Categories
18 Siddargal 18 Siddargal Jeeva Samadhi Jeeva Samadhi Library Library

பாம்பாட்டி சித்தர்

பாம்பாட்டி சித்தர் கோயம்புத்தூர் அருகே உள்ள மருதமலையில் ஜோகி என்ற மலை வாழ் சமூகத்தில் கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தார்.சிலர் திருகோகர்னத்தில் பிறந்ததாக சொல்கின்றனர்.

மருதமலை சுற்றி இருந்த காடுகளில் அதிக அளவு விஷப்பாம்புகள் இருந்தன. அவற்றை பிடிப்பதும்
அடித்துக் கொள்வதுமாக அந்த இளைஞன் இருந்தான். ஊரினுள் யாருக்காவது பாம்பு கடித்தால் ஔடதம் எனும் மூலிகை வைத்தியம் கொண்டு அவர்களை காப்பாற்றுபவராகவும் இருந்தார்.யாரும் பிடிக்க முடியாத பாம்புகளையும் மிக அனாசியமாக பிடித்தார்.

மருத்துவர்கள் தங்களுக்கு நாகமணி பாம்பு உயிரோடு மருத்துவத்திற்காக வேண்டும்
அந்த பாம்பு மலையுச்சியில் இரவில் மட்டுமே வெளியே வரும். தன் தலையில் நாக மணிக் கல்லை
வைத்து இறைதேடும். அந்த பாம்பு இதுவரை
ஒருவரையும் தீண்டாத பாம்பு வயது முதிர்ந்தவுடன் அளவில் சிறியதாகி பன் மடங்கு விஷ தன்மையுடன் இருக்கும். ஆகவே நீ மிக ஜாக்கிரதையாக பிடித்து வந்தால் அதிக அளவு பணம் தருகிறோம் என்றனர்.அது கேட்ட பாம்பாட்டி இளைஞன் இரவு நேரத்தில் மலை உச்சிக்கு சென்று நவரத்தின பாம்பை தேடினார்.

ஓர் புதர் மறைவில் நின்று பாம்பு தென்படுகிறதா என பார்த்துக்கொண்டு இருக்கும் போது
சிறிய ஒளி தெரிந்தது அந்த ஒளி அந்த இளைஞனை நோக்கி வர வர அது பெரியதாக ஆகிக்கொண்டே இருந்தது. பாம்பாட்டி இளைஞரின் அருகே வந்து
நின்ற ஒளிக்கதிரின் நடுவே ஓர் விபூதி பூசிய மனிதர் இளைஞனை பார்த்து பயங்கரமாக சிரித்தபடி நின்றார்.காடே அதிர்ந்தது. இளைஞன் நடுங்கியபடி அவரை பார்த்தபடி இருக்க அவர் இளைஞனை பார்த்து ஒரு நாகமணி கல்லை சுமந்திருக்கும் பாம்பை தேடி நீ வந்துள்ளாய்
ஆனால் உன் உடலிலே நவரத்தின கல்லை தாங்கிய அற்புத பாம்பை நீ அறியாமல் இருக்கிறாயே என்றார். எனக்கு நீங்கள் சொல்வது எதுவும் புரியவில்லை என்றான்.

“அந்த அபூர்வ நாகம் அனைத்து மனிதர்களுக்குள்ளும் உண்டு! குண்டலினி என்பது அதன் பெயர் ஆனால் உன்னைப்போலவே பலரும் தங்களுக்குள் இருக்கும் பாம்பை உணர்வதில்லை!

