Categories
Devara Sthalam Jyothirlingam

அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஸ்ரீசைலம்

மூலவர் – மல்லிகார்ஜுனர்,(ஸ்ரீசைலநாதர், ஸ்ரீபருப்பதநாதர் )


அம்மன் – பிரமராம்பாள், பருப்பநாயகி


தல விருட்சம் – மருதமரம்


தீர்த்தம் – பாலாநதி


பழமை – 2000 வருடங்களுக்கு முன்


புராணப் பெயர்
– திருப்பருப்பதம்


ஊர் – ஸ்ரீசைலம்


மாவட்டம் – கர்நூல்


மாநிலம் – ஆந்திரப்பிரதேசம்


பாடியவர்கள் – அப்பர், சம்பந்தர், சுந்தரர்

ஸ்தல வரலாறு

சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக்குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர். சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி,”தந்தையே! கலங்காதீர்கள். நான் சிவனைக்குறித்துக் கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்” என்றார். தவத்தில் மகிழ்ந்த சிவன், நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னைக் காண வர முடியாது என்று உத்தரவும் பிறப்பித்தார். நந்தி தவம் செய்த “நந்தியால்” என்ற இடம் மலையின் கீழே உள்ளது. அத்துடன் அவனது தம்பியாகிய பர்வதனும் தவமிருந்தான். பர்வத ன்கடும் தவம் செய்து சிவபெருமான் பாதம் எப்போதும் தன் மீது இருக்க வேண்டும் என்ற வரம் பெற்றான். ஆதன்படிப் பர்வதனை ஒரு மலையாக ஆக்கி ஸ்ரீ பர்வதம் என்னும் பெயரிட்டு தாம் சிவலிங்கமாக அம்மலையின் மீது அமர்ந்து எழுந்தருளினார். ஆந்த ஸ்ரீ பர்வதமே நாளடைவில் ஸ்ரீசைலம் என வழங்கலாயிற்று. சைலம் என்றால் மலை எனப் பொருள்படும்.
மற்றும் ஒரு சிவபக்தை நகஸ்ரீ என்பவள் தவமிருந்து இத்தலம் தனது பெயரால் வழங்கப்பட வேண்டுமென சிவபெருமானிடம் வரம் பெற்றாள். நகஸ்ரீ என்பது ஸ்ரீ நகம் என மாறி தற்போது ஸ்ரீசைலம் என மருவி வழங்குகிறது.
சிலாதமுனிவர் தவம் செய்தமையால் இம்மலை சிலாத முனி மலை எனப்பெயர் பெற்று நாளடைவில் ஸ்ரீ சைலம் எனப் பெயர் மருவிவிட்டது எனவும் கூறப்படுகிறது.

மல்லிகாபுரி என்ற பகுதியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள், சந்திரரேகா இங்கு கிடைத்த மல்லிகைப்பூவாலும், அர்ஜுனா மலர்களாலும் இறைவனைப் பூஜித்து வந்தாள். இதனால் இங்குள்ள இறைவன் “மல்லிகார்ஜுனர்” எனப்படுகிறார்.
பிரதோஷத்தன்று நமது ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், முக்தியே அடைந்து விடலாம் என்பதில் சந்தேகமில்லை. அவரது அவதாரத் தலமான ஸ்ரீசைலம் மனதிற்கு இதம் தரும் மலைப்பகுதியில் உள்ளது.

ஆந்திராவிலுள்ள ஸ்ரீசைலம் சிவனின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. இங்குள்ள மல்லிகார்ஜுனருக்கு நாமே அபிஷேக ஆராதனை செய்யலாம். சிவத்தலங்களில் கைலாயம் முதலிடம் என்றால், நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடம் வகிக்கிறது. அத்துடன் அம்மனின் 51 சக்திபீடங்களில் இது மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

குருக்ஷேத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதாலும், கங்கையில் 2000 முறை குளிப்பதாலும், நர்மதா நதிக்கரையில் பல வருடங்கள் தவம் செய்வதாலும், காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அவ்வளவு புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஒரு முறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் கூறுகிறது. நந்தியே இங்கு மலையாக அமைந்திருந்து அதன் மீது சிவன் ஆட்சிபுரிகிறார். நந்தியைத் தன் வாகனமாக்கியதும் இத்தலத்தில் தான். இங்குள்ள மிகப்பிரமாண்டமான நந்தி மிகவும் அழகு வாய்ந்தது. இங்கு சிவன் சன்னதி கீழே இருக்க, பிரமராம்பாள் சன்னதி 30 படிகள் உயரத்தில் அமைந்துள்ளது விசேஷமாகும்.

