புலிப்பாணி சித்தர்

புலிப்பாணி சித்தர்

புலிப்பாணி சித்தர் போகரது தலையாய சீடராவார். இவர் பூர்வீகம் சீன தேசம். போகர் பழனியில் மூலிகை முருகனை உருவாக்கிய படலத்தில் இவரது பங்கு முக்கியமானது. குருவுக்கு தேவையான மூலிகைகளை சேகரித்தலும் மற்றைய பணிவிடைகளையும் செய்த நம்பிக்கைக்குரிய சீடர் என்று போகரது காயகல்ப பரிசோதனையில் நாம் கண்டோம் அங்ஙணம்,குருவுக்கு பணிவிடை செய்யும்போது அவர் குளிர்ந்த நீரைக் கொண்டு புலிகளை வசியம் செய்து அதன் மேல் ஏறி மலை ஏறி இறங்கியுள்ளார்.இதுவே அவர்“புலிப்பாணி” பெயர்க் காரணம். இவர் ஒரு அதீத சிவ பக்தர். போகரின் நிர்விகல்ப சமாதி ஏற்பாட்டின் போது,மூலிகை முருகனுக்கு அடியில் குகை போன்ற சமாதி அமைப்பை உருவாக்கியும்,போகர் சமாதி நிலையை எய்தவுடன் குருவின் ஆணைப்படி அந்த குகையை பெரிய பாறை கொண்டு மூடியவரும்,குரு போகரை இறுதியாக தரிசித்தவரும் இவரே! போகரது (LAO TZU) சீன படைப்பான“டாவோ”(TAOISM) மதத்தின் முக்கிய நூல்களான ” டாவோ சிங் மற்றும் டெ சிங்” (TAO CHING & TE CHING) ஆகியவற்றில் இவரது (Yu)பங்கு குறிப்பிடத்தக்கது. இவர் சோதிடம்,வான சாத்திரம்,கணிதம்,சித்த மருத்துவம் போன்றவற்றில் சிறந்து விளங்கினார் சீன வேதிப் பொருள்கள்,சீனக் களிமண் பாண்டங்கள்,சீன மருத்துவம் ஆகியன இவர்கள் மூலமே இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்டது என செய்திகள் கூறுகிறது. இவரது படைப்புகளான புலிப்பாணி ஜாலம்325,புலிப்பாணி வைத்தியம் 500 ஆகியன இன்றும் நமது சித்த மருந்து தயாரிப்பாளர்களுக்கு ஒரு வரப் பிரசாதம் என்பதில் ஐயமில்லை! அதற்கு பிரதிஉபகாரமாய் தங்களுடைய மருந்துகளுக்கு புலிப்பாணியின் பெயர் சூட்டி அவரைப் பெருமைப் படுத்துவது வரவேற்க்கத்தக்கது! புலிப்பாணியின் பொறுப்பில் மூலிகை முருகனுக்கு அபிசேகங்களும்,ஆராதனைகளும் கடைப்பிடிக்கப்பட்டது. புலிப்பாணியார் மறைவுக்குப் பின்,அவரது சந்ததியினரின் குடும்பக் கோவிலாகவே பராமரிக்கப்பட்ட மலைக் கோவில்,மதுரை திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் வலுக்கட்டாயமாக பிராமணர்களிடம் ஒப்படைக்கப்பட்டாதாகவும்,அதற்க்கு இழப்பீடாக சில நியாயமற்ற உரிமைகள் வழங்கப்பட்டதாகவும் சில சர்ச்சைகள் இருந்து வந்தன. புனிதரது சமாதி இன்றும் பழனி மலையின் வட கிழக்கு திசையில் அவரது சந்தததியினரால் (பழனி ஆதீனம் திருமிகு புலிப்பாணி பத்திர சுவாமிகள்)பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்றும் பழனியில் அருவமாய் புலிப்பாணி சித்தர் உலவுவதாகவும்,வேண்டுவோர்க்கு வேண்டியதை அருளுவதாகவும் நம்பிக்கை இருந்து கொண்டு தான் இருக்கிறது. இவர் செவ்வாய் கிரகத்தை பிரதிபலிப்பவர்.ஆதலால் செவ்வாய் தோசத்தைப் போக்கி,நிலத் தகராறு,சொத்துத் தகராறு,திருமணச் சிக்கல்களைத் தீர்த்து வைப்பதில் இவருக்கு நிகர் இவரே! இவரை வில்வம் மற்றும் சாமந்தி கொண்டு அர்ச்சிக்க வேண்டிய உகந்த நாள் செவ்வாய்க் கிழமை! ஓம் புலிப்பாணி சித்தரே போற்றி! நான் எம்பெருமான் முருகனுக்கு சிலை செய்ய ஆசைப்படுகிறேன். உலோகங்களால் அவருக்கு பல இடங்களில் சிலைகள் உள்ளன. ஆனால், நான் ஆசைப்படுவது வேறு. இந்த முருகனைத் தரிசித்த மாத்திரத்திலேயே உடலிலுள்ள நோய்கள் அனைத்தும் விலகியோட வேண்டும். மன நோயும் விலக வேண்டும். எனவே, நான் மூலிகைகளைக் கொண்டு அவருக்கு சிலை செய்ய வேண்டும். நீ நோய் தீர்க்கும் மூலிகைகளைப் பறித்து வா, என்றார் குருவான போகர் சித்தர்.குருவின் கட்டளையை ஏற்ற புலிப்பாணி, ஏ புலியே கிளம்பு, என்றார்.புலி மீது சவாரி செய்பவர் யார் எனக் கேட்டால், நீங்கள் ஐயப்பன் என்று பதில் சொல்வீர்கள். அவர் தெய்வம். தர்ம சாஸ்தாவான அவர், புலியின்மீது பயணம் செய்வதில் ஆச்சரியமாக இல்லை. ஆனால், ஒரு சித்தர் புலியின் மீது பயணம் செய்கிறார் என்றால், அவர் எப்பேர்ப்பட்ட சக்தி மிக்கவராக இருக்க வேண்டும். விலங்குகளை வசியப்படுத்தி, தன் கட்டுக்குள் வைத்திருப்பவர் அவர். அந்தளவுக்கு அவருக்கு தவசக்தி அமைந்திருந்தது.புலிப்பாணி சித்தர் சீனாவில் பிறந்ததாக ஒரு தகவல் இருக்கிறது. பழநியில் வசித்த போகர் சித்தர் சீனாவுக்கு வான்வழியே யோக சாதனையைப் பயன்படுத்தி சென்றார். அவரது அருமை பெருமைகளைத் தெரிந்து கொண்ட புலிப்பாணி அவரது சீடரானார். அவரிடம் சகல யோக வித்தைகளையும், சித்து வேலைகளையும் கற்றுக் கொண்டார். பின்னர் இருவரும் பாரதத்துக்கு வந்து சேர்ந்தனர்.போகர் பழநியில் தங்கிய போது புலிப்பாணியும் உடன் தங்கினார். ஒருமுறை போகர் சித்தர் தாகத்துடன் ஒரு காட்டில் தவித்த போது, புலிப்பாணி தன் புலியின்மீது ஏறிச் சென்றார். தண்ணீரை பாணி என்றும் வேற்றுமொழியில் சொல்வதுண்டு. புலியில் ஏறிச்சென்று பாணி கொண்டு வந்ததால் புலிப்பாணி என்று இருமொ ழிகளையும் இணைத்து அவருக்கு பெயர் வந்ததாகவும், அவர் சீனாவில் பிறந்தவர் என்பதால் அவரது நிஜப்பெயர் தெரியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.