Categories
Library Library

சியவன மகரிஷி

பிருகு முனிவரின் மகன் சியவன மகரிஷி.

மகாபாரதத்தின் ஆதி பருவம், அத்தியாயம் 5 & 6 இன்படி, புலோமன் எனும் அரக்கன் பிருகு முனிவரின் கர்ப்பிணி மனைவியான
புலோமையைத் தூக்கிக் கொண்டு ஆகாய மார்க்கமாகப் பறக்க ஆரம்பித்தான். போகும் வழியில், புலோமையின் வயிற்றிலிருந்த குழந்தை, தன் தாயின் நிலைமையை உணர்ந்தது. கோபம் கொண்டு, கர்ப்பத்திலிருந்து வெளியே வந்தது.

தங்க நிறத்தில் ஜொலித்த அந்தக் குழந்தையைக் கண்டதும், புலோமனுக்கு பயம் ஏற்பட்டது. தான் சுமந்திருந்த புலோமையை, அப்படியே கீழே போட்டு விட்டு, அங்கிருந்து தப்ப முயன்றபோது
குழந்தையின் முகத்தில் இருந்து மின்னல் போல ஒளி வந்தது. அந்த ஒளியை தாங்க முடியாத அரக்கன் அந்த கணமே சாம்பலானான்.

புலோமையின் கருப்பையிலிருந்து நழுவி குழந்தை தரையில் விழுந்ததால், அக்குழந்தைக்கு சியவனன் எனப் பெயராயிற்று. வடமொழியில் சியவனன் அல்லது ச்யவனன் என்றால் நழுவி விழுந்தவன் என்று பொருள். ச்யவனம் என்றால் நழுவுதல் என்று பொருள்.சப்தரிஷிகளில் ஒருவர். ஆயுர்வேத மருத்துவத்தில் புலமைப் பெற்ற வேதகால ரிஷி ஆவார்.அஸ்வினி சகோதரர்கள் உடலுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் மருந்தை வழங்கியமையால், அம்மருந்தை சியவனர் உண்டதால் அவரின் பெயரால் சியவனபிரஷ் (Chyawanprash) என இன்றும் அழைக்கப்படுகிறது.

சியவனர் வைவஸ்வதமனுவின்
மகளான ஆருஷியை மணந்து கொண்டு ஔராவான் எனும் மகனை பெற்றார். மற்றும் வேதகால மன்னர் சர்யதியின் மகளும், வைவஸ்வத மனுவின் பேத்தியுமான சுகன்யாவை மணந்து
அப்னவவானன் மற்றும் தகிசன் எனும் இரண்டு மகன்களையும், ஹரிதா எனும் மகளையும் பெற்றார். சியவனர் கானகத்தில் கடும் தவம் புரிந்து வந்தார். வாலிபராக தவத்தைத் தொடங்கிய அவரை சுற்றி புற்று வளர்ந்தது. நீண்ட காலம் தவம் செய்தார். முதியவராக புற்றிலேயே தவம்
செய்தவராக இருந்தார்.

அந்த புற்றில் மூச்சு விட சிறு துவாரம் இருந்தது. மற்றும் கண்களுக்கு நேராக சிறு துவாரம் இருந்தது.
அவரின் மூடிய கண்கள் நெருப்பு ஜீவாலயமாக சிவப்பு நிறத்தில் காணப்பட்டது. நீண்ட வருடங்களுக்கு பிறகு அந்த தேசத்தை ஆண்ட
சர்யாதி மன்னன் காட்டில் வேட்டையாடவும் காட்டை ரசிக்கவும் தனது படையுடனும் தனது மனைவிகளோடும் தனது மூத்த மகள் சுகன்யாவோடு காட்டுக்குள் புகுந்தார்.

காட்டில் தங்கியிருந்த போது சுகன்யா காட்டை சுற்றி பார்த்த போது சியவன மகரிஷி தவம் செய்த புற்றருகே சென்றாள்.அங்கே முனிவர் தவம் செய்வது அவளுக்கு தெரியாது.புற்றின் அருகே வந்த போது அவரின் இரண்டு கண்கள் சிவந்து காணப்பட்ட இடத்தை என்னவாக இருக்கும் என நினைத்து அங்கே இருந்த பெரிய முள் கொண்டு குத்தி பார்க்க சியவன மகரிஷி வலி தாங்கமல் புற்றில் இருந்து எழுந்தார். யாரோ புற்றில் இருந்து எழுகிறார்கள் என பார்த்த சுகன்யா பயந்தவளாய் தன் சிநேகிதிகளோடு ஓடிவிடுகிறாள். சியவன மகரிஷி நடந்ததை தன் ஞானக்கண் கொண்டு அறிந்தார். கண்ணில் ஏற்பட்ட காயம் அவரது தவத்தால் உடனே சரியானது.தான் தவம் செய்வது சர்யாதி மன்னனுக்கு தெரியுமே ஏன் இப்படி நடந்தது

