Categories
Devara Sthalam Jyothirlingam

அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஸ்ரீசைலம்

மூலவர் – மல்லிகார்ஜுனர்,(ஸ்ரீசைலநாதர், ஸ்ரீபருப்பதநாதர் )


அம்மன் – பிரமராம்பாள், பருப்பநாயகி


தல விருட்சம் – மருதமரம்


தீர்த்தம் – பாலாநதி


பழமை – 2000 வருடங்களுக்கு முன்


புராணப் பெயர்
– திருப்பருப்பதம்


ஊர் – ஸ்ரீசைலம்


மாவட்டம் – கர்நூல்


மாநிலம் – ஆந்திரப்பிரதேசம்


பாடியவர்கள் – அப்பர், சம்பந்தர், சுந்தரர்

ஸ்தல வரலாறு

சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக்குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர். சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி,”தந்தையே! கலங்காதீர்கள். நான் சிவனைக்குறித்துக் கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்” என்றார். தவத்தில் மகிழ்ந்த சிவன், நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னைக் காண வர முடியாது என்று உத்தரவும் பிறப்பித்தார். நந்தி தவம் செய்த “நந்தியால்” என்ற இடம் மலையின் கீழே உள்ளது. அத்துடன் அவனது தம்பியாகிய பர்வதனும் தவமிருந்தான். பர்வத ன்கடும் தவம் செய்து சிவபெருமான் பாதம் எப்போதும் தன் மீது இருக்க வேண்டும் என்ற வரம் பெற்றான். ஆதன்படிப் பர்வதனை ஒரு மலையாக ஆக்கி ஸ்ரீ பர்வதம் என்னும் பெயரிட்டு தாம் சிவலிங்கமாக அம்மலையின் மீது அமர்ந்து எழுந்தருளினார். ஆந்த ஸ்ரீ பர்வதமே நாளடைவில் ஸ்ரீசைலம் என வழங்கலாயிற்று. சைலம் என்றால் மலை எனப் பொருள்படும்.
மற்றும் ஒரு சிவபக்தை நகஸ்ரீ என்பவள் தவமிருந்து இத்தலம் தனது பெயரால் வழங்கப்பட வேண்டுமென சிவபெருமானிடம் வரம் பெற்றாள். நகஸ்ரீ என்பது ஸ்ரீ நகம் என மாறி தற்போது ஸ்ரீசைலம் என மருவி வழங்குகிறது.
சிலாதமுனிவர் தவம் செய்தமையால் இம்மலை சிலாத முனி மலை எனப்பெயர் பெற்று நாளடைவில் ஸ்ரீ சைலம் எனப் பெயர் மருவிவிட்டது எனவும் கூறப்படுகிறது.

மல்லிகாபுரி என்ற பகுதியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள், சந்திரரேகா இங்கு கிடைத்த மல்லிகைப்பூவாலும், அர்ஜுனா மலர்களாலும் இறைவனைப் பூஜித்து வந்தாள். இதனால் இங்குள்ள இறைவன் “மல்லிகார்ஜுனர்” எனப்படுகிறார்.
பிரதோஷத்தன்று நமது ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், முக்தியே அடைந்து விடலாம் என்பதில் சந்தேகமில்லை. அவரது அவதாரத் தலமான ஸ்ரீசைலம் மனதிற்கு இதம் தரும் மலைப்பகுதியில் உள்ளது.

ஆந்திராவிலுள்ள ஸ்ரீசைலம் சிவனின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. இங்குள்ள மல்லிகார்ஜுனருக்கு நாமே அபிஷேக ஆராதனை செய்யலாம். சிவத்தலங்களில் கைலாயம் முதலிடம் என்றால், நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடம் வகிக்கிறது. அத்துடன் அம்மனின் 51 சக்திபீடங்களில் இது மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

குருக்ஷேத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதாலும், கங்கையில் 2000 முறை குளிப்பதாலும், நர்மதா நதிக்கரையில் பல வருடங்கள் தவம் செய்வதாலும், காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அவ்வளவு புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஒரு முறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் கூறுகிறது. நந்தியே இங்கு மலையாக அமைந்திருந்து அதன் மீது சிவன் ஆட்சிபுரிகிறார். நந்தியைத் தன் வாகனமாக்கியதும் இத்தலத்தில் தான். இங்குள்ள மிகப்பிரமாண்டமான நந்தி மிகவும் அழகு வாய்ந்தது. இங்கு சிவன் சன்னதி கீழே இருக்க, பிரமராம்பாள் சன்னதி 30 படிகள் உயரத்தில் அமைந்துள்ளது விசேஷமாகும்.

மல்லம்மா என்ற பக்தை இறைவன் மீது கொண்ட பக்தியால் கண்ணீருடன் காட்சியளிக்கும் சிலை பார்ப்பவர்களைக் கவரும். பஞ்ச பாண்டவர்கள் வந்து தங்கியதாக கூறப்படும் மடம் உள்ளது. மலைப்பாறை ஒன்றின் மீது பீமனின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளது. சிவன் தன் சூலத்தை ஊன்றி நின்ற தலம் என்பதால், மூலவர் விமானத்தின் மீது சூலம் வைக்கப்பட்டுள்ளது. கோயில், மலை உச்சியில் கிழக்கு நோக்கியுள்ளது. நாற்புறமும் கோபுரவாயில்கள். பிரதான வாயில் கிழக்கு கோபுரமே. ஆலய வாயிலில் உள்ள பெரிய மண்டபத்தில் கல்லால் ஆன நந்தி உள்ளது. ஆலய முகப்பில் சித்தி விநாயகர் தரிசனம். மேற்குப் பிராகாரத்தில் பாண்டவர்கள் கட்டியதாகக் சொல்லப்படும் ஆறு ஆலயங்கள், பளிங்குக் கல்லால் ஆன சண்முகர் கோயில் ஆகியவை உள்ளன.