புலிப்பாணி புலியில் ஏறி தண்ணீர் கொண்டு வந்ததை நிரூபிக்கும் பாடல் ஒன்றை போகரே எழுதியிருக்கிறார். அந்தப் பாடல் இதுதான்! ஆழ்ந்தவே காலங்கி கடாட்சத்தாலே அப்பனே வேங்கை தனில்  ஏறிக்கொண்டு தாழ்ந்திடவே ஜலம் திரவ்விப்புனிதவானும் சாங்கமுடன் தாரணியில் சுற்றி வந்தோன் என்ற பாடல் புலிப்பாணியையே குறிப்பதாகச் சொல்கிறார்கள். முருகன் சிலை செய்ய மூலிகைகளைக் கொண்டு வரச்சொல்வதின் நோக்கத்தை புலிப்பாணி புரிந்து கொண்டார். எவ்வளவு அருமையான யோசனை! என் குருநாதருக்கு தான் இந்த மக்கள் மீது எவ்வளவு கரிசனம் இருக்கிறது! ஆனால், குருநாதர் குறிப்பிடும் ஒன்பது வகை மூலிகைகளும் விஷத்தன்மை கொண்டவை ஆயிற்றே! விஷ மூலிகைகள் எப்படி மனிதனைக் குணப்படுத்தும்! மாறாக,அவை ஆளையல்லவா கொன்று விடும், என்ற சந்தேகமும் இருந்தது.தன் சந்தேகத்தை மிகுந்த பணிவுடன் கேட்டார் புலிப்பாணி. மக்கள் மீது புலிப்பாணிக்கு இருக்கும் அபிமானத்தை மனதுக்குள் பாராட்டிய போக சித்தர்,புலிப்பாணி! கவலை கொள்ளாதே. நீ கொண்டு வரும் ஒன்பது மூலிகைகளையும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்தால் பவ பாஷாணம் என்னும் மருந்து கிடைக்கும். இந்த மருந்தை நேரடியாகச் சாப்பிட்டால் மரணம் சம்பவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நவபாஷாணத்தை சிலையாக வடித்து, அதற்கு அபிஷேகம் செய்யும் பொருட்களைச் சாப்பிட்டால் அது விஷத்தன்மைக்கு பதிலாக மருத்துவத்தன்மை பெறும், மேலும், நவபாஷாணத்தின் வாசம் பட்டாலே போதும், மனிதன் புத்துணர்வு பெறுவான். இதோ! இந்த பழநி மலையின் உச்சியில் நவபாஷாண முருகன் சிலையை, கலியுகம் முடியும் வரையில்  மக்கள் வணங்கும் வகையில் பிரதிஷ்டை செய்வேன். அவன் அருளால் உலகம் செழிக்கும். எக்காலமும் வற்றாத மக்கள் வெள்ளம் இந்தக் கோயிலுக்கு வரும். பழநி முருகனின் ஆணையோடு தான் இந்தச் சிலையைச் செய்கிறேன். எனவே மக்களுக்கு எந்த ஆபத்தும் வராது, என்றார். புலிப்பாணி சித்தர் மகிழ்ச்சியடைந்தார். குருநாதர் சொன்னது போலவே புலியில் ஏறிச்சென்று ஒன்பது வகை மூலிகைகளையும் கொண்டு வந்து கொடுத்தார். பழநிக்குச் செல்பவர்கள், போகரை மட்டுமின்றி புலிப்பாணி சித்தரையும் நிச்சயமாக மனதில் நினைக்க வேண்டும். போகர், இவ்வூர் முருகன் சிலையைச் செய்யக் காரணமாக இருந்தவர் இவரே! போகர் நினைத்தபடி நவபாஷாண சிலை உருவாயிற்று. ஒருநாள் புலிப்பாணியை அழைத்த போகர்,புலிப்பாணி! நான் சீனதேசம் செல்கிறேன். இனி இங்கு எப்போது வருவேன் எனத்தெரியாது. நீயே இந்த முருகன் சிலைக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும், என சொன்னார். புலிப்பாணியும் அவரது கட்டளையை ஏற்று, சிலையின் காவலர் ஆனார்.ஒருமுறை. சீனதேசத்தில் இருந்து வந்த சிலர், உன் குருநாதர் போகர், பெண்ணின்பத்தில் சிக்கி, தவ வலிமையை இழந்து விட்டார், என்றனர். அதிர்ச்சிய டைந்த புலிப்பாணி தவ சிரேஷ்டராகிய தன் குருவைக் காப் பாற்ற சீனா சென்றார். அவரை அங்கிருந்து பழநிக்கு அழைத்து வந்து, மீண்டும் தவ வலிமை பெறுவதற்குரிய வழிகளைச் செய்தார். போகருக்கே ஞானம் வழங்கிய பெருமை புலிப்பாணிக்கு உண்டு. சில நாட்களில் போகர் இறந்து விடவே, அவரது சமாதிக்கு பூஜை செய்யும் பணியை அவர் கவனித்தார். சமாதிக்கு பூஜை செய்பவர், முருகனின் பாதுகாவலராக இருக்கக் கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவே, எங்கள் குருவுக்கு குரு முருகப்பெருமான்,எனக்கு குரு போகர் சித்தர். நான் அவரது சமாதியையே பூஜிப்பதையே பெருமையாகக் கருதுகிறேன், என அவர்களிடம் தன் நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தினார். தன் வாழ்நாளில் பலரை மூலிகை வைத்தியம் மூலம் காப்பாற்றிய பெருமை உண்டு. நோயுற்றவர்கள் புலிப்பாணி சித்தரை மனதார நினைத்தால், அவரே நேரில் வந்து மருந்து தருவதாக ஐதீகம். புலிப்பாணி சித்தரும் தன் குரு போகரைப் போலவே பழநியிலேயே சமாதியாகி விட்டதாக தகவல் உள்ளது.”ஆள்தவே காலங்கி கடாட்சத்தாலே  அப்பனே வேங்கை தனில் ஏறிக்கொண்டு  தாழ்ந்திடவே ஜலம் திரட்டி புனிதவானும்  சாங்கமுடன் தரணியிலே சுற்றிவந்தான்”. – போகர் – போகருடைய சீடார்களில் ஒருவர், தமிழகத்தி பொன் வணிகர் குலத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறார். போகர் நவபாஷாணதைக் கொண்டு பழனி முருகன் சிலையை வடிக்கும் போது இவர் அவருக்கு உதவியாக இருந்ததாக சொல்லப் படுகிறது. போகர் சமாதியடைய முன்னர் இவரை அழைத்து தமக்குப் பின் தண்டாயுதபாணி கோவில்ப் பூசை , புனஸ்காரங்களை இவரே செய்யவேண்டும் என்று பணித்ததாகவும் சொல்லப் படுகிறது.