அப்பாம்பை அடக்கி ஆளும் சிறப்பைப் பெற்றவர்களே சித்தர்கள் என்றார் சட்டை முனி. சட்டென அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கியவன் “சுவாமி! எனக்குள் ஓர் பாம்பு உள்ளது என்ற தகவலை இன்றுதான் உங்களால் நான் அறிந்தேன். ஆனால் அது என்ன பாம்பு என்று எனக்குப் புரியவில்லை. தயவு கூர்ந்து எனக்கு அது பற்றி விளக்குவீர்களா?” என்று வேண்டினான்

அவனது வேண்டுதலை ஏற்ற சித்தர் பெருமான், “மனித உடல் ஓர் அற்புதப் படைப்பு! இந்த உடலுள் காலம் காலமாக ஓர் பாம்பு உறக்க நிலையில் மூலாதாரச் சக்கரத்தில் உள்ளது. அதனை குண்டலினி என்று கூறுவர். சிவத்தை உணர்வு நிலையில் வாழும் பண்பாளர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். சுவாசம் ஒடுங்கினால் குண்டலினி என்னும் அப்பாம்பு சீறி எழும். தியானத்தின் வாயிலாக அதனை ஆட்டிப் படைக்கலாம். இதனால் ஆன்மா சித்தி அடையும்” என்றார்.

அவனுக்கு அங்கேயே ஞானோபதேசம் செய்வித்த அவர், ”பாம்பாட்டியே, இனி நீ பாம்பாட்டிச் சித்தன் எனப் போற்றப்படுவாய்! எம் பெருமானின் நாகாபரணத்தை அணிந்து குண்டலினி சக்தியின் மேன்மைகளை இந்த மானிட குலத்துக்குச் சொல்லும் பதினெண் சித்தர்களில் ஒருவனாக தனித்துவத்துடன் புகழ்பெறுவாய்! உனக்கு உபதேசம் செய்த இந்த எளியோனின் பெயர் சட்டைமுனி!” எனச் சொல்லி மறைந்தார் சித்தர் சட்டைமுனி! இவ்விருவரின் சந்திப்பு பற்றி
போக முனிவர் தம் போகர் 7000-ல், புற்றருகில் சென்றுமல்லோ சித்தர் தாமும் பனிதமுள்ள நவரத்தினப் பாம்பு தன்னை வெற்றியுடன் தான் பிடிக்கப் போகும்போது வேதாந்தச் சட்டைமுனி அங்கிருந்தார். என்று கூறுகிறார்.

இளைஞன் அங்கிருந்த அத்தி மரத்தடியில் அமர்ந்து, சித்தர் பெருமான் உரைத்து அருளியபடி தியானத்தில் அமர்ந்தான். தியான முடிவில், குண்டலினி சக்தியை முற்றிலுமாக உணர்ந்து அனுபவித்தான். “ஆஹா! பரமானந்தம் அளிக்கும் இந்த மெய்ஞ்ஞான சுகத்தை இதுநாள் வரையில் நாம் அறியாது இருந்தோமே!” என்று வேதனைப்பட்டான். தம் குருதேவரான சட்டையின் அருளாசியால் பாம்பாட்டிச் சித்தர் தியானத்தில் சிறகடித்துப் பறந்து வந்து சித்திகள் அவரிடம் இரண்டறக் கலந்தன. கண்களைத் திறந்தார். அவருள் இருந்த சித்திகள்யாவும் வெளிப்பட்டன. இரும்பு செம்பானது, செம்பு பொன் ஆனது, மணல் சுவை மிகுந்த சர்க்கரையானது. தன் கரங்களால் கூழாங்கற்களை எடுத்து உற்றுப் பார்த்தார். உடனே அவை ஒளி வீசும் நவரத்தினக் கற்களாக மாறின.
அது கண்டு பாம்பாட்டிச் சித்தர் சிரித்தார். என்ன வாழ்க்கை இது…

நாகரத்தினக் கல் கொண்ட பாம்பைத் தேடி நான் அலைந்தேன். அது கிடைக்கவே இல்லை. இப்போது சாதாரண கூழாங்கற்களையே நவரத்தினக் கற்களாக மாற்றிடும் சித்து வேலை தானாக என்னிடம் வந்துள்ளது. இதுதான் காலத்தின் கோலம் போலும் என்று கூறி அக்கற்களை வீசியெறிந்தார். தான் சந்தித்த மானிடர்களுக்குப் பாம்பாட்டிச் சித்தர் உபதேசம் செய்தருளினார். ஆனால் அவரிடம் வந்தோர் அனைவரும் அவரிடம் நடித்துத் தங்களது வாழ்வை வளமாக்கிக் கொண்டார்களே தவிர, நல்லவற்றை கடைப்பிடிப்பதில் அவர்கள் முயலவில்லை.