ராஜராஜேஸ்வரி கோயில், அன்னபூரணி ஆலயம், சஹஸ்ரலிங்கேசுவரர் கோயில், பஞ்ச நதீஸ்வரம் ஆலயம் முதலியன தரிசிக்கத் தக்கன. தெற்கு வாயில் கோபுரம் “ரங்க மண்டபம்” எனப்படும். கிழக்கு வாயிலில் கல்யாண மண்டபமுள்ளது. இக்கோயிலிலிருந்து அருகிலுள்ள நாகார்ஜுனர் அணைக்கு செல்ல விசைப்படகு வசதி உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சத்திரங்கள் உள்ளன. மலையின் கீழேயிருந்து 3 மணி நேரம் பிரயாணம் செய்தால் தான் ஸ்ரீசைலத்தை அடைய முடியும். அடர்ந்த காட்டுப்பகுதியாக இம்மலை இருப்பதால், தனியார் வாகனங்கள் இரவு 8 மணியிலிருந்து காலை 6 மணிவரை செல்ல அனுமதி கிடையாது. அரசு பஸ்கள் மட்டுமே செல்லும். திங்கள், வெள்ளியில் கூட்டம் அலைமோதுகிறது.

இத்தலத்தில் வரலாறு சம்பந்தமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சிவாஜி மகாராஜாவால் இத்தலம் திருப்பணி செய்யப்பட்டுள்ளது வரலாற்றிலிருந்து தெரிய வருகிறது. சுவர்களில் பல சிற்பங்களும் காணப்படுகின்றன. இம்மலையில் மகாகாளர்கள் குகையும் அக்குகையில் அவர்கள் வணங்கிய காளியும் ஆதிசங்கரர் சிலையும் உள்ளன.

முன்னொரு காலத்தில் அனந்தபுரம் என்ற ஊரில் பிராமணப் பண்டிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் வயதான காலத்தில் கல்யாணி என்ற இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ஒருநாள் கல்யாணி ஆற்றுக்குப் போகும் போது வழியில் ஒரு அரிஜன வாலிபப் பையனைப் பார்த்து அவன் மேல் மோகம் கொண்டு இருவரும் ஒரு தோப்பில் கலந்து இன்புற்றனர். பின்பு கல்யாணி கங்கையாற்றில் குளிக்கப்போனாள். அப்போது கங்கை ஒருபெண் வடிவில் வந்து கல்யாணி கங்கையில் குளிக்கக் கூடாது எனத் தடுத்தாள். கணவனுக்குத் துரோகம் செய்து அந்நியனுடன் சம்போகம் செய்த துரோகி கங்கையில் குளித்தால் கங்கையின் புனிதம் கெட்டு விடும் என்று கங்கை கூறினாள். மேலும் கல்யாணியின் பாவத்தை கங்கை ஏற்க வேண்டி வரும் எனவும் கூறித்தடுத்தாள். கல்யாணி தன் தவறை உணர்ந்து தான் இளமை வேகத்தில் தவறு செய்து விட்டதாகக் கூறி கங்காதேவியிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாடி அழுது புலம்பினாள். மனமிரங்கிய கங்கை அவளைக் குளிக்க அனுமதித்தாள். கல்யாணியின் பாவம் நீங்கி அப்பாவம் கங்கையைப் பிடித்துக் கொண்டது. கங்கையான பெண் நம்நாட்டில் உள்ள எல்லா புனிதத் தீர்த்தங்களில் நீராடியும் பாவம் தீரவில்லை. ஆகாயத்தில் அலைந்து கொண்டு திரிந்த கங்கை ஸ்ரீசைலத்தில் சிவபெருமான் பாதத்தைத் தொட்டு ஓடிக்கொண்டு இருக்கும் புனித நீரைக் கண்டு கீழே இறங்கி வந்து அந்தப்புனித நீரில் நீராடினாள். கங்காதேவியின் சாபம் நீங்கியது. கங்கையைப் பிடித்திருந்த பாவம் பச்சை நிறமாக அந்த நீரில் ஓடியது. பாறைகள் பச்சைவண்ணமாக மாறின. ஆதனால் இந்த ஆற்றுக்குக் கிருஷ்ணா நதி எனப் பெயர் ஏற்பட்டது. இந்த இடம் பாதாள கங்கை எனவும் பெயர் பெற்றது. ஸ்ரீசைலத்திலுள்ள தீர்த்தங்களில் இதுவே மேன்மையுடையது. மல்லிகார்ச்சுனர் கோயிலிலிருந்து இறங்கப் படிக்கட்டுகள் உள்ளன. பக்தர்கள் முதலில் இங்கே குளித்துப் புனிதம் அடைந்த பின்பே இறைவன் கோயிலுக்குச் சென்று லிங்கத்தைத் தொட்டு வழிபட வேண்டும்.