போகரும் புலிப்பாணி பரம்பரையும்! போகர் சித்தர் ஆகாய மார்கமாக பயணம் செய்யும் போது பழனியை கண்டு, இந்த இடம் தான் நம்  பூஜைக்கு ஏற்ற இடம் என தீர்மானித்து தரை இறங்கினார். அங்கே அவர் கண்ட காட்சி அவரது எண்ணத்தை உறுதி செய்தது. அவர் கண்டது, ஒரு வெள்ளை காகம், சிவப்பு நிற கொக்கு,  வெள்ளை, சிவப்பு நிறத்தில் இரண்டு குன்றுகள். வெள்ளை குன்று சிவகிரி என்றும், சிவப்பு குன்று சக்திகிரி என்றும் அவர் உணர்ந்தார். அவர் பழனியை வந்தடைந்த காலம் என்பது த்வாபர யுகத்தின் முடிவும், கலி யுகத்தின்  தொடக்கமும். அங்கு வந்து சேர்ந்த உடனேயே ஒரு குன்றின் மேல் தன் கமண்டலத்தையும், கைத்தடியையும் வைத்து, இறைவனாக பாவித்து தினமும் பூசை செய்து வரலானார். பின்னர்  பலரிடமிருந்தும் வந்த உத்தரவால், ஒரு நவபாஷாண சிலை செய்து அதற்கு தண்டாயுத (முன்  சொன்ன கைத்தடியின் பெயர்) பாணி (கமண்டலத்துக்குள் இருக்கும் நீர்) என்று பெயர்  வைத்து நித்ய பூஜை செய்து வரலானார். அந்த நவபாஷாண சிலைக்காக ஒன்பது வித விஷங்களை  உருவாக்கினார். அவை , வீரம், பூரம், ரசம், கந்தகம், மோமசலை, கௌரி, PHOSPHORUS,  துருசு, வெள்ளை பாஷாணம் என்பவை. கலியுகம் பிறந்த பின் 205 ஆண்டுகள் அந்த சிலைக்கு போகர் பூசை செய்து வந்தார்.  அதற்கு பின் சிவலிங்க தேவ உடையார் உடையார் என்பவர் போகரிடம் சிஷ்யராக வந்து சேர்ந்தார். இவர் கர்நாடக மாநிலத்தில் மைசூரை சேர்ந்தவர். உடையார் அவர்களை நித்ய  பூஜைக்கு நன்றாக தயார் படுத்திய பின், பூஜை செய்யும் பணியை அவரிடம் சேர்பித்துவிட்டு, போகர் நிர்விகல்ப சமாதியில் அமர்ந்தார். போகர் சமாதி ஆனா  பின்னரும், உடையார் பலமுறை போகரை சந்தித்து பூசை சம்பந்தமான விஷயங்களில் கலந்தாலோசித்து வரலானார். நைனாதி முதலியார் என்பவர் சிறிது காலத்திற்குப்பின் உடையாரிடம் சிஷ்யராக வந்து  சேர்ந்தார். முதலியாரின் பக்தியில் மனம் மகிழ்ந்த உடையார், அவரை அழைத்து கொண்டு  போகரிடம் சென்று”முதலியார் நல்ல திறைமை உடையவர். அவருக்கே இனி பூஜை செய்யும் பணியை  கொடுத்துவிடலாம் என்று” பரிந்துரை செய்தார். போகர் சற்று நேர அமைதிக்கு பின் “முதலில், இவர் உலகை ஒரு முறை சுற்றி வரட்டும்.  அதற்கு பின் பூஜை செய்யும் உரிமையை கொடுக்கும் தீர்மானத்தை எடுக்கலாம்” என்றார். இதை கேட்ட உடையார் அதிர்ந்து போனார். போகரிடமிருந்து நித்ய பூஜை முறைகளை ஏற்று வாங்கி நிறைய வருடங்கள் ஓடிவிட்டது.  போதும். நாமும் போகரிடம் உத்தரவு கேட்டு சமாதி ஆகிவிடலாம் என்று ஆசை பட்ட  உடையாருக்கு, “அவரை நான் ஏற்று கொள்கிறேன். ஆனால், அதற்கு முன் அவர் இந்த உலகை ஒருமுறை சுற்றி வந்து என் முன் வெற்றிகரமாக நிற்க வேண்டும். அப்படி ஆனால் அவருக்கு  பூஜை செய்யும் உரிமையை கொடுக்கிறேன்” என்று போகர் சொன்னபோது உண்மையிலேயே உடையார்  ஆடி போய் விட்டார். “இவரால் முடியுமா? அப்படியும் எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்து  இவர் முடிப்பதற்குள் எத்தனை வருடங்கள் ஆகிவிடும். அதுவரை காத்திருக்க வேண்டுமே”, என்றெல்லாம் அவர் மனதில் எண்ணங்கள் ஓடியது. முதலியார் பேச தொடங்கினார். இந்த உலகை கால் நடையாக சென்று சுற்றி வர என்னால் முடியாது. வேண்டுமானால் ஒரு

புலியின் மீதமர்ந்து முடிக்க முயற்சி செய்கிறேன் என்றார். போகரும் அதற்கு சம்மதிக்கவே, முதலியாரும் காட்டுக்குள் சென்று ஒரு புலியை  வசப்படுத்தி அதன் மீது ஏறி அமர்ந்து,விடை பெற்றார். காலங்கள் ஓடியது. சென்றவரை காணவில்லை. உடையாருக்கு மனதில் கவலை ஏறியது. எதிர்பார்க்காமல் ஒரு நாள், உடையார்  ஒரு வேளை பூசை முடித்து தீபாராதனை காண்பிக்கவே, அங்கு புலிமேல் அமர்ந்தபடி,  முதலியார் வந்து சேர்ந்தார். இதை கண்ட உடையாரின் மனம் சொல்லொண்ணா இன்பத்தில் ஆழ்ந்தது. பூசை முடித்த கையுடன், அவரை அழைத்து சென்று போகர் முன் நிறுத்தினார். அவரை கண்ட  போகர், “சரி, வெற்றிகரமாக உலகை சுற்றி வந்து விட்டாய். இருப்பினும், ஒரு சில  நாட்கள் வரை உடையாரே பூசை செய்யட்டும். அதுவரை, பூசையில் உடையாருக்கு உதவி செய்து  இரு” என்று கட்டளை இட்டார். மேலும் “புலியில் சென்று இந்த உலகை சுற்றி வந்ததால் நீ  இன்று முதல் “புலிப்பாணி” என்று அழைக்க படுவாய்” என்று கட்டளை இட்டார். பூஜை நன்றாக நடப்பதை கண்ட போகர்,புலிப்பாணியின் பெருமையை உடையாருக்கு உணர்த்த பல வித சோதனைகள் நடத்தினார். அதில் ஒன்று “ஷண்முக நதி வரை சென்று அபிஷேகத்துக்கு நீர்  கொண்டு வா” என்று உத்தரவிட்டார். நதி கரை வரை சென்ற புலிப்பாணி, கையில் ஒரு  பாத்திரமும் இல்லாததால், தன் தபோபலத்தால், அந்த நதியின் நீரை எடுத்து ஒரு  பாத்திரமாக மாற்றி, அதனுள் நீரை ஊற்றி, அபிஷேகத்துக்கு கொண்டு வரலானார். அதிலிருந்து அவர் “புலிப்பாணி பாத்திர சுவாமிகள்” என்று அனைவராலும் அழைக்க பட்டார்.  தினமும் ஆறு முறை ஷண்முக நதிக்கு சென்று நீரை பாத்திரமாக்கி, அதில் நீரை ஊற்றி, மலை  மேல் இருக்கும் முருகனுக்கு அபிஷேகத்துக்கு கொண்டு வரலானார். எல்லாம் நல்ல படியாக நடப்பதை கண்ட போகர், உடையாருக்கு சமாதியாகும் பாக்கியத்தை கொடுத்தார். பின்னர் புலிப்பாணியை அழைத்து, “பூஜை முறைகள் தொடர்ந்தது தலை முறை தலை  முறையாக நடக்கவேண்டும். அதற்கு நீ தான் வழி அமைக்க வேண்டும்” என்றார். 205 வருடங்கள் புலிப்பாணி பூஜைகளை தொடர்ந்து செய்து வந்தாயிற்று. போகரின் இந்த  உத்தரவுக்கு,புலிப்பாணி கீழ் வருமாறு பதிலளித்தார். இன்றுவரை 205வருடங்கள் ஆகிவிட்டது. அடியேனுக்கு, குடும்ப வாழ்க்கையில் சற்றும்