அது கண்டு பாம்பாட்டிச் சித்தர் பெரிதும் வேதனைப் பட்டார். என்ன மனிதர்கள் இவர்கள்…. வயிற்றுப் பசிக்கு மட்டுமே இவர்கள் அலைகிறார்களே ஒழிய ஆன்மா என்று ஒன்று உண்டு. அதன் பசியை போக்க வேண்டும் என்று எண்ணம் துளியளவு கூட இல்லாதிருக்கிறார்களே… என்று அவர் வருந்தினார். இரவு, பகல் என அலைந்து திரிந்தார். பலரின் வியாதிகளைப் போக்கியருளினார். வறுமையால் வாடித் துன்புறும் ஏழை எளியோருக்கு இரசவாதம் மூலம் பொன்னைச் செய்து அவர்களது வறுமையைப் பாம்பாட்டிச் சித்தர் போக்கியருளினார்.

ஒரு நாள்‌ வான்‌ வழியே உலா வந்து கொண்டிருந்தார் பாம்பாட்டி சித்தர்‌ மன்னர் ஒருவர் கீழ்மக்களது சேர்க்கையால் செய்யத் தகாதவற்றை எல்லாம் செய்தார். இதனால் அம்மன்னரது உடல் இளைத்து மெலிந்தது. அடையாளமே தெரியாதவாறு அவர் உடல் இளைத்ததால் மிகவும் அவதிப்பட்டார். ஒருநாள் அம்மன்னர் நடந்து செல்லும் போது, கால் இடறிக் கீழே விழுந்தார். விழுந்தவர் எழுந்திருக்கவில்லை.
இறந்து போனார். கலைகள் பலவற்றைக் கற்றறிந்த உத்தமக் குல மகளான அரசி, ஐயோ, எவ்வளவோ சொல்லியும் நீங்கள் திருந்தவே இல்லையே, இப்போது என்னைத் தனியே தவிக்கவிட்டுவிட்டுச் சென்று விட்டீர்களே என்று கதறி அழுதாள். அரசியின் துயரைக் கண்டு குடிமக்களும் அமைச்சர்களும் மிகவும் வருந்தினர். அரண்மனையில் இருந்து வெளிவந்த அழுகை ஒலி விண்ணை எட்டியது.

பாம்பாட்டிச் சித்தரின் செவிகளில் இந்த அழுகை ஒலி விழுந்தது. உடனே அவர் விண்ணில் இருந்து பூமிக்கு வந்தார். பூமியை அடைந்ததும் அவர் தம் உடலை ஒருபுறமாக வைத்துவிட்டு, செத்த பாம்பு ஒன்றை எடுத்து இறந்த மன்னர் உடலைச் சுற்றி அழுது கொண்டிருந்தவர்களின் மத்தியில் வீசியெறிந்தார். தங்களிடையே விழுந்தது செத்த பாம்பு என்பதை அறியாது அனைவரும் அலறியடித்து ஓடினர். பாம்பாட்டிச் சித்தர் அருவமாக இறந்த மன்னர் உடலருகே வந்தார். உடனே மன்னர் உடம்பினுள் அவர் கூடு விட்டு கூடு பாயும் கலைப்படி புகுந்தார்

உடனே இறந்த மன்னரின் உடம்பு உயிர் பெற்று மெல்ல அசைந்தது. கண்கள் சட்டெனத் திறந்தன. அரசர் எழுந்து அமர்ந்தார். அது கண்டு அரசியும், அமைச்சர்களும், கூடியிருந்தோரும், மன்னர் இறக்கவில்லை. உயிருடன்தான் உள்ளார், என்று மகிழ்ந்து கூவினர். அரசி தன் கழுத்தில் அணிந்திருந்த திருமாங்கல்யத்தை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