துரியோதனன் சூழ்ச்சியைக் கூறி அவனுடன் போர் செய்ய வேண்டிய நிலை வரும் அவனை வெல்ல பாசுபதாஸ்திரம் வேண்டும் எனவே சிவபெருமானை நோக்கித் தவம் செய்து அவரிடமிருந்து பாசுபதாஸ்திரம் பெற்று வரும்படியான அறிவுரையை அர்ச்சுனனுக்குக் கண்ணபெருமான் கூறினார். கண்ணபெருமான் ஆலோசனைப்படி அர்ச்சுனன் ஸ்ரீசைலம் வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்தார். சிவபெருமான் ஒரு வேடன் வடிவில் அர்ச்சுனன் தபசு செய்யுமிடம் வந்தார். அப்போது ஒரு அசுரன் பன்றி வடிவில் அர்ச்சுனனைக் கொல்ல பயங்கரமாக உறுமிக் கொண்டு பாய்ந்து வந்தான். அர்ச்சுனன் கண்விழித்து பன்றி மீது அம்பு விடவும் சிவபெருமானும் அதே சமயம் பன்றி மீது அம்பு விட்டார். இருவரும் பன்றியைக் கொன்றது பற்றி சண்டை வந்துவிட்டது. இருவரும் பயங்கரமாகச் சண்டை போட்டுக் கொண்டார். அர்ச்சுனன் வில் ஒடியவே சிவபெருமானை வில்லால் அடித்தார். சிவபெருமான் அர்ச்சுனனுக்கு காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் எனக்கேட்டார்.
அர்ச்சுனன் தான் செய்த தவறை மன்னிக்க வேண்டும் என சிவபெருமானைக் கேட்டுக் கொண்டார். பின்பு தமக்குப் பாசுபதாஸ்திரம் வேண்டும் எனக் கேட்டார். அர்ச்சுனனின் வில்லாற்றல் தம்முடன் போர் செய்து அபிவிருத்தி அடையவுமே வேடனாக வந்து தனுர் வேதத்தை அர்ச்சுனனுக்கு போதித்ததாகச் சிவபெருமான் கூறினார். பின்பு பாசுபதாஸதிரப் பயிற்சியையும் மந்திரத்தையும் உபதேசம் செய்து அருள் புரிந்தார். அப்படி அர்ச்சுனன் தபசு செய்த இடம் இங்கே உள்ளது. அதனால்தான் இங்கு சிவபெருமானுக்கு மல்லிகார்ச்சுனர் என்ற பெயர் வழங்கி வருகிறது. படிக்கட்டுபக்கம் வீரசங்கரர் ஆலயம் உள்ளது. அந்த வீரசங்கரர் தான் அர்ச்சுனனுடன் வேடன் வடிவில் போர் செய்தவர்.

தேவாரப்பதிகம்:

சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர வரைக்கசைத்தான் இடுமணி யெழிலானை யேறல னெருதேறி விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப் படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே.– திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற வட நாட்டுத்தலங்களில் ஒன்று.

திருவிழா:

தெலுங்கு வருடப்பிறப்பு, ஆவணி மாத சப்தமி பூஜை.

பிரார்த்தனை:

பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற சுவாமிக்கும் அம்மனும் திருமணம் செய்து வைக்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இருப்பிடம் :

சென்னையிலிருந்து ஓங்கோல் வரை ரயிலில் சென்று அங்கிருந்து பஸ்களில் ஸ்ரீசைலம் செல்லலாம். பஸ்சில் செல்பவர்கள் திருப்பதி சென்று, அங்கிருந்து கர்நூல் செல்லும் பஸ்சில் நந்தியாலில் இறங்கி, ஸ்ரீசைலம் செல்லலாம். மலைப்பகுதியை சுற்றி பார்க்க ஜீப் வசதி உள்ளது. இதற்கு ரூ. 200 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

முக்கிய இடங்களிலிருந்து தூரம்: ஸ்ரீசைலம் நந்தியாலிலிருந்து வடக்கே 120 கி.மீ தூரம் உள்ளது. டொரனலாவுக்கும் வடக்கே 50 கி.மீ யில் உள்ளது. ஸ்ரீசைலம் ஹைதராபாத்திற்கும் தெற்கே 200 கி.மீ. மேற்கே கர்னூலிலிருந்து 180 கி.மீ. கிழக்கேயும் கிழக்கே குண்டூரிலிருந்து மேற்கே 195 கி.மீ. மெகப்பூரிலிருந்து தென்கிழக்கே 90 கி.மீ யில் உள்ளது ஓங்கோலிலிருந்து வடமேற்கே 182 கி.மீ. பத்ராசலத்திலிருந்து தென்மேற்கே 275 கி.மீ தூரத்தில் உள்ளது. பெங்களூருக்கு 537 கி.மீ தொலைவில் உள்ளது. சென்னை -340 கி.மீ. நெல்லூர் – 425 கி.மீ கோவை 820 கி.மீ. டெல்லி 1655 கி.மீ தூரமும் உள்ளது.

கோயில் நேரம்

காலை 5 – மதியம் 3மணி, மாலை 5.30 – இரவு 10 மணி. காலை நேரத்தில் மட்டுமே சுவாமிக்கு நாமே பூஜை செய்ய அனுமதியுண்டு. இதற்கு தனியாக கட்டணம் உண்டு.