பல்லாண்டு கால தவம் கலைந்தற்கு
காரணகர்த்தாவே சர்யாதி மன்னனே
என நினைத்த மகரிஷி கோபம் கொண்டு
மன்னனும் படைவீரர்களும் ராணிகள், இளவரசி அனைவரும் தங்கள் உடலின் உள்ளே அனுப்பும் எந்த உணவும் ஜீரணமாகி வெளியே போகாமல் இருக்கக் கடவது!’ என சாபமிட்டார். யாருக்கும் உண்ட உணவு செறிக்கவில்லை. அனைவரின் வயிறு வீங்கிய வண்ணமே இருந்தது.
அனைவரும் சிரமப்பட்டனர். சர்யாதி மன்னன் சிந்தித்து இங்கே புற்றில் தவம் செய்த சியவன மகரிஷியை யாராவது தொந்திரவு செய்தீர்களா? என கேட்டார். சுகன்யா தயங்கியபடி நடந்ததை சொன்னாள். மன்னர் பதறியபடி மகளை அழைத்துக்கொண்டு சியவன மகரிஷி இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்து மகரிஷி காலில் விழுந்தார்.

எனது மகள் செய்த தவறை மன்னித்து எங்களை காத்தருள வேண்டும். எங்களுக்கு ஜீரண சக்தி அளிக்க வேண்டும் என்றார். சியவன மகரிஷியோ
தனக்கு வயது அதிகமாக ஆகிவிட்டது
இனி எனக்கு எப்போது முன் போல் தவம் செய்யும் ஆற்றல் கிடைக்குமோ தெரியவில்லை.
நீ உன் மகள் சுகன்யாவை எனக்கு திருமணம் செய்து வை அவள் செய்த தவறுக்கு பரிகாரமாக அமையும் பின்னர் உங்கள் அனைவரின் உடலும் பழைய நிலை அடையும் என்றார்.சுகன்யாவோ அவ்வளவு அழகு அவளை திருமணம் செய்ய இந்திரனுக்கு கூட ஆசை இருந்தது.

அவ்வளவு அழகான மகளை இந்த வயதானவருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டுமா என்ன கொடுமை இது என நினைத்தார் மன்னர். மன்னரின் நிலை அறிந்த சுகன்யா தந்தையே அந்த தவசீலரை திருமணம் செய்ய கொடுத்து வைத்திருக்க வேண்டும். என கூறி அவரை திருமணம் செய்ய சம்மதித்தார் . அனைவரும் பழையபடி ஆயினர். திருமணம் முனிவருக்கும் சுகன்யாவுக்கும் நடத்தி வைத்த பின் , அனைவரும் நாடு திரும்பினார்கள். சுகன்யா சியவன முனிவரின் மனைவியாய் முனிவருக்கு பணிவிடை செய்வதில் காலத்தை கழித்தாள். முனிவரின் ஆன்மீக சிந்தனைகளை கேட்பதில் ஆர்வம் காட்டினாள். ஒருநாள் தேவலோக மருத்துவர்களான அஸ்வினி தேவர்கள் அந்தக் கானகத்திற்கு வந்தார்கள். அழகி சுகன்யாவைக் கண்டு பிரமித்தார்கள்.ஓர் முதியவரோடு ஓர் அழகி எப்படி வாழ முடியும் நாங்கள் இரு தேவர்கள் இங்கே இருக்கிறோம் எங்களில் ஒருவரை தேர்ந்தெடு திருமணம் செய்வோம் என்றனர்.

சுகன்யாவோ சியவனரே தன் கணவர் என்றும் தான் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும் கூறி அவர்களின் வேண்டுகோளை நிராகரித்தாள். யோசித்த அஸ்வினி தேவர்கள் ஒரு யுக்தி செய்தார்கள். சியவனருக்குத் தாங்கள் இளமையும் அழகும் தர முடியும் என்றும் அப்படித் தந்தபின் தங்கள் மூவரில் யாரேனும் ஒருவரை அவள் ஏற்கலாம் என்றும் கூறினார்கள். சுகன்யா அஸ்வினி தேவர்கள் சொன்ன தகவலைக் கணவரிடம் வந்து சொன்னாள். கணவரின் இளமையும் அழகும் தனக்கு முக்கியமல்ல என்றும் தான் மன நிறைவோடு வாழ்வதாகவும் சியவனரிடம் தெரிவித்தாள். சியவனர் உன் கற்பின் சக்தியை பற்றி உனக்கே தெரியாது. அது போல என் தவத்தின் ஆற்றல் குறித்து அஸ்வினி தேவர்கள் அறிய மாட்டார்கள். சரி ஒரு பூ மாலையை எடுத்துக்கொண்டு என்னோடு வா என்றார். இருவரும் அஸ்வினி தேவர்கள் முன் போய் நின்றனர். அவர்களது நிபந்தனைக்கு உடன்படுவதாகக் கூறினார்.

