கூத்தனூர் – ஸ்ரீ மகாசரஸ்வதி ஆலயம்.

 

பேச்சுக் கலையின் தேவதை’ எனப் பொருள்படும் ‘வக் தேவி’ என்ற பெயராலும் அழைக்கப்படுகிறாள்

இந்துக்கள், சரசுவதியைக் கல்விக் கடவுளாகவும், எல்லாக் கலைகளுக்கும் தலைவியாகவும் கருதுகிறார்கள். அறிவு ஒளியாகவும், அறியாமை இருளாகவும் கருதப்படுகின்றது. இதனால்தான் சரசுவதியை வெண்மை நிறத்தோடு தொடர்புபடுத்துகிறார்கள்.
வெள்ளை ஆடை அணிந்தவளாகவும், வெள்ளைத் தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவளாகவும், சரசுவதியைச் சமய நூல்கள்ய வர்ணிக்கின்றன.

டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள் சரஸ்வதியை கலைமகள் சமயங் கடந்த தெய்வம் என குறிப்பிடுகிறார்.

அனைத்து உயிர்களின் நாவினிலும் கலைமகள் வீற்றிருக்கிறாள் என்கிறது கந்தபுராணம்.

மகா சரஸ்வதி, ஆர்ய சரஸ்வதி, வஜ்ரவீணா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ர சரஸ்வதி என ஐந்து பெயர்களில் சரஸ்வதி பௌத்தர்களால் வணங்கப்படுகிறார்.

அம்பிகை : மகாசரஸ்வதி
தலம் : ஞானபீடம்
பிறபெயர் : கலைமகள்
பெருமை : கல்விகடவுள்
உயரம் : 5 அடி
சிறப்பு : தஷிணதிரிவேணி
கையில் : அஷரமாலை
வாகனம் : அன்னம்
முத்திரை : சின்முத்திரை

கல்விக்கடவுள் சரஸ்வதி வீற்றிருக்கும் இத்தலம் ஞானபீடம் ஆகும்.

ஆயக்கலைகள் அறுபத்தி நான்கையும், கற்றுணர்ந்த சரஸ்வதி ஒரு முறை தவம் செய்ய நினைத்தார்.
இதற்காக பூவுலகில் அமைதியும், அழகும், நிறைந்த கூத்தனூரை தேர்ந்தெடுத்தாள்.

அம்பாளே இங்கு தவம் புரிந்ததால் இந்த ஊர் ‘அம்பாள் புரி’ எனவும் அழைக்கப்படுகிறது.

கங்கை, யமுனை, சரஸ்வதி கலக்கும் இத்தலம் தட்சிணதிரிவேணிசங்கம் எனப் பெயர் பெற்றது.

முழுமதியாம் பௌர்ணமி நாளில், இங்கு ‘ஓம்’ என தானியங் களில் குழந்தைகளை எழுத வைப்பதும் படிக்க உதவும் அனைத்து பொருட்களையும் வைத்து ஆராதனை செய்வதும் கல்வித்தடை நீக்கும். எண்ணிய கல்வி கிட்டும்

இத்தலத்தில் வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானமும் கீர்த்தியும், புகழும் அடைவர்.

குழந்தைகளை முதன்முதலாக பள்ளியில் சேர்த்துவிடுபவர்கள் இத்தலத்தில் அம்பிகைக்கு சிறப்பு பூஜைகள் செய்தவிட்டு ஆரம்பகல்வியை ஆரம்பிக்கிறார்கள்.

உயர்கல்வி கற்க விரும்புவர்கள், பாடத்தில் தேர்ச்சி பெற விரும்புவர்கள், கலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும்பாலோர் இத்தலத்தில் வந்து வழிபட்டு தங்கள் கலைகளில் சிறந்து விளங்குகின்றனர்.

