Categories
Library Library

நக்கீரர்


“நெற்றிக் கண்ணை திறப்பினும்
குற்றம் குற்றமே”

சங்ககால தமிழ் புலவர் நக்கீரர் பிறந்த ஊர்
திருமங்கலம் ஆலம்பட்டிக்கு அருகில் உள்ள திரளி கிராமம் ஆகும்.கீரம் என்றால் சொல் என்று பொருள்!
நக்கீரர் என்றால் நல்ல இனிய சொற்களையுடையவர் என்று பொருள்.நக்கீரர் வாழ்ந்த காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் உக்கிரப்பெருவழுதி ஆவார்.இவர் தன் நாட்டை நன்கு ஆண்டதோடு, தமிழ்க்கவிதைகளைப் புலவர்கள் வழி செவிகுளிரக் கேட்பவர். கந்தவேள் அடியார்க்கு வேண்டுவன செய்யும் பண்பாளர். இவன் தலையாலங்கானத்துப் போரில் பகைவரை வென்றவன்.இவர்,தமிழ்ச்சங்கத்தில் தமிழ் வளர ஆவன செய்தார். இச்சங்கத்தின் தலைமைப் புலவராக புலவர் திலகமான நக்கீரரை இவர் தமிழவையின் தலைமைப் புலவராக்கினார். பல விருதுகள், பல வரிசைகள் தந்து பாண்டியர் இப்பதவியை நக்கீரருக்கு அளித்தார்.

தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராக இவர் அமர்ந்த நாள் முதல் தமிழுக்கு இழுக்கு நேரும் போதெல்லாம் அதனைத் தடுத்துத் தமிழை இவர் தலைநிமிர வைத்தார்.ஓர் நாள் விறகு வெட்டும் தொழில் செய்யும் ஒருவர் மதுரைத் தமிழ்ச்சங்கம் நாடி வந்தார்.“தமிழறி பெருமாள்”என்ற பெண்மணி தமிழை இகழ்கிறாள். அதுமட்டும் இல்லாமல் தமிழன்றி வேறு மொழி அறியாத என்னைப் பார்த்து “உன்னை எல்லாம் மணக்க ஒரு பெண் தேவையா?”என்றும் கேட்கிறாள்

இதனைக்கேட்ட நக்கீரர் முருகனருள் கொண்டுத் தேர் ஏறினார். உறையூரை அடைந்தார். விறகு வெட்டும் தொழிலில் வல்லவனான அவன் காட்டிய தமிழறிபெருமாள் இல்லத்திற்குச் சென்றார். அங்கு தமிழறிபெருமாள் என்ற பெண்ணுடன் வாதம் புரிந்தார். வெற்றி பெற்றார். பின்பு அவளை விறகு வெட்டும் தொழில் செய்யும் தலைவனுக்கு மணம் முடித்துவைக்கிறார்.

சோழ மண்டல சதகத்தில் நக்கீரரை வென்றவள் தமிழறிபெருமாள் என்ற பெண் என்று குறிக்கப்பெறுகிறது. சோழ மண்டல சதகம் சோழச் சார்புடையது என்பதால் இவ்வாறு புனையப்பெற்றிருக்கலாம்.உறையூருக்கு வந்த நக்கீரர் அப்படியே காவிரியில் நீராடி திருஈங்கோய் மலைக்குச் செல்கிறார்.அம்மலைமீதுள்ள கோயிலுக்குச் சென்று ஈங்கோய் மலை எழுபது என்ற நூலைப் பாடித் தொழுகிறார். இதன் பின்பு அவர் மதுரை மாநகருக்குத் திரும்புகிறார்.திருவள்ளுவர் திருக்குறளை இயற்றித் தமிழ்ச் சங்கத்திற்குக் கொண்டுவந்தார். அவரின் குறளுக்கு ஒரு பாடல் செய்கிறார் நக்கீரர்.

தானே முழுதுணர்ந்து தண்தமிழின் வெண்குறளால் ஆனா அறம்முதலா அந்நான்கும் – ஏனோர்க்கு ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழிஉலகு என்ஆற்றும் மற்று

என்பது அப்பாடலாகும்.

இதன் காரணமாக திருவள்ளுவமாலை பாடித் திருக்குறளுக்கு மதிப்பு நல்கியவர் நக்கீரர் என்பது தெரியவருகிறது.

ஒருமுறை நக்கீரர் மதுரையில் பட்டி மண்டபத்தில் புலவர்களுடன் வீற்றிருந்த போது அந்த அவையில் குயக்கொண்டான் என்பான் ஒருவன் இருந்தான். அவன் எழுந்து ‘வடமொழியே உயர்ந்தது என்றும் தமிழ் தாழ்ந்தது என்றும் கூறினான். உடனே கோபம் வந்து விட்டது நக்கீரருக்கு. தமிழ் மொழியைத் தம் உயிரினும் மேலாகக் கருதியவர்

“முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி

பரண கபிலரும் வாழி – அரணிய

ஆநந்த வேட்கையான் வேட்கோ குயக்கொண்டான்

ஆநந்தம் சேர்க சிவா ”

என்று பாடினார்.