விருப்பம் இல்லை என்றார். தலை முறையாக பூஜை நடக்க வேண்டும் என்றால், ஒரு ஆண் மகவு வேண்டும். குடும்ப

வாழ்க்கையில் இருந்து கொண்டு சன்யாச வாழ்க்கையும் வாழலாம். ஆண் மகன் பிறந்த 16 வது

வருடம், பூஜை விஷயங்களை அவனிடம் சேர்பித்துவிட்டு, நீ சமாதி ஆகலாம் என்றார். குருவின் வார்த்தைக்கு கட்டு பட்டு புலிப்பாணியும் குடும்ப வாழ்க்கை தொடங்கினார். ஒரு வருடத்தில் அவருக்கு ஆண் மகன் உருவானான். அவனுக்கு “காரண புலிப்பாணி” என்று  பெயர் இட்டு வளர்த்து வரலானார்! காரண புலிப்பாணி தனது பதினாறாவது வயதில் பூஜை செய்யும் உரிமையை ஏற்றுகொள்ள, புலிப்பாணி பரம்பரை பூசை செய்யும் உரிமை உருவாயிற்று. புலிப்பாணியும் சமாதியில்  அமர்ந்தார். காரண புலிப்பாணி1100 ஆண்டுகள் பூசை செய்து வந்தார். அவருக்கு ஒரு மகன் பிறக்க,, அந்த மகனுக்கு குமார சுவாமி புலிப்பாணி என்று பெயரிட்டனர். குமார சுவாமி  புலிப்பாணி, காரண புலிப்பாணி இடமிருந்து பூசை செய்யும் உரிமையை வாங்கிக்கொள்ள,  புலிப்பாணி தலைமுறை வளர்ந்தது. இவர்1000 ஆண்டுகள் இருந்து பூசை செய்து வர,  அவருக்கு அடுத்த வாரிசாக, வேல் ஈஸ்வர புலிப்பாணி என்பவர் வந்தார். பின்னர் இந்த புலிப்பாணி தலைமுறை கீழ்கண்டவாறு வளர்ந்தது. வேல் ஈச்வர புலிப்பாணி , ஆறுமுக புலிப்பாணி ,ஹரிக்ருஷ்ண புலிப்பாணி , பழனியப்ப  புலிப்பாணி. பழனியப்ப புலிப்பாணி தலை முறை வந்ததும், இரண்டு மகன்கள் உருவாயினர். அவர்களை,  பாலகுருநாதர் புலிப்பாணி, போகநாதர் புலிப்பாணி என்று அழைத்து வந்தனர். விதிப்படி,  பூஜை முறைகள் மூத்த மகனுக்குத்தான். பால குருநாதர் புலிப்பாணி திருமணம் செய்து கொள்ளததினாலும், 22 வயதில் மரணமடைந்ததினாலும்,பூஜை செய்யும் உரிமை இரண்டாவது மகன்,  போகநாதர் புலிப்பாணி இடம் சேர்ந்தது. போகநாதர் புலிப்பாணி தன் மகன் பழனியப்ப  புலிப்பாணி இடம் பூஜை விஷயங்களை சேர்க்க, அது அடுத்த தலைமுறையில் சிவானந்த புலிப்பாணி இடம் சேர்ந்தது. இவர் தான் இன்று அந்த ஆஸ்ரமத்தில் தலைவராக இருந்து  கொண்டு பூஜை முறைகளை நடத்தி வருகிறார். பழனியப்ப புலிப்பாணி ஒரு நாள் ஆஸ்ரமத்தின் பின் பக்கம் கட்டிட வேலைக்காக குழித்த  போது அங்கே ஒரு குகையில் ஒரு சித்தர் தவம் செய்வதை கண்டார். சித்தரின்  தலையிலிருந்து நீண்டு வளர்ந்த முடியானது மரத்தின் வேர் போல மண்ணுக்குள் மிகுந்த  ஆழத்தில் ஊடுருவி செல்வதை கண்டார். அந்த சித்தர் பத்மாசனத்தில், கைகளை மார்புக்கு  குறுகலாக வைத்த படி இருக்க, அவர் கை, கால் விரல்களில் நகம் இதுவரை அவர் கண்டிராத  அளவுக்கு நீளமாக அவர் தோள்களை சுற்றி வளர்ந்திருந்தது. அவரது தவத்தை கலைத்துவிடுகிற  அளவுக்கு நாம் ஏதேனும் செய்து விட்டோமோ என்று நினைத்த அவர், அப்படியே தொடங்கிய வேலையை விட்டுவிட்டு, உடனேயே அந்த இடத்தில் சமாதி கட்டினார். அது தான் இன்றும் நாம்  சென்றால் பார்க்கும் மிக பெரிய லிங்கம் உள்ள, சமாதி. பழனி அந்த காலத்தில் மதுரை நாயக்க மன்னரின் ஆட்ச்சியில் இருந்ததால்,மன்னரே,  ஆஸ்ரமம், பழனி முருகருக்கு பூசை செய்யும் முறை இவைகளின் பேரில் உள்ள உரிமையை  புலிப்பாணி தலைமுறைக்கு மட்டும் தான் என்று பிரகடனம் செய்து,செப்பு தகட்டில்  பதித்து கொடுத்தார். மேலும், பூசை முறைகளுக்கு யார் எந்த விதத்தில் உதவினாலும் அவர்கள் காசியில்/கங்கை  கரையில் ஒரு கோடி லிங்கம் பிரதிஷ்டை செய்த பலனை அடைவர் என்றும், இதற்கு (பூஜைக்கு) ஏதேனும் விதத்தில் தடங்கல் செய்பவர்கள், கங்கை கரையில் “காராம் பசுவை” கொன்ற  குற்றத்திற்கு உள்ளாவார்கள் என்று பிரகடனம் செய்தார். பழனி என்பது யோகிகளால்,நவக்ரகங்களில், செவ்வாய்க்கு பரிஹார ஸ்தலமாக கருதப்படுகிறது. தங்கள் தவத்தை/அதன் நிலையை உயர்த்திக்கொள்ள பழனியை யோகிகள் சிறந்த  இடமாக கருதுகின்றனர்