இத்தலத்தில் புரட்டாசி நவராத்திரியிலும், வைகாசி விசாகத்தன்றும் வழிபடுவோர் கலைவாணியின் கடாட்ச்சத்திற்கு பாத்திரமாவர்.பிரிந்திருக்கும் தம்பதியர் இங்கு வழிபட்டு மீண்டும் ஒன்று சேர்கின்றனர்

இத்தலத்தில் அதாவது கோவில்பத்து கூத்தனூரில் துவங்கி ருத்ரகங்கை வரையான அரிசொல் ஆற்றங்கரையில்(அரசலாற்றுக் கரையில்) தர்ப்பணம் முதலிய பிதுர் கர்மங்கள் மிகவும் விசேசமானது.
அதுவும் மகரமாதத்தில் தர்ப்பணங்களை இயற்றுவது பெரும்பேருகளை தரவல்லது என புராணம் கூறுகிறது.

மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் அம்பிகை பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

இவ்வூர் இரண்டாம் ராஜராஜ சோழனால் தனது அவைப்புலவரான ஓட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்டதால் இவ்வூர் கூத்தனூர் என்றாயிற்று.

கவிபாடும் திறன் வேண்டி கலைமகளை பூஜிக்க நினைத்தார் ஒட்டக்கூத்தர். கூத்தனூரில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்து தட்சிணாவாகினியாய் ஓடும் அரிசொல் மாநதியின் நீரால் அபிஷேகம் செய்து நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வந்தார்.

ஒட்டக்கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் மணமாம் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவி ஆக்கினாள் என்பர். தனக்கு பேரருள் புரிந்த கூத்தனூர் சரஸ்வதியை ஆற்றுக்கரை சொற்கிழத்தி வாழிய என்று பரணி பாடியுள்ளார் ஒட்டக்கூத்தர்.

இக் கோவிலை நிர்மாணித்தவரும்
ஒட்டகூத்தரே.

கும்பகோணம் சாரங்கபாணி தீட்சிதர் என்பவரின் புதல்வன் வாய் பேசாதிருந்து கூத்தனூர் அம்பிகை அருளால் விஜயதசமி நன்னாளில் பேச்சுத்திறன் பெற்றதும் இத்தலத்தை திருப்பணி செய்து புருஷேத்தம்பாரதி எனப் போற்றப்பட்டதும் அண்மை கால வரலாறுகள் கூறுகின்றன

இத்தலத்தில் உள்ள நர்த்தன விநாயகர் சுயம்புமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தலத்தின் பரிவார தெய்வங்களாக வலம்புரி விநாயகர், நாகர், பிரம்மா, பிரம்மபுரீசுவரர், பாலதண்டாயுதபாணி, அன்னம், பலி பீடம் ஆகியன உள்ளன.

ஒட்டக்கூத்தர், ஒவாத கூத்தர், புருஷோத்தம் பாரதி மற்றும் பலர் இங்கு வழிபட்டள்ளனர்.

சிலகாலம் சிவபெருமானை பிரிந்த கங்கை இங்கே
சிவபெருமானை கங்கை ஆலிங்கனம் செய்தாள். அப்படி சிவபெருமானை கங்கை மீண்டும் சேர்ந்த தலம் இந்த அரசலாறு கரையுறை தலமே.

சிவனுக்கு மட்டுமல்ல; இங்குள்ள சரஸ்வதி தேவிக்கும் மூன்று கண்கள். அன்னை மகா சரஸ்வதியின் மூன்றாவது கண், ஞானம், தேஜஸ், செல்வம், அறிவு போன்ற அனைத்து செல்வங்களையும் தரவல்லது. ஆடற்கலை, இசைக்கலை, நாடகக் கலை, விஞ்ஞானக் கலை போன்ற அறுபத்து இரண்டு வகை கலைகளை தரவல்லது என்கின்றார் ஒட்டக்கூத்தர்.

தலவரலாறு

சத்திய லோகத்தில் வாழ்ந்த தம்பதியினரான பிரம்மனுக்கும் சரஸ்வதிக்குமிடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது, கல்விக்கரசியான தன்னாலேயே சத்தியலோகம் பெருமையடைகிறது என்று சரஸ்வதியும், தன் படைப்புத் தொழிலால்தான் சத்தியலோகம் பெருமையடைகிறது என்று பிரம்மனும் வாதிட, வாதம் முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் சபித்து விட்டனர்.