அரசன்‌ எழுந்தான்‌ அனைவருக்கும்‌ மகிழ்ச்சி ஆனால்‌ அரசன்‌ பிழைத்துக்‌ கொண்டாரே தவிர அவர்‌ செய்கைகள்‌ ஏதும்‌ திருப்திகரமாக இல்லை. மக்களின்‌ விமர்சனம்‌ காதுபடவே விழுந்தது. ராணி கவலைப்பட்டாள்‌. அவள்‌ மனதில்‌ சந்தேகப்‌ புயல்‌ மெல்ல விஸ்வரூபம்‌ எடுத்தது. அந்த பாம்பாட்டியை நேரடியாகவே கேள்விகள்‌ கேட்கத்‌ தொடங்கினாள்‌ ராணி. “ஐயா! தாங்கள்‌ யார்‌ உண்மையில்‌ எங்கள்‌ அரசரா அல்லது சித்து வித்தைகள்‌ புரியும்‌ சித்தரா?” என்று. “அரசி! உனக்கு உண்மை புரிய ஆரம்பித்திருக்கிறது. இறந்து போன மன்னனுக்காக அழுது கொண்டிருந்த உங்களது துயரைப்‌ போக்குவதற்காகவே நான்‌ மன்‌னனது உடலில்‌ புகுந்திருக்கிறேன்‌. என்னுடைய பெயர்‌ பாம்பாட்டிச்‌ சித்தன்‌ என்றார்‌. அரசி உண்மையை உணர்ந்தாள்‌ கைகளைக்‌ கூப்பி எங்களுக்குத்‌ தெய்வமாக வந்து உதவி செய்தீர்‌ நாங்கள்‌ என்ன செய்ய வேண்டும்‌ கடைத்தேறும்‌ வழியை உபதேசியுங்கள்‌ என்று வேண்டினாள்‌. அடுத்த கணம்‌, அரசரிடமிருந்து பலப்‌பல தத்துவப்‌ பாடல்கள்‌ உபதேசமாக வந்தன. அவைகளைக்‌ கவனமாக அனைவரும்‌ கேட்டனர்‌.

அதே சமயத்தில்‌ இறந்த அரசனுடைய ஆன்மா பரகாயப் பிரவேச முறையில்‌ இறந்துகிடந்த பாம்பின்‌ உடலில்‌ புகுந்து வெளியே ஓடத்தொடங்கியது. அந்த ஆன்மா மன்னனாக வாழ்ந்த போது முறை தவறிய சிற்றின்பத்தில்‌ அளவுக்கு மீறி ஈடுபட்டு அதனாலேயே உடல்‌ கெட்டு நோய்வாய்ப்பட்டு இறக்க நேர்ந்தது.

அப்போது மன்னன்‌ உடலிலிருந்த சித்தர்‌ அந்த பாம்பைப் பார்த்து ‘மன்னா! இன்னும்‌ உன்‌ ஆசைகள்‌ அடங்கவில்லையா?’ என்று கேட்க அந்தப்பாம்பும்‌ சித்தருக்கு அடங்கி படமெடுத்து ஆடிக்கொண்டு நின்றது. சித்தர்‌ அந்தப்‌ பாமபைப் பார்த்து ஆடு பாம்பே என்று முடியும்‌ 129 பாடல்கள்‌ அடங்கிய ஒரு சதகத்தைப்‌ பாடி முடித்தார்‌.

அந்த சதகம்‌.

கடவுள்‌ வணக்கம்‌,

குருவணக்கம்‌,

பாம்பின்‌ சிறப்பு,

சித்தர்‌ வல்லபம்‌,

சித்தர்‌ சம்வாதம்‌,

பொருளாசை விலக்கல்‌

பெண்ணாசை விலக்கல்‌,

அகப்பற்று நீங்குதல்‌

என்னும்‌ எட்டு தலைப்புகளில்‌ எளிய தமிழில்‌ பாமரரும்‌ புரிந்து கொண்டு ஞான மார்க்கத்தில்‌ சென்று சித்தி அடையும்‌ வண்ணம்‌ அமைந்துள்ளது. பாம்பாட்டிச்‌ சித்தர்‌ இந்த ஞான நூலைப்‌ பாடி முடித்துவிட்டு அரசன்‌ உடலை விட்டு வெளியேறியவுடன்‌ கல்ப உடலில்‌ புகுந்து தம் ‌சித்தர்‌ வாழ்க்கையைத்‌ தொடங்கினார்‌.