அஸ்வினி தேவர்கள் மற்றும் சியவன மகரிஷி முவரும் ஓர் குளத்தில் மூழ்கி எழுந்தார்கள். அடுத்த கணம் குளத்திலிருந்து வசீகரமான தோற்றமுடைய மூன்று வாலிபர்கள் எழுந்தார்கள். மூவரும் அச்சு அசலாக ஒன்றாக இருந்தார்கள். ஒரே நிறம். ஒரே உயரம். ஒரே முக அமைப்பு. இந்த மூன்று பேரில் தன் கணவர் யாராக இருக்க கூடும் என எண்ணிய
சுகன்யா மூவரையும் உற்று உற்றுப் பார்த்தாள்.

அவர்களில் ஒருவர் விழிகள் மட்டும் அளவற்ற தவ வலிமை காரணமாக நெருப்புக் கங்குகளைப் போல் சுடர் வீசியது. தன் கையிலிருந்த மாலையை அவர் கழுத்திலிட்டாள், சுகன்யா. அஸ்வினி தேவர்கள் மீண்டும் பழைய உரு அடைந்தார்கள். தம் தவறுக்கு வருந்தி, அவளை மனமார வாழ்த்தினார்கள். தமக்கு இளமையும் அழகும் தந்த அஸ்வினி தேவர்களை வெறுங்கையுடன் அனுப்ப சியவனருக்கு மனமில்லை. யாகம் செய்து அவிர்ப்பாகம் தந்து அனுப்ப விரும்பினார்.

ஆசிரமத்தில் யாகம் நிகழ்த்தி அதன் பிரசாதமான அவிர்ப் பாகத்தை அஸ்வினி தேவர்கள் ஏற்க வேண்டினார். அதற்குள் அங்கே தோன்றினான் இந்திரன். பேரழகி சுகன்யா தன்னையல்லாத இன்னொருவருக்கு மனைவியானது குறித்து அவனுக்குக் கோபமிருந்தது. தேவலோகத்தைச் சேர்ந்தவர்களானாலும் அவர்களுக்கு அவிர்ப்பாகம் அளிக்கும் பழக்கமில்லை என்று அஸ்வினி தேவர்கள் ஏற்கவிருந்த அவிர்ப்பாகத்தைத் தட்டிவிட்டார். கடும் கோபமடைந்தார் சியவனர்.
‘‘ தன் தவ வலிமையால் ஒரு பெரிய பூதத்தைப் படைத்தார். பூதம் அவர் முன் கைகட்டி நின்று தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டது. ‘‘இந்திரனின் செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று நீ காலம் கழிப்பாய்!’’ என ஏவினார் சியவனர். பூதத்தைப் பார்த்த இந்திரன் அச்சமடைந்தான்.

‘‘சியவனரே! என்னை மன்னிக்க வேண்டும். அஸ்வினி தேவர்கள் இந்த யாகத்தில் மட்டுமல்ல, இனி நடக்கவிருக்கும் எல்லா யாகங்களிலும் அவிர்ப்பாகம் ஏற்றுப் பயனடையட்டும்!’’ என சொன்னார். அஸ்வினி தேவர்களும் இந்திரனும் பின்னர் விடைபெற்றார்கள். ஆனால் விடைபெறாமல் நின்று கொண்டிருந்தது பூதம்!

‘‘என்னைப் படைத்துவிட்டீர்கள் சியவனரே! நான் நிரந்தரமாக இந்த உலகில் இருக்கப் போகிறேன். எனக்குப் பசிக்கிறது. உணவு வேண்டும். இந்திரனின் செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் இனி நான் உண்ண இயலாது. அவன் மன்னிப்புக் கேட்டுச் சென்றுவிட்டான். இனி என் ஆகாரத்திற்கு ஒரு வழி சொல்லுங்கள்’’ என்றது அது. சியவனர் பூதத்திடம் ‘‘மதுக் கடைகளிலும் தாசி வீடுகளிலும் யாருமறியாமல் நீ இருக்க வேண்டும்.

அங்கே வருபவர்களின் உடல் நலத்தையும் செல்வ வளத்தையும் நாள்தோறும் தின்று உன் பசியைத் போக்கிகொள்வாய்’’ என மகரிஷி சொன்னவுடன்
பூதம் மகிழ்ச்சியோடு சியவனரிடமிருந்து விடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.