உடனே அந்தக் குயக்கொண்டான் வீழ்ந்து இறந்து போனான். அவையே அதிர்ந்து போயிற்று.அவை நிதானம் அடைவதற்குச் சற்று நேரம் ஆயிற்று. பின்னர் அவையில் உள்ள ஆன்றோர்கள் நக்கீரரைச் சமாதானப்படுத்தினார்கள்.

“அவன் தமிழை அறிந்தது அவ்வளவுதான். ஏதோ அவனது அறிவின்மையால் உளறிவிட்டான். அதற்காக அவன் இறக்கும்படி பாடியது எங்கள் மனத்தை எல்லாம் பிசைகிறது. எனவே இறக்கும்படி பாடிய நீங்களே அவனை எழுப்பும்படி பாடியருள வேண்டும்.” என்று வேண்டினார்கள்.அமைதியடைந்த நக்கீரர் உடனே

“ ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த

காரியத்தால் காலக்கோள் பட்டானை – சீரிய

அந்தண் பொதியின் அகத்தியனார் ஆணையினால்

செந்தமிழே தீர்க சிவா “

என்று பாடினார். தூங்கியவன் விழித்தெழுந்ததுபோல அவன் எழுந்து கொண்டான்.கீர்த்தியோடு வாழ்ந்த வமிச சேகரனுக்குப் பின் அவன் புதல்வன் வமிச சூடாமணி ஆட்சிப் பொறுப்பேற்றான். முந்தைய மன்னர்களுக்கு அவன் சற்றும் சளைத்தவனல்ல. அவன் தினந்தோறும் செண்பக மலர்களால் இறைவனை பூஜித்ததால் செண்பகப் பாண்டியன் என்ற சிறப்புப் பெயரும் பெற்றான்.

செண்பக பாண்டியனுக்கு ஓர் சந்தேகம்
பெண்களுக்கு இயற்கையிலேயே கூந்தலில் மணம் உண்டா என பல புலவர்களை கேட்டார் சந்தேகம் தீரவில்லை சந்தேகம் தீர்பவர்க்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசரிவித்தார்.தருமி என்ற புலவன் இறைவன் எழுதிக்கொடுத்த பாடலாகிய “கொங்குதேர் வாழ்க்கை”என்ற தொடக்கமுடைய ஒரு பாடலை சங்க மண்டபத்திற்கு எடுத்து வந்தார். வந்தவர் தன் பாடலுக்குப் பொற்கிழி தாருங்கள் என்றார்.

கடைச்சங்கத்தில் இருந்த தமிழ்ப் புலவர்கள் நாற்பத்தொன்பது பேர்களும் பெரும் புலமை பெற்றவர்கள். அவர்களுக்கெல்லாம் தலைவராக விளங்கியவர் நக்கீரர்

இப்பாடலை ஆராய்ந்த சங்கப்புலவர்கள் நாற்பத்தொன்பதுபேர், இதனில் பொருள் குற்றம் உள்ளது என்றனர். இதன் காரணமாக வருத்தமுற்ற தருமி மதுரையில் உள்ள சொக்கநாதர் கோயிலில் கிடந்தார். இவரின் வருத்தநிலை கண்டு, சிவபெருமான் வலவராய்த் தோன்றிச் சங்கத்திற்கு எழுந்தருளினார்.வந்தவர் கோபம் தீராமல் யார் எம் பாடலில் குறைகண்டது என்று வினவினார்.நாய்போன்ற யானே பாட்டில் பொருள் குற்றம் உள்ளது என்றேன் என்றார் நக்கீரர். பெண்கள் தலைமுடிக்கு இயற்கையில் மணம் உள்ளதாக இப்பாடல் குறிப்பது தவறு என்று உரைத்தார் நக்கீரர். இதனைக் கேட்ட வலவர் வானவப் பெண்களின் கூந்தலுக்கும் இயற்கையில் மணம் இல்லையா என்றார்.

அதற்கும் இயற்கையில் மணம் வராது என்றார் நக்கீரர்.மேலும் உலகாளும் நாயகியாம் உமையவள் கூந்தலுக்கும் இயற்கையில் மணம் இல்லையா என்றார். நக்கீரர் இல்லை என்றார். இதன் காரணமாக வலவர் சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தார். நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்றார் நக்கீரர்.நெற்றிக்கண்ணின் சூடு தாங்காமல் அவர் பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்தார். மயக்கம் தெளிந்து எழுந்தவர் வலவராக வந்த இறைவனைத் துதித்தார்.கோபப்பிரசாதம் என்ற நூலைப்பாடினார். இது கேட்டுக் கோபம் தணிந்தார் சிவபெருமாள். மேலும் அவர் “முன்பு ஒருமுறை இறைவியைப் பழித்தமையால் நான் இந்த விளையாட்டினை நிகழ்த்தினேன். இனி முருகனைத் துதித்து நல்அருள் பெறுவாய்”என்றார்.