கோயில் தொலைபேசி எண்

+91- 8524 – 288 881, 887, 888

கோயில் முகவரி

அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில்,

ஸ்ரீசைலம், (திருப்பருப்பதம்),

கர்னூல் மாவட்டம்,

ஆந்திரமாநிலம்.

Categories
Devara Sthalam Kerala Temples

அருள்மிகு மகாதேவர் கோயில், திருஅஞ்சைக்களம், கொடுங்கலூர்

மூலவர் – மகாதேவர், அஞ்சைக்களத்தீஸ்வரர்


அம்மன்
– உமையம்மை


தல விருட்சம் – சரக்கொன்றை


தீர்த்தம் – சிவகங்கை


பழமை – 2000 வருடங்களுக்கு முன்பு


புராணப் பெயர் – திருவஞ்சிக்குளம்


ஊர் – திருவஞ்சிக்குளம்


மாவட்டம் – திருச்சூர்


மாநிலம் – கேரளா


பாடியவர் – சுந்தரர்

ஸ்தல வரலாறு

தேவரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் கேரளாவில் இருக்கும் ஒரே சிவத்தலம் திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயில் ஆகும். இக்கோயிலில் அம்மன் தனி சன்னதியில் இல்லாமல் சிவனின் கருவறைக்குள் அவருடன் இணைந்து சதாசிவ பாவத்தில் அருள்பாலிக்கிறார். பரசுராமர் தன் தாயின் மரணத்தினால் ஏற்பட்ட பாவம் தீர இங்கு வந்து பூஜை செய்துள்ளார்.

சமயக்குரவர்களில் சுந்தரர் பாடிய தலம் இது. இவர் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் பிறந்தவர். ஒரு முறை சேர மன்னன் திருவாரூர்க்கு வர, சுந்தரர் அவரை வரவேற்று உபசரித்தார். சில நாட்களுக்கு பின் சேரமானுடன் தாமும் புறப்பட்டு பாண்டிய நாடு, சோழநாடு, கொங்கு நாடுகளில் உள்ள தலங்களை வழிபட்டுப் பதிகம் பாடிக்கொண்டே கேரளாவில் உள்ள கொடுங்கலூரை அடைந்தார். அங்கு சேரமன்னனால் உபசரிக்கப்பட்டு சில காலம் அங்கு தங்கினார். மறுபடி தமிழக கோயில்களுக்கு வந்து பாடல் பாடினார்.

இந்த சிவன் சோழ மன்னர்களின் குல தெய்வமாக விளங்கியவர். இங்குள்ள சிலையை சிதம்பரத்தில் இருந்து எடுத்து வந்து, 1801ல் பிரதிஷ்டை செய்ததாக கல்வெட்டு கூறுகிறது. தனி சன்னதியில் சுந்தரரும் சேரமானும் சேர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்கள். கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் 25க்கும் அதிகமான தெய்வங்கள் தனித்தனி சன்னனதிகளில் அருள்பாலிக்கிறார்கள். கேரளாவில் உள்ள கோயில்களில் இந்த அளவு சுற்றுப்பிரகாரம் வேறு எந்தக் கோயிலிலும் இல்லை.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சுந்தரர் தனது 18வது வயதில் தன் நண்பர் சேரமானுடன் கேரளாவில் உள்ள திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயிலுக்கு வந்தார். அங்குள்ள இறைவனிடம், இவ்வுலக வாழ்வை அகற்றிட வேண்டி “தலைக்கு தலை மாலை” என்ற பதிகம் பாடினார். சுந்தரர் பூமியில் பாடிய கடைசிப்பதிகம் இதுதான். அப்போது இறைவன் சுந்தரரை வெள்ளை யானையில் ஏற்றி கைலாயம் அழைத்து வரும்படி தேவர்களுக்கு கட்டளையிட்டார். இறைவனின் கட்டளைப்படி சுந்தரரை தேவர்கள் கைலாயம் அழைத்து சென்றனர். அப்போது தன் உயிர்த்தோழன் சேரமானை நினைத்தார் சுந்தரர். உடனே சேரமான் குதிரையில் சுந்தரரை மூன்று முறை வலம் வந்து சுந்தரருக்கு முன்னே கைலாயம் சென்று விட்டார். சுந்தரர் இறைவனின் பெரும் கருணையை நினைத்து வானில் செல்லும் போதும்,”தானெனை முன்படைத்தான் அதறிந்து தன் பொன்னடிக்கே” என்னும் பதிகம் பாடினார். இந்த பாடல் முடிந்தவுடன் சுந்தரர் கைலாயம் சென்றடைந்தார். இறைவனின் உத்தரவுப்படி வருணபகவான் இந்தப்பாடலை திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயிலில் சேர்ப்பித்து விட்டார்.

தேவாரப்பதிகம்:

தலைக்குத்தலை மாலை அணிந்த தென்னே சடைமேற்கங்கை வெள்ளம் தரித்த தென்னே அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்த தென்னே அதன்மேற்கத நாகங்கச்சு ஆர்த்த தென்னே மலைக்கு நிகர் ஒப்பன வன்திரைகள் வலித்தெற்றி முழங்கி வலம்புரி கொண்டு அலைக்கும்கடல் அங்கரை மேல் மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.

–சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற மலைநாட்டுத்தலம்.

திருவிழா:

மாசி மாதம் மகாசிவராத்திரி 8 நாள் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. அமாவாசையில் ஆறாட்டு நடக்கிறது.