குருவை மிஞ்சிய புலிப்பாணி சித்தர்      இவர் போகரின் சீடராவார். புலிப்பாணி என்பது இவரது இயற்பெயரல்ல. இப்பெயர் மாற்றத்திற்கு காரணக் கதையுண்டு: ஒரு நாள் போகர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க தம் குருநாதர் கேட்டுவிட்டார் என்பதற்காக ஒரு புலியை வசியப்படுத்தி அதன் மீது ஏறிச் சென்று வெறும் கையாலேயே போதிய தண்ணீர் திரட்டிக் கொண்டு வந்தார். புலி மேல் சென்று பாணி (தண்ணீர்) கொண்டு வந்ததால் இவர் புலிப்பாணி என்றழைக்கப்பட்டார். பழனிமலை முருகன் சிலையை போகர் செய்வதற்கு உறுதுணையாய் இருந்தவர் புலிப்பாணி சித்தர். நவபாக்ஷாண மூலிகைகளை இவர் தமது புலியின் மீதேறி சென்று பறித்து வந்ததாக கூறப்படுகிறது. போகர்,சமாதிநிலைக்கு செல்லும் முன் பழநி தண்டாயுதபாணியின் பூசைகளை கவனித்துக் கொள்ளும்படி புலிப்பாணியை நியமித்தார். ஆனால் பிற்காலத்தில் அவரை போகர் சமாதிக்கு மட்டும் பூசை செய்ய அனுமதிக்கப்பட்டது. போகர் பழநி சிலையை செய்து முடித்ததும் சீன தேசத்திற்கு சென்றார். அங்கு தமது தவ வலிமைகளை இழந்து விடவே,இந்த புலிப்பாணியார் அவரை தமது முதுகிலேயே சுமந்து வந்து பழநியில் வைத்து அவருக்கு சகல தவ வலிமைகளையும் அளித்தார் என்று கூறப்படுகிறது. இவர் வைத்தியத்திலும் ஜாலங்கள் செய்வதிலும் போகரை மிஞ்சியவர் என்றும் சொல்லப்பபடுகிறது. புலிப்பாணி சித்தர் தமிழில் இயற்றிய நூல்கள்: புலிப்பாணி வைத்தியம் – 500புலிப்பாணி சோதிடம் – 300 புலிப்பாணி ஜாலம் – 325புலிப்பாணி வைத்திய சூத்திரம் – 200 புலிப்பாணி பூஜாவிதி – 50 புலிப்பாணி சண்முக பூசை – 30 புலிப்பாணி சிமிழ் வித்தை– 25 புலிப்பாணி சூத்திர ஞானம் – 12 புலிப்பாணி சூத்திரம் – 9ஆகியவை. தியானச் செய்யுள்: மகா சித்தருக்கே மருத்துவம் சொன்ன மரவுரிச் சித்தரே புலிவாகனம் கொண்ட மந்திர சித்தரே மயில் வாகனனை வணங்கியவரே எம் கலிப்பாவம் தீர்க்க உங்கள் புலிப்பாதம் பற்றினோம். புலிப்பாணி சித்தர் பூசை முறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்ச்சம் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல், புலிப்பாணி சித்தரின் படத்தினை வைத்து, அப்படத்தின் முன்பு, மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். முதலில் இந்த சித்தருக்காக குறிப்பிட்டிருக்கும் தியானச் செய்யுளை கண் மூடி மனமுருகச் சொல்ல வேண்டும். பிறகு பின்வரும் 16 போற்றிகளை வில்வம் அல்லது சாமந்திப் பூ அல்லது அரளிப் பூ கொண்டு அர்ச்சிக்க வேண்டும். பதினாறு போற்றிகள்: 1. கம்பீரமான தோற்றம் கொண்டவரே போற்றி! 2. தண்டபாணிப் பிரியரே போற்றி! 3.ஞானவரம் கொடுப்பவரே போற்றி! 4. வில்வ அர்ச்சனைப் பிரியரே போற்றி! 5. சித்த மருத்துவத்தின் தலைவரே போற்றி! 6. ராகு கிரகத்தை பூசிப்பவரே போற்றி! 7.யந்திரங்களை பிரதிஷ்டை செய்பவரே போற்றி! 8. உலகம் முழுவதும் வாசம் செய்பவரே போற்றி! 9. வனத்தில் வாசம் செய்பவரே போற்றி! 10. தெய்வயானையின் புதல்வரே போற்றி! 11. சூலாயுதம் உடையவரே போற்றி! 13.மிருகங்களால் பூஜிக்கப்படுபவரே போற்றி! 14.ஐஸ்வர்யங்களை அளிப்பவரே போற்றி! 15. எளிதில் மகிழ்ச்சி அடைபவரே போற்றி! 16. முருகப் பெருமானை வழிபட்ட புலிப்பாணி சித்தர் சுவாமியே போற்றி! போற்றி! இவ்வாறு 16போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு, மூல மந்திரமான, “ஓம் ஸ்ரீ புலிப்பாணி சித்தரே போற்றி” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். பின்பு நிவேதனமாக, கமலா ஆரஞ்சைக் கொட்டைகள் நீக்கி உரித்து சுளையாய் வைக்க வேண்டும். அல்லது தக்காளியை விதைகள் எடுத்து விட்டு உப்பு தூவி வைக்க வேண்டும், தயிர் சாதத்தை உப்பில்லாமல் தாளிக்காமல் வைத்து படைக்க வேண்டும். பின் உங்கள் பிரார்த்தனைகளை மனமுருகக் கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும். புலிப்பாணி சித்தர் பூசை பலன்கள்: இவர் நவக்கிரகத்தில் செவ்வாய் கிரகத்தை பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் 1,2,4,7,8,12 ஆம் இடத்தில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோசம் ஏற்படும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை குலையும், விவசாயம் பாதிக்கும். இவரை வழிபட்டால் செவ்வாய் கிரகத்தின் அருள் கிடைத்து கீழ்க்கண்ட பலன்கள் கிடைக்கும். 1. நிலத்தகராறு,சொத்துத் தகராறு, வழக்குகள் அகன்று வெற்றி கிடைக்கும்.2. சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். 3. அடுக்குமாடிக் கட்டிடங்கள், ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு தடைகள் நீங்கி வியாபாரம் பெருகும். 4.கட்டிடப் பொருட்கள் வியாபாரிகள், கிரானைட், செங்கல்,சிமெண்ட் ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களின் தொழில் தடை நீங்கி அதிக லாபம் கிடைக்கும். 5. செவ்வாய் தோசத்தினால் திருமணம் ஆகாமல் இருந்தால்,திருமணத்தடை நீங்கி, நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். 6.இவருக்கு சிவப்பு வஸ்திரம் சார்த்தி, ரோஜா, செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும். 7. பழனி தண்டபாணியின் அருள் கிடைத்து உடம்பில் உள்ள ரத்த சம்பந்தமான நோய்கள் அகலும். 8.அரசியலில் பெரும் வெற்றி கிடைக்கும். 9. இவருக்கு பிடித்தமான செவ்வாய்க் கிழமையில், அரளிப்பூ மாலையிட்டு வழிபட்டால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.
