Categories
Other Temples Other Temples

வள்ளியூர் ஸ்ரீமுருகன் குகைக்கோவில்

கோயில் பெயர்

அருள்மிகு வள்ளியூர் குமரன் திருக் கோவில்

தோற்றம் காலம்

2000 ஆண்டுகளுக்கு முன்பு

தெய்வத்தின் பெயர்

மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

அம்பாள்: வள்ளி

ஸ்தல வரலாறு

தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் திருத்தலங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரும் ஒன்று. இது, வளர்ந்து வரும் நகரமும்கூட. திருநெல்வேலியிலிருந்து 45 கி.மீ தொலைவில் நாகர்கோவில் செல்லும் வழியில் உள்ளது.

வள்ளியூர் முருகன் குகைக் கோவில்

வள்ளியை மணம் முடித்த முருகப்பெருமான், மகேந்திரகிரி மலைக்கு கிழக்கு பக்கத்தில் உள்ள மலைக்குன்றில் தனிக்குடித்தனம் நடத்தியதால் அந்த தலம் வள்ளியூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. முன்னொரு காலத்தில் கிரவுஞ்ச அசுரன் மலை உருவில் இருந்தான்.

அகத்தியரின் சாபம் காரணமாக முருகப்பெருமானின் வேல் பட்டு அந்த மலை 3 துண்டங்களாக சிதறியது. அந்த அசுரனின் தலைப்பாகம் தான் வள்ளியூர் குன்று என்றும் புராணத்தகவலில் கூறப்பட்டுள்ளது. அந்த குன்றில் முருகப்பெருமான் வசித்ததால் அது பூரணகிரி என்று அழைக்கப்பட்டது.

முருகப்பெருமான் வள்ளியுடன் பூரணகிரியில் இருப்பதை அறிந்த அகத்தியர் அங்கு வந்து முருகப்பெருமானை வணங்கினார். முருகனும் அகத்தியருக்கு குரு ஸ்தானத்தில் கிழக்கு முகமாக நின்று நான்மறை பொருளுரைத்தார்.

அகத்தியரும் மேற்கு முகமாக மாணவன் ஸ்தானத்தில் நின்று நான்மறை பொருளை உபதேசம் பெற்று பூரணகிரியை வலம் வந்தார். அப்போது குகையின் தெற்கு புறத்தில் தெய்வானை சோகத்துடன் நிற்பதை கண்டுஅகத்தியர் திடுக்கிட்டார்.

முருகப்பெருமானை காணவந்த தன்னை வள்ளி அனுமதிக்காததால் வெளியே நிற்பதாக கூறி மனம் வருந்தினாள் தெய்வானை. அகத்தியரும் தெய்வானையை வள்ளியிடம் அழைத்துச்சென்று வள்ளி–தெய்வானை ஆகிய இருவரின் முந்தைய பிறவியை எடுத்துக்கூறினார்.

அதன்படி இருவரும் சகோதரிகள் என்பதை அறிந்ததும் அவர்கள் சண்டைபோடுவதை நிறுத்திக்கொண்டு முருகப்பெருமானின் இருபுறமும் நின்று அகத்தியருக்கு அருள்பாலித்தனர். அதேபோல நாரதருக்கு பிரம்மஞான உபதேசத்தையும் முருகப்பெருமான் வழங்கியுள்ளார்.

எனவே, இங்குள்ள முருகப்பெருமான் ஞானாஸ்கந்தன் என்று அழைக்கப்படுகிறார். இப்படிப்பட்ட சிறப்பு கொண்ட வள்ளியூர் தலம் நெல்லை மாவட்டத்தில் பெரிய குகைக்கோவிலாக கருதப்படுகிறது. பிற கோவில்களில் முருகன் குன்றின் மேல்நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

ஆனால் இங்கு குன்றுக்குள் இருந்து அருள்பாலிக்கிறார் என்பது விசேஷமானது ஆகும். கோவிலின் கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக்கொண்டிருக்கிறார். தேவரூபமாயிருந்து முருகனை பிம்பரூபமாக இருக்க தேவேந்திரன் வேண்டினார்.

முருகனும் பிம்பரூபமாக தன் இருதேவியருடன் காட்சிதந்தார். தேவேந்திரனும் பிம்ப பிரதிஷ்டையை ஆகமமுறையில் செய்து முருகனை வணங்கினார். அப்போது முருகப்பெருமான் வள்ளியுடன் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று தெப்பத்தில் காட்சிகொடுத்தார். அதுவே இன்றும் தெப்பத்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

அதேபோல வள்ளியம்மையின் வேண்டுகோளின்படி முருகப்பெருமான் தன் கைவேலை ஊன்றி புனித தீர்த்தத்தை உருவாக்கினார். அதுவே சரவணப்பொய்கை என்று அழைக்கப்பட்டு வருகிறது.

கனகவல்லி என்ற பெண்ணும், ஒரு வேடனும் தாங்கள் செய்த பாவத்தால் நாயாய் பிறந்தனர். அவர்கள் இருவரும் இந்த சரவணப்பொய்கையில் மூழ்கி முக்தி பெற்றார்கள் என்று கூறுகிறது தலப்புராணம்.

