருநாட்களைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பதும், திருவிளக்குப் பணிக்காகவும் பூசை முதலியவற்றுக்காகவும் சோழ மன்னர் நிலம் அளித்தனர் என்பதும் இங்குள்ள கல்வெட்டுக்களால் தெரிய வருகிறது.

முசுகுந்தனும் சப்தவிடங்களும்

ஒரு சமயம், லோகநாயகன் சிவபெருமான், மனித வடிவம் கொண்டு ஒரு வில்வ மரத்தினடியில் தியானத்தில் அமர்ந்தார். அம்மரத்தின் மேல் ஒரு குரங்கு உட்கார்ந்திருந்தது. அது மரத்தில் உள்ள வில்வ இலைகளை பறித்து வாயிலிட்டு கடித்துக் கீழே துப்பியது. அவ்விதம் விழுந்த வில்வ இலைகள் தியானத்தில் இருந்த ஈசன் மீது பட்டு அவரை மறைத்து சிறுகுண்று போல் ஆனது. தியானம் கலைந்து கண்களை திறந்து பார்த்தார் ஈசன். தன் மேனி முழுவதும் அர்ச்சனை செய்யப்பட்டதுபோல், வில்வஇலைகள் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். தன் சுய உருவில் ஜடாமுடியும், பிறையும், திரிசூலமும், புலித்தோல் ஆடையுமாய் காட்சி தந்த பெருமான், மரத்தின் மேலே இருந்த குரங்கை பார்த்து ஐந்தறிவு பெற்ற விலங்கினமாய் இருந்தாலும், வில்வஇலைகளால் அர்ச்சித்து என்னை மகிழ்வித்திருக்கிறாய். உனது அடுத்த பிறவியில் மன்னனாகப் பிறந்து பல பல அருட்தொண்டுகள், தர்மகாரியங்கள் செய்து பரகதி அடைவாய், என அருளினார். ஈசனின் திருவருள் பெற்றதால் அந்தக் குரங்கு பகுத்தறிவையும் பெற்று உன்னதமான நிலையை அடைந்தது. சுவாமி! இந்த மிருக ஜன்மத்தில் என்னை அறியாமல் மனிதப்பிறவி அர்ச்சித்தேன். ஆனால் மனிதப்பிறவி அப்படி அல்ல. மனிதன் வஞ்சகன். சூது நிறைந்தவன், பொறாமை குணம் கொண்டவன். பகுத்தறிவு என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, ஆன்மிக உணர்வுகளை வெட்டி விலக்குபவன். நான் மனிதனாக, மன்னனாகப் பிறந்தாலும் என் முகம் மட்டும் குரங்கு முகமாகவே இருக்க அருள் செய்ய வேண்டும். அது எனக்கு இந்தப் பிறவியை நினைவூட்டவும், இறைபக்தியுடன் நல்லுணர்வுகளோடு இருக்கவும் உதவிசெய்யும், என்றது. ஈசனும் அப்படியே அருள்புரிந்தார். மறுபிறவியில் குரங்கு முகமும், மனித உடலும் கொண்டு பிறந்தது. திருவாரூரை ஆட்சி புரிந்தது. அவரது பெற்றோர் முசுகுந்தன் எனப்பெயரிட்டனர். முசுகுந்தம் என்றால் குரங்கு முகம் என்று பொருள். முசுகுந்தன் வீரதீரம் மிக்க மகாவீரன். இவரது வீரத்தையறிந்த தேவேந்திரன், தேவ லோகத்தில் அசுரர்களுடன் நடந்த போரில் தனக்கு உதவிசெய்ய இவனை அழைத்தான். முசுகுந்தனும் போரில் ஈடுபட்டு இந்திரனின் வெற்றிக்கு உதவினான். இந்திரன் முசுகுந்தனை தனது மாளிகைக்கு அழைத்து பலவித உபசாரங்கள், மரியாதை செய்தான். அவன் எந்தப் பரிசைக் கேட்டாலும் அளிப்பதாகக் கூறினான். ஒரு அழகிய மண்டபத்தில் இருந்த சோமாஸ் கந்த விக்ரகத்தைப் பார்த்த முசுகுந்த மன்னன் அதைத் தனக்கு தருமாறு கேட்டான். அவ்விக்ரகம் மகாவிஷ்ணுவால் பூஜிக்கப்பட்டது. மிக அபூர்வமானது என்பதால், இந்திரனுக்கு அதைக் கொடுக்க மனமில்லை. அதைப்போல் வேறொரு விக்ரகத்தை சிருஷ்டித்து, அதை அம்மண்டபத்தில் வைத்துவிட்டான். அன்றிரவு ஈசன் அவன் கனவில் தோன்றி, நடந்ததைச் சொல்லிவிட்டார். எனவே, அவ்விக்ரகத்தைப் பெற முசுகுந்தன் மறுத்துவிட்டான். இப்படி ஆறு முறை ஏமாற்றிய இந்திரன், வேறு வழியின்றி உண்மையான விக்ரகத்தையும், அதைப் போலவே செய்த மற்ற ஆறு மூர்த்தங்களையும் அவனிடம் கொடுத்துவிட்டான். முசுகுந்தன் பூலோகம் வந்து அந்த மூர்த்தங்களை திருவாரூரை சுற்றியுள்ள சிவத்தலங்களில் பிரதிஷ்டை செய்தான். பூமி ஸ்தலமாகிய திருவாரூரில் இந்திரன் பூஜை செய்த நிஜ மூர்த்தியையும், மற்ற மூர்த்திகளை திருக்குவளை, நாகப்பட்டிணம், திருவாய்மூர், திருக்காறாயில், வேதாரண்யம், திருநள்ளாறு ஆகிய தலங்களிலும் பிரதிஷ்டை செய்தான். இவை சப்தவிடங்கத்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. விடங்கம் என்றால் சிறிய லிங்கம் எனப்பொருள்.

நமி நந்தி நாயனார்

நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம் .சோழ வளநாட்டில் திருவாரூருக்கு அண்மையில் உள்ள ஏமப்பேரூர் என்ற தலத்தில் அவதரித்தவர் இந்நாயனார். அந்தணர் குலம் ஒங்க அவதரித்த இப்பெருந்தகையார், வேத வேள்விகளால் சிவபெருமானை ஆராதித்து, இரவும் பகலும் சிவ சிந்தனையோடு திகழ்ந்தவர். தூய திருநீறு அணிவதே மெய்ப்பொருள் என்ற துணிவுடையவர். சாம கண்டனாகிய பரமேசுவரனது செம்பொற்பாதத்தில் சிந்தை நீங்காது தொண்டு புரிந்தவர். திருவாரூருக்குச் சென்று பூங்கோயிலில் உள்ள புற்றிடம் கொண்ட பெருமானைத் தரிசிப்பதைப் பெரும் பேறாகவும், மிகப்பெரிய ஊதியமாகவும் கருதி வந்தார். இவ்வாறு நியமத்துடன் வழிபட்டிருந்த போது, அக்கோயிலின்   தனிச் சன்னதிகளில் ஒன்றாக  விளங்கும் அரநெறியில் தீபம் ஏற்றி வழிபட விரும்பினார். மாலைக் காலம் வந்து விட்ட படியால், இருட்டுமுன் விளக்கேற்ற எண்ணினார். அண்மையில் உள்ள வீடுகளில் இருந்து நெய் வாங்கி வந்து தீபம் ஏற்றத் துணிந்தார். நெய் வேண்டி அவர் சென்ற வீடுகளோ சமணர்களது வீடுகளாக இருந்தன. அவர்கள் நமது நாயனாரை நோக்கி, “ கையில் தீபம் ஏந்தி ஆடும் உங்கள் கடவுளுக்கு விளக்கு எதற்கு? நெய் இங்கு இல்லை. விளக்கு எரிக்க வேண்டுமானால் தண்ணீரை விட்டு ஏற்றிக் கொள்வீர் ” என்று இகழ்ந்தனர். அது கேட்ட நமிநந்தியார் இறைவனது சன்னதிக்குத் திரும்பிச் சென்று முறையிட்டார். இவ்வாறு மனவருத்தத்துடன் நாயனார் முறையிட்டுப் பணிந்து வீழ்ந்த வுடன், தியாகேசப் பெருமானின் அருள் வாக்கு அசரீரியாக ஒலித்தது. “இனிக் கவலை நீங்கப்பெறுவாயாக.உனது விருப்பப்படியே எமது சன்னதியில் விளக்கேற்றுவதற்கு இக்கோயிலின் அருகிலுள்ள திருக்குளத்து நீரைக் கொண்டு வந்து ஏற்றுவாயாக.” என்ற வாக்கைக் கேட்டவுடன் சிந்தை மகிழ்ந்த நமிநந்தி அடிகள் ஒருகணம் அம்மகிழ்ச்சி  மேலிட்டுச் செய்வதறியாது திகைத்த பின்னர், திருக்குளத்திற்குச் சென்று நாதன் நாமமாகிய பஞ்சாக்ஷர மகா மந்திரத்தை  ஜபம் செய்து, குளத்து நீரைக் கொண்டு வந்து இறைவனது சன்னதியில் உலகமே அதிசயிக்கும் வகையில் நீரால் விளக்கெரித்தார். இரவு மீண்டும் தம் ஊருக்குத் திரும்பி மனையில் நியமப்படி மறுநாள் காலையில் பூஜையைச் செய்துவிட்டுத் திருவாரூருக்கு மீண்டும் சென்றார். அரநெறி வீற்றிருந்த பிரானுக்குத் தீபம் ஏற்றிப் பணிகள் பலசெய்து, வலம் வந்து, அரிய தொண்டாற்றினார். இவை எல்லாம் நாம் உய்வதற்காகச் செய்தார் என்கிறார்  சேக்கிழார் பெருமான் ( “ எந்நாளும் நன்மை பெருக நமிநந்தி அடிகள் தொழுதார் நாம் உய்ய.” – பெரிய புராணம் )