மல்லம்மா என்ற பக்தை இறைவன் மீது கொண்ட பக்தியால் கண்ணீருடன் காட்சியளிக்கும் சிலை பார்ப்பவர்களைக் கவரும். பஞ்ச பாண்டவர்கள் வந்து தங்கியதாக கூறப்படும் மடம் உள்ளது. மலைப்பாறை ஒன்றின் மீது பீமனின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளது. சிவன் தன் சூலத்தை ஊன்றி நின்ற தலம் என்பதால், மூலவர் விமானத்தின் மீது சூலம் வைக்கப்பட்டுள்ளது. கோயில், மலை உச்சியில் கிழக்கு நோக்கியுள்ளது. நாற்புறமும் கோபுரவாயில்கள். பிரதான வாயில் கிழக்கு கோபுரமே. ஆலய வாயிலில் உள்ள பெரிய மண்டபத்தில் கல்லால் ஆன நந்தி உள்ளது. ஆலய முகப்பில் சித்தி விநாயகர் தரிசனம். மேற்குப் பிராகாரத்தில் பாண்டவர்கள் கட்டியதாகக் சொல்லப்படும் ஆறு ஆலயங்கள், பளிங்குக் கல்லால் ஆன சண்முகர் கோயில் ஆகியவை உள்ளன.

ராஜராஜேஸ்வரி கோயில், அன்னபூரணி ஆலயம், சஹஸ்ரலிங்கேசுவரர் கோயில், பஞ்ச நதீஸ்வரம் ஆலயம் முதலியன தரிசிக்கத் தக்கன. தெற்கு வாயில் கோபுரம் “ரங்க மண்டபம்” எனப்படும். கிழக்கு வாயிலில் கல்யாண மண்டபமுள்ளது. இக்கோயிலிலிருந்து அருகிலுள்ள நாகார்ஜுனர் அணைக்கு செல்ல விசைப்படகு வசதி உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சத்திரங்கள் உள்ளன. மலையின் கீழேயிருந்து 3 மணி நேரம் பிரயாணம் செய்தால் தான் ஸ்ரீசைலத்தை அடைய முடியும். அடர்ந்த காட்டுப்பகுதியாக இம்மலை இருப்பதால், தனியார் வாகனங்கள் இரவு 8 மணியிலிருந்து காலை 6 மணிவரை செல்ல அனுமதி கிடையாது. அரசு பஸ்கள் மட்டுமே செல்லும். திங்கள், வெள்ளியில் கூட்டம் அலைமோதுகிறது.

இத்தலத்தில் வரலாறு சம்பந்தமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சிவாஜி மகாராஜாவால் இத்தலம் திருப்பணி செய்யப்பட்டுள்ளது வரலாற்றிலிருந்து தெரிய வருகிறது. சுவர்களில் பல சிற்பங்களும் காணப்படுகின்றன. இம்மலையில் மகாகாளர்கள் குகையும் அக்குகையில் அவர்கள் வணங்கிய காளியும் ஆதிசங்கரர் சிலையும் உள்ளன.