புலிப்பாணி ஜால வித்தைகள். போகரின் சீடரான புலிப்பாணி இயற்றிய நூல்கள் மற்ற சித்தர்களின் நூல்களைப் போல எளிதில் காணக் கிடைக்காதவை. அப்படியான ஒரு நூல்தான் புலிப்பாணி ஜாலம்325. இதில் பல சித்து வகைகளைப் பற்றி விளக்கியிருக்கிறார். அதனை இனி வரும் பதிவுகளில் காண்போம். நெருப்பில்லாமல் சோறாக்கும் ஜாலம்… “பாடினேன் அக்கினியு மில்லாமற் றான் பண்பான அன்னமது சமைக்கக் கேளு ஆடினேன் கானகத்தில் வேண துண்டு அடைவாக சதுர கள்ளி பாற் கரந்து சாடி நீ பாண்டத்தி லரிசி போட்டு சரியாக பால்தன்னை சுருக்காய் வாரு நாடிப்பார் சோறதுவும் வெந்திருக்கும் நலமாக ஜாலம்போல் லாடிப் பாரே”  -புலிப்பாணி ஜாலம் 325 – ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு நன்றாக கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, அதில் காட்டிலிருந்து கறந்தெடுத்து வந்த சதுரக் கள்ளியின் பாலை விட்டு கால் நாழிகை மூடி வைதிருந்து திறந்து பார்க்க சாதம் நன்றாக வெந்திருக்கும்.. ஆனால் அந்த சாதத்தை யாரும் புசித்தலாகாது. புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 137 வது பாடலான….. “பாரப்பா பாருலகில் பிரமிக்க சொல்வேன் பதிவாக மனத்தினிடம் நிறுத்திவை நீ காரப்பா கால் பலமே கற்பூரம் வாங்கி கடிதாக வாயில் போட்டு மென்று துப்பி சாரப்பா அவை தனிலே பந்தத்தை சுற்றி சரியாக கொளுத்தி அவையோருக்கு காட்டி நேரப்பா வாயிலிட்டு எக்ஷினியை என்று நிசிவாக நில்லேடி என் பாக்கள் என்னே”  கால் பலம் கற்பூரம் வாங்கி வாயில் போட்டு நன்றாக மென்று உமிழ்ந்து விட்டு மக்கள் கூடிய அவையில் போய் நின்று, பந்தத்தைக் கொளுத்தி அவையோருக்குக் காட்டி “எக்ஷினி நீ என்பக்கம் வந்து நில்லடி”என்று சொல்லி பந்தத்தை வாய்க்குள் வைத்து மூடி திறந்து காட்டலாம் ஒன்றும் ஆகாது. புலிப்பாணி ஜாலம்325 நூலில் 141 வது பாடலான….. “உண்ணவே இன்னுமொரு ஜாலங் கேளு இங்குரைப்பேன் விண்ணோரும் வெருண்டு நிக்க என்னவே இரங்கழிச்சில் விதை வாங்கி அதை குழித்தைலம் வாங்கிக் கொண்டு துன்னவே தைலமதை கையிற் தேய்த்து துலக்கமாதாம் தென்னைமரம் தன்னை நோக்கி கன்னவே மரத்தடியில் கைதால் குத்த கங்குமற்று காயதுவும் விழுகும் பாரே” உலகத்தோர் வியக்கும் ஜாலம் சொல்கிறேன் கேள்! , இரங்கழிச்சில் விதையை எடுத்துக் அதில் குழித்தைலம் செய்து, அத் தைலத்தை கொஞ்சமாய் எடுத்து, கையில் தேய்த்துக் கொண்டு காய்கள் காய்த்திருக்கும் தென்னை மரத்தில் ஒரு குத்து குத்த ஒருகாய் மரத்திலிருந்து விழுமாம். புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 163வது பாடலான….. “எமனுட அக்கினியை மதியா வித்தை இயம்புகிறேன் எல்லோரும் ஆச்சரிக்க நாமனவே சனகனிட புதரு தன்னில் நலமாக பூத்திருக்கும் காளான் தன்னை சொமனவே கொண்டுவந்து புது பாண்டத்தில் சுருக்குடனே போட்டு நீ கதிரில் வைக்க ஆமனவே தைலமாதா உருகும் பாரே அதையெடுத்து பூசி தீயில் குதி”  எல்லோரும் ஆச்சர்ய பட தக்கவிதமாக நெருப்பு சுடாமளிருக்கும் வித்தையைக் கூறுகிறேன் கேள், சங்கன் செடியின் புதர்களில் பூத்திருக்கும் காளானைக் கொண்டுவந்து புது மண் பாண்டத்தில் போட்டு சூரிய ஒளியில் வைக்க உருகி வரும் அதை உடம்பில் பூசிக் கொண்டு எவ்வளவு தீயில் வேண்டுமானாலும் குதிக்கலாம் சுடாது என்கிறார் புலிப்பாணி சித்தர். மணலைக் கண்ணில் கொட்டிக்கொள்ளும் ஜாலம்… புலிப்பாணி ஜாலம் 325 நூலில்273 வது பாடலான….. “பாடினேன் இன்னுமொரு ஜால வித்தை பண்பான பேர்விளங்க சொல்வேன் கேளு நாடியே நத்தை சூரி வேரைக் கண்டு நவிலாமல் தாடையிலே மடக்கிக் கொண்டு கூடியே கூச்சமென திருந்திடாமல் குணமான கண்ணதனில் மணலைப் போட்டு ஆடியே இரு கண்ணும் விரலால் தேய்க்க அன்பான கண்ணும் அருகாது பாரே” நத்தை சூரியின் வேரைக் கொணர்ந்து, சிறு சிறு துண்டு துண்டுகளாக்கி அதில் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் மென்று தாடையில் அதக்கிக் கொண்டு, இரு கண்ணிலும் மணலைப் போட்டுக் கொண்டு கையால் தேய்த்தால் கண்களுக்கு எதுவும் ஆகாது என்கிறார் புலிப்பாணி சித்தர். இத்துடன், இந்த நூலில் நத்தை வேரைக் கொண்டு செய்யும் வேறு சில ஜாலங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தவிர பச்சை பாம்பு ஜாலம்,மாடன் மந்திரம், இந்திர ஜாலம், எக்ஷனி ஜாலம்,வாத்தியஜாலம் போன்ற சில ஜால முறைகளையும், சில யந்திர ஜாலங்களையும் குறிப்பிட்டிருக்கிறார். இவைகளைப் பற்றி விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

 

புலிப்பாணி ஜோதிடம் .