பிரார்த்தனை:

இங்கு மாலை வேளையில் நடத்தப்படும் தம்பதி பூஜை மிகவும் சிறப்பானது. இந்த பூஜை முடிந்தவுடன் பள்ளியறை பூஜை நடக்கும். இந்த பூஜையை பார்த்தால் குழந்தைபாக்கியம் கிட்டும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள், கணவன் மனைவி கருத்து வேறுபாடு நீங்கும் என்பது நம்பிக்கை. பவுர்ணமியன்று இந்த பூஜையைச் செய்வது சிறப்பு. இந்த பூஜைக்கு முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து,

வில்வ அர்ச்சனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கோயில் நேரம்

காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

கோயில் தொலைபேசி எண்

+91- 480-281 2061


கோயில் முகவரி

அருள்மிகு மகாதேவர் கோயில்,

திருஅஞ்சைக்களம்,

கொடுங்கலூர்,

திருச்சூர் மாவட்டம்,

கேரளா மாநிலம்

Categories
Devara Sthalam Devara Sthalam

அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம்

மூலவர்ராமநாதசுவாமி, ராமலிங்கேஸ்வரர்
அம்மன்பர்வத வர்த்தினி, மலைவளர்காதலி
தீர்த்தம்கோயிலுக்கு உள்ளே 22 தீர்த்தங்களும், கோயிலுக்கு வெளியே 22 தீர்த்தங்கள்
பழமை2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்கந்தமாதன பர்வதம், திருவிராமேச்சுரம்
ஊர்ராமேஸ்வரம்
மாவட்டம்ராமநாதபுரம்
மாநிலம்தமிழ்நாடு
பாடியவர்கள்திருஞானசம்பந்தர்திருநாவுக்கரசர்

ஸ்தல வரலாறு

சிவபக்தனான ராவணனை அழித்ததால் ராமருக்கு பிரம்மகத்தி தோஷம் உண்டானது. தோஷம் நீங்க ராமேசுவரம் கடற்கரையில் சிவ பூஜை செய்ய விரும்பினார். இதற்காக சிவலிங்கம் கொண்டு வரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். அவர் வரத் தாமதமாகவே, சீதை கடற்கரை மணலில் இலிங்கம் அமைத்தாள். அந்த இலிங்கத்தை ராமர் பூஜித்ததால் “ராமநாதசுவாமி” என்ற திருநாமம் அமைந்தது. இராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுகிறது. காசி, இராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் இராமேஸ்வரத்தில் அக்னி (கடல்) தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி செல்ல வேண்டும். கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்த அபிஷேகம் செய்ய வேண்டும். அங்கிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, இராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு ராமேஸ்வரத்தில் துவங்கி ராமேஸ்வரத்தில்தான் தீர்த்த யாத்திரையை முடிக்க வேண்டும். சிலரால் இது முடிவதில்லை. காசி செல்ல முடியாதவர்களுக்கு வசதியாக, கோயிலிலேயே கங்கை தீர்த்தம் விற்கப்படுகிறது. மானசீகமாக காசி விஸ்வநாதரை வணங்கி, இந்த தீர்த்தத்தை இராமநாதருக்கு அபிஷேகம் செய்யக்கொடுக்கலாம்.

சிவபக்தனான ராவணனை அழித்ததால் ராமருக்கு பிரம்மகத்தி தோஷம் உண்டானது. தோஷம் நீங்க ராமேசுவரம் கடற்கரையில் சிவ பூஜை செய்ய விரும்பினார். இதற்காக சிவலிங்கம் கொண்டு வரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். அவர் வரத் தாமதமாகவே, சீதை கடற்கரை மணலில் இலிங்கம் அமைத்தாள். அந்த இலிங்கத்தை ராமர் பூஜித்ததால் “ராமநாதசுவாமி” என்ற திருநாமம் அமைந்தது. இராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுகிறது. காசி, இராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் இராமேஸ்வரத்தில் அக்னி (கடல்) தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி செல்ல வேண்டும். கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்த அபிஷேகம் செய்ய வேண்டும். அங்கிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, இராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு ராமேஸ்வரத்தில் துவங்கி ராமேஸ்வரத்தில்தான் தீர்த்த யாத்திரையை முடிக்க வேண்டும். சிலரால் இது முடிவதில்லை. காசி செல்ல முடியாதவர்களுக்கு வசதியாக, கோயிலிலேயே கங்கை தீர்த்தம் விற்கப்படுகிறது. மானசீகமாக காசி விஸ்வநாதரை வணங்கி, இந்த தீர்த்தத்தை இராமநாதருக்கு அபிஷேகம் செய்யக்கொடுக்கலாம்.

புரட்டாசியில் வரும் மகாளய பட்சத்தில் பித்ருக்கள் பூமிக்கு வருகின்றனர். எமதர்மராஜா அவர்களை விடுவித்து, அவரவர் குடும்பத்தினரை பார்த்து வர அனுமதியளிப்பார். “மகாளயம்”என்றால் “கூட்டமாக பூமிக்கு வருதல்” எனப்பொருள். இந்த சமயத்தில் அவர்களை வரவேற்று,தர்ப்பணம், சிரார்த்தம், பிண்டம் முதலான காரியங்களைச் செய்ய வேண்டியது அந்தந்த குடும்பத்தினரின் கடமை. இதனால் பிதுர் ஆசி கிடைத்து குடும்பம் முன்னேறும். பிதுர் காரியங்களைச் செய்யச் சிறந்த தலம் ராமேஸ்வரம் ராமநாதர் கோயில்.

சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் 12 தலங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் ஒன்று இராமேஸ்வரம். மற்ற 11 தலங்களும் பிற மாநிலங்களில் உள்ளன. விபீஷணன், இராமருக்கு உதவி செய்ததன் மூலம் இராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான். இந்தப் பாவம் நீங்க, இங்கு இலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், அவனது பாவத்தைப் போக்கியதோடு, ஜோதி ரூபமாக மாறி இந்த இலிங்கத்தில் ஐக்கியமானார். இதுவே, “ஜோதிர்லிங்கம்” ஆயிற்று. இந்த இலிங்கம் சுவாமி சன்னதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது.

ஆஞ்சநேயர் தாமதமாக கைலாயத்திலிருந்து கொண்டு வந்த இலிங்கத்திற்கு, “விஸ்வநாதர்” என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. இராமநாதர் சன்னதிக்கு இடப்புறமுள்ள சன்னதியில் இவர் இருக்கிறார். விசாலாட்சிக்கும் தனி சன்னதி இருக்கிறது. ஆஞ்சநேயர் சிரமப்பட்டு கொண்டு வந்த இலிங்கம் என்பதால், தன் பக்தனுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலில் விஸ்வநாதருக்கு பூஜை செய்ய இராமர் ஏற்பாடு செய்தார். அதன்படி, இப்போதும் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்டபின்பே, சீதாவால் உருவாக்கப்பட்ட இராமநாதருக்கு பூஜை நடக்கிறது. கோயிலுக்கு வருபவர்கள் விஸ்வநாதரை தரிசித்த பின்பே, இராமநாதரைத் தரிசிக்க வேண்டும். ஆஞ்சநேயர் கொண்டு வந்த மற்றொரு இலிங்கம் கோயில் நுழைவு வாயிலின் வலப்பக்கம் உள்ளது.

ஒருசமயம் இக்கோயில் இலிங்கம் மணலால் செய்யப்பட்டதல்ல என்றும், அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் சிலர் வாதம் செய்தனர். அப்போது பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு இலிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். அந்த இலிங்கம் கரையவில்லை. அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த இலிங்கமே கரையாதபோது, சீதாதேவி பிரதிஷ்டை செய்த இலிங்கம் கரையாததில் ஒன்றும் அதிசயமில்லை என்று நிரூபித்தார். இராயர் செய்த உப்பு இலிங்கத்தைப் பிரகாரத்தில், இராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம். உப்பின் சொரசொரப்பை அந்த இலிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும்.

இராமேஸ்வரம் கடல், “அக்னி தீர்த்தம்” என்றழைக்கப்படுகிறது. சீதையின் கற்பை நிரூபிப்பதற்காக, அவளை அக்னிப் பிரவேசம் செய்யச் செய்தார் ராமர். சீதையைத் தொட்ட பாவம் நீங்க, அக்னிபகவான் இங்கு கடலில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார். எனவே, இந்த தீர்த்தம் “அக்னி தீர்த்தம்” என்று அழைக்கப்படுகிறது. சீதையின் கற்புத்திறன் அக்னியையே சுட்டதாகவும், அந்த வெம்மை தாளாத அக்னி இந்தக் கடலில் மூழ்கி தனது வெப்பத்தை தணித்ததாகவும் சொல்வதுண்டு.

குழந்தை பாக்கியம் இல்லாத சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான். அவனது குறையைத் தீர்க்க தன் மனைவி மகாலட்சுமியையே அவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள். அவள் மணப்பருவம் அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம் வம்பிழுத்தார். மன்னன் அந்த இளைஞனை சிறையில் அடைத்து, சங்கிலியால் காலைக் கட்டிப்போட்டான். பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள்,அவ்வாறு சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார். அன்றிரவில் இளைஞனாக வந்து சிறையில் அடைபட்டிருப்பது தானே என்று மன்னனுக்கு உணர்த்தவே, இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது. இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக அருளுகிறார். அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது. தீர்த்த யாத்திரை செல்பவர்கள் இவரது சன்னதி முன்பு, கடல் மணலில் இலிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்கிறார்கள். இவரது சன்னதி அருகில் இலட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் இருவரும் அருகருகில் காட்சி தருகின்றனர்.

பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் 
கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த 
தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.

தீர்த்தமும் பலனும்
1மகாலட்சுமி தீர்த்தம்செல்வவளம்
2சாவித்திரி தீர்த்தம்பேச்சுத்திறன்
3காயத்ரி தீர்த்தம்உலகத்துக்கே நன்மை
4சரஸ்வதி தீர்த்தம்கல்வி அபிவிருத்தி
5சங்கு தீர்த்தம்வாழ்க்கை வசதி அதிகரிப்பு
6சக்கர தீர்த்தம்மனஉறுதி பெறுதல்
7சேது மாதவ தீர்த்தம்தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்
8நள தீர்த்தம்எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்
9நீல தீர்த்தம்
10கவய தீர்த்தம்
11கவாட்ச தீர்த்தம்
12கந்தமாதன தீர்த்தம்
13பிரம்மகத்தி விமோசன தீர்த்தம்பிரம்மகத்தி பாபவிமோசனம்
14கங்கா தீர்த்தம்எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
15யமுனை தீர்த்தம்
16கயா தீர்த்தம்
17சர்வ தீர்த்தம்
18சிவ தீர்த்தம்சகல பீடைகளும் ஒழிதல்
19சத்யாமிர்த தீர்த்தம்ஆயுள் விருத்தி
20சந்திர தீர்த்தம்கலையார்வம் பெருகுதல்
21சூரிய தீர்த்தம்முதன்மை ஸ்தானம் அடைதல்
22கோடி தீர்த்தம்முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)