முன்னொரு காலத்தில் அனந்தபுரம் என்ற ஊரில் பிராமணப் பண்டிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் வயதான காலத்தில் கல்யாணி என்ற இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ஒருநாள் கல்யாணி ஆற்றுக்குப் போகும் போது வழியில் ஒரு அரிஜன வாலிபப் பையனைப் பார்த்து அவன் மேல் மோகம் கொண்டு இருவரும் ஒரு தோப்பில் கலந்து இன்புற்றனர். பின்பு கல்யாணி கங்கையாற்றில் குளிக்கப்போனாள். அப்போது கங்கை ஒருபெண் வடிவில் வந்து கல்யாணி கங்கையில் குளிக்கக் கூடாது எனத் தடுத்தாள். கணவனுக்குத் துரோகம் செய்து அந்நியனுடன் சம்போகம் செய்த துரோகி கங்கையில் குளித்தால் கங்கையின் புனிதம் கெட்டு விடும் என்று கங்கை கூறினாள். மேலும் கல்யாணியின் பாவத்தை கங்கை ஏற்க வேண்டி வரும் எனவும் கூறித்தடுத்தாள். கல்யாணி தன் தவறை உணர்ந்து தான் இளமை வேகத்தில் தவறு செய்து விட்டதாகக் கூறி கங்காதேவியிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாடி அழுது புலம்பினாள். மனமிரங்கிய கங்கை அவளைக் குளிக்க அனுமதித்தாள். கல்யாணியின் பாவம் நீங்கி அப்பாவம் கங்கையைப் பிடித்துக் கொண்டது. கங்கையான பெண் நம்நாட்டில் உள்ள எல்லா புனிதத் தீர்த்தங்களில் நீராடியும் பாவம் தீரவில்லை. ஆகாயத்தில் அலைந்து கொண்டு திரிந்த கங்கை ஸ்ரீசைலத்தில் சிவபெருமான் பாதத்தைத் தொட்டு ஓடிக்கொண்டு இருக்கும் புனித நீரைக் கண்டு கீழே இறங்கி வந்து அந்தப்புனித நீரில் நீராடினாள். கங்காதேவியின் சாபம் நீங்கியது. கங்கையைப் பிடித்திருந்த பாவம் பச்சை நிறமாக அந்த நீரில் ஓடியது. பாறைகள் பச்சைவண்ணமாக மாறின. ஆதனால் இந்த ஆற்றுக்குக் கிருஷ்ணா நதி எனப் பெயர் ஏற்பட்டது. இந்த இடம் பாதாள கங்கை எனவும் பெயர் பெற்றது. ஸ்ரீசைலத்திலுள்ள தீர்த்தங்களில் இதுவே மேன்மையுடையது. மல்லிகார்ச்சுனர் கோயிலிலிருந்து இறங்கப் படிக்கட்டுகள் உள்ளன. பக்தர்கள் முதலில் இங்கே குளித்துப் புனிதம் அடைந்த பின்பே இறைவன் கோயிலுக்குச் சென்று லிங்கத்தைத் தொட்டு வழிபட வேண்டும்.

துரியோதனன் சூழ்ச்சியைக் கூறி அவனுடன் போர் செய்ய வேண்டிய நிலை வரும் அவனை வெல்ல பாசுபதாஸ்திரம் வேண்டும் எனவே சிவபெருமானை நோக்கித் தவம் செய்து அவரிடமிருந்து பாசுபதாஸ்திரம் பெற்று வரும்படியான அறிவுரையை அர்ச்சுனனுக்குக் கண்ணபெருமான் கூறினார். கண்ணபெருமான் ஆலோசனைப்படி அர்ச்சுனன் ஸ்ரீசைலம் வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்தார். சிவபெருமான் ஒரு வேடன் வடிவில் அர்ச்சுனன் தபசு செய்யுமிடம் வந்தார். அப்போது ஒரு அசுரன் பன்றி வடிவில் அர்ச்சுனனைக் கொல்ல பயங்கரமாக உறுமிக் கொண்டு பாய்ந்து வந்தான். அர்ச்சுனன் கண்விழித்து பன்றி மீது அம்பு விடவும் சிவபெருமானும் அதே சமயம் பன்றி மீது அம்பு விட்டார். இருவரும் பன்றியைக் கொன்றது பற்றி சண்டை வந்துவிட்டது. இருவரும் பயங்கரமாகச் சண்டை போட்டுக் கொண்டார். அர்ச்சுனன் வில் ஒடியவே சிவபெருமானை வில்லால் அடித்தார். சிவபெருமான் அர்ச்சுனனுக்கு காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் எனக்கேட்டார்.
அர்ச்சுனன் தான் செய்த தவறை மன்னிக்க வேண்டும் என சிவபெருமானைக் கேட்டுக் கொண்டார். பின்பு தமக்குப் பாசுபதாஸ்திரம் வேண்டும் எனக் கேட்டார். அர்ச்சுனனின் வில்லாற்றல் தம்முடன் போர் செய்து அபிவிருத்தி அடையவுமே வேடனாக வந்து தனுர் வேதத்தை அர்ச்சுனனுக்கு போதித்ததாகச் சிவபெருமான் கூறினார். பின்பு பாசுபதாஸதிரப் பயிற்சியையும் மந்திரத்தையும் உபதேசம் செய்து அருள் புரிந்தார். அப்படி அர்ச்சுனன் தபசு செய்த இடம் இங்கே உள்ளது. அதனால்தான் இங்கு சிவபெருமானுக்கு மல்லிகார்ச்சுனர் என்ற பெயர் வழங்கி வருகிறது. படிக்கட்டுபக்கம் வீரசங்கரர் ஆலயம் உள்ளது. அந்த வீரசங்கரர் தான் அர்ச்சுனனுடன் வேடன் வடிவில் போர் செய்தவர்.

தேவாரப்பதிகம்:

சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர வரைக்கசைத்தான் இடுமணி யெழிலானை யேறல னெருதேறி விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப் படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே.– திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற வட நாட்டுத்தலங்களில் ஒன்று.

திருவிழா:

தெலுங்கு வருடப்பிறப்பு, ஆவணி மாத சப்தமி பூஜை.

பிரார்த்தனை:

பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற சுவாமிக்கும் அம்மனும் திருமணம் செய்து வைக்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இருப்பிடம் :

சென்னையிலிருந்து ஓங்கோல் வரை ரயிலில் சென்று அங்கிருந்து பஸ்களில் ஸ்ரீசைலம் செல்லலாம். பஸ்சில் செல்பவர்கள் திருப்பதி சென்று, அங்கிருந்து கர்நூல் செல்லும் பஸ்சில் நந்தியாலில் இறங்கி, ஸ்ரீசைலம் செல்லலாம். மலைப்பகுதியை சுற்றி பார்க்க ஜீப் வசதி உள்ளது. இதற்கு ரூ. 200 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

முக்கிய இடங்களிலிருந்து தூரம்: ஸ்ரீசைலம் நந்தியாலிலிருந்து வடக்கே 120 கி.மீ தூரம் உள்ளது. டொரனலாவுக்கும் வடக்கே 50 கி.மீ யில் உள்ளது. ஸ்ரீசைலம் ஹைதராபாத்திற்கும் தெற்கே 200 கி.மீ. மேற்கே கர்னூலிலிருந்து 180 கி.மீ. கிழக்கேயும் கிழக்கே குண்டூரிலிருந்து மேற்கே 195 கி.மீ. மெகப்பூரிலிருந்து தென்கிழக்கே 90 கி.மீ யில் உள்ளது ஓங்கோலிலிருந்து வடமேற்கே 182 கி.மீ. பத்ராசலத்திலிருந்து தென்மேற்கே 275 கி.மீ தூரத்தில் உள்ளது. பெங்களூருக்கு 537 கி.மீ தொலைவில் உள்ளது. சென்னை -340 கி.மீ. நெல்லூர் – 425 கி.மீ கோவை 820 கி.மீ. டெல்லி 1655 கி.மீ தூரமும் உள்ளது.

கோயில் நேரம்

காலை 5 – மதியம் 3மணி, மாலை 5.30 – இரவு 10 மணி. காலை நேரத்தில் மட்டுமே சுவாமிக்கு நாமே பூஜை செய்ய அனுமதியுண்டு. இதற்கு தனியாக கட்டணம் உண்டு.

கோயில் தொலைபேசி எண்

+91- 8524 – 288 881, 887, 888

கோயில் முகவரி

அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில்,

ஸ்ரீசைலம், (திருப்பருப்பதம்),

கர்னூல் மாவட்டம்,

ஆந்திரமாநிலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.