இறைவனின் இச்சொல் கேட்டது முதல் முருகனின் அடியவராகி அப்பெருமான் மீது பல அலங்கல்களை நக்கீரர் பாடத் தொடங்கினார். திருவலஞ்சுழியில் மும்மணிக்கோவையைப் பாடினார். திருவேரகம், நடுநாடு, காஞ்சிபுரம் திருத்தணிகை, வடவேங்கடம், கங்கை, காசி, கேதாரம் போன்ற இடங்களுக்குச் சென்று அங்குள்ள குமரக்கடவுளைக் கண்டு வணங்கினார். கயிலைக்குச் செல்லவேண்டும் என்பது அவரின் விருப்பம்.

நக்கீரர் தனது புகழ்பெற்ற “திருமுருகாற்றுப்படை’ நூலைப் படைத்ததற்கு ஒரு வரலாறு உண்டு.கற்கிமுகி’ என்று ஒரு பெண்பூதம். சிவபெருமானிடம் அளவற்ற பக்தி உண்டு அந்த பூதத்திற்கு. என்னமாதிரி பக்தி தெரியுமா? சிவபூஜை செய்பவர்கள் அதைச் சரியாகக் கவனத்துடன் செய்யாமல் முறை வழுவிச் செய்தால் உடனே அது அவர்களைத் தூரத்தில் கொண்டுபோய் ஒரு குகைக்குள் அடைத்துப் போட்டு விடும்!

ஆனால் அவர்களுக்கு வேளா வேளைக்கு நல்ல சத்துள்ள சாப்பாடு போட்டு விடும்! அதனால் குகைக்குள் அடைபட்டு கிடக்கும் ஆசாமிகளுக்கு பெரும் மகிழ்ச்சி! எந்த வேலையும் செய்யாமல் சும்மா கிடப்பவர்களுக்கு யார் நேரம் தவறாமல் நல்ல அருமையான சாப்பாடு போட்டு வளர்ப்பார்கள்? ஆனால் அவர்களுக்கு ஒரு விஷயம் தெரியாது. இந்தப் பூதம் இவர்களுக்குச் சத்தான சாப்பாடு போட்டு இவர்களைக் கொழுக்க வைப்பது எதற்குத் தெரியுமா? சரியாக 1000 பேர் குகைக்குள் கைதிகளாய் வந்து விட்டால் ஒரு சுபயோக சுப தினத்தில் அந்த ஆயிரம் பேரையும் ஒரேயடியாய் விழுங்கித் தன் பசியைத் தீர்த்துக் கொள்ளும்!

அப்போது குகைக் கைதிகளாய் இருந்தவர்கள் 999 பேர். இன்னும் ஒரு நபர் கிடைத்து விட்டால் 1000 பேராகி விடும். அந்த ஒருவருக்காக அந்தப் பூதம் எங்கும் அலைந்து திரிந்து தேடிக் கொண்டிருந்தது.ஒரு நாள் நக்கீரர் ஓர் ஊரின் குளத்தில் நீராடித் தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டு குளக்கரையில் அமர்ந்து சிவபூஜை செய்து கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் “கற்கிமுகி’ என்ற அந்த பூதம் குளக்கரைக்கு அருகில் ஓங்கி வளர்ந்திருந்த ஒரு மரத்தின் மீது வந்து அமர்ந்து நக்கீரரை பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு கிளையை அசைத்து ஓர் இலையை உதிர்த்தது.மரத்திலிருந்து உதிர்ந்த இலை பாதி நீரிலும் பிரதி நிலத்திலுமாய் விழுந்தது. நக்கீரர் இதைப் பார்க்க நேரிட்டது. அதேநேரத்தில் நீரில் விழுந்த பாதி இலை மீனாகவும் நிலத்தில் விழுந்த பகுதி பறவையாகவும் மாறியது! மீன் பறவையை நீரினுள் இழுக்கிறது. பறவை மீனை நிலத்துக்கு இழுக்கிறது! இந்த அதிசயப் போராட்டத்தைப் பார்த்த வியப்பில் நக்கீரர் மனம் சிவபூஜையில் பதியவில்லை! இதைத்தானே பூதம் எதிர்ப்பார்த்தது.ஆயிரமாவது ஆள் அகப்பட்டு விட்டான் என்று அகமகிழ்ந்து

நக்கீரரைத் தூக்கிக் கொண்டு போய் தனது குகையில் அடைத்து விட்டது!சிவபூஜை வழுவியவர்கள் எண்ணிக்கை இந்த நபரோடு ஆயிரம் ஆகிவிட்டது. எல்லோரும் எனக்கு விருந்து படைக்கத் தயாராய் இருங்கள். நான் போய்க் குளித்துவிட்டு வருகிறேன்!” என்று அந்தப்பூதம்குளித்து வரக் கிளம்பிற்று!