ராமர் இங்கு சிவபூஜை செய்தபோது அவரைப்பிடித்த பிரம்மகத்தி தோஷம் (கொலை செய்த பாவம்)விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதெனத் தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மகத்தி தோஷத்தைத் தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு “பாதாள பைரவர்” என்று பெயர். இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது.

சீதையை மீட்பதற்கு உதவி செய்த சுக்ரீவனுக்கு நன்றிக்கடனாக இராமர், அவனுக்கு அநீதி இழைத்த வாலியைக் கொன்றார். வாலி அழிவதற்கு, சுக்ரீவனும் ஒரு காரணமாக இருந்ததால் அவனுக்கு தோஷம் உண்டானது. தோஷ நிவர்த்திக்காக இங்கு ஒரு தீர்த்தம் உருவாக்கி, சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றான். இந்த தீர்த்தத்துடன் கூடிய சுக்ரீவன் கோயில், இராமநாதர் கோயிலில் இருந்து இராமர் பாதம் செல்லும் வழியில் 2 கி.மீ., தூரத்தில் இருக்கிறது.

பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதி பிரகாரத்தில் சந்தான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருக்கின்றனர். இவர்களுக்கு காவிஉடை அணிவிக்கப்படுகிறது. விநாயகர், பிரம்மச்சாரி என்பதால் இவ்வாறு அணிவித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச் செழிப்புக்காகவும் இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இவர்கள் தங்களுக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், தங்கள் பக்தர்கள் கேட்பதையெல்லாம் கொடுத்து விடுவார்களாம். இதன் காரணமாகவும், இவர்கள் காவியுடையை அணிந்துள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான உருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட ஒரு பந்தலின் கீழ் இத்தலத்து நடராஜர் காட்சி தருகிறார். இவரது எதிரில் நந்தி இருக்கிறது. நடராஜர் சன்னதியின் பின்புறம் ஒரு கரம் மட்டும் உள்ளது. இதற்கு தினமும் பூஜை நடக்கும். யோகக்கலையில் தேர்ச்சி பெறவும்,நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் நம் கண்ணுக்கு தெரியாமல் நாகவடிவில் மறைந்திருக்கும் பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்ளலாம். பதஞ்சலி முக்தியடைந்த தலம் என்பதால், நம் கண்களுக்கு தெரியமாட்டார்.

அம்பாள் சன்னதி பிரகாரத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் அரங்கநாதர் காட்சி தருகிறார். இராமர் பூஜித்த அரங்கநாதரைப் பெற்ற விபீஷணன், சந்தர்ப்பவசத்தால் அச்சிலையை காவிரிக்கரையில் வைத்துவிட்டு, இலங்கை திரும்பினான். அப்போது தன் திருப்திக்காக, இங்கு வேறொரு அரங்கநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். ஏழு தலையுடைய ஆதிசேஷன் மீது சயனம் கொண்டுள்ள இந்த அரங்கநாதர், கையில் தண்டத்துடன் காட்சியளிப்பது சிறப்பான அமைப்பு.

முத்துராமலிங்க சேதுபதி மன்னர், இக்கோயிலில் மூன்றாம் பிரகாரத்தை மிகப்பெரிதாகக் கட்டியுள்ளார். 1212 தூண்களுடன் கூடிய இந்த பிரகாரம் 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்டது.

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக இலிங்கம் இருக்கிறது. தினமும் காலை 5 மணிக்கு இந்த இலிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்கின்றனர். இந்த அபிஷேகத்திற்கு பின்பே, இராமநாத சுவாமிக்கு பூஜை நடக்கிறது. இந்த அபிஷேகத்தை தரிசிக்க கட்டணம் உண்டு. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது. சக்தி பீடங்களில் இத்தலம், “சேதுபீடம்” ஆகும். அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்கின்றனர். இந்தியாவிலுள்ள 12ஜோதிர்லிங்கங்களையும் ராமேஸ்வரம் தீர்த்தக்கரையிலுள்ள சங்கர மடத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர். அந்தந்த சுவாமிக்குரிய விமான வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்,முருகனின் 16 வடிவங்களையும் இங்கு தரிசிக்கலாம்.

வீரத்துறவி விவேகானந்தர் 1897ம் ஆண்டு, ஜனவரி 27ல் இராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தார்.அப்போது அவர் ஆற்றிய சொற்பொழிவில்,”அன்புதான் சமயம். உடல், உள்ளம் இரண்டும் சுத்தமில்லாமல் சிவனை வழிபடுவதால் ஒரு பலனும் இல்லை. உள்ளம், மன சுத்தத்துடன் தன்னை பிரார்த்திப்பவர்களின் கோரிக்கைகளுக்கு சிவன் செவிசாய்க்கிறார். தூய்மையில்லாமல் கோயிலுக்குள் செல்பவர்கள், தங்களின் பாவங்களோடு மேலும் ஒரு பாவத்தைச் சேர்த்துக் கொள்கிறார்கள். சிவனுக்கு சேவை செய்ய விரும்புபவர்கள், அவரது படைப்புகளுக்கு சேவை செய்ய வேண்டும். தன்னால் முடிந்தவரையில் பிறருக்கு தூய மனதுடன் உதவுபவனே, சிவபெருமானுக்கு நெருக்கமாக இருக்கும் வாய்ப்பைப் பெறுகிறான்,” என்று பேசியுள்ளதுடன் பார்வையாளர் புத்தகத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.