 

புலிப்பாணி ஜோதிடம்  சித்தர்களில் பலர் மக்களின் நலன்களை கருதியும், தங்களின் சீடர்களின் துயரங்களைப் போக்கிடும் வகையில் சோதிட ஆய்வுகளின் தெளிவுகளை நூலாக்கி தந்திருக்கின்றனர்.இவை எல்லாமே வானில் உள்ள கிரக மண்டலங்களின் அமைப்பு மற்றும் கிரகங்களின் நிலை, நட்சத்திர அமைப்பு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு கணிக்கும் வகையில் வகுத்தளித்துள்ளனர். இத்தகைய நூல்களில் தனி சிறப்பாக சொல்லக் கூடியது புலிப்பாணி சித்தரின்”புலிப்பாணி ஜோதிடம் 300” என்னும் நூலாகும். இந்த நூலில் பல அரிய விபரங்களை விளக்கியுள்ளார். இதிலிருந்து ஒருவருடைய வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்க போகும் செயல்கள் எல்லாம் துல்லியமாக அறிந்து கொள்ள இயலும். வான் மண்டலத்தில் நீள் வட்ட பாதையில் சூரியனை மையமாகக் கொண்டு கிரகங்கள் சுற்றி வருகின்றன. இவை சுற்றிவரும் பாதையில் தான் இருபத்தியேழு நட்சத்திரங்களும் உள்ளன. இந்த இருபத்தியேழு நட்சத்திரங்களின்ன் பாதைகளை பன்னிரண்டு ராசிகளாக பிரித்து, அவற்றை நூற்றி இருபது அம்சங்களாக பகுத்திருக்கின்றனர். சந்திரன் இரண்டேகால் நாழிகை ஒரு ராசியில் சஞ்சரிப்பார். பிறந்த நேரத்தினைக் கொண்டு சூரியனின் அமைப்பைக் கொண்டு ஒருவரின் லக்னத்தையும், சந்திரனை வைத்து ராசியும் கண்டுபிடிக்கபடுகிறது. ஜோதிட விதிகளின் படி நாழிகை கணக்கே வழக்கத்தில் உள்ளது. ஒருநாள் என்பது அறுபது நாழிகை ஆகும். அதாவது இருபத்தி நாலு மணி நேரம் அறுபது நாழிகை என்று கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு நாள் என்று எழு நாட்கள் பிரிக்கப்பட்டுள்ளது, இதில் ராகு , கேது கிரகங்களுக்கு தனியே நாட்கள் வழங்கப்பட வில்லை. இப்படி கிரகங்கள் சஞ்சரிக்கும் கால அளவுகளை ஒட்டியே கிழமைகள், திதிகள்,வாரம், வருஷம், எல்லாம் குறிக்கப்படுகின்றன. பன்னிரண்டு ராசிகளும் பன்னிரண்டு கட்டங்களில் குறிக்கப் படுகிறது. இந்த கட்டங்களை அந்த அந்த ராசிகளின் வீடுகள் என்று குறிப்பிடுவர். இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் இந்த பன்னிரண்டு ராசிகளுக்குள் பிரிக்கப் பட்டிருக்கும். அதாவது ஒரு கட்டத்திற்கு ஒரு ராசியும் அதற்குண்டான நட்சத்திரங்களும் பிரிக்கப் பட்டிருக்கும். அந்த கட்டத்திற்குறிய ராசியினை, ராசி நாதன் அல்லது ராசி அதிபதி என அழைப்பர். பன்னிரண்டு ராசி அதிபதிகளும் அதற்க்கு உரிய நட்சத்திரங்களின் விவரம் வருமாறு…. மேஷம் – செவ்வாய் – அசுவினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம். ரிஷபம்- சுக்கிரன் – கிருத்திகை 2ஆம், 3ஆம், 4ஆம் பாதம் , ரோகிணி, மிருகசிரீஷம் 1ஆம், 2ஆம் பாதம். மிதுனம் – புதன் – மிருகசிரீஷம் 3ஆம், 4ஆம் பாதம், திருவாதிரை,புனர்பூசம் 1ஆம், 2ஆம், 3ஆம் பாதம். கடகம் – சந்திரன் – புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம். சிம்மம் – சூரியன் – மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் . கன்னி – புதன் – உத்திரம்2ஆம், 3ஆம், 4ஆம் பாதம் , அஸ்தம், சித்திரை 1ஆம், 2ஆம் பாதம் . துலாம் – சுக்கிரன் – சித்திரை 3ஆம், 4ஆம் பாதம்,சுவாதி, விசாகம் 1ஆம், 2ஆம், 3ஆம் பாதம் . விருச்சிகம் – செவ்வாய் – விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை. தனுசு – குரு – முலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம். மகரம் – சனி – உத்திராடம் 2ஆம், 3ஆம், 4ஆம் பாதம், திருவோணம்,அவிட்டம் 1ஆம், 2ஆம் பாதம். கும்பம் – சனி – அவிட்டம் 3ஆம், 4ஆம் பாதம் , சதயம், பூரட்டாதி 1ஆம், 2ஆம், 3ஆம் பாதம். மீனம் – குரு – பூரட்டாதி 4ஆம் பாதம் , உத்திரட்டாதி, ரேவதி. ஒருவரின் ஜாதகத்தில் லக்கினம் எந்த வீட்டில் குறிக்கிறதோ அதை முதலாவதாக கொண்டு எண்ணுதல் வேண்டும். முதலில் ராசி வேறு லக்னம் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும், பிறந்த வேளையில் சந்திரன் எங்கு இருக்கிறதோ அதுவே ராசி ஆகும். இந்த கிரகங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான குணாம்சங்களை கொண்டவை. இவை ஒவ்வொன்றும் பிற கிரகஙக்ளோட நட்பு, பகை அமைப்புகள் கொண்டவை. இதனை வைத்து ராசி கட்டங்களில் நட்பு வீடுகள், பகை வீடுகள், ஆட்சி , உச்ச , நீச வீடுகள் குறிப்பிடப்படுகின்றன. ஒன்பது கிரகங்கள், பன்னிரெண்டு ராசிகள், 27 நட்சத்திரங்கள்….இவை பன்னிரெண்டு கட்டங்களில் அமைக்கப் பட்டிருப்பது அதன் விவரங்கள் என்னவென்பதை கடந்த இரு பதிவுகளில் பார்த்தோம். ஒருவர் பிறந்த நேரத்தினை வைத்து லக்கினம் கணிப்பதும்,ராசியினை நிர்ணயித்து அவருக்கான ஜாதக கட்டங்கள் அமைப்பதன் அடிப்படைகளையும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். இனி இந்த பதிவில் கிரகங்களின் குணாம்சங்களை கவனிப்போம்…. கிரகங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை, இவை மற்ற கிரகங்களோடும், ராசிகளோடும் எத்தகைய அணுகு முறையினை வைத்திருக்கிறது என்பதும் மிக முக்கியமானது. இதை நட்பு நிலை, பகை நிலை,வலுவடைந்த நிலை, வலுக் குறைந்த நிலை, வலு இழந்த நிலை என்பதாக பிரித்திருக்கின்றனர். முதலில் ராசிகளோடு நட்பு நிலை பாராட்டும் கிரகங்களைப் பார்ப்போம்…. சூரியன் – விருச்சிகம், தனுசு, கடகம், மீனம். சந்திரன் – மிதுனம், சிம்மம், கன்னி. செவ்வாய் – சிம்மம், தனுசு, மீனம். புதன் – ரிஷபம், சிம்மம், துலாம். குரு – மேஷம், சிம்மம்,கன்னி, விருச்சிகம். சுக்கிரன் – மிதுனம், தனுசு, மகரம்,கும்பம். சனி – ரிஷபம், மிதுனம். ராகு, கேது – மிதுனம், கன்னி,துலாம், தனுசு, மகரம், மீனம். ராசிகளோடு பகை நிலை