திருவாரூர்ப் பெருமான் ஒரு நாள் அருகிலுள்ள மணலிக்கு எழுந்தருளியபோது எல்லாக் குலத்து அடியார்களும் பெருமானுடன் உடன் வர, தாமும் அங்கு சென்று அவ்வருட் காட்சியில் திளைத்து மகிழ்ந்தார். எல்லோருடனும் ஒன்றியபடி மணலிக்குச் சென்றபடியால், தமது மனைக்குத் திரும்பிய நாயனார், இழிவு தீரக் குளித்து விட்டுப் பின்னர் சிவ பூஜை செய்யக் கருதித் தமது மனைவியாரிடம் நீர் கொண்டு வருமாறு பணித்தார். அப்போது இறைவர் அருளால் உறக்கம் வரவே, கனவும் வந்தது. அதில் வீதி விடங்கப் பெருமான் காட்சி அளித்து, “ திருவாரூரில் பிறந்தோர்கள் எல்லாம் நமது கணங்கள் ஆகும் தன்மையை அறிவாய்” என்று அருளிச் செய்து விட்டு மறைந்தார். தவற்றை உணர்ந்த நமிநந்தியார், அந்நிலையிலேயே,பூஜை செய்துவிட்டு மறுநாள் திருவாரூருக்கு விரைந்து சென்றார். பெருமான் அருளால் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோரும் மணிகண்டனாகிய ஈசனது வடிவாவதைக் கண்டு தலை மீது கைகள் கூப்பியவராய் நிலமிசை வீழ்ந்து வணங்கிக் களிப்புற்றார். சிவனடியார்களுக்கு முறையுடன் வேண்டுவன எல்லாம் செய்து பணி செய்தபடியால், இவரைத் திருநாவுக்கரசு நாயனார் “ தொண்டர்க்கு ஆணி” என்று கூறும் பெருமை பெற்றதுடன் நீங்காப் புகழும் பெற்றார். நிறைவாகத் திருவாரூர்ப் பெருமானது பாத நீழலில் வைகாசிப் பூச நன்னாளில் சென்றடைந்தார். நாயனாரது அவதாரத் தலம் தற்போது திருநெய்ப்பேர் என்று அழைக்கப் படுகிறது. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

பாதை 

தஞ்சாவூரிலிருந்து 56 கி.மீ.

கும்பகோணத்திலிருந்து 40 கி.மீ.

நாகப்பட்டினத்திலிருந்து 24 கி.மீ.

நாகூரிலிருந்து 29 கி.மீ.

காரைக்காலில் இருந்து 40 கி.மீ.

மயிலாடுதுறையில் இருந்து 40 கி.மீ.

கோவில் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

கோயில் முகவரி:

ஸ்ரீ வான்மகனாதர் கோயில்

திருவாரூர் (p.o)

திருவாரூர்

தமிழ்நாடு

இந்தியா.