விபீஷணன் தன் சகோதரன் இராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவளை இராமரிடமே ஒப்படைக்கும்படியும் புத்திமதி கூறினான். இராவணன் அதை ஏற்க மறுக்கவே, அவன் இராமருக்கு உதவி செய்வதற்காக இராமேஸ்வரம் வந்தான். அவனை தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட இராமன், இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே, இலங்கை வேந்தனாகப் பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அந்த பட்டாபிஷேகம் நடந்த இடத்தில், இராமருக்கு கோயில் உள்ளது. சுவாமிக்கு “கோதண்டராமர்” என்பது திருநாமம். இவரது அருகில் விபீஷணன் வணங்கியபடி இருக்கிறான். அவனை இராமரிடம் சேர்க்க, பரிந்துரை செய்த ஆஞ்சநேயரும் அருகில் இருக்கிறார். இராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில்,வங்காளவிரிகுடா, மன்னார்வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கும் மத்தியிலுள்ள தீவில் இக்கோயில் அமைந்துள்ளது.

இராமநாதர் கோயிலில் இராமர், இலட்சுமணர், சீதை ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக காட்சி தருகின்றனர். ஆனி மாதத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா, வைகுண்ட ஏகாதசி, ராமநவமி மற்றும் ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் இவர்கள் புறப்பாடாவர். இராமலிங்கப் பிரதிஷ்டையின்போது இராவணன் சீதையை கவர்ந்து செல்லுதல், அவனை ஜடாயு தடுத்தல், ஆஞ்சநேயர் இலங்கை செல்லுதல், இராமன் இராவணனை வீழ்த்துதல், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்தல், இராமர் இலிங்கப் பிரதிஷ்டை செய்தல் ஆகிய வைபவங்கள் நடக்கும்.

கயிலாயத்தில் இருந்து தான் இலிங்கம் கொண்டு வரும் முன்பாக சீதையால் உருவாக்கப்பட்ட மணல் இலிங்கத்திற்கு இராமபிரான், பூஜை செய்தது கண்டு ஆஞ்சநேயர் தன் தாமதத்துக்காக வருந்தினார். அந்த மணல் இலிங்கத்தை வாலால் பெயர்க்க முயன்றார். இந்த நிகழ்வின்போது அவரது வால் அறுந்தது. இதன் அடிப்படையில் வால் இல்லாத கோலத்தில் ஆஞ்சநேயருக்கு தனிக்கோயில் இருக்கிறது. இராமநாதசுவாமி கோயிலில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் இக்கோயில் உள்ளது. இங்கு கடல் மணலால் உருவாக்கப்பட்ட மற்றொரு வால் இல்லாத ஆஞ்சநேயர் சிலையில்,சிப்பி பதிந்திருப்பதைக் காணலாம்.

சீதையை மீட்பது குறித்து இராமர் ஆலோசித்த இடத்தில், “இராமர் பாதம்” இருக்கிறது. பொதுவாக கோயில்களில் தாழம்பூ வழிபாடு நடப்பதில்லை. இது எந்த பாவத்தையும் தீர்க்கும் தலம் என்பதால்,இங்கு சிவனுக்கு தாழம்பூவும் சூட்டுகின்றனர். கருவறைக்கு பின்புறமுள்ள இலிங்கோத்பவரின் எதிரில் பலிபீடம் உள்ளது வித்தியாசமான அமைப்பு. வடநாட்டு பக்தர்கள் தலையில் இராமாயணம் புத்தகத்தை சுமந்து கொண்டு இராமநாத சுவாமி சன்னதியை சுற்றி வந்து வழிபடுகிறார்கள்.பிரகாரத்தில் சீதை, மணலில் இலிங்கம் பிடிக்க, அதற்கு இராமர் பூஜை செய்யும் காட்சி சிலையாக வடிக்கப் பட்டுள்ளது. அருகில் ஆஞ்சநேயர், சுக்ரீவன் உள்ளிட்ட வானர வீரர்களும் இருக்கின்றனர்.மேலும் நளன், நீலன், கவனால் பூஜிக்கப்பட்ட சிவன் சன்னதிகளும் இப்பிரகாரத்தில் உள்ளன. சுவாமி சன்னதி பிரகாரத்தில் இரு இலிங்கங்களுக்கு மத்தியில் சரஸ்வதி, சங்கரநாராயணர்,அர்த்தநாரீஸ்வரர், ஏகாதச உருத்ர லிங்கம் (11 லிங்கங்கள்) ஆகியோர் அருளுகின்றனர். அம்பாள் சன்னதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.

கோயில் நேரம்

காலை 4 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை

கோயில் தொலைபேசி எண்

+91-4573 – 221 223

கோயில் முகவரி

அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், 

இராமேஸ்வரம், 

இராமநாதபுரம் மாவட்டம்.