அரசர்‌ உடலிலிருந்து சித்தர்‌ வெளியேறினார்‌. அரசர்‌ உடம்பு கீழே விழுந்தது. சித்தர்‌ உபதேசப்படி ராணி அந்நாட்டை ஆளத்‌ தொடங்கினாள்‌. அரசர்‌ உடலில்‌ இருந்து வெளியேறிய பாம்பாட்டிச்‌ சித்தர்‌ தான்‌ பத்திரப்படுத்தி வைத்திருந்த தன்‌ பாம்பாட்டி உடலில்‌ புகுந்தார்‌. பாம்பாட்டி சித்தர் பாடல்
சித்தரா ரூடம் பாம்பாட்டி சித்தர் வைத்தியம்

ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார். மருத மலையில்‌ முருகன்‌ சன்னதிக்கு அருகிலேயே பாம்பாட்டிச்‌ சித்தர்‌ குகை என்று ஒரு குகைக்‌ கோவில்‌ உள்ளது. இவர்‌ தவம்‌ செய்த குகை மருதமலையில்‌ இன்னமும்‌ இருக்கிறது. பாம்பாட்டி சித்தர் 123 வருடங்கள் 32 நாட்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது

இவர்‌ மருதமலையில்‌ சித்தியடைந்ததாகச்‌ சிலரும்‌, துவாரகையில்‌ சித்தியடைந்ததாகச்‌ சிலரும்‌, விருத்தாசலத்தில்‌ சித்தியடைந்ததாகச்‌ சிலரும்‌ கூறுகின்றனர்‌. மூன்று தலங்களிலும்‌ இவரது நினைவிடம்‌ உள்ளது குறிப்பிடத்தக்கது. ”தெளிந்து தெளிந்து ஆடுபாம்பே! – சிவன் சீர்பாதங்கண்டு தெளிந்து ஆடுபாம்பே! ஆடுபாம்பே! நெளிந்தாடு பாம்பே! – சிவன் அடியினைக் கண்டோமென்று ஆடுபாம்பே மன்னராக வந்த யோது பாடிய பாடல்களில் சில…

“மாடகூட மாளிகைகள் வண்ண மண்டபம்
மதில்சூழ்ந்த வரண்மனை மற்றும் முள்ளவை
கூடவாரா வென்றந்தக் கொள்கை யறிந்தோர்
குலவாமல் வெறுப்பாரென் றாடாய் பாம்பே”

“மலைபோன்ற செம்பொற்குவை வைத்திருப்பவர்
மறலி வருகையில் வாரிச்செல்வரோ
அலை யாமலகத்தினை யத்தன் பால்வைத்தோர்
அழியாரென்றே நீ துணிந்தாடாய் பாம்பே”

“பஞ்சணையும் பூவணையும் பாயலும் வெறும்
பாழ்சுடு காடதிலே பயன் பெறுமோ
மஞ்சள் மணம்போய் சுடு நாறு மணங்கள்
வருமென்று தெளிந்து நின்றாடாய் பாம்பே”

“முக்கனியுஞ் சக்கரையு மோதகங்களும்
முதிர்சுவைப் பண்டங்களு முந்தியுண்டவாய்
மிக்கவுயிர் போனபின்பு மண்ணை விழுங்க
மெய்யாகக் கண்டோமென் றாடாய் பாம்பே”

“வெயில்கண்டமஞ்சள் போன்ற மாதரழகை
விரும்பியே மேல்விழுந்து மேவுமாந்தர்
ஒயில்கண்டே யிலவுகாத் தோடுங்கிளிபோல்
உடல் போனாலோடு வாரென்றாடாய் பாம்பே”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.