பாராட்டும் கிரகங்களைப் பார்ப்போம்… சூரியன் – ரிஷபம்,மகரம், கும்பம். செவ்வாய் – மிதுனம், கன்னி. புதன் – கடகம்,விருச்சிகம். குரு – ரிஷபம், மிதுனம், துலாம். சுக்கிரன் – கடகம், சிம்மம், தனுசு. சனி – கடகம், சிம்மம், விருச்சிகம். ராகு, கேது – கடகம், சிம்மம். சந்திரன் – எல்லா வீடுகளுமே நட்பு தான் பகை வீடு கிரகங்களின் ஆட்சி, உச்ச, நீச,திரிகோண நிலையங்கள்…  கிரகங்களின் பார்வைகள்…. எல்லா கிரகமும் தான் இருக்கும் இடத்திலிருந்து 7 வது வீட்டை அதாவது ஏழாவது கட்டத்தினை பார்ப்பார்கள். செவ்வாய் தான் இருக்கும் இடத்திலிருந்து 4, 7 , 8 வீடுகளை பார்க்கும் தன்மை உண்டு. { 4ம், 8 ம் பார்வை விசேட பார்வை}. குரு தான் இருக்கும் இடத்திலிருந்து 5, 7, 9 வீடுகளை பார்ப்பார். { 5ம், 9 ம் பார்வை விசேட பார்வை}. சனி தான் இருக்கும் இடத்திலிருந்து 3, 7, 10 ஆகிய வீடுகளைப் பார்ப்பார். { 3ம், 10ம் பார்வை விசேட பார்வை}. புலிப்பாணி சித்தரின் சோதிட நூலினைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னர்,இதுவரையில் நாம் பார்த்த சோதிட அடிப்படைகள் சிலவற்றை நினைவு படுத்திட விரும்புகிறேன். ஒருவரின் ஜாதக பலனை கணிப்பதற்க்கு, அவரின் பிறந்த நேரம் வைத்து ராசி, லக்னம், நட்சத்திரம் ஆகியவை வரையறுக்கப் படுகிறது. இராசி வேறு லக்னம் வேறு என்பதை புரிந்து கொள்ளுங்கள். இராசி என்பது பிறந்த நேரத்தில் சந்திரன் எங்கு இருக்கிறதோ அது தான் ராசி. அந்த ராசியை கொண்டு தான் கிரகங்களின் சஞ்சாரங்களை கணித்து பலன் கூற வேண்டும். இதையே கோசார பலன் என்று அழைப்பர். லக்னம் என்பது குறிப்பிட்ட ஜாதகருக்கு என்ன திசை நடக்கிறது எபதையும், எந்த கிரகம் எத்தனையாவது வீட்டில் உள்ளது என்பதையும், அதன் அதிபதி யார்?, அவர் என்ன நிலையில் இருக்கிறார்? அவர் ஆட்சி பெற்றிருக்கிறாரா?, அல்லது உச்சம் பெற்றிருக்கிறாரா?,அல்லது நீசம் அடைந்திருக்கிறாரா?, என்பதை அறிய உதவும். இந்த அடிப்படைகளைப் புரிந்து கொண்ட எவரும் “புலிப்பாணி ஜோதிடம் 300 ” என்ற நூலை எளிதில் புரிந்து கொள்ள முடியும். “புலிப்பாணி ஜோதிடம் 300 ” என்ற நூலில் காப்பு அடங்கலாக மொத்தமாக 309 பாடல்கள் உள்ளன. அந்த பாடல்கள் அனைத்திற்கும் தெளிவான பொருள் கூற தெரிந்தவர்கள் உலகிலுள்ள எந்த ஒரு மனிதரின் ஜாதக பலன்களையும் துல்லியமாகக் கணிக்க முடியும். நான் அறிந்த வரையில் மிகச் சிலரே இதில் விற்பன்னராய் இருக்கின்றனர். அவர்களை தேடியறிந்து பலன் கேட்பதே சிறப்பு. இந்த நூலில், “ஆதியெனும் பராபரத்தின் கிருபை காப்பு அன்பான மனோன்மணியாள் பாதங் காப்பு சோதி எனும் பஞ்ச கர்த்தாள் பாதங் காப்பு சொற்பெரிய கரிமுகனுங் கந்தன் காப்பு தீதி எனும் மூல குரு முதலாயுள்ள நிகழ்ச்சித்தார் போகருட பாதங் காப்பு வாதிஎனும் பெரியோர்கள் பாதங் காப்பு வாழ்த்துகிறேன் ஜோசியத்தின் வண்மை கேளே”  ஆதிக்கும் ஆதியாய் விளங்கும் பரம்பொருளுக்கும், அன்பான மனோன்மணி அம்மனின் பாதத்திற்கும், ஜோதிவடிவான பஞ்ச பூதங்களின் பாதத்திற்கும், முதற் கடவுளான ஆனைமுகனுக்கும்,கந்தனுக்கும், என்றும் வாழும் சித்தராகிய போகருக்கும்,எனக்கு வழிகாட்டியாக இருக்கும் சான்றோர்களையும் வணங்கி நல்வாழ்த்துக்களுடன் ஜோதிடத்தின் சிறப்பை சொல்கிறேன் கேள் என்பதாக ஆரம்பிக்கிறார். புலிப்பாணி முனிவர் இந்த நூலினை ஒரு புதிர் விளையாட்டினைப் போல அமைத்திருக்கிறார். எந்த ஒரு மனிதரின் பலனையும் துல்லியமாய் அறிந்து கொள்ளும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப் பட்ட இந்த நூலின் கட்டமைப்பு அசாத்தியமானது. ஒன்றைத் தொட்டு ஒன்றாய் தொடந்து செல்வதாக வடிவமைத்திருக்கும் புலிப்பாணி முனிவரின் அறிவுத்திறம் போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியது. நூலின் துவக்கத்தில் லக்னங்களைப் பற்றி விவரித்து விட்டு,தொடர்ச்சியாக கிரகங்களின் தன்மையினை விளக்குகிறார். பின்னர் லக்னத்தை கொண்டு குறிக்கப்படும் ஒவ்வொரு பாவங்களின் பலன்களை விவரிக்கிறார். அதைத் தொடர்ந்து என்ன லக்னத்திற்கு என்ன பலன் என்று விளக்கி விட்டு. ஒவ்வொரு கிரகமும் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதை விவரித்துக் கொண்டு சொல்கிறார். கிரகங்களின் பார்வைகளும் அதன் பலன்களையும் சொல்லும் வேளையில்,ஒருவரது ஜாதகத்தில் உள்ள யோகங்களைப் பற்றி விளக்கும் அவர், தோஷங்களைப் பற்றியும் அதற்க்குரிய பரிகாரங்களையும் சொல்கிறார். உதாரணத்திற்கு பிள்ளை இல்லாதவர்களுக்கு குழந்தை கிடைக்க என்ன பரிகாரம்,நாகதோஷம், செவ்வாய் தோஷம், காரியத்தடை எதனால் ஏற்படுகிறது அதை நிவர்த்திசெய்வது எப்படி? எந்த கிரகநிலை உள்ளவர் என்ன தொழில் செய்தால் அதிக லாபமீட்டலாம் என்பதையும், அத்துடன் என்ன கிரக நிலை உள்ள ஜாதகர் என்ன கற்பார் என்றும் , சில கிரகங்களின் அமைவிடத்தை வைத்து அந்த ஜாதகருக்கு புதையல் கிடைக்கும் என்பதையும் வரையறுக்கும் முறையும் சொல்லியுள்ளார். இந்த கிரகங்களின் மகா திசையில் இந்த புத்தி நடைபெற்றால் இன்ன பலன் என்பதையும் வரையறுத்து தெளிவாக சொல்கிறார். இவை எல்லாம் விளக்கமாக சொல்லும் அவர் இடைக்கிடையே தன்னுடைய குரு போகரின் அருளால் பக்குவமாக சொல்கிறேன் புலிப்பாணி என்று கூறிச் செல்கிறார். “பாரே நீ போகருட கடாட்சத்தாலே பாடினேன் புலிப்பாணி பதமாய்த்தானே” இந்த நூலின் அமைப்பினையும், தன்மையும் நானறிந்த வகையில் விளக்கியிருக்கிறேன். இதை பயன் படுத்தும் முறையினை பிரிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன். தமிழுக்கும், சோதிட கலைக்கும் கிடைத்த அரும்பெரும் கொடை இந்த நூல் என்றால் மிகையில்லை. இந்த நூலை முறையாக பயன் படுத்தினால் எவரும் தங்களின் பலன்களை துல்லியமாக அறிந்து கொள்ளலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *