Categories
Other Temples

கோயம்புத்தூர் – மருதமலை ஸ்ரீ சுப்ரமணியா ஸ்வாமி திரு கோவில் 

கோயில் பெயர்

ஸ்ரீ சுப்ரமணியா ஸ்வாமி திரு கோவில்

தோற்றம் காலம்

12 ஆம் நூற்றாண்டு

தெய்வத்தின் பெயர்

மூலவர்: ஸ்ரீ சுப்ரமணியா ஸ்வாமி

அம்பாள்: வள்ளி, தெய்வானை

ஸ்தல விருக்ஷம்: மாருதா மரம்

பாடியவர்: அருணகிரிநாதர்

ஸ்தல வரலாறு

முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் கருதப்படுவது மருதமலை ஆகும், இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன், இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.  மருதமலைக்கு முருகபக்தரான சித்தர் ஒருவர் வரும் போது, தாகம் மற்றும் களைப்பு ஏற்பட்டு மருதமரம் ஒன்றின் நிழலில் இளைப்பாறினார். அப்போது அந்த மரத்தடியில் இருந்து ஊற்று நீர் பீறிட்டுக் கிளம்பியது. இந்த அதிசயத்தைக் கண்ட சித்தர் மகிழ்ச்சி அடைந்தார்.  முருகன் திருவருளே இதற்கு காரணம் என மகிழ்ந்த சித்தர் முருகப் பெருமானை ‘மருதம்-சலம்’ ஆகியவற்றுக்கு தலைவா என வாழ்த்திப் பாடினார். அதுவே காலப் போக்கில் மருதா சலபதி என மருவி அழைக்கப்படுகின்றது என்பர். ‘அசலம்’ என்ற வட சொல்லுக்கு தமிழில் ‘மலை’ என்ற பொருளாகும். அருணகிரிநாதர் திருப்புகழில் மருதமலை முருகனைப் பாடியுள்ளார். இவரை வனங்கினால் நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை முற்காலத்தில் கொங்கு வேட்டுவ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது மருதமலை முருகன் கோயில்  தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

தேவாரப் பாடல் பெற்ற தலமான திருமுருகன்பூண்டிகோயில் கல்வெட்டுகளில், மருதமலை கோயில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தகவல்கள் உள்ளன. முருகன் கோயிலுக்கு அருகில் பாம்பாட்டி சித்தரின் குகைக்கோயில் அமைந்துள்ளது.  வரலாற்று சிறப்புமிக்க பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான பாம்பாட்டி சித்தர், இந்த குகையில் சில காலம் வசித்து வந்தார்.  பல மூலிகைகளின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பற்றிய அவரது குறிப்புகள் மிகவும் சிறப்பானவையாகக் கருதப்படுகிறது.

1320 படிகளேறி செல்ல அழகனை தரிசிக்கலாம்,  கொங்கு மண்டல சதகம் கூட சென்னிமலையின் புகழ் பாடுகிறது.இரண்டு காளைகள் பூட்டிய வண்டி தாமாக படியேறி வந்த அற்புதம் இங்கே 19ஆம் நூற்றாண்டில் நடந்திருக்கிறது.

மருதமலையின் சிறப்பு :

மருதமலையை மருந்து மலை என்று சொல்லும் வகையில் மக்களின் உடற்பிணியும், மனப்பிணியும் நீக்கும் மூலிகைகளும் மரங்களும் உள்ளன. அருமையான காற்றும், அமைதியான சூழலும் மனத்திற்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. தவம் செய்வோர் அருளாளர்கள் இறப்பிலாப் பெருவாழ்வு அடைய காயகல்பம் தேடி இம்மலையில வந்து தங்கினர்.  காமதேனு என்னும் தெய்வீகப்பசு இம்மலையில பசி நீங்க மேய்ந்து மருத மரத்தின் கீழ் இருந்த நன்னீரைப் பருகியதாக பேரூர் புராணத்தில் கச்சியப்ப முனிவர் கூறியுள்ளார்.

தல விருட்சம் :

மிகப்பழமையான காலத்தே நம் முன்னோர்கள் வனத்தை இருப்பிடமாக கொண்டு வாழ்ந்து வந்தனர். பின்னர் நாகரீக வளர்ச்சியில் காடு கெடுத்து நாடாக்கப்பட்ட பின்பு தெய்வங்களுக்குப் பெருங்கோவில்கள் அமைக்கப்பட்டன. இவ்வாறு கோவில்கள் அமைக்கப்பட்ட போதிலும் ஆதியில் இருந்த மரத்தினை அழிக்காது அதனை இன்றளவும் சுவாமிக்கு அருகில் தல விருட்சம் (தலமரம்) என்ற பெயரில் வளர்த்து வருகின்றனர். அவ்வகையில் மருதமரமானது இங்கு ஸ்தல விருட்சமாக இருந்து வருகிறது

தங்கத்தேர் :

மருதமலை முருகன் கோவிலில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் தங்கத்தேர் புறப்பாடு நடந்து வருகிறது. சுமார் 16 1/2 அடி உயரத்தில் ரூ.1.08 கோடி மதிப்பில் தங்க ரதம் செய்யப்பட்டு உள்ளது. தங்க ரதத்தில் ஜொலிக்கும் முருகனை தரிசனம் செய்ய கண் கோடி வேண்டும் என்பது போல் பக்தர்கள் மனமுருகி வேண்டி செல்கிறார்கள். தங்க ரத புறப்பாடு காணிக்கையாக பக்தர்கள் ரூ.1500-ஐ செலுத்தினால் தங்க ரதத்தை இழுத்து வேண்டுதலை நிறைவேற்றலாம். மேலும் ரூ.25 ஆயிரம் முதலீடாக செலுத்தினால் அந்த தொகையில் கிடைக்கும் வட்டியை கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பும் ஏதாவது ஒரு நாளில் தங்கரத புறப்பாடு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருமணம் கை கூடும் :

நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் திருமணத் தடை ஏற்படுவோர் இத்திருக்கோவில் சுவாமிக்கு பொட்டுத்தாலி, வஸ்திரம் வைத்து கல்யாண உற்சவம் நடத்தினால் கட்டாயம் விரைவில் திருமணம் நடக்கும். குழந்தை இல்லாத தம்பதியினர் 5 வாரம் வெள்ளிக்கிழமை தோறும் வழிபாடு செய்தால் நிச்சயம் முருகனின் அருள் கிடைக்கும் இங்குள்ளது பாம்பாட்டி சித்தர் வடித்த முருகன் சிலை மலைக்கோயிலுக்குச் செல்லும் வழியில் நடுவே இடும்பன் சன்னதி இருக்கிறது. இச்சன்னதி எதிரே புலி வாகனம் உள்ளது.

அர்த்தஜாம பூஜை விசேஷம் :

மருதமலையில் முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கு புதிய சிலை வடித்தார். இந்த சிலையே மூலஸ்தானத்தில் இருக்கிறது. இரண்டு கரங்களுடன் உள்ள இவர், பழநி முருகனைப் போலவே, கையில் தண்டத்துடன், இடதுகையை இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி தருகிறார். தலைக்கு பின்புறம் குடுமி உள்ளது. காலில் தண்டை அணிந்திருக்கிறார். தினமும் ராஜ அலங்காரம், விபூதிக்காப்பு, சந்தனக்காப்பு என மூன்றுவித அலங்காரங்களுடன் காட்சி தருவார். விசேஷ நாட்களில் வெள்ளிக்காப்பும், கிருத்திகை, தைப்பூசம் நாட்களில் தங்க கவசமும் அணிகிறார். அர்த்தஜாம பூஜையில் மட்டுமே இவரை தண்டாயுதபாணியாக சுய ரூபத்தில் தரிசிக்க முடியும். அப்போதுஆபரணம், கிரீடம் என எதுவும் இல்லாமல், வேட்டி மட்டும் அணிவிக்கின்றனர். அருணகிரியாரால் பாடப்பெற்றவர் இவர். இத்தலம் ‘ஏழாம்படை வீடாக’ கருதப்படுகிறது.

பாம்பாட்டி சித்தர் சன்னதி :

மலைப்பாறைகளுக்கு மத்தியில் உள்ள குகையில் பாம்பாட்டிச் சித்தர் சன்னதி உள்ளது. வலது கையில் மகுடி, இடது கையில் தடிவைத்துள்ளார். முருகனுக்கு பூஜை முடிந்ததும், சித்தருக்கும் பூஜை செய்யப்படுகிறது. பாம்பாட்டிச்சித்தர் இப்போதும் இங்கு முருகனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். தினமும் இவரது சன்னதியில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி வைத்து விடுகிறார்கள். மறுநாள் இந்த பால் குறைந்திருக்குமாம். சித்தர், இந்த பாலை முருகனுக்கு அபிஷேகித்து பூஜை செய்வதாக சொல்கிறார்கள்.

மருதாச்சல மூர்த்தி :

மருத மரங்கள் நிறைந்தும், நோய் நீக்கும் மருந்து குணங்களை உள்ளடக்கிய மூலிகைகளைக் கொண்டதுமான மலையில் அருளுபவர் என்பதால் இங்கு முருகன், ‘மருதாச்சலமூர்த்தி’ என்றுஅழைக்கப்படுகிறார்.  மருதமரமே இத்தலத்தின் விருட்சம். தீர்த்தத்தின் பெயர் ‘மருது சுனை’. இந்த தீர்த்தம் பிரசித்தி பெற்றது. மலையில் உள்ள ஒரு மருதமரத்தின் அடியில் இருந்து இந்த தீர்த்தம் உற்பத்தியாகி வருகிறது. இந்த தீர்த்தமே சுவாமி அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.  இத்தலத்தில் முருகன் சுயம்புமூர்த்தியாக இருக்கிறார். இவருடன் வள்ளி, தெய்வானையும் சுயம்புவடிவில் இருப்பது விசேஷம். முருகனுக்கு பின்புறத்தில் பிளவு இருக்கிறது. வள்ளி உயரமாகவும், தெய்வானை சற்று உயரம் குறைந்தும் காட்சி தருகின்றனர். இந்த முருகனே இத்தலத்தின் ஆதிமூர்தியாவார். இவரது சன்னதி ‘ஆதி மூலஸ்தானம்’ எனப்படுகிறது. இவருக்கு முதல் பூஜை .

கோவில் அமைப்பு

தான்தோன்றி விநாயகர்.

இத்தகைய சிறப்பு பெற்ற மருதமலை அடிவாரத்தில் உள்ள படிக்கட்டு பாதையின் தொடக்கத்தில் தான் தோன்றி விநாயகர் கோவில் உள்ளது. இந்த விநாயகரின் இயற்கை அமைப்பு மிக்க அழகுடையதாகும். பிற தலங்களில் காண்பதற்கு அரியதாகவும் உள்ளது. இந்த விநாயகரை வணங்கிச் சென்றால் சரியாக 18 படிகளைக் கொண்ட பதினெட்டாம் படி உள்ளது. சபரிமலைக்கு   சென்று அய்யப்பனை வழிபட இயலாத பக்தர்கள் இந்த 18-ம் படிக்கு வந்து வழிபட்டு செல்வார்கள்.

கற்சிலையான திருடர்கள்.

இந்த படியை கடந்து மேலே சென்றால் மலைச் சாரலில் 3 கற்கள் மாறுபட்ட நிறத்துடன் இருப்பதை காணலாம். அதாவது இந்த மூன்று கற்களும் சிலையாகி போன திருடர்கள் என்பார்கள். ஒரு முறை முருகன் அடியார்கள் கோவில் திருப்பணி நடந்த போது பொன், பொருளை உண்டியலில் போட்டனர்.  இதைக் கண்ட 3 திருடர்கள் ஒரு நாள் இரவில் வந்து உண்டியலை உடைத்து பொன்னையும், பொருளையும் திருடி மலைச்சரிவு வழியாக சென்றனர். அப்போது முருகப் பெருமான் குதிரைவீரனைப் போல் சென்று அவர்களைப் பிடித்து ‘நீங்கள் கற்சிலைகளாக மாறுவீர்’ என சபித்தாராம். இதனால் அந்த திருடர்கள் 3 பேரும் கற்சிலைகளாக நிற்பதாக செவிவழிச் செய்தி கூறுகிறது.

இடும்பன் கோவில்.

இந்த தலத்தில் அமைந்துள்ள இடும்பன் கோவிலில், இடும்பனின் உருவம் உருண்டை வடிவமாக பெரிய பாறையில் உள்ளது. காவடி யைச் சுமந்து கொண்டு இருக்கும் தோற்றத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இடும்பனை வணங்கினால் குழந்தை பேறு கிடைக்கும் என்பதால் பக்தர்கள் இடும்பனை வணங்கி செல்வார்கள்.  இடும்பனை வணங்கி சற்று மேலே சென்றால் குதிரைக்குளம்பு என்ற சுவடு உள்ளது. இதற்காக எழில்மிகு மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. முருகப்பெருமான் சூரர்களை வெற்றி கொள்ள புறப்படும் போது அல்லது வெற்றியுடன் திரும்பி வரும் போது குதிரைக் குளம்புகள் படிந்த இடம் எனக் கூறப்படுகிறது. உண்டியல் பொருட்களை திருடர்கள் திருடிச் செல்ல அவர்களை முருகப் பெருமான் தேடிச் சென்ற போது ஏற்பட்ட குதிரைக் குளம்படியாகவும் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது ஆதி

மூலஸ்தானம்.

படி ஏறி மலையை அடைந்தால் நேரில் ஆதி மூலஸ்தான சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதி அருவுருவத் திருமேனியாக லிங்க வடிவில் அமைந்துள்ளது. வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் மூவரும் லிங்க வடிவில் காட்சி தருகின்றனர். மூலஸ்தானமாகிய இங்குதான் களாக நிற்பதாக செவிவழிச் செய்தி கூறுகி முதலில் பூஜைகள் தொடங்குகிறது. இயற்கை அழகுமிக்க மலைகளுக்கு இடை யில் இதயம் போல் காட்சி அளிக்கும் அழகிய மலைக் கோவிலாம் மருதமலை மனதை கொள்ளை கொள்கிறது.

தீர்த்தம்.

இந்த கோவிலில் மருதமலையான் சிரசில் (தலை) கண்டிகையுடன், பின்பக்கம் குடுமியுடன், கோவணம் கொண்டு வலது திருக்கரத்தில் ஞானத்தண்டு ஏந்தி, இடது திருக்கரத்தை இடையில் அமைத்து வினைகளை வேரறுத்து எமன் பயம் தீர்த்து உண்மை அறிவை அறியச் செய்யும் நீண்ட வேலோடு உலகைக் காக்கும் மருதாச்சலமூர்த்தி அருள் பாலிக்கிறார். நமது நாட்டில் புனிதமாக விளங்கும் கிணறு, ஆறு, கடற்கரை இவையாவும் சிவமயத்தன்மை பெற்று இருக்கிறது. இதில் நீராடும் போது உடற்பிணி, பிறவிப்பிணி நீங்குகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மருதமலையில் மருதத்தீர்த்தம், கந்த தீர்த்தம், கன்னி தீர்த்தம் என்ற தெய்வீகத் தன்மை வாய்ந்த மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இந்த தீர்த்தங்களில் நீராடுவோருக்கு செல்வங்கள் பெருகும் எனவும், உடற்பிணி நீங்கும் எனவும் புராணங்கள் கூறுகிறது.

உச்சிப் பிள்ளையார்.

இந்த தலத்தின் மலை மீது வடக்காக சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உச்சிப்பிள்ளையார் அமைந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதற்காக சரியான உருவ பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு ஒவ்வொரு சதுர்த்தி நாளிலும் அபிஷேக பூஜைகள் நடை பெற்று வருகின்றன. பக்தர்கள் தங்களது துன்பங்கள் நீங்கி இன்பமானது இடைவிடாது கிடைக்க வினை தீர்க்கும் உச்சிப் பிள்ளையாரை வழிபட்டுச் செல்கின்றனர்.

பட்டீஸ்வரர் சன்னதி.

கோவிலில் பிரதான சன்னதிக்கு வலது புறமாக உள் பிரகாரத்தில் பட்டீஸ்வரர் சன்னதி, இடது புறம் மரகதாம்பிகை சன்னதி உள்ளது. மரகதாம்பிகை சன்னதிக்கு எதிரே நவக்கிரக சன்னதி யும், பிரதான சன்னதிக்கு எதிரே உள்ள அலங்கார மண்டபத்தின் இடது புறமாக வரத ராஜ பெருமாள் சன்னதியும் உள்ளது.  இதைத் தவிர மருத தீர்த்தக் கரையில் சப்த கன்னிமார் கோவில் உள்ளது. இதன் காரணமாக இங்கு உள்ள தீர்த்தத்துக்கு கன்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. கோவில் மகா மண்டபத்தின் தென் கிழக்கில் கொரக்கட்டை, இச்சி, ஆலமரம், வக்கணை மரம் மற்றும் ஒட்டுமரம் ஆகிய 5 மரங்கள் ஒன்றாக பின்னிப் பிணைந்து வளர்ந்த அழகிய பழமையான மரம் ஒன்று அமைந்துள்ளது.