வள்ளியூரை ஆண்டு வந்த அற்பகன் என்ற அரசன் தனது மனைவி மகாபாகையுடன் மகேந்திரகிரியில் குழந்தை வேண்டி தவம் செய்தான். அங்குவந்த பரசுராமர் வல்லிக்கொடி ஒன்றை அந்த அரசனிடம் கொடுத்தார். அந்த கொடி பெண் குழந்தையாக மாற அந்த குழந்தையை கொண்டு வந்து வல்லி என்ற பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

பெண் குழந்தை பருவமடைந்த பின்னர் அரசமுறைப்படி முருகன் வள்ளியின் அம்சமாகிய வல்லியை மணம் செய்தார். இந்நகரை வல்லி ஆண்டதால் வல்லி மாநகரம் என்றும் அழைத்தார்கள். இப்படி சிறப்பு பெற்ற வள்ளியூர் தலத்தில் சித்திரை மாதம் அசுவதி நட்சத்திரத்தில் கொடியேறி 10 நாட்கள் திருவிழா நடைபெறும். 9–வது நாளில் தேரோட்டம் நடைபெறும்.

வைகாசி விசாகத்தின் வசந்தம் திருவிழா 10 நாட்களும், கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை தெப்பத்திருவிழாவும் நடைபெறும். கோவிலில் காலையில் விஸ்வரூபம், உதயமார்த்தாண்டம், சிறுகால சாந்தி, உச்சிகாலம், சாயலட்சை, அர்த்தசாமம் போன்ற பூஜைகள் தினமும் நடைபெற்று வருகின்றன.

நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் வள்ளியூர் அமைந்துள்ளது. வள்ளியூரில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தொலைவில் வள்ளியூர் முருகன் கோவில் அமைந்துள்ளது. வள்ளியூர் ரெயில் நிலையத்தின் மிக அருகில் இந்த கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தெற்கு கள்ளிகுளம் , ஏர்வாடி , முடவன்குளம் , சீலாத்திகுளம் , தேரை குளம் , வேப்பிலாங்குளம், வண்டலம்பாடு , அச்சம்பாடு , கும்பிலம்பாடு , முத்துனாடார் குடியிருப்பு , துறைகுடியிருப்பு , லெப்பகுடியுருப்பு , சமூகரெங்கபுரம், சவுந்திரபாண்டிபுரம் , பணகுடி , புளியங்குடி , காவல்கிணறு ஆகிய வட்டார மக்கள் எந்த பொருட்கள் வாங்க வேண்டுமென்றாலும் வள்ளியூருக்குதான் வந்தாக வேண்டும் ;

வள்ளியூர் , திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் அமைந்துள்ளது. இந்த இடம் திருநெல்வேலி மற்றும் நாகர்கோவிலை இணைக்கின்றது, முருகனின் மனைவியாகிய வள்ளியின் பெயர் இவ்வூருக்குவழங்கபட்டுள்ளது .அழகான முருகன் கோவில் , வள்ளியூர் மலை, மற்றும் மேற்கு தொடர்சி மலையும் இவ்வூரை மிகவும் அழகுபடுத்துகிறது.

சுந்தர காண்டத்தில் குறிபிட்டுள்ள மகேந்திரகிரி மலை இந்த ஊரில் தான் அமைந்துள்ளது.இந்த மலையில் தான் முனிவர் பரசுராமர் தவத்தில் ஈடுபட்டார். வள்ளியூர் ஏரியே சீவலபேரி ஏரி என்று அழைக்கபடுகிறது. திருப்புகழில் அருணகிரிநாதர் வள்ளியூரை பற்றி எழுதியுள்ளார்.

1162-1173இல் வள்ளியூர் பாண்டிய ராஜனின் தலைநகரமாக விளங்கபட்டுள்ளது. வள்ளியூர் முருகன் கோவில் மிகவும் சிறப்புவாய்ந்தது. பூர்ணகிரி என்ற மலையை குடைந்து கட்டபட்டது. இக்-கோவில் ஓம் வடிவத்தில் அமைந்துள்ளது.

இந்த கோவிலுக்கு தென்புறம் சரவண பொய்கை என்ற தெப்பக்குளமும், கீழ்புறம் கார்த்திகை மாத தெப்பத்திருவிழாவுக்கான தெப்பக்குளமும் அமைந்துள்ளன. இதில் சரவண பொய்கை தெப்பக்குளமானது பாண்டிய மன்னர்கள் ஆட்சியின் போது அமைக்கப்பட்டது என வரலாறு கூறுகிறது.

பாதை
இந்த பழங்கால முருகன் கோயில் திருநெல்வேலி மற்றும் நங்குநேரிக்கு அருகிலுள்ள வள்ளியூரில் அமைந்துள்ளது. வள்ளியூர் கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, இது திருநெல்வேலியில் இருந்து 30 மைல்கற்களிலும், திருச்செந்தூர் 60 கி.மீ தூரத்திலும் உள்ளது.

கோயில் நேரம்
காலை 5 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும்

கோயில் தொலைபேசி எண்
04637-222888

கோயில் முகவரி
அருல்மிகு சுப்பிரமண்ய சுவாமி கோயில்
வள்ளியூர்
ராதாபுரம்,
திருநெல்வேலி மாவட்டம்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.