குகையில் ஏற்கெனவே அடைபட்டுக் கிடந்தவர்கள் எல்லாம் புதிதாய் உள்ளே வந்த நக்கீரரைப் பார்த்து கண்டபடி திட்டினார்கள்! “”மகாபாவி! நீதான் எங்களுக்கு எமனாக வந்து சேர்ந்தாய். நீ மட்டும் வராமல் இருந்தால் அந்தப் பூதம் இன்னும் எத்தனையோ காலம் எங்களுக்கு அருமையாய் சாப்பாடு போட்டு வளர்த்திருக்கும். எல்லாவற்றையும் கெடுத்து குட்டிச் சுவராக்கி விட்டாயே! நீ வந்ததால் எண்ணிக்கை ஆயிரம் ஆகிவிட்டது. இப்போது அந்தப் பூதம் நம் எல்லோரையும் ஒரேயடியாய் விழுங்கப் போகிறதே… அய்யோ… அய்யோ!” என்று நக்கீரரைத் திட்டியும் தங்களுக்குள் புலம்பியும் அழுது தீர்த்தார்கள்!

நக்கீரருக்கு அவர்களைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. அதனால் அவர்களைப் பார்த்து, “”நீங்கள் எவரும் இப்படி பயந்து சாகவேண்டாம். என் அப்பன் முருகப்பெருமான் இருக்கிறான். அவனை மனதார நினைத்து உருகி வேண்டினால் ஒரு கணத்தில் நம் துயரைத் தீர்த்தருள்வான். என்றார்.அந்நேரத்தில் திருமுருகாற்றப்படை என்ற பாடலைப் பாடினார் நக்கீரர். இப்பாடலால் திருமுருகன் எழுந்து வந்தார். தன் கதை ஆயுத்தினால் அப்பூதத்தினைக் கொன்றார் முருகப்பெருமான்.அப்பெருமாளைத் தன் சொற்களால் போற்றியதாகச் சேய்த்தொண்டர் புராணம் பின்வரும் பாடலை அமைக்கிறது.

“ஐய சரணம் சரணம் அமல சரணம் சரணம்
அறுமுக விநோத சரணம்,
பையரவணிந்த சிவ சங்கரன் இடங்குலவு
பரைமகிழும் இளைஞ சரணம்
மையனைய சூழலிகுற வள்ளிகுஞ் சரிதழுவி
மகிழுமணவாள சரணம்
வெய்யப த்ரதத்ன இருந்த எளியோங்கள் எமை
விடுவித்த விமல சரணம்

என்ற பாடல் நக்கீரர் முருகனைப் போற்றிய நிலையைக் காட்டுகிறது.

நல்லார் ஒருவர் உளரேல் பல்லோருக்கும் மழை பெய்து பயன் தருவதைப் போல, நக்கீரரால் மற்ற சிவபக்தர்களின் உயிர்களும் காப்பற்றப்பெற்றது.முருகனின் பெருமைகளைச் சொல்லும் நூல் என்பதால் இது, “திருமுருகாற்றுப்படை’ (திருமுருகன் ஆற்றுப்படை) என்று பெயர் பெற்றது. பிற்காலத்தில் இந்த ஆற்றுப்படை தலங்களே மருவி, “ஆறுபடை’ என்றானது. அவர் பாடிய வரிசையிலேயே, ஆறுபடை வீடுகள் அமைந்துள்ளது.

இதன் பிறகு காளத்தி என்ற இடத்திற்குச் சென்று அங்குள்ள பொன்முகரி ஆற்றில் நக்கீரர் நீராடினார். நீராடி அவர் கங்கையின் மேற்கில் உள்ள மலையான கைலாய மலையில் எழுந்தார். அவரின் கைலாய எண்ணம் இதன்வழி நிறைவேறியது.இதன் தொடர்வாக கயிலை பாதி காளாத்தி பாதி, அந்தாதி, காரெட்டு, கண்ணப்பர் தம்மறம், எழுக் கூற்றிருக்கை, தேவநற்பாணி போன்ற நூல்களை அவர் படைத்தளித்தார்.இவ்வாறு இறைத்தொண்டு, தமிழ்த்தொண்டாற்றிய நக்கீரர் தன் வாழ்நாளின் நிறைவில் சோதியுள் கலந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.