இதனால் பூலோகத்தில் சோழ நாட்டில் புண்ணியகீர்த்தி, சோபனை என்ற தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற மகளாகவும் அவதரித்தனர்.

அவர்களுக்கு திருமணவயது வந்த போது பெற்றோர் வரன் தேட ஆரம்பித்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. சகோதர நிலையிலுள்ள தாங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்குமே என அஞ்சினர். பெற்றோருக்கு இவ்விஷயம் தெரிய வந்தது.

அவர்களை சமாதானம் செய்யும் விதத்தில், சிவனை நினைத்து உள்ளம் உருகி பிரார்த்தனை செய்தனர். சிவபெருமான் அவள் முன் தோன்றி, இப்பிறவியில் சகோதரர்களாக அவதரித்த நீங்கள், திருமணம் செய்வது என்பது இயலாத காரியம். எனவே, நீ மட்டும் இங்கே தனியாக கோயில் கொண்டிரு. இங்கு வரும் பக்தர்களுக்கு கல்விச் செல்வத்தை வழங்கு” என்று அருள்பாலித்தார். அதன்படி கன்னி சரஸ்வதியாக அவள் கூத்தனூர் ஆலயத்தில் அருள்பாலிக்கிறாள்.

அன்னை சரஸ்வதி

வெள்ளுடை தரித்து ,
வெண்தாமரையில்
பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அன்னை இடது கீழ்க்கையில் புத்தகமும், வலது கீழ்க்கையில் சின்(அபய) முத்திரையும், வலது மேல் கையில் அட்சர மாலையும், இடது மேல் கையில் அமிர்தகலசமும் தாங்கி ஜடாமுடியும் துடியிடையும் கருணைபுரியும் இருவிழிகளும் ஞானம் தருவதாகவும் மூன்றாவது திருக்கண்ணும் புன்னகை தவழும் திருவாயுமாய் கிழக்கு முகமாக வீற்றிருந்து அருளாட்சி புரிகிறாள்.

அட்சர மாலை :

அம்பிகை படைப்பின் நாயகி என்பதால் சிருஷ்டியின் அடிப்படையை உணர்த்தும் வகையில் அட்சர மாலையை வலது மேல் கையில் கொண்டிருக்கிறாள்.

அமிர்த கலசம் ;

இது தவத்தை குறிப்பது.இடது மேல் கையில் உள்ளது.அம்பிகையை தியானிப்பதன் மூலம் ஞானத்தால் முக்தி ஆனந்தத்தையும் பெறலாம் என்பதை குறிக்கிறது அட்சர மாலை.

புத்தகம் :

கற்றது கையளவு ; கல்லாதது உலகளவு என்பதை உணர்த்துவற்காக இடதுகீழ்க்øயில் புத்தகம் கொண்டிருக்கிறாள்.

சின் முத்திரை :

தன்னை அடைந்தவர்களுக்கு ஞானத்தை வழங்கும் பேரருட்சக்தியாக சின்முத்திரை அதாவது அபய முத்திரை கொண்டு விளங்குகிறாள்.

வாகனம் :

இத்தேவியின் வாகனம் வெண்ணிறமான அன்னம். நீரை ஒதுக்கிப்பாலை மட்டும் அருந்தும் தன்மை கொண்டது அன்னம்.அதுபோல பக்தர்களின் தீமை அகற்றி நன்மை தருபவள்.

கன்னி சரஸ்வதியாக இந்தியாவில்
சரஸ்வதி கோவில் கூத்தனூர் தவிர வேறு எங்கும் இல்லை .

தனி சரஸ்வதி கோவில் கொண்டுள்ள பிற ஊர்கள்

கர்நாடகாவில் சிரிங்கேரி, கடக் எனும் இடங்களில் தனி ஆலயம் உள்ளது.

ஆந்திராவில் பசர எனும் இடத்தில் தனி ஆலயம் உள்ளது.

காஷ்மீரின் தக்த்-இ-சுலைமான் மலையில் ‘சர்வஜ்ன பீத’ என்றழைக்கப்படும் பழங்காலத்திய ஆலயம் உள்ளது.

தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குலசேகரபுரத்தில் தனி ஆலயம் உள்ளது

நேர்த்தி கடன்

கல்வி வரம் வேண்டுவோர் அம்பிகைக்கு தேன் அபிசேகம், பால் அபிசேகம் ஆகியவற்றை முக்கிய நேர்த்திகடன்களாகச் செய்கின்றனர்.

அம்பிகைக்கு வெள்ளை வஸ்திரம், வெண் தாமரை ஆகியவற்றை சாத்துவதையும் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.

தவிர தேன், பால், நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, திரவியப்பொடி, பஞ்சாமிர்தம், தயிர், நெய், பழரசம், இளநீர்,சந்தனம்,பன்னீர் ஆகியவற்றால் அம்பிகைக்கு அபிசேகம் செய்கின்றனர்.

மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.

தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

திருவிழாக்கள்

புரட்டாசி நவராத்திரி 18 தினங்கள் 9 நாள் ஊஞ்சல் உற்சவம்

சரஸ்வதி பூஜை அன்று பாத தரிசனம் ;
சரஸ்வதி பூஜை அன்று இந்த சரஸ்வதியை தரிசனம் செய்வது இன்னும் சிறப்பு. இங்குள்ள கலைவாணியை தேன் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு.
விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு ஆரம்பகல்வி கற்பித்தல் ஆரம்பித்தல் ஆகியவை இத்தலத்தில் மிகவும் விசேசம்.

மாதாந்திரம் பௌர்ணமி மூலா நட்சத்திரத்தில் அம்பாள் ஜென்மம் மூலம் நட்ச்சத்திரத்தில் இத்தலத்தில் விசேச பூஜைகள் நடைபெறும்.

வாரந்தோறும் புதன் கிழமைகளில் இத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் இருக்கும்.

வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

ஒட்டக்கூத்தர் பற்றி

ஒட்டக்கூத்தர் என்னும் புகழ்மிக்க தமிழ்ப் புலவர் விக்கிரம சோழன் (ஆட்சி 1120-1136), இரண்டாம் குலோத்துங்கன்(ஆட்சி 1136-1150), இரண்டாம் இராசராசன் (ஆட்சி 1150-1163) ஆகிய மூன்று சோழர்கள் காலத்திலேயும் வாழ்ந்தவர்.

கூத்தர் என்பதுதான் இவரது பெயர் என்றாலும் இவர் ‘ஒட்டம்’ (பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவர் என்பதால் ஒட்டக்கூத்தர் என்று வழங்கப்பட்டார்

சோழ மன்னன் குலோத்துங்க சோழனின் அவைப் புலவராக இருந்தவர் ஒட்டக்கூத்தர். இவர் தமிழ்ப்பற்று மிக்கவர், தமிழில் மிகச் சிறந்த புலமை பெற்றவர் .

தான் ஒரு தமிழ்ப் புலவர் என்று கூறிக்கொண்டு யாரேனும் தமிழைப் பிழையாக உரைத்தால் உடனே அவரைச் சிறையிலடைத்து விடுவார்.

அப்படி சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு பிழைக்க ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுப்பார். அது என்னவெனில், ஒட்டக்கூத்தர் கேட்கும் கேள்விக்கு அவர்கள் சரியான பதில் தந்தால் சிறையிலிருந்து விடுவிக்கப் படுவர்.
பதில் தவறாக இருப்பின் இரண்டிரண்டு பேராக நிற்கவைத்து இருவரின் தலைமுடிகளையும் ஒன்றாக முடிந்து சிரச்சேதம் செய்துவிடுவார், இதனாலேயே தான் ஒரு புலவன் என்று முறையாகத் தமிழ் பயிலாத எவரும் கூறிக்கொள்ள அஞ்சுவார்களாம்.

அந்த குலோத்துங்க சோழனுக்குத் தந்தையில்லாததனால் கவி ஒட்டக்கூத்தரே அவருக்குத் திருமணம் செய்து வைக்கும் பொறுப்பினை ஏற்றார். பாண்டிய மன்னனின் மகளே குலோத்துங்க சோழனுக்குப் பொருத்தமானவள் என்றறிந்து பெண் கேட்கச் சென்றார்.