இதன் மரத்தடியில் பஞ்சமுக விநாயகர் சிலை ஒன்று உள்ளது. இந்த மரத்தின் காற்று எல்லா நோய்களையும் தீர்க்க வல்லது என்றும் இந்த மரத்தில் பல முனிவர்கள் தவம் செய்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த மரத் தின் வயது கணக்கிடப்படவில்லை. மேலும் இந்த கோவிலில் ஸ்தல விருட்சமாக மருதமரம் உள்ளது.

மருதமலையில் பாம்பாட்டி சித்தர்.

18 சித்தர்களுள் ஒருவராக போற்றப்படும் பாம்பாட்டி சித்தர் முருகனின் அருள் பெற்று மருத மலையில் வாழ்ந்தவர். காடு, மலை மற்றும் வனாந்திரங்களை வாசஸ்தலமாககொண்டு சுற்றித் திரிந்தவர். பாம்பாட்டி சித்தர் ஒரு முறை இறந்து போன மன்னன் உடலில் கூடு விட்டு கூடு பாயும் வித்தை மூலம் புகுந்தாராம். இதே போல் இறந்த பாம்பை ஆட்டு வித்ததால் இவர் பாம்பாட்டி சித்தர் என்று அழைக்கப்பட்டார். முருகன் இந்த பாம்பாட்டி சித்தரிடம் அருள் விளையாட்டுக்கள் செய்துள்ளார். மருதமலையில் பாம்பாட்டி சித்தரை வழிபடும் பக்தர்களுக்கு விஷத்தினால் வரக்கூடிய தோஷங்கள் நிவர்த்தி அடைவதுடன், சரும ரோகங்களும் தீர்க்கப்படுகின்றன. அமைதி இல்லாத மனதுடன் வந்து வழிபடும் பக்தர்களுக்கு அமைதி கிடைக்கிறது.  வாதம், வைத்தியம், ஞானம் கைகூட வேண்டும் என்று விரும்பும் பக்தர்கள் பாம்பாட்டி சித்தரை தரிசனம் செய்து விட்டு சென்றால் அவர் பக்தர்களுக்கு பல ரூபங்களில் வந்து அருள் புரிவதாக ஐதீகம். பாம்பாட்டி சித்தர் மருதமலையில் இன்றும் அருள் வடிவாக இருப்பதால், முருகனின் அருளைப் பெருக்கி பக்தர்களை ஈர்க்கும் சக்தியாகவும் விளங்குகிறார்.  இந்த மலையில் பாம்பாட்டி சித்தர் தவம் செய்து முருகனை வழிபட்ட இடம் ஸ்தல விருட்சத்துக்கு நேர் எதிரில் அமைந்துள்ளது. கோவிலின் தெற்கு பகுதியில் உள்ள படிக்கட்டுகள் வழியாக கீழ் இறங்கி கிழக்கு திசை நோக்கி சென்றால் அங்கு பாம்பாட்டி சித்தர் சன் னதி உள்ளது. அங்கு உள்ள பாறையானது பாம்பு போன்ற அமைப்பில் இயற்கையாகவே அமைந்துள்ளது. இவர் இந்ததலத்தில் தங்கி சுரங்கப்பாதை மூலம் ஆதி மூலஸ்தானத் தில் உள்ள வள்ளி,தெய்வானை மற்றும் முருகப்பெருமானை வழிபட்டதாக கூறுகின்றனர்.

பாதை

மருதமலை முருகன் கோயில் ,கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ளது.

கோயில் நேரம்

காலை 9 மணி 12 முதல் மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

கோயில் தொலைபேசி எண்

0422 242 2490, + 91 (422) 422490

கோயில் முகவரி

சுப்பிரமண ஸ்வாமி திரு கோவில்

மருதமலை

கோயம்புத்தூர் – 641 046

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.