பாண்டிய மன்னன் இதைக் கேட்டதும், “எங்கள் பாண்டிய நாட்டில் பெண்ணெடுக்க உங்கள் சோழ மன்னனுக்கு என்ன தகுதியிருக்கிறது என ஒட்டக்கூத்தரைப்பார்த்துக் கேட்க, உடனே ஒட்டக்கூத்தர் ஒரு பாடலைப் பாடினார்.
இதனை கேட்ட பாண்டிய மன்னனின் அவைப் புலவர் புகழேந்தி நம் பாண்டிய நாட்டைத் தரம் குறைத்து வேறு நாட்டுப் புலவன் பாடுவதா என உணர்ச்சிமேலிட அதற்கு எதிர்ப்பாட்டாக ஒரு பாடல் பாடுகிறார்.
இப்படி எதிர்ப்பாட்டுப்பாடி புகழேந்திப் புலவரும் விட்டுக்கொடுக்காமல் தன்நாட்டு பராக்கிரமத்தைப் பாட அதன்பிறகு குலோத்துங்க சோழனுக்கும் பாண்டிய நாட்டு இளவரசிக்கும் திருமணம் முடிந்தது. புகழேந்திப் புலவரைத் தன் மகளுக்குச் சீதனமாக சோழ நாட்டுக்கு அனுப்பி வைத்தான் பாண்டிய மன்னன்.

தன் பாட்டுக்கு எதிர்ப் பாட்டுரைத்த புகழேந்திப் புலவர் மீது கோபம் கொண்டு அவரை எதிரியாகவே நினைத்துக் கொண்டிருந்த ஒட்டக்கூத்தர் அவரை சிறையிலடைத்துவிட்டார். அவர் மன்னனுக்கு குருவாக இருந்ததால் அவருக்கு நாட்டில் சகல அதிகாரங்களும் இருக்கவே, அவரது செயல் எதற்கும் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க அஞ்சினார்கள்.

தன்னாட்டுப் புலவரை சிறையிலடைத்தமை கேட்டு மகாராணி மன்னனிடத்தில் கோபம் கொள்கிறாள். ஒட்டக்கூத்தருக்கு இவ்வளவு அதிகாரமா? அவரை எதிர்த்து ஏன் பேசவில்லை என மன்னன் மீது கோபம் கொண்டு குலோத்துங்கன் அந்தப்புரத்திற்கு வரும்போது தன் அறையின் கதவைத் தாழிட்டுக் கொள்கிறாள். அவளைச் சமாதானம் செய்ய புலவர் ஒட்டக்கூத்தனை மன்னன் அனுப்ப அவர் கதவுக்கு அப்புறம் நின்று கொண்டு ஒரு பாடல் பாடுகிறார். அதைக் கேட்ட ராணி இன்னும் கோபமடைந்து இரண்டாவது தாழ்ப்பாளைப் போட்டு விடுகிறார்.

அதனால் தான் “ஒட்டக் கூத்தர் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள்”என்ற ஒரு வாசகம் பிரசித்தி பெற்றது.

ஒட்டக்கூத்தரின் நூல்கள்

காங்கேயன் நாலாயிரக் கோவை

மூவர் உலா

குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்

ஈட்டியெழுபது

அரும்பைத் தொள்ளாயிரம்

தக்கயாகப் பரணி

எழுப்பெழுபது

நாலாயிரக் கோவை

இவையன்றி எதிர்நூல், கண்டன் கோவை, தில்லையுலா என்னும் இன்னும் பல நூல்கள் இயற்றியுள்ளா

காலை 7.30 மணி முதல் 1.00 மதியம் மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

கும்பகோணத்தில் இருந்து 37km.

கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் மாத்தூர்
கடலங்குடி திருவீழிமழழை கூத்தனூர் சென்றடையலாம்.

திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள பூந்தோட்டம் சென்று, அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கூத்தனூரை சென்றடைய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *